Thursday, December 16, 2010

மழை நதி கடல் - கவிதை தொகுதி

மழை நதி கடல் கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

இனம் மதம் மொழி என்ற வகைமைக்குள் பாகுபட்டுப்போகும் மனிதன் இயற்கையில் ஒன்றிணைகிறான். காலங்காலமாக பாடப்பட்டு வரும் கவிதைகளில் சிலர் பிரிவினைப்பட்டாலும், இயற்கையை பாடுபொருளாகக்கொண்டவற்றில் யாவருமே கட்டுண்டுப்போவது தான் உண்மை. அந்த வகையில் மழை நதி கடல் என்ற இனிமையான ஒரு தலைப்பை கொண்ட புத்தகத்தைத் தந்திருக்கிறார் நூலாசிரியர் இனியவன் இஸாருதீன்.


318 பக்கங்களைக்கொண்டு மிகக் கனதியாக, எழுவான் பப்ளிகேஷனின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியில் 91 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் கவிக்கோ அப்துல்ரகுமானின் அணிந்துரையுடனும், ஆசுகவி அன்புடீனின் மதிப்புரையுடனும், எம். ஏ. பௌசுர் ரஹ்மானின் மதிப்புரையுடனும்; ஆசிபெறுகிறது இவரது கவிதைத் தொகுதி.


அமெரிக்க விஞ்ஞானிகளும் ரஷிய விஞ்ஞானிகளும்
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பது மாதிரி
மழை நின்ற பிறகும்
இலையில் தூங்கும் ஒவ்வொரு நீர்;த்துளியையும்
ஆராதித்து
நானும் ஆராச்சி செய்துகொண்டிருக்கிறேன்...

என்று கவிஞர் முன்னுரையில் கூறியிருக்கும் வரிகளில் இயற்கையோடிணைந்த அவரது வாழ்வைக்காணலாம்.
இறைவனின் வல்லமைகள் பற்றியும், அவன் நமக்களித்த அருட்கொடைகள் பற்றியும் முதல் கவிதையான இறைவா உன்னிடம் கவிதை பேசுகிறது.

...இம்மையின் அதிபதி நீ
மறுமையின் நீதிபதி நீ
இம்மைக்கும் மறுமைக்கும்
நிலையான தலைவனே நீ... மேலும்
அழகின் இனிமை கான
விழிகள் ஆக்கினாய்
புகழின் மேன்மை கேட்க
செவிகள் ஆக்கினாய்
வாழ்வின் தூய்மை காக்க
இதயம் ஆக்கினாய்... என தொடர்கின்றன வரிகள்.

வல்ல அல்லாஹ்வுக்குப்பின் நாம் போற்ற வேண்டிய உத்தமர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பற்றிய கவிதையாக நாயகம் எங்கள் தாயகம் அமைந்திருக்கிறது. அதில் அவரை பூந்தாது கொண்டு வந்த ஹிறாத்தென்றல் என்று குறிப்பிட்டிருக்கும் உவமை ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

கணிப்புகளுக்கு அப்பால்
காலவெள்ளத்தின் வேகத்திற்கப்பால்
வையகமெல்லாம் ஓடம்
வற்றாத சமுத்திரம்
அவரது கருத்துக்கால்களுக்கு
எல்லைகளில்லை
போதனையலைகள்
ஓள்வதில்லை... என்ற வரிகளில் நாயகம் (ஸல்) அவர்களின் மாண்பு எடுத்துக்காட்ப்பட்டிருக்கிறது.

உலகில் ஆயிரம் சொந்தங்கள் எமக்கிருந்தாலும் தாய்போல் யாரும் துணையில்லை. அந்த வகையில் தாய் பற்றியும், தாயின் சிறப்பு பற்றியும் கூறாத கவிஞர்கள் இருக்கவே முடியாது. கவிஞர் இஸாருதீனின் கவிதைத் தொகுதியிலும் தாய் பற்றிய கவிதைகள் காணப்படுகிறது.

தூங்க வைப்பதற்காக தாலாட்டு
பாடுகிற உம்மா
நான் விழித்துக்கொள்வதற்காக
நீ எப்போது
பாடப்போகிறாய்? என்று கேள்வி கேட்கிறார். அதில்

இரவில் தலைக்கு எண்ணெய்
தேய்க்காதே என்றாய்
ஏனென்று கேட்டேன்
என்னடா எதிர்கேள்வி
கீழ்ப்படி என்றாய்
தேய்ப்பதை நிறுத்தவில்லை
பிறகு தான் அது
தலையணையில் ஒட்டுமென்றாய்
உடனே நிறுத்தி விட்டேன்

என்று கூறும் விடயம் தாய் சொல் தட்டினால் நஷ்டம் விளையும் என்பதை கூறி நிற்கிறது.

இந்தக்கவிதையில் சில யதார்த்தபூர்வமான பிரச்சனையையும் தொட்டுக்காட்டியிருக்கிறார்.

முன்கோபம் கூடாது
இதுவும் உன் அறிவுரை
இப்போது
அடிமை வேலை செய்கிறேன்
அவர்கள் ஆதிக்கிறபோது கூட
நான் ஆத்திரப்படுவதில்லை
முன்கோபம் தானே கூடாதென்றாய்
பின்கோபம் கூட
பெரிதாய் சேர்ந்து விடுகிறது...

மேலும் தாய் என்ற கவிதையில்

...அழகியின் புன்னகைக்கு
ஆண்மை அடக்கம்
தாயின் கண்ணீருக்கோ
தரணியே அடங்கும்...
ஒரு பெண்ணின் சதியால்
போர் நிகழும் என்றால்
தாயொருத்தியால் தான்
நிறுத்தமுடிகிறது...

என்று நிதர்சனமாக கூறப்பட்டிருக்கும் இந்தக்கவிதை பாராட்டுக்குரியனவற்றில் ஒன்று.

காதல் என்று கூறப்படுவது வெறும் இனக்கவர்ச்சிக்காக மட்டுமே என்ற கருத்துநிலையை இன்றைய காலத்தில் மெய்ப்பித்துக்கொண்டிருக்கின்றார்கள். பள்ளிப்பருவத்தில் கூட மாணவர் சமூகம் காதல் என்ற அறியாமையில் மூழ்கி தம்மை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். காதல், காமம் இரண்டுக்குமிடையேயான வித்தியாசத்தை, காமத்துடன் பேசும் காதல் என்ற கவிதையின்

நான் இதயத்தின் பிறப்பு
நீ உணர்ச்சியின் கழிவு
நான் இறைவனின் வரம்
நீ சாத்தானின் பரிசு...
நான் உறவுக்கான பேரின்பம்
நீ பிரிவுக்கான சிற்றின்பம்
நான் மானுடக்கிண்ணத்தில்
ததும்பும் அமுத ரசம்
நீ வேட்டைப்பற்களில் சுரக்கும்
கொடிய விஷம்...

ஆகிய வரிகளிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

வெறியில் துரத்திய முகங்கள் எதிலும்
ஒன்றில் கூட மானுடம் இல்லை
இருந்தவை எல்லாம்
இட்லரின் முகங்கள்
முசோலினியின் கண்கள்
யூத இதயங்கள்

என்ற ஏக்கம் ஓர் அகதியின் பாடல் என்ற கவிதையின் வாயிலாக வடஇலங்கையை விட்டு வெளியேறிய முஸ்லிமகளின் துயராக வெளிப்பட்டு நிற்கிறது.

பெண்களை போகப்பொருளாக மட்டுமே நோக்கிய ஒரு காலம் இருந்தது. இன்று அவற்றையெல்லாம் தகர்த்து புதுப்பொலிவாக பிறப்பொடுத்திருக்கிறாள் பெண். தாய்மையில் முழுமையடையும் பெண்ணின் பெருமையை கற்பு என்பது என்ற கவிதையில் அழகாக பறைசாற்றியிருக்கிறார் இஸாருதீன் அவர்கள்.

...ஒவ்வொரு பெண்ணும்
பிரமாண்டத்தின் இரகசியம்
ஒவ்வொரு பெண்ணும்
பிரபஞ்ச மர்மத்தின் பரகசியம்
ஒவ்வொரு பெண்ணும்
மாய்ந்துபோன இதயத்திற்கு
உயிரூட்டும் ஆனந்தம்...

என்ற கருத்துக்களில் அதை புரிந்து கொள்ளலாம்.

நெற்கதிர்களே என்ற கவிதையில் அவை மஞ்சள் நிறமாய் இருப்பதற்கு பொன்னாடை போர்த்தியவர் யார் என்று கேள்வி கேட்டு அதிசயிக்க வைக்கிறார்.

கலியுகத்தினில் கவலைகளோடு போராடாத மனிதர்கள் இல்லை. எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் ஓர் துன்பம் ஆழப்புதைந்திருப்பது கண்கூடு. அத்தகைய தருணங்களில் எல்லாம் தலைபோய்விட்டது போல வேதனை கொள்ளும் மனிதர்களுக்கு ஆறுதல் சொல்லும் தன்மை கவிஞனுக்கு இயல்பாக வந்த கலை தான். இஸாருதீனும் கூட இப்படிக்கவி பாடி ஆறுதல் தருகிறார்.

... அகம் மகிழ்கையில்
ஆழிப்பேரலை வந்து
அனர்த்தம் கூட நிகழ்த்தலாம்
எது நிகழ்ந்தால் என்ன
... எத்தனை துயர் வந்தாலும்
புன்னகையில் முகம் கழுவிப்பார்...

எத்தனை அர்த்தபுஷ்டியான வரிகளிவை? புன்னகையை வரவழைத்துக்கொண்டால் துன்பங்களேது என்றவாறு அமையப்பெற்றிருக்கிறது மேலுள்ள வரிகளைத்தாங்கிய மனங்கொள் மனிதா என்ற கவிதை.

எனக்கு கவிதை எழுதத்தெரியாதே என்று கூறுபவர்களுக்கு உனக்கும் கவிதை வரும் என்று அதற்கான காரணங்களைக் கற்றுத்தருகிறார் நூலாசிரியர். அதாவது தாயின் பிரசவ வேதனையை உணர்ந்தவர்களுக்கும், தன்னைத்தொலைத்து கண்டெடுத்தவர்களுக்கும், யாரோ ஓர் அப்பாவியின் சோகத்துக்காய் அழுதவர்களுக்கும், மரண அவஸ்தையறிந்து பிறப்பின் பெருமையை அறிந்தவர்களுக்கும் கவிதை வரும் என்கிறார்.

