Friday, April 5, 2019

மின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்புமின்னும் தாரகைகள் நூல் மீதான இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

திருமதி. நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள் ஊடகத் துறையில் ஒரு பெரிய மைல்கல். புpரபல பெண் பத்திரிகையாளர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கொழும்பு மாவட்ட தகவல் அதிகாரியாக பணியாற்றிவர். இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் கொழம்பபுவத் (கொழும்பு செய்திகள்) என்ற காலாண்டு பத்திரிகையை சிங்கள மொழி மூலம் வெளியிட்டுள்ளார். அத்தோடு ஏற்கனவே 1997 ஆம் ஆண்டில் 'பண்பாடும் பெண்' என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். வானொலி, தொலைக்காட்சிகளிலும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள் ஏராளம். ரிம்ஸா முஹம்மதைப் பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் பூங்காவனம் காலாண்டு சஞ்சிகையின் 08 ஆவது இதழில் இவரது சிறப்பானதொரு நேர்காணல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொலைக்கல்வி நிறுவனத்தின் பொதுசனத்துறை டிப்ளோமா பட்டமும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை டிப்ளோமா பட்டமும் பெற்றுள்ள இவர் கணனித் துறையிலும் பல பயிற்சிகளையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். 1980 ஆம் ஆண்டிலிருந்து 1990 ஆண்டு வரை ஷஷதினபதி - சிந்தாமணி|| ஆசிரிய பீடத்தில் பத்திரிகையாளராகவும், உதவி ஆசிரியராகவும் கடமையாற்றிய திருமதி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் 'ஜனனி|| என்ற பத்திரிகையில் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தவர். இவரது குடும்பமே ஒரு கலைக் குடும்பம் தான். சட்டத்தரணி ரஷீத் எம். இம்தியாஸ், ரஷீத் எம். ரியால், நூலாசிரியரின் கணவர் என். நஜ்முல் ஹுசைன் ஆகியோரும் இலக்கியத் துறையில் மிகக் காத்திரமான பங்களிப்புக்களைச் செய்து வருபவர்கள். சட்டத்தரணியான நூலாசிரியரின் ஒரே மகளான நூருஸ் சப்னா சிராஜுதீனும் இலக்கியத்தில் ஈடுபாடுடையவர். 

தற்போது இலக்கியவரலாற்றில் இமாலய சாதனை புரிந்திருக்கின்றார் நூருல் அயின் நஜ்முல் ஹூசைன் அவர்கள். யாருமே செய்யத் தயங்கும் ஒரு நூல் வெளியீட்டை பல வருடங்கள் தவமிருந்து துணிந்து வெற்றிகரமாக வெளியீடு செய்திருக்கின்றார். ஆம் இலங்கையில் காணப்படுகின்ற முஸ்லிம் பெண் எழுத்தாளர்கள் பற்றிய பாரியதொரு ஆய்வை இவர் மேற்கொண்டு 460 பக்கங்கயில் அதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இதில் எழுத்தாளர்கள், கல்வியியலாளர்கள், வானொலி, தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊடகவிலாளர்கள், பத்திரிகையாளர்கள் போன்றவர்களும் இணைத்துக்கொள்ளப்பட்டு அவர்களின்; தகவல்கள் யாவும் திரட்டப்பட்டு நூலுருவாக்கம் பெற்றுள்ளமை இந்த நூலின் சிறப்பம்சமாகும்.

இனி இந்த நூலில் இவரால் ஆராயப்பட்டுள்ள முக்கியமான சில பெண் எழுத்தாளர்கள் பற்றிய சில தகவல்களை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

பக்கம் 53 இல் முதலாவதாக இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் மாதரசி ஹாஜியானி மைமூனா செய்னுலாப்தீன் பற்றிய தகவல்கள் தரப்பட்டுள்ளன. நிந்தவூரைச் சேர்ந்த இவர் இலக்கியத் துறையிலும் கல்வித் துறையிலும் சாதனைகள் புரிந்த 86 வயதான சரித்திரநாயகி. இலங்கையின் முதல் முஸ்லிம் பெண் பண்டிதர் என்ற பெருமையையும் பெற்றவர். 

மர்கூமா உம்மு ரஸீனா புஹார் (பக்கம் 79) என்று நாமெலல்hம் பெயரளவில் அறிந்திருந்த ஒரு இலக்கியவாதியை எமக்கெல்லாம் அறிமுகம் செய்திருக்கிறார் நூலாசிரியர். மண்ணிழந்த வேர்கள் என்ற கவிதைத் தொகுதியைத் தந்த ரஸீனா புஹார் அவர்கள் லுணுகலையைச் சேர்ந்தவர். ஆசிரியையாகவும் அதிபராகவும் பணியாற்றியுள்ளார். சுpல வருடங்களுக்கு முன்னர் இறைவனடி சேர்ந்தாலும் அவரது படைப்புக்கள் என்றும் வாழும்.

இளந்தலைமுறைப் படைப்பாளர்கள் மத்தியில் நன்கு பேசப்படும் ஒரு இலக்கியவாதி ரிம்ஸா முஹம்மத் பற்றிய தகவல்கள் பக்கம் 86 இல் தரப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கு உதவி செய்வதிலும் மற்றவர்களைப் புகழோங்கச் செய்வதிலும் ஆத்ம திருப்தி காண்பவர் ரிம்ஸா முஹம்மத். தன்னைச் சார்ந்தவர்களின் நலனில் அதிக அக்கறைகாட்டி அவர்களின் நலனுக்காக என்றும் பிரார்த்திக்கும் ஒரு கருணைக் கடல். இதுவரை 10 இலக்கிய நூல்களையும் கணக்கீட்டுத் துறையில் 03 நூல்களையும்  வெளியிட்டுள்ள சாதனைப் பெண். பூங்காவனம் என்றகாலாண்டு சஞ்சிகையின் பிரதம ஆசிரியர். கொழும்பு பல்கழைக்கழகத்தில் இதழில் துறை டிப்ளோமா பட்டத்தைப் பெற்றுள்ளதோடு இலக்கியத் துறையில் பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றுள்ளார்.  