இஸாருதீனின் கவிதை வரிகளில் ஆழமாக மூச்செடுத்தவர்களுக்கு நிச்சயம் கவிதை வரும். அந்தளவிற்கு சுவாரஷ்யமாகவும், கருத்தாழம் மிக்கவையாகவும் கூறுவதுடன் நிறுத்திடாமல் பல கோணங்களில் சிந்தித்து, கெட்ட விடயங்களை நிந்தித்து ரசிக்கத்தகதாக மட்டுமன்றி சிந்திக்கத்தக்க விதமான கவிதைகளையும் தந்திருக்கிறார். இவரது அனைத்து கவிதைகள் பற்றியும் அழகாக வாழ்த்த முடியும் என்றாலும் புத்தகத்தை வாங்குபவர்கள் வாசித்தறிய வேண்டும் என்பதற்காக நிறுத்தி, அவரது இலக்கியப்பணி தொடர்ந்து நடைபெற என்றும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்!!!

பெயர் - மழை நதி கடல் (கவிதைகள்)
நூலாசிரியர் - இனியவன் இஸாருதீன்
முகவரி - அறபா பாடசாலை வீதி, அட்டாளைச்சேனை - 10
தொலைபேசி - 0094 672278404
மின்னஞ்சல் முகவரி - isarudeen@gmail.com
வெளியீடு - எழுவான் வெளியீட்டகம்
விலை - 400/=

Sunday, November 28, 2010

சிகரம் தொட வா - சிறுவர் கவிதைகள் தொகுதி

சிகரம் தொட வா - சிறுவர் கவிதைகள் தொகுதி பற்றிய ரசனைக் குறிப்பு

சிறுவர்களுக்கான இலக்கியங்கள் படைப்பது பெரும் சிரமம். கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதை விட குழந்தை இலக்கியத்தை படைப்பது மிகவும் கஷ்டமான வித்தை என்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மேற்சொன்ன கருத்தையெல்லாம் தகர்த்து ஆரம்பகால படைப்புகளையெல்லாம் கொடிய சுனாமி கொண்டு சென்ற போதிலும், சிறுவர்களுக்கு தன்னால் முடிந்த தொண்டுகளை செய்யும் நல்ல நோக்கத்துடன், துணிச்சலாக காத்திரமானதொரு சிறுவர் தொகுதியை கிண்ணியாவிலிருந்து திருமதி. பாயிஷா அலி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

`சிகரம் தொட வா' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் இந்த நூல் தி/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய இலக்கிய மன்றத்தால் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 35 பக்கங்களில் 22 கவிதைகளை உள்ளடக்கி இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.



கண்ணியமாக வாழந்திடுவோம், சிகரம் தொட வா, வண்ணக்கவிதைகள் படைப்போமா, துணைவருவாயா வெண்ணிலவே, அம்மாவின் முத்தம், வானவில்லை ரசித்திடுவோம், துளியே துளியே விழுந்திடு, நவீன ஆமையும் முயலும் கதை, கற்போம் கணனி, அப்பமும் பூனைக்குட்டிகளும், தண்ணீர்.. தண்ணீர், முயலின் தந்திரம், செல்ல நாய்க்குட்டி, உலகை வெல்வோம் நிச்சயமே, எறும்பும் வெட்டுக்கிளியும், நல்ல விருந்து, உணர்ந்திடுவாய், செல்லிடத்தொலைபேசி, வெற்றிக்கனியை சுவைப்போம், எங்களுர் கிண்ணியா, சின்னச்சிட்டுக்குருவிகளே, மீன்கள் வளர்ப்போமே என்ற தலைப்பிலான கவிதைகளை தாங்கியிருக்கிறது இப்புத்தகம்.

எளியமையான சொல் நடையுடன் சிறுவர்கள் சீக்கிரம் புரிந்துகொள்ளுமளவுக்கு விடயங்களை நுட்பமாகவும, கருத்துள்ளவையாகவும் யாத்துள்ளார் திருமதி பாயிஷா அலி அவர்கள். வசனங்களில் எதுகை மோனை அமைப்பு ரசிக்கத்தக்க விதமாகவும், சிறுவர்கள் இலகுவில் பாடல்களை நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையாகவும் எழுதியிருக்கிறார்.

'கண்ணியமாகவே வாழ்ந்திடுவோம்' என்ற கவிதையில்

'சொல்லும் கலிமா பொருளுணர்வோம்
ஐந்து நேரம் தொழுதிடுவோம்
செல்வம் தனிலே ஸகாத் ஈந்து
சிறப்பாய் நோன்பு நோற்றிடுவோம்...'

என்ற பாடலடிகளினூடாக இஸ்லாத்தின் அடிப்படைகளை மாணவர்களைக் கவரும் வண்ணம் சொல்லியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பாக சிகரம் தொட வா என்ற கவிதை, சின்னஞ்சிறார்களுக்கு துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் தரும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

வண்ணக் கவிதைகள் படைப்போமா எனும் கவிதையில் சிறுவர்களும் இலக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்கான வழிவகைகளைக் கீழுள்ளவாறு கூறியிருக்கிறார்.

'... காற்றும் கடலும் மழையும் பார்
களிப்பாய் நீந்தும் மீன்கள் பார்
நாற்றும் வயலும் கதிரும் பார்
நல்ல கவிதை நீ படைப்பாய்

வீட்டில் கோழி பூனை பார்
வெள்ளைக் கொக்கும் முயலும் பார்
கூட்டில் பேசும் கிளிகள் பார்
கொட்டும் கவிதை மழை போலே..'

'துணை வருவாயா வெண்ணிலவே' என்ற கவிதை சிறுவர்களுக்கு மட்டுமானதன்று. அதில் பொதிந்துள்ள சேதிகள் ஏராளம். ஊர் உறங்கும் வேளையில் ஒளி வீசும் நிலாவிடம் உலகத்தாரின் உளக்கரைகளை நீக்குமாறு கோரிக்கை விடுகிறார் ஆசிரியர். அது போலவே மேகமெனும் துன்பங்கள் சந்திரனை மறைக்கையில் முட்டிமோதும் தைரியம் போல், சோகங்கள் மனிதனை ஆட்கொள்ளும் போது அதிலிருந்து மீள்வது எவ்வாறு என்று தன் மன ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.

தாயின் முத்தத்தில் ஒளிந்திருக்கும் சுகானுபவத்தை 'அம்மாவின் முத்தம்' கவிதை உணர்த்திச்செல்கிறது. பொம்மையாலும், பூக்களாலும், வேறு விளையாட்டுப்பொருட்களாலும் அமைதிப்படுத்த முடியாத குழந்தையை தாயின் அணைத்துத் தரும் முத்தம் சுகமாய் துயில்கொள்ளச்செய்கிறது.

மேலும் இன்றைய நூற்றாண்டில் சிறுவர் முதல் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் சாதனம் கணனியாகும். கணனி கற்காதிருந்தால் எதிர்காலத்தில் தொழிலே இல்லை என்ற நிலை இன்று நிலவி வருகிறது. அதனடிப்படையில் கணணியை பயனுள்ள விதத்தில் கற்க வேண்டும் என்ற கருத்தை 'கற்போம் கணனி' எனும் கவிதை எடுத்தியம்புகிறது.

குரங்கிடம் அப்பம் கொடுத்து ஏமாந்த பூனைக்குட்டிகள் பற்றி சிறுவயதில் படித்திருப்போம். ஆனால் இந்த தொகுதியில் எழுதப்பட்டிருக்கும் 'அப்பமும் பூனைக்குட்டியும்' என்ற கவிதை நயக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலடிகள் பின்வருமாறு..

'.. சண்டையிட்டது குட்டிகளும்
சமனாய் அப்பம் பிரித்திடவே
கண்டே வந்தார் குரங்காரும்
'கணக்காய் பகிர்வேன்' என்றாரே

'வேண்டாம் நீங்கள் வஞ்சகராம்'
வீட்டில் பாட்டி சொன்னார்கள்
துண்டு துண்டாய் விழுங்கிடுவீர்
தூர விலகிடுவீர் குரங்காரே..'

அதே போன்று ஆரம்ப வகுப்புகளில் பக்கம் பக்கமாக வாசித்த முயல் சிங்கத்தின் கதையை வெகு சுவாரஷ்யமாக 20 வரிகளில் 'சின்ன முயலின் தந்திரம்' என்ற கவிதையூடாக சொல்லப்பட்டிருப்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எதிரிகளையும் மன்னித்தல் தான் நற்பண்பு என்பதை 'கொக்கும் நரியும்' என்ற கவிதை காட்டி நிற்கிறது. தட்டில் உள்ள பாலை நெடிய சொண்டால் பருகிட முடியாமல் கொக்கு தவிக்கும் போது நரி குறுநகை செய்கிறது. ஆனால் அடுத்த நாள் கொக்கின் வீட்டில் நரிக்கு அறுசுவை உணவு விருந்தாய் கிடைக்கிறது. பலி வாங்கப்படுவேனோ என்று எண்ணிய நரி இறுதியில் கொக்கிடம் மன்னிப்பு கேட்கிறது. மிகவும் அழகாகவும் கருத்தாழமும் மிக்க கவிதை இது. சிறுவர்கள் மனதில் இனிமேல் இவ்வாறான கவிதைகள் தான் பதிக்கப்பட வேண்டும். அதனால் பகைமை எல்லோராலும் மிதிக்கப்பட வேண்டும் என்பதை நன்றாக விளக்கியிருக்கிறார் பாயிஷா அலி அவர்கள்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலத்தில் அதே வேகத்தில் செல்லிடத்தொலைபேசிகளும் முக்கியத்துவம் பெற்று விட்டன. அதிலும் ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி ஏன் பாடசாலை மாணவர்களும் இன்று கைத்தொலைப்பேசி பாவிப்பது கண்கூடு. ஆகவே தொலைபேசியானது தொல்லைபேசி ஆகிவிடக்கூடாது என்ற அறிவுரையை 'செல்லிடத்தொலைபேசி' என்ற கவிதையில் இழையோடச்செய்திருக்கிறார் நூலாசிரியர்.

இவ்வாறு பல விடயங்களை ஏந்தி புதுப்பொலிவுடன் சிறார்கள் மகிழும்வண்ணம் வெளிவந்திருக்கிறது இப்புத்தகம்.

பெற்றோர், ஆசிரியர்கள் இதை குழந்தைகளுக்கு பெற்றுக்கொடுத்து, அவற்றைக் கற்றுக்கொடுத்து இலகுவாக குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவிடும் வகையில் மொழி நடை தடுமாற்றமின்றி வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை போன்று இன்னும் பல படைப்புக்களைத் தரவேண்டும் என்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!