பக்கம் 108 இல் நாவல் துறையிலும் சிறுகதைத் துறையிலும் பெயர் பெற்றவர் சுலைமா சமி இக்பால் அவர்கள். வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசைமாறிய தீர்மானங்கள், ஊற்றை மறந்த நதிகள், நந்தவனப் பூக்கள், உண்டியல் ஆகிய நூல்களை வெளியி;ட்டுள்ளார். ஊற்றை மறந்த நதி என்ற அவரது நாவல் பலராலும் சிலாகித்துப் பேசப்பட்டது. இவரது கணவர் இக்பால் மௌலவி அவர்கள் எக்மி பதிப்பகத்தின் மூலம் பல எழுத்தாளர்களின் நூல்களை வெளியிட்டு வருபவர். இவர்களது மூத்த மகளான இன்ஷிராவும் (பக்கம் 242) ஒரு இலக்கியவாதி. தற்போது தகவல் தொழில்நுட்பப் பட்டதாரி ஆசிரியராகக் கடiமாற்றும் இவர் பூ முகத்தில் புன்னகை, நிழலைத் தேடி ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 112 இல் ஸக்கியா சித்தீக் பரீத் அவர்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. இவர் ஓய்வுபெற்ற ஆசிரியர். இவரது தனித்துவம் தனது நூல் வெளியீடுகளின் மூலம் கிடைக்கக் கூடிய பணத்தொகையை ஏழை மக்களது தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நன்கொடையாகக் கொடுத்து தனது மறுமை வாழ்வுக்காக நன்மையைப் பெற்றுக் கொள்வதே. அவர் பலருக்கும் உதவக் கூடிய இளகிய மனம் படைத்தவர். ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார்.

பக்கம் 153 இல் புன்னியாமீன் என்றமா பெரும் இலக்கியவாதியின் மனைவியான மஸீதா புன்னியாமீன் அவர்கள் பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவர் காலியைச் சேர்ந்தவர். பயிற்றப்பட்ட கணித விஞ்ஞான ஆசிரியர். புதிய மொட்டுக்கள், ஒற்றைத் தாயின் இரட்டைக் குழந்தைகள் (கூட்டு முயற்சி), மூடு திரை ஆகிய நூல்களோடு கல்வி சார்ந்த பல நூற் தொகுதிகளையும் வெளியிட்டுள்ளார்.

குருநாகலை மல்லவப்பிட்டியைச் சேர்ந்த சுமைரா அன்வர்; பற்றிய தகவல்கள் பக்கம் 158 இல் இடம்பிடித்துள்ளது. சுமைரா அன்வர்; ஒரு கலைப் பட்டதாரி ஆசிரியர். இரண்டு நாவல்களையும் ஒரு கவிதைத் தொகுதியையும் வெளியிட்டுள்ளார். விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற இவரது நாவல் இன்னும் என் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளது.

களுத்துறையைச் சேர்ந்த நாவலாசிரியை ஸனீரா காலிதீன் அவர்கள் பற்றிய தகவல்கள் பக்கம் 190 இல் காணப்படுகிறது. ஒரு தீபம் தீயாகிறது,  அலைகள் தேடும் கரை என்ற இரு நாவல்களை இவர் எழுதி வெளியிட்டுள்ள இவர், களுத்துறை முஸ்லிம் மகளிர் கலலூரியில் ஆசிரியராகக் கடமையாற்றியவர்.

பக்கம் 234 இல் கண்டி தெஹிதெனிய மடிகேயைச் சேர்ந்த மரீனா இல்யாஸ் ஷாபியின் தகவல்கள் நூலை அலங்கரித்துள்ளன. மரீனா இல்யாஸ் ஷாபி ஓய்வுபெற்ற ஆசிரியராவார். கட்டுரை, சிறுகதை, கவிதை, வானொலி நாடகம் ஆகிய துறைகளில் அதிக ஆர்வத்தோடு ஈடுபட்டு வருபவர். தற்போது நியூசிலாந்தில் வாழும் இவர் அவுஸ்திரேலிய தமிழ் வானொலியின் வளர் பிறை நிகழ்ச்சிக்கு தனது பங்களிப்பை நல்கி வருகின்றார். 

மின்னும் தாரகைகள் என்ற இந்த நூலில், ''நூல்களை தந்த நூலாசிரியர் இவர்கள்..'', ''புத்தகம் வெளியிடாவிட்டாலும் இலக்கியத்தில் வித்தகம் புரிந்த பெண்மணிகள்..'' மற்றும் ''பேனா வாகனமேறி வானொலியில் வலம் வந்த வனிதையர்'' ஆகிய தலைப்புகளில்தான் நூலின் மூன்று அத்தியாயங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த மூன்று அத்தியாயங்களிலிலும் சுமார் 140 பெண் எழுத்தாளர்கள் பற்றி நூலாசிரியர் ஆராய்ந்துள்ளார். கோடிட்டுக் காட்டக்கூடிய சில முக்கியமானத கவல்களையும் ஷஷமின்னும் தாரகைகளிலிருந்து சிதறிய ஒளிக்கீற்றுக்கள்|| என்ற தலைப்பில் அவற்றை நூலாசிரியர் சுருக்கமாகச் சுட்டிக் காட்டியுள்ளார். 

இதுவரை இலக்கியம் படைத்திருந்தாலும் நிறைய வாசகர்களுக்கு அறிமுகமில்லாத பலர், மின்னும் தாரகைகள் என்ற இந்நூலின்; மூலம் வெளியுலகிற்கு அறிமுகமாகின்றார்கள். இத்தகையதொரு ஆத்மார்த்தமான சேவையைச் செய்திருக்கும் நூலாசிரியர் நூருல் அயினுக்கு பக்கபலமாக இருப்பவர் அவரது கணவர் கவிமணி நஜ்முல் ஹூசைன் அவர்கள்.

இனிமையான தம்பதியராகவும், இலக்கியத் தம்பதியராகவும் திகழும் இவர்கள் எனது நூல் வெளியீடுகளிலும் கலந்துகொண்டு என்னை கௌரவித்து இதயம் மகிழ்பவர்கள். மக்களளோடு ஐக்கியமாகப் பழகக் கூடிவர்கள். மென்மேலும் இலக்கியப் பணியாற்ற எனது வாழ்த்துப் பூக்கள் என்றென்றும் இவர்களுக்கு உண்டு!!!

நூல் - மின்னும் தாரகைகள்
நூல் வகை - ஆய்வு
நூலாசிரியர் - நூருல் அயின் நஜ்முல் ஹுசைள்
விலை - 1000 ரூபாய்
வெளியீடு - ஸல்மா பதிப்பகம்

Sunday, March 31, 2019

''தம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு

''தம்பியார்'' கவிதைத் தொகுதிமீதான இரசனைக் குறிப்பு

தியத்தலாவ எச்.எப். ரிஸ்னா

ஒரு நந்தவனப் பூவில் தேனெடுக்கும் வண்டு, போர்க்களத்தில் பீறிட்டுப் பாயும் இரத்தத் துளி, வானவில்லின் அழகு, வாடாமல்லியின் வாசனை என்று ஒவ்வொரு விடயத்தையும் அழகாகவும், நுணுக்கமாகவும் நோக்கும் திறன் கவிஞனுக்கு இருக்கிறது. கவிஞனின் கற்பனையில் உதிக்கும் கவிதையாயினும் சரி, உண்மைச் சம்பவமாயினும் சரி இரண்டுமே வாசகனின் மனதில் நிறைந்துவிடக் கூடியதாக இருக்கின்றது.

இலக்கியத் துறையில் காலடி எடுத்துவைப்பவர்கள் எல்லோரும் பல்வேறு துறைகளிலும் தனித்துவமாக மிளர்பவர்களாக இருக்கின்றார்கள். ஒரு இலக்கியவாதி கவிஞனாக, கணக்காளனாக, வைத்தியனாக, வியாபாரியாக, ஆசிரியனாக, சட்டத்தரணியாக என்றெல்லம் பல்தரப்பட்ட துறைகளிலிருந்தும் இலக்கியம் படைக்கின்றான்.

அந்தவகையில் வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா அவர்களும் தனது தம்பியார் என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார். இவர் ஏற்கனவே ஆத்மாவின் புண், பிரேத பரிசோதனைகள் என்ற கவிதை நூல்களையும் வெளியிட்டிருக்கின்றார். இவரது கவிதை வீச்சு, வாள் வீச்சைப் போன்று வீரியமானது. எதையும் துணிந்து சொல்லக்கூடியதொரு துணிச்சல் மிக்க கவிஞர். அதேநேரம் கனிந்த இதயமும் உதவி செய்யக் கூடிய குழந்தை மனமும் படைத்த ஒரு வைத்தியராகவும் இவர் காணப்படுகின்றார்.

''தம்பியார்'' என்ற இந்தக் கவிதைத் தொகுதி இனக் கலவரங்களில் உயிர் நீத்த அனைத்து இன மக்களுக்கும் சமர்ப்பணம் செய்ப்பட்டுள்ளது.

இதிலுள்ள கவிதைகள் அப்பாவி மக்களை கூறுபோட்டுவிற்று அரசியல் செய்பவர்களுக்கு சாட்டையடியாக இருப்பதோடு சிந்தனைக்குள் சொருகி சிந்திக்க வைப்பதாகவும் காணப்படுகின்றன. சிறுபான்மைமக்களுக்கு எதிராக நடக்கும் சம்பவங்களின்;போது இவரது பேனையானது ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்திருக்கின்றது. அவர்களின் நலனுக்காக பாடுபட்டிருக்கின்றது. 

இதுபற்றி நூலாசிரியர் தனது உரையில் ''சிறுபான்மை என்றால் அடிமைகள் போன்று நடத்தப்பட வேண்டியவர்கள் அல்லர். இந்தநாட்டில் சிறுபான்மை இன மக்களின் இருப்பைப் படுகுழியில் போட்டு மூடிவிட்டு பெரும்பான்மையினர் என்று பெரிய அளவில் பட்டப் பகலில் அட்டூழியம் புரிபவர்களுக்கு எதிராக எனது கவிதைகள் பெரிய ஊசிபோடும்''  என்று தனது ஆழ்மனதின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

பிக்குகள் ஓதும் குர்ஆன் (பக்கம் 01) என்றமுதல் கவிதையின் தலைப்பே ஒரு வேகத்தோடும் விவேகத்தோடும் இடப்பட்டடிருப்பது நன்கு புலப்படுகின்றது. 2013 ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் புனித வேத நூலான அல்குர்ஆனை விமர்சித்து அதற்கு எதிராகப் பேசியமையை எதிர்த்து இக்கவிதை எழுதப்பட்டிருக்கின்றது.

துப்பாக்கியின் நிழலில்
என்னைஅமரச் செய்து
என் கையில் 
பிரித் நூலைக் கட்டினர்...
அவர்களிடம் 
விசிறிகளுக்கு பதிலாக 
அல்குர்ஆன் இருந்தது.. 
..அங்கொன்றும் இங்கொன்றுமாக 
அதில் பிழைகண்டனர்..

பால் அம்மா (பக்கம் 04) என்ற கவிதை ஆகுமாக்கபட்ட உணவுகளை பசுவதை என்ற பெயரில் தடுத்துக்கொண்டிருக்கும் கும்பலின் இழிசெயல் பற்றிப் பேசுகின்றது. குவியல் குவியலாக மக்கள் இறந்துபோன இந்த நாட்டில் உணவுக்காக மாடுகளை அறுப்பது பற்றி போலிக் கண்ணீர் வடிக்கின்றவர்களைச் சாடி நிற்கின்றது இந்தக் கவிதை.

எத்தனையோ
எமது அம்மாக்களை
சும்மாக்கள் என்று
சுட்டுத் தள்ளியவர்கள்
ஷஷகிரி|| அம்மாவின்
முலையில் வாய் வைத்து
தாய்ப் பால் குடித்ததாய்க் கூறி
தமக்குத் தாமே 
தீ மூட்டிக் கொள்கின்றார்கள்..

இன்பமயமான கதைகளைக் கேட்டுவளர வேண்டிய எமது எதிர்கால சந்ததியினருக்கு இரத்த வரலாற்றைப் பரிசளித்த தேசம் நம்முடையது. போர்க் காலத்தில் நடந்த அவலங்களின் எச்சசொச்சம் இன்னும் வடுக்களாக காணப்படுகின்றது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், பெரியவர்கள், மாற்றுத் திறனாளிகள் என்று ஒரு பெருங்கூட்டம் இன்னும்கூட கையறு நிலையில் தம் காலத்தைக் கடத்துகின்றது. அத்தகையவர்களுக்காய் எழுதப்பட்ட கவிதையாக மொழிபெயர்க்கப்படாத வலிகள் (பக்கம் 25) காணப்படுகின்றது.

நிறம் மாறிய தேசத்தில்
நீதி மறுக்கப்பட்ட
யாருக்கும் புலப்படாத
மௌன ஜீவன்களின்
ஒவ்வொரு விடியலும்
வலி சுமக்கும் முடிவுகளில்

அப்பாவிகளாய் திக்கற்றுத் தவிக்கும் எம் சகோதர சகோதரிகளுக்காக துணிந்து வந்து குரல் கொடுத்திருக்கும் ஒரு வைத்தியக் கவிஞன் அஸாத் எம். ஹனிபா அவர்கள். சாத்வீகப் போராட்டங்களால் பெறமுடியாத உரிமைகளால் துவண்டு போய்க் கிடக்கும் மக்களுக்காகக் கிடைத்த ஒரு புரட்சியாளன் இவர். இவரது இலக்கியப் பணியும் சமூகப் பணியும், வைத்தியப் பணியும் மென்மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்!!!

நூல் - தம்பியார்
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - அஸாத் எம். ஹனிபா
வுpலை - 400 ரூபாய்
வெளியீடு - ஏ.ஜே. பதிப்பகம்

Tuesday, November 28, 2017

''நான் மூச்சயர்ந்தபோது'' கவிதை நூல் பற்றிய ஒரு பார்வை

''நான் மூச்சயர்ந்தபோது'' கவிதை நூல் பற்றிய ஒரு பார்வை

 படைப்புலகில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்தாலும் சில வருடங்கள் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்துவிட்டு மீண்டு(ம்) வந்திருக்கிறார் திருமதி எஸ்.யூ. கமர்ஜான் பீபீ. ஹுனுப்பட்டி வத்தளையிலிருந்து இலக்கியம் படைக்கும் இவர் 'நான் மூச்சயர்ந்தபோது' என்ற கவிதை நூலை வெளியிட்டிருக்கின்றார்.