பெயர் - சிகரம் தொட வா (சிறுவர் கவிதைகள்)
நூலாசிரியர் - கிண்ணியா எஸ். பாயிஷா அலி
முகவரி – 'அலி அரிசி ஆலை', மட்டக்களப்பு வீதி, கிண்ணியா – 03.
மின்னஞ்சல் முகவரி - sfmali@kinniyans.net , sfmali08@gmail.com
வெளியீடு – தி/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய இலக்கிய மன்றம்
விலை - 100/=

Monday, November 8, 2010

வெறிச்சோடும் மனங்கள் - கவிதைத் தொகுதி

வெறிச்சோடும் மனங்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் சில யதார்த்தப் பின்னல்களோடும், கடந்த காலத்தில் காயங்களைத் தந்துவிட்டுப்போன சுவடுகளோடும் வெளிவந்திருக்கிறது வெ. துஷ்யந்தனின் வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிiதைத்தொகுதி. ஷஎதிர்கால இலக்கிய சிற்பிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும்| என்ற உயர்ந்த இலட்சிய நோக்கைக்கொண்ட ஜீவநதியின் நான்காவது வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பில் இருபத்தைந்து கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

வலிகளோடு வாலாயப்பட்ட கவிதைகள் ஏராளம் பரந்து கிடக்கும் இத்தொகுதி சாமான்ய இளைஞனால் வெளிக்கொணரப்பட்டிருப்பது ஆச்சரியம் தான். கடந்த பல வருட காலமாக இந்த சின்னஞ்சிறிய இலங்கையில் தலைவிரித்தாடி தன் கூர் நகங்களால் மனிதர்களின் தொண்டைக்குழியை அடைத்து, யுத்த அரக்கன் படுத்திய பாடுகள், பலரின் படைப்புக்கள் வழியாக நம் எல்லோருக்கும் தெரிய வந்த விடயம் தான். அத்தகையதொரு சூழ்நிலையை எதிர்கொண்டு உடலாலும், உள்ளத்தாலும் காயப்பட்டு வாழும் நிலையில் இருக்கின்ற பல சகோதரர்களின் எண்ண அலைகளின் வெளிப்பாடுதான் துஷ்யந்தனின் இந்தக் கவிதைத்தொகுதி.



ஆர்ப்பாட்டமில்லாத, அலங்காரங்களின் அடுக்குகள் இல்லாத ஆனால் அர்த்தங்கள் நிரம்பிய பல கவிதைகளை இத்தொகுப்பில் தரிசிக்க முடிகிறது. வசனங்களில் இடர்பட்டு சிக்க வேண்டிய அவசியங்கள் இத்தொகுப்பில் இல்லை என்பது மகிழ்ச்சியான விடயம். சிலரது கவிதைகளைப் பார்த்தால் வார்த்தைகளை கண்டு அஞ்சி ஓடிவிடும் நிலைமை பலருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து மொத்தமாய் விலகி சாதாரண மக்களின் மனங்களிலும் நெகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக விதைத்துச் செல்கிறது வெறிச்சோடும் மனங்கள்.

..... தாம் வாழுகின்ற சூழல், அவலம், காதல் என பல்வேறு உணர்வுகளைத் தன் கவிதைகளுக்கூடாக வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் சமூகம், மொழி எடுத்துரைப்பு, படிமம் என பல்வேறு தனித்துவங்களையும் இவரது கவிதைகளை அடையாளப்படுத்தத் தவறவில்லை... என்கிறார் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கும் இரா. அகிலன் அவர்கள்.

தொகுப்பின் முதல் கவிதையான புரியாத வேதாந்தங்களில்

வீறுகொண்டெழும்
ஆறாத ரணங்களின்
ஆற்றாமையின் வெளிப்பாடாய்
புழுங்கிப்போனது மனித மனங்கள்...
இருப்பினும்
மாறுதல்களின் விளைவாய்
இவ்வளவு காலமும் இல்லாமல்
இப்போது மட்டும் விளைந்திடும்
சில புரியாத வேதாந்தங்களின்
முற்றுகையின் பெயரால்
அலையத்தொடங்கிற்று
மானுட ஆன்மா.. (பக்கம் - 01)

என்ற கவிதை வரிகள் சிந்திக்கத்தக்கவை. யுத்தகால நெருக்கடிகளை முன்வைத்து இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. இருந்துமென்ன முடிந்து போயிற்று என்று கூறிக்கொண்டாலும் அதன் வடுக்கள் இன்றும் எம்மத்தியில் பொங்கி நிற்கின்றன என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

அத்துடன் வலிகளுடனான வாழ்க்கை என்ற கவிதையில் வேதனையை கிளப்பிவிட்ட பாடுபொருள்களாக காதலும், போரும் இடம்பெற்றிருக்கின்றது. அமானுஷ்ய வாழ்வு என்ற கவிதை வழியே கனவுகளின் மீதான அதீத நேசம் இறுதியில் அமானுஷ்யமாகும் படி சபிக்கப்பட்டிருப்பதும் வித்தியாசமான பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது.
மனித மனங்கள் மரத்துப்போன இந்த உலகத்தில் வலி இல்லாத இதயம் உண்டா என்ற ஏக்கத்தின் கேள்வி வாசகனை மனம் உருக வைக்கிறது. நம்தேசத்தின் தற்கால சூழ்நிலையில் இவரது கேள்விக்கான விடை இயலாமைகளுடன் வாழ்ந்து சோர்ந்த நெஞ்சங்களுக்கு இதமாய் இருக்கும். தன்னளவில் நின்று தம் பிரச்சனைகள் பற்றி தாமே கூறுவது போன்றதொரு நிலையை தோற்றுவிக்கின்றன துஷ்யந்தனின் கவிதைகள்.

போரினால் போராளிகளாகிய பலருக்கு மத்தியில் கவிஞராக உருவெடுத்திருக்கிறார் துஷ்யந்தன். இளமையின் ஏக்கங்கள் இவரது கவிதைகளில் இடம்பிடிக்கத்தவறவில்லை.

..... விடை தெரிந்த வினாவுக்கு
விடை தெரிந்தும்
எழுத முடியாமல் தவிப்பது போல்
என் இதயம் அங்கலாய்ப்பு கொள்கிறது...
வந்த வேகத்திலேயே
சற்று புன்முறுவலையும்
தருவித்து விடுகிறாய் !
சிரிப்பு சர்வதேச மொழி என்ற
இறுமாப்புடன்
நானும் சிரிக்கிறேன்... (கனவுகளில் வாழ்தல் பக்கம் - 07)

... அப்பொழுதெல்லாம்
கற்பனைகளின் விசித்திரத்தில்
நினைந்து கொள்வேன்
எனது கவிதையொன்றை
இன்னொரு கவிதையே
விமர்சித்து விடும் யோகம்
யாருக்கு கிடைத்து விடும் என்று... ( கவிதைக்குள் கருவானவள் பக்கம் - 28)
என்ற வரிகள் அதற்கான சான்றுகளாயிருப்பது கண்கூடு.

நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய வாழ்க்கை சூன்யத்தை உற்பவித்து எம் மனங்களில் தீராத சோகத்தின் நிர்க்கதியான நிலைமையை தோற்றுவித்திருப்பதை தகர்ந்து போகும் பிடிமானங்கள வழியாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர். ஆனாலும் வாழ்க்கை குறித்த எமது நம்பிக்கைகள் இன்னும் தீர்;ந்துபோய்விடவில்லையென்று கூறும் வரிகள் வெறும் கவிதைகளாக மட்டும் நோக்க முடியாது. நிரந்தரமாகிவிட்ட மறுத்தல்களின் விம்பங்களும், ஒடிந்து போன இதயங்களின் வெளிப்பாடுகளும் விரவிக்கிடப்பதை உணர முடிகிறது.

..... காகங்கள் தயாராகின்றன சுவைப்பதற்கு
நாலைந்து நாய்கள்
கூட்டம் போடுகிறது
பங்கீடு தொடர்பாக... (மரணங்களும் மனிதங்களும் பக்கம் - 17)

என்ற வரிகள் போராளிகளின் வலையில் சிக்கி உயிர் துறந்த பல பெண்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்தியது. கண்டும் காணாதது போல இருந்ததொரு சூழ்நிலையில் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்ட பல சகோதரிகளின் அந்தரங்கம், இக்கவிதையூடாக வெளிப்பட்டிருப்பது போன்ற உணர்வு எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

காதலில் சிக்காத மனிதரில்லை. காதலில் சிக்காதோர் மனிதரில்லை என்று எங்கேயோ வாசித்த கூற்று ஆதலால் காதல் செய்வீர் என்ற கவிதையை வாசித்தபோது நினைவுக்கு வந்தது. காதலின் போது பல பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. அத்தருணங்களில் துணையின் அருகாமையும் வலியாய் இருக்கிறது. விலகலும் வலியாய் இருக்கிறது. இந்த கருத்தைத்தான்

காதலில் வலிகள் உருவங்களாக மாறும்
உருவங்கள் வலிகளாக மாறும்
அவஸ்தைகள் உருப்பெறும்
இருப்பினும்
அவை மகிழ்தலுக்கான ஆரம்பங்கள்... (ஆதலால் காதல் செய்வீர் பக்கம் - 18)
என்று துல்லியமாக சொல்லி விடுகிறார் நூலாசிரியர்.

அடுத்து கவிதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்த வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிதை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற ஸ்திரத்தன்மையை விளக்கிக்கூறுகிறது. எண்ணங்களைக்கூட வண்ணங்களாக நோக்க விடாமல் வேட்டுச்சத்தங்களால் உள்ளத்தில் பயம் என்ற அரக்கனை விதைத்துச்சென்ற காலம் இக்கவிதை மூலம் கண்முன்னே விரிகிறது.

..... நாளை என்ற பேச்சே
நாதியற்றுப்போக
நகர்கின்ற நாழிகைகளின்
ஆயுட்காலம் கண்டு
நீர்க்குமிழிகளே பரிதாபம் கொள்ளும்... | (வெறிச்சோடும் மனங்கள் பக்கம் - 32)
என்று எம்மையெல்லாம் ஆக்கிரமித்த துயரத்தை எம்முள்ளும் கலவை செய்வதால் எம் மனங்களும் சோகங்களால் வெறிச்சோடிப்போகிறது.

மொத்தத்தில் கவிதைத்தொகுப்பை வாசிக்கும் இறுதித்தருவாயில் கவிதைகள் முடியப்போகிறதே என்ற மனத்தவிப்பைத் தரவல்ல துஷ்யந்தனின் கவிதைகளை வாசிக்க நீங்களும் தயாராக இருந்தால் கீழுள்ள முகவரிகளினூடாக தொடர்பு கொண்டு இலக்கியத்துக்கு வளம் சேருங்கள். இந்த இளைஞனின் ரசனைக்கு களம் தாருங்கள். இன்னும் பல படைப்புக்களைத்தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
!

பெயர் - வெறிச்சோடும் மனங்கள் (கவிதை)
நூலாசிரியர் - வெ. துஷ்யந்தன்
முகவரி - ரதிமஹால், அல்வாய்.
தொலைபேசி - 0777 111 855
மின்னஞ்சல் முகவரி - bvthushy@yahoo.com
வெளியீடு - ஜீவநதி
விலை - 200/=

Monday, September 27, 2010

முரண்பாடுகள் - சிறுகதைத் தொகுப்பு

முரண்பாடுகள் சிறுகதைத் தொகுப்பு பற்றிய இரசனைக் குறிப்பு

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிரிவு, மட்டுவில் கிழக்கு மானாவளைக் கிராமத்தை பிறப்பிடமாகக்கொண்டவர் திரு. இதயராசன் அவர்கள். அவருடைய முரண்பாடுகள் என்ற சிறுகதைத்தொகுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது.