விழித்துக் கொண்டிருக்கும்போதே எங்கள் சொத்துக்களை, உடமைகளை கொள்ளையடித்துக் கொண்டு போகும் இக்காலத்தில், மூச்சயர்ந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவ்வாறு மூச்சயர்ந்த ஒரு சமூகமாகத்தான் நாம் இன்று மாறிப் போயிருக்கின்றோம். நாம் பார்த்துக் கொண்டிருக்க நமது இருப்புக்களை எல்லாம் கண்முன்னே தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து நாம் மீள வேண்டும். நமக்கான உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் நூலின் தலைப்பை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்டது.

எஸ்.யூ. கமர்ஜான் பீபி அவர்களது நீண்ட கால தவத்தின் பயனாக வெளிவந்திருக்கும் இந்நூலிலுள்ள கவிதைகள் பரந்துபட்ட தலைப்புக்களில் எழுதப்பட்டிருக்கின்றன. 76 பக்கங்களில் அமைந்திருக்கும் இந்நூலில் 52 கவிதைகள் காணப்படுகின்றன.

நூலிலுள்ள ஆரம்பக் கவிதைகள் ஆன்மீகம் சார்ந்தவை. முஹம்மத் நபியவர்கள், நோன்பு, ஹாஜிகள், முஹர்ரம் போன்ற இன்னோரன்ன தலைப்புக்களில் அவை எழுதப்பட்டிருக்கின்றன. அதுபோல நூலாசிரியர் தனது தாய், மகன், மகள், கணவர் போன்ற உறவுகளுக்கு கவிதை வழியாகவும் தன் அன்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்காதபோது என்ற கவிதையானது சந்த ஒலியமைப்புடன் எழுதப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு சொல்லக்கூடிய புத்திமதியாகக் காணப்படும் இக்கவிதையின் சில வரிகள் இதோ

சிந்தனை ஓட்டம் - அது
சமுதாய மாற்றம்
சீர்குலைந்தால் வாட்டம்
தென்படும் அதன் தேட்டம்

இளைஞர் கூட்டம் - இந்த
நாட்டின் உயிரோட்டம்
கல்வி கற்றால் - நீ
கண்டிடுவாய் உயர் பட்டம்

நேசிக்கும் உயிர்களை சுவாசிக்காத தேசம் என்ற தலைப்பே கவிதையின் உள்ளர்த்தத்தை நன்கு உணர்த்தி விடுகின்றது. நேசித்துக் கொண்டிருந்த தேசத்தில் இனவாத அரக்கன் கால் பதித்ததும்; பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எப்பாவமும் அறியாத பல அப்பாவிகள், குழந்தைகள் தம் உயிரைத் துறந்திருக்கின்றார்கள். உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட காயங்கள் காலப்போக்கில் ஆறினாலும் வடுக்கள் நெஞ்சில் பதிந்திருக்கும். அந்த வலி எத்தனை வருடங்கள் சென்றாலும் அழிந்துவிடாது. அத்தகைய ஒரு வலியைச் சுமந்து எழுதப்பட்டிருக்கும் சில வரிகள் கீழே..

தேசம் நிசப்தம் என்று
யார் சொன்னது

தேசத்தின் ஓர் அங்கத்தில்
மனித உயிர்கள்
நேசிக்கப்படாமலே
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

தேசம் நிசப்தம் என்று
யார் சொன்னது

துப்பாக்கி ரவைகள்
அப்பாவி நெஞ்சங்களை
தப்பாது இச்சிக்கொள்ளும்

சோம்பலின்போது என்ற கவிதையிலுள்ள ஒவ்வொரு வரியும் ரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது. குறியீட்டுக் கவிதையாக எழுதப்பட்டிருக்கும் இது சமூகத்தில் மலிந்து போயிருக்கும் ஒட்டுமொத்த சோம்பேறிகளுக்கும் சாட்டையடியாகவும் அமைந்திருக்கின்றது.

காலத்தின் சுழற்சியால்
கரை காணாதவர்கள்
கண்ணீரில் முகம் கழுவுவர்

முன்னேற்றப் படிகளை
உடைத்தெறிந்து
முழுசாய் சோம்பலில்
புகுந்துகொள்வர்

அதனால்
நித்தமும் படுக்கையில்
சுகங் காண்பர்

தேர்ந்த வாசிப்பும் ஆழமான தேடலும் ஒரு எழுத்தாளின் படைப்புக்கு உரம் சேர்க்கும். அத்தகைய தொடர் தேடல்கள் நூலாசிரியர் எஸ்.யூ. கமர்ஜான் பீபி அவர்களின் எழுத்துக்கு மேலும் வலு சேர்க்கும். அவரது இலக்கியப் பணிகள் மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்!!!

நூல் - நான் மூச்சயர்ந்தபோது
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ்.யூ. கமர்ஜான் பீபீ
வெளியீடு - மருதம் கலை இலக்கிய வட்டம்
விலை - 300 ரூபாய்

Sunday, May 10, 2015

விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

விதி வரைந்த பாதை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

இலக்கியம் என்பது காலத்தின் கண்ணாடியாகும். இலக்கியத்தை நேசிக்கத் தெரிந்தவர்கள் ஒரு சமுதாயத்தின் சுவடுகளை நமக்குள் பதித்துவிடுகின்றார்கள். பல்வேறு இலக்கிய வடிவங்களும் அகவயம் அல்லது புறவயம் சார்ந்த விடயங்களை வெளிப்படுத்த முனைகின்றபோது அது எமது சிந்தனைகளில் தாக்கம் செலுத்துகின்றது.

இன்று இலக்கிய வடிவங்கள் பல்வேறு வகையிலும் பலராலும் உள்வாங்கப்பட்டுள்ளது. கவிதைகள், சிறுகதைகள் போன்றன மனதில் உள்ள விடயங்களை அல்லது சமுதாயத்தில் புரையோடிப்போன விடயங்களைச் சொல்ல விளைகின்றன.

இந்த வகையில் இளம் எழுத்தாளர் ஹனீபா சஹீலாவும் நம்முன்னே கதாசிரியராக உருவெடுத்திருக்கின்றார். பாடசாலை ஆசிரியராக கடமையாற்றும் இவர், தான் எழுதிய பத்து சிறுகதைகளை ஒன்றிணைத்து விதி வரைந்த பாதையி

லே என்ற சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கின்றார்.

விதி வரைந்த பாதை என்ற என்ற முதல் கதையானது காதலின் வலிகளை வார்த்தை வழியே சொல்லியிருக்கின்றது. இன்றைய காலத்தில் அந்த உணர்வுகள் பலராலும் தவறாக விளங்கப்பட்டிருக்கின்றது. புனிதமான விடயங்கள் இன்று வெறும் பித்தலாட்டங்களாக இருக்கின்றன. சுமையா என்ற கதாபாத்திரத்தை வைத்து பின்னப்பட்ட சிறுகதையும் அத்தகையதொரு காதலைத்தான் நமக்குச் சொல்கின்றது. கைவிட்டுப்போன காதலை நண்பர்கள் மூலமாக தேடும் சுமையா இறுதியில் ஒரு வைத்தியருக்கு சந்தர்ப்பவசத்தால் மனைவியாகிவிடுகின்றாள். தன்னைக் காதலித்து ஏமாற்றிய நிசார் என்பவனின் நினைவுகளை அவள் அழித்தொழித்துவிட்டு நிம்மதியாக வாழ்ந்தாள். அக்காலத்தில் அவன் தான் செய்த திருட்டுக் குற்றத்தால் கைதாகி, பின்னர் சிறையிலிருந்து விடுதலைப் பெற்று எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாகின்றான். விதி வரைந்த பாதையில் பயணித்த அவன் சுமையாவின் கணவரிடமே சிகிச்சைக்கு வருகின்றான். அங்கே சுமையாவைக் கண்ட அவன் தனது தவறுகளை உணர்ந்து, யாரிடமும் சொல்லாமலேயே அங்கிருந்து சென்றுவிடுகின்றான். எனவே அவனது பாதை இனி விதி வரைந்த படியே இருக்கும் என்பதை இந்தக் கதை அழகாக எடுத்துக் காட்டியிருக்கின்றது.

பாவம் இந்தப் பாவை என்ற என்ற கதை ஹஸ்னாவின் சோகங்களை சொல்லில் வடித்திருக்கின்றது. தனது வறுமை நிலமை காரணமாக வெளிநாட்டுக்குப் பயணமாகும் கதைக் கருவை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது. பெண்களும் வெளிநாட்டுப் பயணமும் என்ற தொனிப்பொருளில் பல கருத்துக்களை முன்வைக்க முடியும் என்ற போதிலும், பொதுவாக எல்லோரது அபிப்பிராயமும் வெளிநாட்டுப் பயணம் பெண்களை சீரழிக்கும் என்பதாகும். பெண்களை மாத்திரமின்றி குடும்பத்தை, கணவனை, பிள்ளைகளை என எல்லாவற்றையுமே சர்வ நாசமாக்கிவிடும். அண்மையில் சவூதியில் மரண தண்டனை பெற்ற ரிஸானா நபீக் என்ற பெண்ணை இவ்வுலகம் எளிதில் மறந்துவிடாது. வாதப் பிரதிவாதங்கள் பலதாக இருந்தபோதிலும் அடிப்படை அவள் வெளிநாட்டுக்கு சென்றமைதான். குடிசை வீட்டை, மாடி வீடு ஆக்குவதற்காக தனது தலையை அடகு வைத்த அந்த கொடூர சம்பவம் நம் இதயத்தில் எல்லாம் இரத்தக் கண்ணீர் பாய்ச்ச வைத்தது. கதாசிரியர் ஹனீபா சஹீலா எழுதியிருக்கும் ஹஸ்னாவின் கதையில், அவள் தன் கனவுகளை சுமந்து வெளிநாடு சென்று உழைத்து வருகையில், தன் குடும்பமே சுனாமிக்கு இரையாகிவிட்டதை அறிந்து கதறுகிறாள். கண்ணீர் வடிக்கிறாள். இறுதியில்... தனது குடும்பம் தன்னுடன் இருப்பதான ஒரு கற்பனையில் பைத்தியமாகி விடுவதாக கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது. கீழுள்ள வரிகள் எத்தனை உருக்கமானது என்பதை பாருங்கள்.

`ஆத்மா அடங்கிவிட்ட உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. ஹஸ்னா தனது தங்கை ஹனீனாவுக்காக கொண்டு வந்த அந்த பொம்மையை அணைத்து முத்தமிட்டாள். நாட்கள் நகர்கையில் அந்த பொம்மை, தங்கை ஹனீனாவாக மாறியது. தனிமையில் இருந்துகொண்டு அதை முத்தமிடுவதும் உரையாடி விளையாடுவதும் வழக்கமாகியது.'

கறுப்பு ஜூன் என்ற கதை ஒரு உண்மைக் காதலை காட்சிப்படுத்தியிருக்கின்றது. கௌதம் என்பவன் தனது காதல் பற்றி சிந்து என்ற பெண்ணிடம் சொல்வதாக கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. காதலித்தபோது தாம் எப்படி உண்மையாக இருந்தோம் என்பதை அவன் சொல்கையில் இன்றைய காலத்திலும் இவ்வாறு காதல்கள் இருக்கின்றனவா என்று எண்ணத் தோன்றுகின்றது.

மனதைத் திறந்த மடல் என்ற கதை, சமூகத்தின் இருப்பு நிலையை எடுத்து விளக்குகின்றது. மணமுடிக்கும் பெண், சீதனம் என்ற பெயரில் எவ்வளவு மனத் தாக்கங்களுக்கு ஆளாகின்றாள் என்பதையோ, மனதால் இணைந்த இருவரைக்கூட சீதனம் என்ற பெயரால் பிரிப்பது தவறு என்பதையோ பலர் புரிந்துகொள்வதில்லை. இக்கதையில் வரும் சாஹிர் தன் குடும்ப நிலை அறிந்து வெளிநாட்டுக்கு உழைக்கச் செல்கின்றான். விடுமுறையில் வந்திருக்கும்போது தனது மைத்துனியான ரிபாவைக் கண்டு காதல் கொள்கின்றான். அவளும் சம்மதிக்கிறாள். தங்கைகள் மூவரின் திருமணத்தை நடத்திவிட்டுத்தான் ரிபாவை மணமுடிப்பதாக தாயாரிடம் தெரிவிக்கையிலேயே பூகம்பம் வெடிக்கின்றது.

ஷஅவளைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த வீட்ல போய் நீயும் கஷ்டப்படுவ. உனக்கு பெரிய இடமா நான் பார்க்கிறேன். இந்தக் கதய இத்தோடு மறந்திடு. என்ன மீறி அவளக் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ட மௌத்துக்கும் என் முகத்துல முழிக்காத| என்று தாயார் கூறுகிறார். தாயின் வார்த்தையை மீறவும் முடியாமல், காதலை மறக்கவும் முடியாமல் இறுதியில் நிரந்தரமாகவே வெளிநாட்டுக்குச் சென்றுவிடுகிறான் சாஹிர்.
எத்தனையோ ஆண்கள் இன்று இந்தக் கொடுமையை அனுபவிக்கின்றார்கள். மாமி மருமகள் சண்டைகளின்போது இருதலைக்கொள்ளி எறும்புகளாக இருக்கின்றார்கள். பெற்று வளர்த்த தாயா? நம்பி வந்த மனைவியா? என்கிறபோது யார் பக்கம் தவறிருந்தாலும் சமாதானமாக்க ஆண் படும்பாடு சொல்லிமாளாது. மகன் மாறிவிட்டான் என்று தாய் பதறுவாள். கணவன் சரியில்லை என்று மனைவி கதறுவாள். இறுதியில் வாழ்க்கையே சிதறும் அவனுக்கு. இவ்வாறான இக்கட்டுகள் நேர்கையில் ஆண்கள் எடுக்கும் முடிவு யாரும் வேண்டாம் என்றுவிட்டு எங்காவது சென்றுவிடுவதுதான் என்பதை இந்தக் கதையும் உணர்த்துகிறது.