2008ம் ஆண்டு மீறல்கள் என்ற கவிதைத் தொகுதியின் மூலம் தன்னை ஓர் கவிஞராக நிலைப்படுத்தியவர், முரண்பாடுகள் என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் நானொரு சிறுகதை எழுத்தாளனுமாவேன் என இலக்கிய உலகத்துக்கு புரிய வைத்திருக்கிறார்.

தேசிய கலை இலக்கியப் பேரவையின் 111வது வெளியீடாக அழகிய அட்டைப்படத்துடன் பத்துச்சதம், ஜெயா, நம்பிக்கை, செய்வினை, முரண்பாடுகள், கனகலிங்கம், தபால், தர்மபுரம், மரங்கொத்தி, வெள்ளைச்சி, விஷகடி வைத்தியம், தியாகம், வைரவி ஆச்சி, மைதானம், விதைப்பு என்ற பதினைந்து சிறுகதைகளை உள்ளடக்கி அச்சாகியிருக்கிறது முரண்பாடுகள் என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு.



இவரது சிறுகதைகள் தான் சந்தித்தவற்றின் மீட்டலாகவே காணப்படுகிறது. அவர் பிரயோகித்திருக்கும் மொழிநடை வாசகர்களை திக்குமுக்காடச் செய்யவில்லை. அதை பேராசிரியர் சிவசேகரம் அவர்கள் தனது உரையில்

இதயராசனின் மொழிநடை பேச்சுமொழியோடியைந்தது. அதிலே ஆர்ப்பாட்டமான தன்மையையோ சொல் அலங்கார அடுக்குகளையோ வாசகரை பிரம்மிக்கச் செய்யும் வர்ணனைகளோ இல்லை. அவர் அருகிலிருந்து பேசுவது போலவே அவருடைய கதைகள் அமைந்துள்ளன... என்று குறிப்பிடுகிறார்.

அது மாத்திரமின்றி சில சொற்கள் இலங்கை நாட்டின் நாலாபுறத்திலும் வசிக்கும் மக்களின் பேச்சுமொழியிலிருந்து சற்று மாறுபட்டு யாழ்ப்பாணத் தமிழின் சுவையை உணரக்கூடிய வகையில் அமைந்திருக்கின்றது.

சிறுகதை எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னை அலட்டிககொள்ளாமல் தான் சார்ந்த சூழலில் இடம்பெற்ற, தன் மனதில் பசுமரத்தாணியாய் பதிந்து போன சில கருக்களுக்கு உயிர்கொடுத்திருக்கிறார் நூலாசிரியர் இதயராசன் அவர்கள்.

அவரே அதைப் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

எனது ஆழ்மனதில் உறங்கிக் கிடந்தவற்றுக்கே உயிர்கொடுக்க முற்பட்டேன். அவை எனது சின்ன வயசு அனுபவங்களாகவே இருந்தன. அத்தோடு வன்னிப் பிரதேசத்தினை தளமாகக்கொண்டு எழுபதுகளிலிருந்து அண்மைய நந்திக்கடல் வரையான சம்பவங்களைப் பதிவாக்கியுள்ளேன்.

இத்தொகுப்பிலிருக்கும் பத்துச்சதம் என்ற முதல் சிறுகதையானது சிறுவன் ஒருவனின் பார்வையில் நகர்த்தப்பட்டிருக்கிறது. யாரையும் மதிக்காத, ஒருவருடனும் சிரித்தும் பேசாத குணமுடைய ஒரு சிறுவன், தன் தந்தை மற்றவர்களுடன் நட்புறவாடும் போது எரிச்சலடைகிறான். அப்படியிருக்க ஒரு தினத்தில் அவன் வைத்தியசாலைக்கு செல்லும் சூழ்நிலை உருவாகிறது.

அத்தருணத்தில் எதிர்பாராத ஒரு சம்பவம் இடம்பெறுகிறது. அதாவது கவுண்டரிலிருந்து துண்டுபெற்ற பின்னரே வைத்தியசாலையினுள்ளே செல்ல முடியும் என்று அவன் அறிகிறான். ஆனால் கையில் காசில்லாத சந்தர்ப்பமது. கடும் காய்ச்சலாயிருக்கும் நேரத்தில் அருகே தன் தந்தையின் சிநேகிதர் அவனை பார்த்து, நிலைமை அறிந்து உதவ முன்வந்த போது சிறுவன் தனக்குள்ளே வெட்கப்பட்டுப்போகிறான். எல்லோருடனும் நட்பாக பழகினால் ஆபத்தில் கைகொடுக்கும் என்ற படிப்பினையை தருகிறது பத்துச்சதம் என்ற இந்த சிறுகதை.

அடுத்ததாக ஜெயா எனும் சிறுகதை இன ஒருமைப்பாட்டை எடுத்தியம்புகிறதாய் பின்னப்பட்டிருக்கிறது. கொழும்பில் கலவரம் நிகழ்கிற அந்த பயங்கரமானதொரு சூழ்நிலையில் சகோதர இனத்தைச்சேர்ந்த ஜெயாவை ஏதாவது செய்து விடுவார்களோ என்ற பயம் வாசகர்களுக்கும் உண்டாகிறது. இறுதியில் இரவோடிரவாக காட்டுவழியால் உடையார்கட்டி எனும் இடத்துக்கு ஜெயா பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுகிறார். அந்த அந்நியோன்னியத்தை, பாசத்தை வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளும் இத்தகைய மனநிலை எல்லோருக்கும் இருப்பது ஐயமே.

நம்பிக்கை என்ற கதை பானுமதி என்ற பெண்ணின் கதையதாக இருக்கிறது. பாண்டியன்குளம் எனும் ஊரில் மிகக் கோரமாக யுத்த நிகழ்வுகள் இடம்பெறுகிறது. இதுவரை சுத்தமான காற்றையே சுவாசித்தவர்கள் இனி மூச்செடுக்கவும் பயந்து போனதொரு இக்கட்டான நிலைமை உருவாகிறது. அப்போது பரியாரி கணபதியாரின் வாரிசான பானுமதி உட்பட பலரும் இடம்பெயர்ந்து செல்கிறார்கள். அந்த கஷ்டமான நிலைமையினை

பாலும் தேனும் ஓடிய ஊரில் வாழ்ந்தவர்கள் பாண் துண்டும் இல்லாமல் புழுத்துச் சக்குப்பிடித்த வெள்ளை அரிசியைத் தண்ணீரில் கழுவி வேகவைத்து அதன் கஞ்சியை அமுதமெனப்பருகினர். சிலர் அதுவும் கிடைக்காமல் காட்டில் உள்ள காய்களை பறித்துத் தின்று, சருகு ஊறிய சாயநிறமான தண்ணீரைக் குடித்தனர்.

எனும் வரிகளால் வாசக நெஞ்சங்களில் துன்ப வெள்ளத்தைத் தேக்கிவிடுகிறார்.

அது மாத்திரமல்ல. இந்தக்கதையின் உச்சகட்ட வேதனையாக இந்த வரிகள் அமைந்து கதையின் சிறப்புக்கு மெருகூட்டுகின்றன.

... கண்களைத் திறந்து பார்க்கிறாள். வெள்ளைக் கோட் போட்ட வைத்தியரின் கனிவான பார்வை அவளுக்கு ஒத்தடம் கொடுக்கிறது. கால்களை அசைக்கிறாள். அசைகிறது. அடுத்து கரங்களினை அசைக்கிறாள். முழங்கைக்கு கீழ் அசையவில்லை. அங்கே கரம் இருந்தால் தானே அசைக்க முடியும். நிலைமையினைப் புரிந்து கொண்ட பானுமதியின் கண்களிலிருந்து ஆறென கண்ணீர் பெருக்கெடுக்கின்றது...

பானுமதியின் கண்களில் மாத்திரமின்றி இக்கதை முழுவதையும் வாசிக்கும் நமது கண்களிலும் கண்ணீர் வருமளவுக்கு இக்கதையை உயிரோட்டமுள்ளதாக, அருகிலிருந்து பார்ப்பது போன்ற உணர்வை தரக்கூடியவாறு எழுதியிருப்பதை பாராட்டத்தான் வேண்டும்.

அடுத்ததாக செய்வினை என்ற கதை உளவியல் பிரச்சனையோடு சம்பந்தப்படுத்தி சுவாரஷ்யமாக சொல்லப்பட்டிருக்கிறது. கதையின் நாயகனான ஆறுமுகத்தின் மாமா வீட்டில் திடீரென்று நெருப்பு பிடிக்கிறது. அதைப் பார்த்த அனைவரும் பேயறைந்தது மாதிரி இருக்க, அவ்வீட்டில் மூன்று மாதங்களுக்கு முன் வந்த கோமளா எனும் பெண் மாத்திரம் சிரித்தபடி இருப்பதுவும் வாசகனை பிரம்மிக்க வைக்கிறது.

இதே கதையில் இன்னொரு உளவியல் ரீதியான பிரச்சனையொன்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. அதாவது இளம் தம்பதியர் வசிக்கும் வீட்டில் பெண்ணின் தங்கையும் வந்து சேருகிறாள். அன்றிலிருந்து அவ்வப்போது சமைத்த கறியில் கல் இருப்பதாகவும், வீட்டிற்கு மேல் கற்கள் வந்து விழுவதாகவும பல அதிசயங்கள் நடக்கின்றன. அதற்கான காரணத்தை கண்டறிந்த போது ஏற்பட்ட பிரச்சனை என்ன என்பதை

திருமண வயதான போதிலும் திருமணமாகாமல் ஆசைகளை அடக்கி வைத்திருந்ததும், அவளுக்கு இரண்டு வயது மூத்த தமக்கை தனது கணவருடனும் பிள்ளையுடனும் சந்தோஷமாக வாழ்வதும் ஏக்கத்தினையும் பொறாமையையும் ஏற்படுத்திவிட்டது. அதன்பேறாக உளப்பிளவு (Schizophrenia) எனும் மனநோய்க்கு உள்ளாகியிருந்தது தெரிய வந்தது என குறிப்பிட்டுக் காட்டுவதுடன் கோமளாவின் காதல் சுக்குநூறாக உடைந்து போன பின்பே அவளுக்குள் இவ்வாறானதொரு மாற்றம் ஏற்பட்டது என சின்னத்தம்பியாரின் கூற்றாக உண்மையான காதலின் ஆழத்தை விளங்க வைக்கிறார்.