கதாசிரியர் ஹனீபா சஹீலாவுக்கு கதையை லாவகமாக நகர்த்திச் செல்லும் திறன் நிறையவே இருக்கின்றது. தான் பார்த்த அல்லது கேட்ட விடயத்தை கதையாக்கிவிடும் நுணுக்கம் தெரிந்திருக்கின்றது. ஆழ்ந்த வாசிப்பின் மூலம் அவர் இன்னமும் தன் திறமையை வளர்த்துக்கொள்ளலாம். இலக்கிய ரசிகர்கள் இந்தத் தொகுதியை வாங்கி வாசிக்க வேண்டும். அவரது முயற்சிகளுக்கு கைகொடுக்க வேண்டும். கதாசிரியர் ஹனீபா சஹீலா, நிறைய சமூக அவலங்களை சிறுகதையாக வெளிக்கொணர வேண்டும் என்று அவரை வாழ்த்துகிறேன்!!!

நூலின் பெயர் - விதி வரைந்த பாதை
நூல் வகை - சிறுகதை
நூலாசிரியர் - ஹனீபா சஹீலா
விலை - 200 ரூபாய்

Monday, September 16, 2013

தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


தாலாட்டுப் பாடல்கள் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நீண்ட இடைவெளிக்குப் பின் ஏப்ரல் 2011 இல் எழுதத் தொடங்கிய கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள் டிசம்பர் 2011 வரையான ஒன்பது மாதங்களுக்குள் ஒன்பது படைப்புக்களை வெளியிட்டவர். தாலாட்டுப் பாடல்கள் என்ற தொகுதி தாயன்பின் வெளிப்பாடான தாலாட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பாத்திமா ருஸ்தா பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த நூல் 19 பக்கங்களில் கைக்கு அடக்கமான நூலாக காணப்படுகின்றது.

2012 இல் சாமஸ்ரீ தேசகீர்த்தி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கிண்ணியா பி.ரி. அஸீஸ் அவர்கள்; தனது இளம் காலத்தில் கிண்ணியாச் செல்வன் என்ற புனைப் பெயரில் தனது படைப்புக்களைத் தந்தவர். பல்வேறு ஆளுமைகளைக் கொண்டிருக்கும் இவர், ஒரு தாய் தன் பிள்ளைகளைத் தாலாட்டும் பாடல்களாக தனது தொகுதியை வெளியிட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

இத்தொகுதியை வெளியிட்ட பதிப்பகத்தார் 'இனிய ராகம், சுவை நயம் மற்றும் கருத்தாழமிக்க இவை தாயன்பில் ஒரு இன்ப அதிர்வை ஏற்படுத்தும். பிஞ்சு மனங்களில் பூரிப்பையும் கொண்டு வரும்' என்கின்றனர்.


கிராமிய மணம் கமழும் இந்தப் பாடல்கள் குழந்தைகளை ஆசிர்வதிப்பதாகவும், நற்செயல்களை விதைக்க கற்றுக் கொடுப்பதாகவும் அமைந்திருக்கின்றன.

சில குழந்தைகள் எந்நேரமும் அழுத வண்ணமே இருப்பார்கள். பால் குடிக்கவும் மாட்டார்கள். தூங்கவும் மாட்டார்கள். அதை மையப்படுத்தி முதல் பாடலான (பக்கம் 01) தாலாட்டு இப்படி தொடங்கியிருக்கிறது.

தாலாட்டுது உன்னை
தாலாட்டுது
அமுதூட்டும் கை உன்னை
தாலாட்டுது

உறக்கமின்றி
அழுது நீயும் அடம்பிடிக்காதே!
இரக்கமின்றி தொல்லை எனக்கு
தந்து நில்லாதே!

இரக்கத்தோடு உறங்கிடுவாய் (பக்கம் 02) என்ற பாடல் அழகிய உவமானங்களைக் கொண்டுள்ளது. வாசிப்பதற்கு இனிமையாக காணப்படுகின்றது. கண்ணுறங்கும் நேரத்தில் களிப்பாக தூங்குவதற்காக ஒரு தாய் தன் செல்லக் குழந்தைக்கு பாடும் தாலாட்டு இது..

பாசமுள்ள பைங்கிளியே
பாடிவரும் வெண்புறாவே
ஆசை கொண்ட அருந்தவமே
என்னருகில் கண் துயில்வாய்!

மனங் கவர்ந்த மாங்கனியே
மகிழ்வு தரும் பூ மணியே
இணங்கி வந்த தாய் மடியில்
இரக்கத்தோடு உறங்கிடுவாய்!

பாசம் பொங்குது என்ற பாடல் (பக்கம் 05) வரிகள் ஓசை நயத்துடன் காணப்படுகின்றது. வாசிக்க இனிமை தரும் இந்த வரிகள் குழந்தையின் குறும்புத் தனத்தை ஞாபகப்படுத்துகின்றது.

தாலாட்டும் பிள்ளை ஒன்று
தாயின் முகம் பார்க்குது!
பாலூட்டு என்று சொல்லி
பாசம் பொங்க கேட்குது!

அன்னை மடி மீதினிலே
அன்பொழுக இருக்குது
கண்ணை மூடி துயில் கொண்டு
கலக்கமின்றி உறங்குது!

சுகம் காண தூங்கிடடி என்ற தாலாட்டுப் பாடல் (பக்கம் 07) நாம் குழந்தைகளாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கத்தை மனதில் விதைக்கின்றது. தாய் தனது மகளுக்கு பாடும் அழகிய பாடலாக இது காணப்படுகின்து.

எந்தன் மடி அன்பு மடி - நீ
எனக்கு செல்வமடி
உந்தன் கண்ணிரண்டில் தூக்கமடி
கவலையெல்லாம் போகுமடி

கண்ணுறுங்கும் நேரமடி யுன்
கலக்கமெல்லாம் தீருமடி
என் மடியும் உனக்காக
என்றைக்குமே இருக்குமடி!