கனகலிங்கம் என்ற கதை பாடசாலை தளத்தை அடிப்படையாகக்கொண்டது. இதயராசன் அவர்கள் கல்வியமைச்சில் கடமையாற்றுவதனால் இவை போன்ற அனுபவங்களை கதையாக்குவதில் வல்லமை பெற்றிருக்கலாம்.

அதாவது யாருக்கும் பயமில்லாமல் முரட்டுத்தனத்துடன் படிப்பே ஏறாதவனாக இருப்பவன் தான் கனகலிங்கம். தடியன் என்ற அடைமொழியினால் சக ஆசிரியர்களால் அழைக்கப்படும் கனகலிங்கத்தை பேர் சொல்லி அழைத்ததும் மிகவும் பவ்வியமான தோற்றத்துடன் ஆசிரியர் முன் நிற்கின்றான். வறுமைப்பட்ட குடும்பத்திலிருந்து வரும் அவனுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது தான் கதையின் கரு. அதை பாடசாலை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

தண்டனை என்பது தவறைத் திருத்திக்கொள்வதற்கே தவிர பழி தீர்த்துக்கொள்வதற்கல்ல என்ற அடிப்படையில் ஆசிரியர்கள் செயற்படுவார்களேயானால் எப்பேர்ப்பட்ட மாணவர்களையும் வல்லவர்களாக்க முடியும் என்று உணர்த்தியிருக்கிறார் இதயராசன் அவர்கள்.

அது போல முரண்பாடுகள் என்ற சிறுகதை போர் கொடுமையையும், தபால் என்ற சிறுகதையில் குறிப்பிடதொரு ஊரில் நடக்கும் தபால் சேவையின் அசமந்தப்போக்கையும் சுட்டிக்காட்டியிருக்கிறார். மற்றும் வெள்ளைச்சி என்ற கதை விலங்குகளிடத்தில் அன்பு பாராட்டுவோம் என்ற அடிப்படைக் கருத்தைக்கொண்டு அமையப்பெற்றிருக்கிறது.

மைதானம் என்ற சிறுகதையும் விநோதமாக எழுதப்பட்டிருக்கின்றது. அதாவது மைதானம் அமைக்க வேண்டும் என்ற ஆவலில் எடுக்கப்படுகின்ற தீர்மானங்களுக்கு புதர்களினிடையே தகர்ந்த நிலையில் காணப்படுகிற மலசலகூடம் தடையாய் இருக்கிறது. அதனை தரைமட்டமாக்குவதில் அதிபர் உட்பட மூத்த ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். காரணம் முறைப்படி அனுமதி பெறாமல் மலசலகூடம் உடைக்கப்படுமாயின் அதிபரே பல சவால்களுக்கு முகம்கொடுக்க நேரிடும் என்பதே.

மாணவர்கள் தான் முதலில் மலசலகூடமிருக்கும் இடத்தை கண்டுபிடிக்கிறார்கள். அவர்களே அதை உடைத்தால் பிரச்சனைகள் ஏற்படாது என்று அறிந்த இளம் ஆசிரியர் மாணவர்கள் உடைக்கட்டும் என்ற உள்நோக்கத்தை மனதில் இருத்தி,; மாணவர்களைப் பார்த்து இவ்வாறு கூறுகிறார்.

கண்டு பிடித்தது தான் நீங்கள் செய்த குற்றம். அதற்கு பிராயச்சித்தமும் நீங்களே தேடிக்கொள்ளுங்கள்

அவர் சொன்னதன் நோக்கத்தை புரிந்து கொண்ட மாணவர்கள் அவரின் கூற்றை வேதவாக்காக ஏற்று மாணவர்கள் மலசல கூடத்தை தரைமட்டமாக்கி விட்டு ஏதுமறியாதவர்கள் போல் இருப்பது ஆசிரியருக்கு சிரிப்பை வரவழைத்தாலும் அதிபருக்கு தனது போலி அதிர்ச்சியை காட்டிக்கொள்கிறார். இந்தக்கதையின் இறுதிக்கட்டத்தில் மைதானம் அமைக்கப்பட்டு விளையாட்டுப் போட்டியும் இடம்பெறுகிறது.

நான் இங்கு குறிப்பிட்டுக் காட்டியவற்றுக்கும் அப்பால் கதைகளில் சுவாரஷ்யத்தன்மை எந்தளவில் காணப்படுகிறது என்று அறிய ஆவலாக இருப்பீர்கள். இதயராசன் அவர்களின்; முரண்பாடுகள் சிறுகதை தொகுதியைப் பெற இன்றே முந்திக்கொள்ளுங்கள்!!!

Monday, September 6, 2010

கண்ணுக்குள் சுவர்க்கம் - சிறுகதைத்தொகுதி

கண்ணுக்குள் சுவர்க்கம் -  சிறுகதைத்தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

எங்கோ ஓர் மூலையில்
நான்கு சுவர்களுக்குள்ளிருந்து
ஒவ்வொரு இரவும்
தூக்கம் காணாமல் போன கண்களுடன்
ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும்
முதிர்கன்னிகளுக்கு...

என்ற ஓர் கவித்துவ வரிகளுடன் ஏழைக் குமர்களுக்காக தன் சிறுகதைத் தொகுப்பை சமர்ப்பணமாக்கியிருக்கிறார் கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதைத் தொகுதியின் நூலாசரியரான காத்தான்குடி நசீலா.


புரவலர் புத்தகப் பூங்காவின் 24வது வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் நெஞ்சம் மறப்பதில்லை, ஞாபகம் வருதே, பெருநாள் பரிசு, பாவ மன்னிப்பு, முஹர்ரம் தந்த விடுதலை, நடை, தலை நோன்பும் புதிய பயணமும், கண்ணுக்குள் சுவர்க்கம், சுனாமியும் ஒரு சோடி காலுறையும், இரசனைகள் என்ற பத்து தலைப்புக்களில் சிறுகதைகள் அமையப் பெற்றிருக்கின்றன.

இவரது படைப்புக்களில் பெண்ணியம் பேசுவதாய் அமைந்திருக்கிறது. அவரது உரையில் கூட பெண் உணர்வுகள் மிதிக்கப்படுபவையாக இல்லாவிட்டாலும், மதிக்கப்படுபவையாக இருக்கிறதா என்பது கேள்விக்குறியே என நூலாசிரியர் காத்தான்குடி நசீலா அவர்கள் ஆவேசப்பட்டு, கீழே

நான் எழுதிய கவிதைகளில் நாடகங்களில் சிறுகதைகளில் பெண்மையின் துடிப்புகள் தான் அதிகம் கேட்கும்

இங்கேயுள்ள ஒவ்வொரு சிறுகதையும் வெறும் எழுத்துக்களாக அல்ல. உணர்வுகளாகத்தான் வடித்திருக்கிறேன்

என்று பெண்மையின் பெருமையை உணர்த்தியிருக்கிறார் திருமதி நசீலா அவர்கள்.
நெஞ்சம் மறப்பதில்லை என்ற முதல் சிறுகதையானது காதலை அடிப்படையாகக்கொண்டு அமைந்த சிறந்ததொரு படைப்பாகும். நஸ்லியா - சாபிர் என்ற இருவரையும், நஸ்லியாவின் தந்தையான கலந்தர் காக்காவையும் பிரதான பாத்திரங்களாகக்கொண்டு கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.

தனது தங்கையின் பிள்ளைகளில் ஒருவனான சாபிரை தன் மகனாய் எண்ணி படிப்பித்து ஆளாக்குகிறார் கலந்தர் காக்கா. தன் மகள் நஸ்லியாவும் சாபிரும் விரும்புவதை அறிந்தும் அறியாமல் இருக்கிறார். சாபிர் மீது அவர் கொண்ட நம்பிக்கை தான் இவற்றுக்கு காரணம் என வாசகர்களால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

நஸ்லியாவுக்கு முழு உலகமுமே சாபிர் மச்சான் தான். சாபிருக்கு பல்கலைக்கழகம் கைகூடாத ஒரே காரணத்துக்காக, தனக்கு கிடைத்த அனுமதியையும் மறுத்து விடுகிறாள் நஸ்லியா. நஸ்லியா சிறுவயது முதலே சாபிர் மீது கொண்டிருந்த அன்பினை சாபிர் மச்சான் நண்டு பிடித்துத்தா... சாபிர் மச்சான் சிப்பி பொறுக்கித்தா... என்ற வரிகள் முலம் துல்லியமாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

ஆனால் சாபிர் வெளிநாடு சென்று வரும்போது தன்னுடன் இன்னொரு பெண்ணை அழைத்து வந்து தன் மனைவி என்று அறிமுகப்படுத்துகிறான். சகலதையும் தலையாட்டி கேட்டு விட்டு அவர்கள் சென்றதும் துண்டால் வாயைப்பொத்தி கலந்தர் காக்கா அழும் அழுகை கண்முன் நிழலாடுகிறது.

அடுத்ததாக ஞாபகம் வருதே என்ற சிறுகதையும் தொலைந்து போன காதலை மையப்படுத்தியே பின்னப்பட்டிருக்கிறது. சூழ்நிலைக் கைதியாகி, வாப்பாவின் மையத்தின் பின் தனது மாமாவின் கண்ணீருக்கு கட்டுப்பட்டு, பூ போல பாதுகாத்து வந்த அவளின் இதயத்தை அவன் வேறொருத்தியை திருமணம் செய்து கொள்வதன் மூலம் சுக்குநூறாக்கி விடுகிறான் கதையின் நாயகன்.

அவற்றையெல்லாம் மறந்து அவன் இல்லற வாழ்வில் நுழைந்து இன்று மூன்றாவது பிள்ளைக்கும் தந்தையாகி விட்ட போது தான் மெஹரூன் நிசாவின மடல் வாழ்த்துச் செய்தியாக வந்து மனசை சுட்டெரிக்கிறது.

வேலை வேலை என்று ஓடியோடி நிம்மதி தொலைத்த நினைவுகளில் அடிக்கடி வந்து போகும் மெஹரூன் நிசாவை மறக்க மனசு துடித்தாலும் எப்படியாவது ஞாபகம் வந்து விடுவது போல ஓர் சம்பவம் இடம் பெறுகிறது. அதாவது ஒரு கல்லூரியில் ஆசிரியர்களை கௌரவிக்கும் நிகழ்வின்போது சிறப்பு அதிதியாக கலந்துகொள்கிறான் கதையின் நாயகன். அந்தப் பட்டியலில் செல்வி என்ற அடைமொழியுடன் மெஹரூன் நிசாவின் பெயர் அழைக்கப்பட்ட போது அதிர்ந்து விடுகிறான்.

தன்னால் ஓர் பெண்ணின் இளமைக்கு துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று தெரிந்தும் அதிர்ச்சியடையாமல் இருந்தால் அவனுடைய காதலுக்கே அர்த்தமற்று போயிருக்குமே? எனினும் எப்படியாவது மெஹரூன் நிசாவுடன் பேசி அவளுக்கு திருமணம் செய்து கொள்ளச் சொல்லுகிறான். ஷமாட்டேன்| என்ற அவளது உறுதியான முடிவு அவனை ஊமையாக்குகிறது.