இவ்வாறு அழகிய பாடல்களைக் கொண்டுள்ள இந்தப் புத்தகம் வாசிப்போரைக் கவரும். ஆசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தாலாட்டுப் பாடல்
நூலாசிரியர் - கவிஞர் பி.ரி. அஸீஸ்
வெளியீடு - பாத்திமா ருஷ்தா பதிப்பகம்
மின்னஞ்சல் - azeesphfo@gmail.com

Sunday, March 10, 2013

விடுமுறைக்கு விடுமுறை - சிறுகதைத் தொகுதி

விடுமுறைக்கு விடுமுறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


ஓரிரண்டு கவிதைகளை எழுதி அவை பத்திரிகையில் வெளிவந்தாலேயே தமக்குத்தாமே கவிஞர் பட்டம் சூட்டிக்கொண்டு திரியும் பலபேர் நம் மத்தியில் இருக்க, விடுமுறைக்கு விடுமுறை என்ற காத்திரமான சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும் கூட எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருக்கின்றார் திருமதி பவானி தேவதாஸ் அவர்கள்.

தலாத்து ஓயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் இவரது கன்னித் தொகுதியான விடுமுறைக்கு விடுமுறை என்ற இச்சிறுகதைத் தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி 66 பக்கங்களில் புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் வெளிவந்திருக்கிறது.

தற்கால வேலைப்பளுவுக்கு மத்தியில் சிறுகதைகளை வாசகர்கள் வாசிப்பது மிகக்குறைவு. ஆனாலும் பவானி தேவதாஸின் கதைகளை மேலோட்டமாக கண்டுவிட்டாலே அதை முழுவதுமாக வாசித்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எழுதப்பட்ட கதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களாக இருப்பதால் அவை மேலும் சிறப்படைகின்றன.நினைவில் நீங்காதவள் என்ற சிறுகதை 1983 இல் இனக்கலவரம் நடந்தபோது தமிழருக்காக தற்கொலை செய்துகொண்ட நீத்தா என்ற சிங்கள யுவதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பம் ஒன்றில் வீட்டுவேலை செய்கிறாள் நீத்தா. குறிப்பிட்ட தினமன்று அந்த வீட்டிற்கு சிலர் கல்லெறிந்து கலாட்டா பண்ணியிருக்கிறார்கள். தமிழர் வீட்டில் உனக்கென்ன வேலை என்று கேட்டவர்கள் மறுபடி வரும்போது அவளை அங்கிருந்து போகுமாறு சொல்லிவிட்டு போகிறார்கள்.

எனினும் வீட்டார்கள் அவளை நம்பி விட்டுப்போனதால் அந்தத் தமிழர்களின் உடமைகளை பாதுகாப்பதை தனது கடமையாகவே கருதுகிறாள் நீத்தா. மறுதினம் வன்முறையாளர்கள் வந்து தமிழர்கள் வாழ்ந்த அவ்வீட்டை எரிக்க அத்துக்கம் தாளாமல் அழுதபடியே தாயுடன் வருகிறாள் நீத்தா. யாரும் எதிர்பாராத விதமாக அப்போது வந்த புகைவண்டிக்கு குறுக்காக பாய்ந்து தனது துக்கத்தை வெளிப்படுத்திய நீத்தாவே இக்கதையில் நாயகி.

என் இனிய தோழனே என்ற கதை சிறுவயதிலிருந்து சகோதரனாகவே பழகி வந்த சிங்கள நண்பனின் மரணம் பற்றியது. பஸ்ஸில் மற்ற இளைஞர்கள் கிண்டல் பண்ணும்போது தனது தங்கை என்று கூறி அவர்களுடன் சண்டையிடுகிறான் சூட்டிக்கா என்ற அந்த நண்பன். இறுதியில் இராணுவத்தில் இணைந்து யுத்தத்துக்கு இலக்காகி இறந்துவிடுகிறான். இந்தக் கதையை வாசிக்கும்போது மனம் வலியால் துடிக்கின்றது.

சமவெளி - சிகரம் என்ற சிறுகதை இணைபிரியாது பழகி இறுதியில் சுனாமிக்கு பலியான நண்பிகளின் கதையை துல்லியாக கூறி நிற்கிறது. மலைநாட்டைச் சேர்ந்த நந்தினி, மட்டக்களப்பைச் சேர்ந்த மாயா. இருவரும் பிரதான பாத்திரங்கள். படிப்பதற்காக மட்டக்களப்புக்குச் சென்ற நந்தினியுடன் ஐக்கியமாகும் மாயா. உயர்த பரீட்சையின் பின்னர் நந்தினி ஊருக்கு புறப்படுகின்றாள். கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாள் அவளது மனதில் இனம்புரியாத தவிப்பு.. இறுதியில் சுனாமி அரக்கன் மாயாவை கொன்றுவிடுகின்றான். மெய்சிலிர்க்க வைக்கும் கதை. அதற்காக திருமதி பவானி அவர்கள் கையாண்டிருக்கும் அழகான கதையோட்டத்தால் சம்பவம் கண்முன் நிழலாடுகிறது. நெஞ்சம் விம்மித் தணிகின்றது.

பிறந்தகத்தில் பிறந்த நாள் என்ற கதை பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களாகவும் இருக்கலாம். திருமணமாகி வேறிடம் போகும் பெண்கள் தமது பிறந்த வீட்டுக்கு கணவர் பிள்ளைகளுடன் வரும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களை இக்கதை சொல்லி நிற்கிறது. அதுவும் சகோதரர்களின் அலட்சியப்போக்கும், அவர்களின் மனைவிமாரின் சிடுசிடுப்பும் ஏன் வந்துதொலைத்தோம் என்ற மனப்பாங்கை தோற்றுவிக்கும். அதை நிதர்சனபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

ஏன் என்ற கதை நோயால் அவதியுற்று இறந்துபோன மகன், மகள், மனைவி பற்றியது. மிகவும் சோகத்துக்குரிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இக்கதை காணப்படுகின்றது. தன்னை விட்டுப் பிரிந்துபோன தனது குடும்பத்தினரை எண்ணி கணவன் படும் அவஸ்தை வாசகருக்கும் தொற்றிவிடுகின்றது.

இவ்வாறு கற்பனைகளுக்கு உயிரிகொடுத்து அவற்றை எல்லாம் கதைகளாக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பெரும்பாலான தனது அனுபவங்களை கருக்களாக்கி அதை சிறுகதைகளாய் பிரசவித்திருக்கிறார் திருமதி. பவானி தேவதாஸ் அவர்கள். அவரது இலக்கிய முயற்சி இன்னும் சிறப்புற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விடுமுறைக்கு விடுமுறை (சிறுகதை)
நூலாசிரியர் - பவானி தேவதாஸ்
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150 ரூபாய்

மண்ணில் வேரோடிய மனசோடு - கவிதைத் தொகுதி

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களில் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.

`கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது...' என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. 

வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்' இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.