உதவிகள் நன்றிக்குரியது. உறவுகள் மரியாதைக்குரியது. முடிந்தால் இன்பங்களையும் துன்பங்களையும் பகிர்ந்துகொள்ளக்கூடிய நல்ல நண்பராக இருங்கள் என்ற மெஹரூன் நிசாவின் வார்த்தையாடலோடு மிகவும் சோகமாக நிறைவுறுகிறது இந்த கதை.

பாவமன்னிப்பு என்ற சிறுகதை இரண்டு தனவந்தர்களை அடிப்படையாகக்கொண்டது. தனது நெருங்கிய தோழரான அசன் ஹாஜியார் பாத்திமா டீச்சர் எனும் பெண்ணை மணமுடிப்பதாகக்கூறி ஏமாற்றியதையும், தானும் பணம் இருக்கும் காரணத்தால் சபலம், சலனம் இரண்டுக்கும் அகப்பட்டுக் கொண்டதையும் எண்ணி வெந்து துடிக்கிறார் ஹமீது நானா.

ஏழை ஒருத்தன் திருந்தினால் ஒரு குடும்பம் மட்டும் நேர்வழி பெறும். ஆனால் ஒரு பணக்காரன் திருந்தினால் அவன் வாழும் சமுதாயமே பலனடையும் என்ற கருத்து சிந்திக்கத்தக்கது.
ஆதலால் யாருமற்ற தனித்த ஓர் இரவில் பள்ளிவாயலில் தங்கி, தனக்குத்தானே சாட்டையால் அடித்து படைத்தவனிடம் பாவமன்னிப்பு கோரும் அருமையான கதை. இந்தத் தடவை ஹஜ் செய்து விட்டு வரும்போது, அன்று பிறந்த பாலகனாய் உளத் தூய்மையுடன் ஹமீது நானா காணப்படுவார் என்று வாசக உள்ளங்களை தொட்டு விடுகிறார் கதாசிரியர்.

தலை நோன்பும் புதிய பயணமும் என்ற கதையின் கரு வித்தியாசமானது. தனது தந்தையின் சகோதரியான தன் மாமி வீட்டில் ராணியாகவே வாழ்ந்தவள் மிஸ்ரியா. அவள் சாதிக் என்ற இளைஞனை காதலிக்கிறாள். ஆனபோதும் சாதிக்; தன் காதலில் உறுதியாக இருக்கவில்லை. நௌசாத்தும் நூர்ஜஹான் என்ற பெண்ணை காதலிக்கிறான். ஆனாலும் மாமியின் வார்த்தைகளுக்கு வீட்டில் யாருமே மறுத்துப் பேசாத காரணத்தால் ஏமாந்து போன இதயத்துடன் மிஸ்ரியாவும், ஏற்றுக்கொள்ள முடியாத இதயத்துடன் நௌசாத்தும் மணவாழ்வில் நுழையும் துரதிஷ்டம் ஏற்பட்டு விடுகிறது.

வருடங்களின் நகர்வில் நௌசாத் தான் நேசித்த பெண்ணான நூர்ஜஹானை மணமுடித்ததுவும், மிஸ்ரியாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதுமான கோர நிகழ்வு ஏற்பட்டு விடுகிறது. அது மாத்திரமன்றி முதன்முதலாக தாய்க்கு எதிராகவும் தன் புது மனைவிக்கு ஆதரவாகவும் பேசுகிறான் நௌசாத்.

இனி தமக்கிடையில் உறவுகள் ஏதுமில்லை என்ற மாமியின் கோபாவேசத்தால் மீண்டும் நௌசாத் வீட்டுப்பக்கமே வராதளவுக்கு நிலமை தலைகீழாகிப்போகிறது. காலம் தன் பாட்டில் கரைய, ஒரு நாள் தன் தோழியின் டிஸ்பன்சரிக்கு செல்லும் மிஸ்ரியா, அங்கு நிறைமாதக் கர்ப்பிணியாக இருக்கும் நூர்ஜஹானையும், அவளுக்கு அன்புடன் பணிவிடை செய்கிற நௌசாத்தையும் கண்டு பேரதிர்ச்சியும் கவலையும் அடைகிறாள்.

மாமிக்கு மகளாய் இருந்தும், சுயதொழிலும், முன்னேற்றத்திற்குமான பெண்கள் அமைப்பை ஆரம்பித்தும் இன்று பலருக்கு வேலைவாய்ப்பு கொடுக்குமளவுக்கு மிஸ்ரியா முன்னேறியிருக்கிறாள் என்ற சிறிய ஆறுதலோடு முடிக்கப்பட்டிருக்கிறது இந்தக் கதை.

இறுதியாக புத்தகத்தின் தலைப்பான கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதை பெண் கல்வியைப்பற்றி pபேசுகிறது. உம்மா உட்பட அனைவரும் ஷிப்னாவுக்கு திருமணம் செய்ய வலியுறுத்தும் போது, அவளது கல்வியை நீடிக்க நினைக்கிறார் ஷிப்னாவின் தந்தையான ஆசிர் ஹாஜி. அவ்வாறு சம்மதித்த தனது தந்தைக்கு இன்னொரு குடும்பம் இருக்கிறது என்ற உண்மையை சுதாகரிக்க முடியாமல் தவிக்கிறாள் ஷிப்னா.

ஷிப்னா முணமுடிக்கவிருந்த சாதிக் என்பவனிடம் தந்தையின் இரண்டாம் தாரமான தனது சாச்சி, என் மகள் ஷிப்னா மேற்கொண்டு படிக்கிறதுக்கு நீங்கள் தான் வழிகாட்டணும் என்று கூறி அழுததாக சாதிக் ஷிப்னாவிடம் நடந்ததை விபரிக்கிறான்.

சாச்சியின் அன்பை எண்ணி தனக்குள் சாச்சியை உம்மா என்று அவள் உச்சரிப்பதை வாசிக்கையில் புல்லரித்துப்போகிறது.

திருமதி நசீலா அவர்களின் சிறுகதைகள் சமுதாயத்திற்கு, பெண்களின் முன்னேற்றங்களுக்கு முன்னுதாரணமானவை. அவற்றில் அறிவுசார் கருத்துக்கள் பல பொதிந்திருக்கின்றன. அநேகமாக எல்லா கதைகளும் உயிர்துடிப்பானவை.

அவர் கையாண்டிருக்கும் மொழிநடை இனிமையாகவும் இதமாகவும் இருப்பதுடன் அம்மொழியினூடே கிழக்கு மாகாணத்துக்குரிய சொல்லாடல்களையும் அறிந்து கொள்ளக்கூடியதாயும் இருக்கிறது. கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற அவரது நூலை வாசித்து நெஞ்சில் சங்தோஷம் ஏற்றிட நீங்களும் தயாரா?

பெயர் - கண்ணுக்குள் சுவர்க்கம்
நூலாசிரியர் - காத்தான்குடி நசீலா
வெளியீடு – புரவலர் புத்தகப்பூங்கா
முகவரி – 25, அவ்வல் சாவியா வீதி, கொழும்பு - 14
தொலைபேசி – 0774 161616, 0786 367431
விலை - 150/=

Tuesday, July 13, 2010

இது ஒரு ராட்சஷியின் கதை - நாவல்

இது ஒரு ராட்சஷியின் கதை - நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு 

அண்மையில் வாசிக்கக் கிடைத்த நாவல்களுள் மிகவும் வித்தியாசமான போக்கில் அமைந்து மனதை தொட்டது வெளிவிட்ட ஜரீனா முஸ்தபா எழுதியிருக்கும் இது ஒரு ராட்சசியின் கதை என்ற தலைப்பில் அமைந்திருக்கும் நாவல். இது இவரது இரண்டாவது நாலாகும். இது கடந்த வருடம் இந்தியாவில் இடம்பெற்ற சர்வதேச நாவல் போட்டியில ஆறுதல் பரிசு பெற்ற தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பாதாளம் மட்டும் பாய்ந்து மக்களை பேதமைக்குள்ளாக்கி விடும் பணத்தை கருவாகக் கொண்டு அழகானதொரு கதையை 19 அத்தியாயங்களில் மிகவும் அம்சமாக சித்தரித்திருக்கிறார் இலங்கையில் நாவல்களை எழுதி வரும் பிரபலங்களுள் ஒருவரான திருமதி. ஜரீனா முஸ்தபா அவர்கள்.



இவர் ஏற்கனவே மித்திரன் வாரமலரில் தொடராக எழுதி வந்த ஒரு அபலையின் டயறி| என்ற நாவலின் சொந்தக்காரர். சிறுகதைகளையும், கவிதைகளையும் யதார்த்தபூர்வமாக எழுதி வரும் இவருக்கு நாவல் குறித்தும் பரந்ததொரு அறிவு இருப்பதை இந்த இரண்டு படைப்புகளினூடாக அறிந்தபோது பிரம்மிப்பாக இருந்தது.

இன்று தமிழைக் கசடறக் கற்றாலும், நிறுத்தி வைத்து சுட்டாலும் இலக்கியம் வாய்ப்பது சிலருக்குத்தான். ஒரு படைப்பாளனை யாரும் உருவாக்க முடியாது. கலைஞனாவது கடவுள் அளித்த வரம். அந்த வகையில் சகோதர மொழியில் கல்வி பயின்றாலும் சொல்லாட்சி, கதை கூறும் பாங்கு, தான் சார்ந்த சூழலின் தாக்கத்தை கூறுதல் என்பன ஆசிரியருக்கு கைவந்த கலையாக இருக்கிறது.

அழகான முகப்பு அட்டையை ஏந்தியிருக்கிறது புத்தகம். எக்காலத்திலுமே ஓய்ந்து விடாத அலைகள் போன்று தான், குடும்பத்துக்குள் எழுகிற பிரச்சனைகளும் தீர்வதில்லை என்ற கருத்துப்பட புத்தக அட்டை வடிவமைக்கப்பட்டிருக்கலாம்.

இன்று இலக்கியக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் பலர் மனிதாபிமானம் அற்றவர்களாக இருப்பது கண்கூடு. உண்மையாகவே இலக்கியத்தை மதிக்கிற ஓரிருவருக்குத் தான் தன்னுடைய எழுத்தை தன் கழுத்தாகவே பார்க்கிற மனம் இருக்கும். பலரது படைப்புக்கும், நடத்தைக்கும் இடையில் வேறுபாடு இருக்கிறது என்ற கருத்தில் சமூகம் இன்றிருக்கும் நிலையை திருமதி ஜரீனா அவர்கள் தனது ஆசிரியருரையில் கீழுள்ளவாறு தொட்டுக்காட்டுகின்றார்.