இது கவிதையல்ல (பக்கம் 06) என்ற முதல் கவிதை காயம்பட்ட இதயத்தை கண் முன்னால் நிறுத்தி வைக்கிறது. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாய் கூடி வாழ்ந்தவர்கள் இடையில் துவேசம் கொண்டவர்களாக ஆனதில் உள்ள விரக்தியைக் காண முடிகிறது. ஆரம்பத்தில் தமிழ் பேசுவதால் இஸ்லாமியத் தமிழர் என உறவு கொண்டாடி மகிழ்ந்தவர்கள்தாம் முஸ்லிம்களும், தமிழர்களும். ஆனால் இடையில் ஏற்பட்ட இனச் சுத்திகரிப்பு முழு முஸ்லிம் சமுதாயத்தையும் இடம்பெயரச் செய்துவிட்டது. இப்போது எம்மை எந்தத் தமிழரென அழைக்கப்போகிறீர் என கவிஞர் கேட்டிருக்கும் கேள்வி, இதற்கு தூண்டுதலாக அமைந்தவர்களின் நாக்கைப் பிடுங்கவல்லது எனலாம்.

இது கவிதையல்ல 
கற்கள்
நேயம் கொண்ட இதயம்
காயப்பட்டதால்..
இதயத்திலிருந்து
இதயத்துக்கு வீசும்
கவிதைக் கற்கள்
ஒட்டி வாழ்ந்த உறவுகளை
வெட்டி வீழ்த்திய வீரர்களே!

இஸ்லாமியத் தமிழரென
எமை அழைத்தீர்
இப்போது
எந்த வகைத் தமிழரென
எமை வெறுத்தீர்!

வாழ்க்கையில் எந்த பதவி உயர்வு கிடைத்தாலும், அந்தப் பதிவியுயர்வாலோ அல்லது கல்வியாலோ வேறு தேசம் சென்றாலும் தாய் மண்ணின் சுகத்தை நினைக்கையில் ஆன்மா கதறியழும்.  ஊர்மண்ணில் வெறுங்காலில் திரிய மனம் அவா கொள்ளும். இப்படியிருக்க துரத்தியடிக்கப்ட்வர்கள் இனி எப்போது ஊருக்கு செல்வோம் என்றே தெரியாமல் இருக்கும்போது அவர்கள் மனம் எத்தகைய பாடுபடும் என்பதை மண்ணின் காலடிக்கு.. (பக்கம் 20) என்ற கவிதையிலுள்ள கீழுள்ள வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். தாய் 

பொன்னிழந்து வாழ்ந்திடலாம்
பொருளிழந்து வாழ்ந்திடலாம்
மண்ணிழந்து வாழ்வதொரு வாழ்வோ
கண்ணிழந்த வாழ்வு போலன்றோ?

பால்ய வயதுகளில் நண்பர்களோடு இணைந்து செய்த குறும்புத்தனங்கள் இப்போது நினைவு வந்தாலும், தூறல் மழையில் நனைவது போன்ற இதத்தை ஏற்படுத்திச் செல்லும். அவ்வாறே சிறுவயதில் சாப்பிட்ட இனிப்புக்கள், பலகாரங்கள், ஊரின் விசேட சாப்பாடுகள் என்பன ஞாபகத்துக்கு வரும் வேளைகளில் சிறுகுழந்தையாய் இதயம் தடுக்கிவிழும். அவ்வாறானதொரு நிகழ்வையும், அந்தச் சுகம் இனி சொந்த மண்ணில் கிட்டுமா என்ற எதிர்பார்ப்போடும் கவிஞர் கீழுள்ள வரிகளை கூறியிருக்கிறார். மண்ணில் வேரோடிய மனசோடு (பக்கம் 41)

கணங்கள் யாவுமே
கதைகள் பல சொல்ல
கனவுகளாய் விர்ந்து
கண்ணுக்குள் நிழலாட
நெஞ்சுக்குள் இனிக்கிறது

மண்ணில் வேரோடிய 
மனசோடு வாழுகிறோம்
மீட்டிடும் பொழுதுகள் யாவும்
மீளாதோ மீண்டும்
நிஜங்களாய் நாளை!

எந்த மதத்தவர் என்றாலும் தத்தமது மதத்துக்குரிய பக்தி அவர்களிடம் காணப்படுதல் இயல்பே. அவ்வகையில் புனித இஸ்லாம் மதத்தைக் கொண்ட நாங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவன் தூதர் வழி நடப்பதுதான் வெற்றியைத் தரும். எது நடப்பினும் எனக்குக் கவிலையில்லை. எனது குருதியின் ஒவ்வொரு துளியும் உச்சரிக்கும் கலிமாவை என்று ஈமானிய ரசம் பொங்க உறுதியாக கூறி நிற்கிறார் யாழ் அஸீம் அவர்கள். இது எங்கள் வரலாறு (பக்கம் 55)

என்னை
வெட்டித் துண்டாக்கு
சுட்டுப் பொசுக்கு
வேரோடு பிடுங்கி வீசு!
வீழும் உடலின்
ஒவ்வோர் அணுவும்
ஓடும் குருதியின்
ஒவ்வொரு துளியும்
உச்சரிக்கும் கலிமாவை!

முகாம்களில் அடைந்து வாழும் வாழ்க்கையப் பற்றியும் கவிதை எழுதத் தவறவில்லை யாழ் அஸீம் அவர்கள். எந்தவித சுகாதார வசதிகளும் அற்று, அடுத்த வேளை உணவுக்காய் அல்லல்படும் மனிதர்களின் மனங்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கும். பணக்காரராக வாழ்ந்தவர்கள் பரதேசிகளாக ஆன நிலையில் காலத்தை கடத்தும் வேதனையை யாரிடம் சொல்லி அழுவார்கள்? வெளிச்சம் வெளியேயும் இல்லை (பக்கம் 63) என்ற கவிதை வரிகள் எம் மனதையும் நெகிழ வைக்கின்றன.

புன்னகையை விற்றுக்
கண்ணீரைக் கடன் வாங்கிய
இவர்கள் வியாபாரத்தில்
எஞ்சியது சில மூச்சுக்கள்தான்!

கிழிந்த ஆடைகளைப் பற்றிக் 
கவலைப்படுவதில்லை
இவர்கள் கவலையெல்லாம் - நம்
கிழிந்த வாழ்க்கையைப் பற்றித்தான்!

பல்வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்டிருக்கும் கவிஞர் யாழ் அஸீம் அவர்கள் சிறந்த கவிதைத் தொகுதியை வெளியிட்டு, அவற்றை மக்கள் மனதில் பதியச் செய்துவிட்டார். அவர்; இன்னும் பல படைப்புக்களை எழுதி புத்தகங்களாய் வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.


நூலின் பெயர் - மண்ணில் வேரோடிய மனசோடு 
நூலாசிரியர் - யாழ் அஸீம்
வெளியீடு - ஸுபைதா பதிப்பகம்
முகவரி – 228/1, ஜும்ஆ மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை, கொழும்பு – 10.
தொலைபேசி – 0717 268466
விலை - 300 ரூபாய்