நான் நம்பியிருந்த அந்த தெளிந்த நீரோடைகள் எனது வெறும் கற்பனையாக மட்டுமே தெரிகிறது. அதில் எந்த நிஜத்தையும் காண முடியவில்லை. எங்கு பார்த்தாலும் தலை விரித்தாடுகின்ற ஈகோக்கள் சின்னப்பிள்ளைத்தனமாக தோன்றுகின்றது....

நாவலின் நுழைவாயிலை கடக்கும் போதே இராட்சசி என்ற பாத்திரத்தை உடனே தரிசித்து விட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குவதை கட்டுப்படுத்த முடியவில்லை. அஹ்னாப் என்ற கதைப் பாத்திரம் இராட்சசியை வெறுப்பதாய் காட்டியிருப்பதினூடாக அந்த ஆர்வம், இன்னும் தூண்டுதலாய் அமைந்து விடுகிறது.

ஒரு போதும் வந்து விடக்கூடாது என்று நினைத்த இந்த ஊர், திடீரென்று வந்து நிற்கிற முச்சக்கரவண்டி, வீட்டில் நுழைந்ததும் தன் மனைவி ஸமீனாவிடம் பொரிந்து தள்ளும் விதம் என்று முதல் பாகத்திலேயே விறுவிறுப்பு ஆரம்பமாகிறது. அதை தொடர்ந்து அஹ்னாபின் குழந்தை விபத்துக்குட்பட்டு விட்டதோ என்ற பதற்றத்துடன், சற்றுத்தள்ளி கடை வைத்திருக்கும் பெண் காப்பாற்றுவதுமாக கதை நீள்கிறது.

வெண்மதி என்ற பெயரை தாங்கி எழுதும் படைப்பாளியின் எழுத்துக்கள், ஸமீனாவின் வாழ்வில் புதுத்திருப்பத்தை ஏற்படுத்தியிருப்பதையும், கதை நடுவில் வெண்மதியே இந்த ராட்சசி தான் என்று கணவன் அஹ்னாப் ஸமீனாவிடம் கூறுவதையும் ஏற்க கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பொதுவாக இன்று சிறுகதைகளைப் பார்த்தால் கூட அதில் வருகிற பாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது. கதையின் சுவாரஷ்யத்தை அது கெடுத்து விடுதலும் உண்டு. ஆனால் நாவலாக வெளிவந்திருக்கும் இவரது தொகுப்பில் ராட்சசியான ஸினீரா, அவரது கணவன், அஹ்னாப், ஸமீனா, ஆங்காங்கே வந்து போகும் சில உறவுகள் ஆகிய ஓரிரு பாத்திரங்களை வைத்தே முழு படைப்பும் உருப்பெற்றிருப்பது வாசகனை திருப்திப்படுத்துகிற ஒரு விடயம். ஒரே மாதிரி அமைந்த பெயர்கள், சம்பவங்கள் என்று சலிப்பூட்டாமல் தூங்கியிருப்போரையும் வாசித்தால் விழிப்பூட்டக்கூடியவாறு நயமாக அமைந்திருக்கிறது நாவல்.

ஓர் அபலையின் டயறி என்ற கதைக்கருவிலிருந்து முற்றிலும் மாறுபட்டதொரு கோணத்தில் புனையப்பட்டிருக்கும் இந்தக் கதை சகோதரருக்கும், கணவனுக்கும் இடையில் நடைபெறும் போராட்டமாகவே ஆரம்பத்தில் குறிப்பிடப்படுகிறது. பின்பு வெறுப்பின் உச்சத்தில் சகோதரர், ஸினீராவின் மீதே பாரபட்சம் காட்டுவதோடு அவர்களது பொருளாதார முன்னேற்றத்தில் தடையாய் இருப்பதையும் லாவகமாக சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

துஷார என்ற பாத்திரத்தை அமைத்திருப்பதினூடாக சகோதரரின் க்ரிமினல் வேலைகளை அம்பலமாக்கியிருக்கிறார். ஜெயிலிலிருந்து வந்திருக்கும் கொலைக்காரனான துஷாரவை தன்வயப்படுத்தி அவனுக்கு சகல உதவிகளும் புரிந்து தன் மைத்துனனான சகோதரியின் கணவருக்கு தீங்கிழைக்க தூண்டுவதை வாசிக்கையிலும், பள்ளிவாசலுக்காக காணி கெர்டுத்த அதிகாரத்தில் நிர்வாகிகளை அடிமைப்படுத்தி வைத்திருப்பதிலிருந்தும் இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்ற உண்மையை உணரச் செய்கிறது.

அதுமாத்திரமன்றி குடும்ப ஒற்றுமை பிளவுபட்டுப்போகக்கூடாதே என்ற தூய நோக்கத்துடன் சகோதரியின் மகளை (வளர்ப்பு) மருமகளாக்கிக்கொண்ட ஸினீராவின் தாய், இறுதியில் தன் இளைய மகளின் வீட்டில் தஞ்சம் புகுவதும் வேதனையானதொன்று. கொழும்பில் பிரபலமாகவும், அரசியல் செல்வாக்கும் உடைய உறவினர் ஒருவரின் உதவியோடு தான், தன் சகோதரர் இவ்வாறு செயல்படுவதாக அவரது அநீதிகளையெல்லாம் வெளிக்காட்டியிருந்தாலும், சகோதரர் வஸீரின் உள்ளத்தை தூய்மையாக்கி விடுமாறே இறைவனை வேண்டுகிறார் ஸினீரா. இதனூடாக ஸினீரா ஓர் உத்தமி என்ற எண்ணத்தை புரியக்கூடியதாய் இருக்கிறது.

குற்றம் செய்தவனிடம் பணிந்து நிற்பதும், தவறு செய்யாதவனை தண்டித்தலும், பலவந்தமாக பொலிஸ் ஜிப்பில் ஏற்றிச்செல்வதும், பூச்சாடியின் கீழிருந்து போதைப்பொருளை எடுப்பதுவும் இன்று சினிமாவில் அடிக்கடி காட்டுகிற ஒரு விடயம். இருந்தாலும் அந்த நேரத்திலும் இறைவனின் ஆணைக்குட்பட்டு தொழுது மன்றாடுவது ஸினீராவின் இறைபக்தியை எடுத்தியம்புகிறது.

ஒரு தாய்க்கு தன் மகளின் திருமணநாள் எத்தனை இனிமையான சம்பவம்? ஸினீரா உட்பட கணவர் அனைவரும் சகோதரரின் கீழ்த்தரமான வேலைகளால் துவண்டிருக்கும் அந்த கொடிய நிகழ்வுகளில் இருந்து மீள்வதற்கு முன், எதிரிகள் எதிர்பார்த்தாற்போல திருமணத்தன்று ஓர் சோகம் நிகழ்கிறது. மணமகளாக மேடையில் அமர்ந்திருக்க வேண்டிய பெண், மயக்கமுற்று வெட்டிப்போட்ட வெற்றிலைக்கொடியாய் துவண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் பெற்றோரின் உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும் என்று எண்ணிடுதல் முடியுமா?

இது இப்படியிருக்க மூத்த சகோதரனால் வஞ்சிக்கப்பட்டு வாடும் ஸினீராவும், அவரது கணவரும் இன்னுமொரு பிரச்சனைக்கு முகம் கொடுப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அதாவது இன்று குர்ஆனும், ஹதீஸூம், தாடியும், ஜூப்பாவுமாக வலம் வரும் சிலரிடம் நம்பிக்கை காரணமாக கடை ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் போலியாக வேடம் தரித்து இஸ்லாத்தை தவறாக பாவிக்கிற அந்த அக்கிரமக்காரர்களின் மோசடியால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுகிறது.

அந்த கட்டத்தில் இளைய சகோதரனிடம் உதவி கோரிய போது, ஷஉன் கணவன் செஞ்ச பாவத்துக்கெல்லாம் அல்லாவே பாத்து தண்டனை கொடுத்திட்டான். அதை அனுபவிச்சுத்தானே ஆகணும்? என்ற பதில் ஸனீராவுக்கு சாட்டையடியாய் அமைகிறது.
ஸினீரா குடும்பத்தினருக்கு இமயம் போல் வலிகளைக் கொடுத்து எல்லா தவறுகளையும் புரிந்த, வஸீர் என்றழைக்கப்படும் தன் மூத்த சகோதரர், அவரின் பிள்ளைகளுக்குக் கூட வெறுப்பு என்ற நஞ்சை ஊட்டி வளர்திடுவாரோ என்று ஸினீரா பயப்படுகிறார். பல இன்னல்களைத்தாங்கிய ஸினீராவுக்கும், ஸினீராவை ராட்சசியாக்கும் சகோதரர் வஸீர் காக்கா குடும்பத்தினருக்கும் இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் கதை.

ஊரிலுள்ள செல்வாக்கை நிலைநிறுத்த சொல்வாக்கு காத்தல் முக்கியமே தவிர அடிதடிகளாலும் பொலிஸ், அரசியல் உதவியோடும் தாம் எதிர்பார்க்கும் மதிப்பை பெற முடியாது என்பதை நன்றாகவே உணர்த்துகிறது இந்த படைப்பு. இங்கு சொன்னவற்றிற்கும் அப்பாற்பட்ட பல விடயங்கள் இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. அதை படித்து பயன்பெற வேண்டியது எங்கள் கடமை. இது போன்று இன்னும் பல காத்திரமான படைப்புக்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இந்த அற்புத நாவலை நீங்களும் படித்து பயன்பெற உங்கள் பிரதிகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்!!!

புத்தகம் கிடைக்குமிடங்கள்

Poobalasingam Book Depot,
202, Sea Street, Colombo - 11.
Phone - 011 2422321, 2435713.

Jeya Book Centre,
91 - 99, Upper Ground Floor,
People’s Park Complex,
Colombo - 11.
Phone - 011 2438227.

Poobalasingam Book Depot,
309 A - 2/3, Galle Road,
Colombo - 06.
Phone - 011 2504266, 4515775.

Islamic Book House,
77, Sri Vajiragnana Mawatha,
Colombo - 09.
Phone - 011 2669197, 2684851.

Cordova Book Shop,
226, Galle Road,
Colombo - 06.
Phone - 011 2362102, 2361555.

தென்றலின் வேகம் - கவிதைத்தொகுதி

தென்றலின் வேகம் - கவிதைத்தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

வெலிகம மண்ணுக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிவந்திருக்கிறது இலங்கையின் பெண் எழுத்தாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவரான வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் கவிதை தொகுப்பு. இலங்கை முற்போக்குக் கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக, தென்றலின் வேகம் என்ற பெயரைத்தாங்கி வந்திருக்கும் இத்தொகுதியில் 64 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

சமுத்திரம் சூழ்ந்த இலங்கைத்தீவிலும் தரித்திரமாய் வந்து பல லட்சம் மக்களைக் காவு கொண்ட சுனாமி தொடக்கம் பெண்களை போகப்பொருளாக பார்க்கிற வக்கிர ஆண்கள், அந்த போராட்டங்களுடன் பெண்களின் கண்களில் ஊற்றெடுக்கம் நீரோட்டம், இன்றைய சமூகத்தில் நிலவும் வர்க்க பேதங்கள் மற்றும் வளிரிளம் கவிஞர்களை உருவாக்கும் காதல் என்ற கரு வரை அனைத்தும் இதில் அச்சேறியிருக்கிறது.


1.ஆராதனை 2.நிலவுறங்கும் நள்ளிரவு 3.ஒலிக்கும் மதுரகானம் 4.கண்ணீரில் பிறந்;த காவியம் 5.வெற்றியின் இலக்கு 6.விடியலைத் தேடும் வினாக்குறிகள் 7.சந்திப் பூ 8.விடிவுக்கான வெளிச்சம் 9.ஆத்மாவின் உறுதி 10.வெற்றிக்கு வழி 11.எனக்குள் உறங்கும் நான் 12.நித்திரையில் சித்திரவதை 13.நிம்மதி தொலைத்(ந்)த நினைவுகள் 14.மௌனம் பேசியது 15.தென்றலே தூது செல் 16.கனவுகளும் அதில் தொலைந்த நானும் 17.புத்தகக் கருவூலம் 18.சுனாமி தடங்கள் 19.நிலவின் மீதான வேட்கை 20.இன்றும் என் நினைவில் அவன் 21.பொல்லாத காதல் 22.காதல் வளர்பிறை 23.ஈரமான பாலை 24.எனை தீண்டும் மௌன முட்கள் 25.காதல் சுவாலை 26.நிலைக்காத நிதர்சனங்கள் 27.பாவங்களின் பாதணி 28.உயி;ர் செய் 29.காதற் சரணாலயம் 30.வாசி என்னை நேசி 31.ஏற்றுக் கொள் இன்றேல் ஏற்றிக் கொல் 32.ஓர் ஆத்மா அழுகிறது 33.ஜீவ நதி 34.நியாயமா சொல் 35.காதல் பத்தினி 36.சிறைப்பட்ட நினைவுகள் 37. புயலாடும் பெண்மை 38. மௌனித்துப் போன மனம் 39.காத்திருக்கும் காற்று 40.கண்ணீர்க் காவியம் 41.சதி செய்த ஜாலம் 42.ஆழ்மனசும் அதில் பாயும் அன்பலையும் 43.உயிராக ஒரு கீதம் 44.ஊசலாடும் உள்ளுணர்வுகள் 4.மௌனத் துயரம் 46.மயக்கும் மாங்குயிலே 47.காதலுக்கோர் அர்ப்பணம் 48.உருகும்இதயம் 49.மௌனக்; காளான்கள் 50.சொல் ஒரு சொல்; 51.ரணமாகிப் போன காதல் கணங்கள் 52.நினைவலைகள் 53.பொய் முகங்கள் 54.குரலுடைந்த குயில் 55.வானும் உனக்கு வசமாகும் 56.அழகான அடையாளம் 57.நட்பு வாழ்வின் நறும் பூ 58.உடைந்த இதயம் 59.வாழ்வு மிளிரட்டும் 60.என்னைத் தொலைத்து விட்டு... 61.உயிர் பிணத்தின் மனம் 62.என் இதயத் திருடிக்கு... 63.நித்தியவான் 64.கவிதைத் துளிகள்

என்ற தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
தன்னுடைய அனுபவங்களே தன் எழுத்துக்கு ஏணியாக இருந்தததை என்னுள் உற்பத்தியாகி தினமும் வதைத்துக்கொண்டிருந்த சோகத்தீ, நானறியாமலேயே ஓர் சூரியனாய் மாறி என் எழுத்துக்கு வெளிச்சம் பரப்பிய போது தான் நான் என்னை உணர்ந்தேன். என்கிறார் நூலாசிரியர்.

காலம் தந்து விட்டுப்போன சில ரணங்களும், உலகை வெல்ல வேண்டும் என்று நான் பொறுத்துக்கொண்ட வடுக்களும் இன்று உங்கள் கரங்களில் தவழும் வரம் பெற்றிருப்பதை எண்ணி பெருமகிழ்வடைகிறேன் என்று ஆசிரியர் தன்னுரையில் கூறியிருப்பதிலிருந்து, எத்தகைய தாக்கம் இருந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடிகிறது.

ரிம்ஸா அவர்களின் கவிதை நூல் பற்றி கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தம் உரையில் கீழ் உள்ளவாறு குறிப்பிடுகின்றார்.

கவிதை, அறியாமையிலிருந்து அறிவுக்குச்செல்லம் வல்லமைக்குரியது. மதிப்புமிக்க அநுபவத்திற்கு கவிதை உருவம் கொடுக்கும். அநுபவமும், அனுமானமும் நிறைந்ததாக இக்கவிதைத் தொகுதி தென்படுகிறது.

முதல் கவிதையான ஆராதனை என்பது கருவில் உரு கொடுத்த தாய் பற்றியதாகும். தாய் பிரிந்த வேதனையை மிகவும் உருக்கமான முறையில் கவியாக வடித்திருக்கிறார்.
அடுத்து கண்ணீரில் பிறந்த காவியம் என்ற தலைப்பில் அமைந்திருக்கும் கவிதையானது சமூகத்தில் புரையோடிப்போயிருக்கிற மனித உள்ளங்களின் கறைகளை பிரதிபலிக்கிறது.

சுயநல வேட்டையிலே சுழியோடும்
சூதாட்டக்காரர் மலிந்த சமூகச்சூழலில்
சுமூக உறவையும் - சுற்றாடல் ஓம்பும் திறனையும்
எப்படி எதிர்பார்பார்க்க முடியும்?

என்ற கவிஞரின் கேள்வி நியாயமானது.

விடியலைத்தேடும் வினாக்குறிகள் என்ற கவிதை வர்க்க பேதத்தை அம்பலமாக்குகிற வரிகளால் புனையப்பட்டிருக்கிறது.

இவர்கள் எல்லாம் வறுமைக்கோட்டுக்குள்
உங்களால் வரையறுக்கப்பட்டிருந்தாலும்
சிறுமைப்பட்டு வாழ்ந்தவர்களல்லர்!

எனும் வரிகள் பணக்காரவர்க்கத்தின் கீழ்த்தர எண்ணங்களை புடம்போட்டுக்காட்டுவது மட்டுமல்லாமல் ஏழைகள் மீது இரங்கக்கூடிய அனைத்து மக்களின் உள்ளங்களிலும் ஊடுறுவி நீளமான வலி தரக்கூடியதாக அமைந்துள்ளது. கவிதைகள் அனைத்திலும் கற்கண்டு சொற்கொண்டு இவர் யாத்துள்ள வசனங்கள் இதயத்தை தூண்டில் போட்டு இழுப்பதுடன், எழுத்து நடை எளிமையாகவும் இருக்கிறது.

ஒரு கருவை மனதில் விதைப்பதற்கு இலகுவான உத்திகளை கையாள வேண்டும். அது இந்தத்தொகுப்பில் இயல்பாகவே அமைந்திருப்பது ஆறுதலான விடயம்.
மண்ணிலே பெண்ணாய்ப் பிறந்து துன்பங்களை சொந்தமாய் ஏற்று வாழும் அபலைகளின் மனவோட்டத்தை புயலாடும் பெண்மை என்ற கவிதையில் தரிசிக்க முடிகிறது. அகம் சார்ந்த கவிதைகள் மனதில் ஊஞ்சல் கட்டி உலா வருகிறது. வார்த்தையாடல்கள் எளிய நடையில் அமைந்திருப்பதால் சிரமமில்லாது கவிதைகளை (சு)வாசிக்க முடிகிறது.
பல கவிஞர்களும் பலதடவைகள் எழுதி சலித்த விடயம் என்றாலும் ரிம்ஸாவின் வரிகள் புதியதொரு பரிணாமத்தில் பயணிப்பதைக் காணலாம். காதற்சரணாலயம் என்ற கவிதை ஓர் உதாரணமாகும்.

நெஞ்சமெல்லாம் நீயே
நிழலாடும் போது...
நிம்மதி என்பது
இனி எனக்கேது?
எங்கும் எதிலும் உன் நாமம்
அதை அணுதினம் உச்சரிக்குதே
என் சேமம்!

இத்தொகுதியில் மனித வாழ்வின் விழுமியங்களை சீர்படுத்தக்கூடிய ஆத்மீகம் சார்ந்த கருத்துக்கள் அடங்கிய கவிதைகளும் உண்டு. பாவங்களின் பாதணி, உயிர் செய் என்பன இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். அது தவிர நட்பின் வலிமையை உணர்த்தும் நட்பு வாழ்வின்; நறும்பூ போன்ற கவிதைகளும் இதில் இடம்பிடிக்கத் தவறவில்லை.
'இவரது கவிதைகள் வாசிப்பதற்கு இலகுவானவை. இதமானவை. இன்பமானவை. வாசகர்களது உணர்ச்சிகளையும், சிந்தனைகளையும் தூண்டக்கூடியவையாகவும் உள்ளன. இயல்பான சொல்வளம் கொண்ட கவித்தன்மை உடையவை' என்ற பதிப்பகத்தாரின் உரையாலும் புத்தகம் புதுப்பொலிவு பெறுகிறது.

தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், வானொலி உட்பட இணைய சஞ்சிகைகளிலும், தன்வலைப்பூக்களிலும் எழுதி வரும் ரிம்ஸா முஹம்மத், எதிர்கால இலக்கிய உலகின் நம்பிக்கை நட்சத்திரமாக மிளிர வேண்டும். காத்திரமான பல படைப்புக்களைத் தந்து அவர் பெயர் இன்னும் ஒளிர வேண்டும். பிரதிகளைப் பெற கீழுள்ள முகவரியோடு தொடர்பு கொண்டு அவர் வெற்றிக்கு ஊக்கமாய் இருப்போம்.

Rimza Mohamed,
21E,. Sri Dharmapala Road,
Mount Lavinia, Sri Lanka.
Mobile - 077 5009 222

புத்தகம் கிடைக்குமிடங்கள்

Poobalasingam Book Depot,
202, Sea Street, Colombo - 11.
Phone - 011 2422321, 2435713.

Jeya Book Centre,
91 - 99, Upper Ground Floor,
People’s Park Complex,
Colombo - 11.
Phone - 011 2438227.

Poobalasingam Book Depot,
309 A - 2/3, Galle Road,
Colombo - 06.
Phone - 011 2504266, 4515775.

Islamic Book House,
77, Sri Vajiragnana Mawatha,
Colombo - 09.
Phone - 011 2669197, 2684851.

Cordova Book Shop,
226, Galle Road,
Colombo - 06.
Phone - 011 2362102, 2361555.