Thursday, December 16, 2010

மழை நதி கடல் - கவிதை தொகுதி

மழை நதி கடல் கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

இனம் மதம் மொழி என்ற வகைமைக்குள் பாகுபட்டுப்போகும் மனிதன் இயற்கையில் ஒன்றிணைகிறான். காலங்காலமாக பாடப்பட்டு வரும் கவிதைகளில் சிலர் பிரிவினைப்பட்டாலும், இயற்கையை பாடுபொருளாகக்கொண்டவற்றில் யாவருமே கட்டுண்டுப்போவது தான் உண்மை. அந்த வகையில் மழை நதி கடல் என்ற இனிமையான ஒரு தலைப்பை கொண்ட புத்தகத்தைத் தந்திருக்கிறார் நூலாசிரியர் இனியவன் இஸாருதீன்.


318 பக்கங்களைக்கொண்டு மிகக் கனதியாக, எழுவான் பப்ளிகேஷனின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியில் 91 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் கவிக்கோ அப்துல்ரகுமானின் அணிந்துரையுடனும், ஆசுகவி அன்புடீனின் மதிப்புரையுடனும், எம். ஏ. பௌசுர் ரஹ்மானின் மதிப்புரையுடனும்; ஆசிபெறுகிறது இவரது கவிதைத் தொகுதி.


அமெரிக்க விஞ்ஞானிகளும் ரஷிய விஞ்ஞானிகளும்
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பது மாதிரி
மழை நின்ற பிறகும்
இலையில் தூங்கும் ஒவ்வொரு நீர்;த்துளியையும்
ஆராதித்து
நானும் ஆராச்சி செய்துகொண்டிருக்கிறேன்...

என்று கவிஞர் முன்னுரையில் கூறியிருக்கும் வரிகளில் இயற்கையோடிணைந்த அவரது வாழ்வைக்காணலாம்.
இறைவனின் வல்லமைகள் பற்றியும், அவன் நமக்களித்த அருட்கொடைகள் பற்றியும் முதல் கவிதையான இறைவா உன்னிடம் கவிதை பேசுகிறது.

...இம்மையின் அதிபதி நீ
மறுமையின் நீதிபதி நீ
இம்மைக்கும் மறுமைக்கும்
நிலையான தலைவனே நீ... மேலும்
அழகின் இனிமை கான
விழிகள் ஆக்கினாய்
புகழின் மேன்மை கேட்க
செவிகள் ஆக்கினாய்
வாழ்வின் தூய்மை காக்க
இதயம் ஆக்கினாய்... என தொடர்கின்றன வரிகள்.

வல்ல அல்லாஹ்வுக்குப்பின் நாம் போற்ற வேண்டிய உத்தமர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பற்றிய கவிதையாக நாயகம் எங்கள் தாயகம் அமைந்திருக்கிறது. அதில் அவரை பூந்தாது கொண்டு வந்த ஹிறாத்தென்றல் என்று குறிப்பிட்டிருக்கும் உவமை ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

கணிப்புகளுக்கு அப்பால்
காலவெள்ளத்தின் வேகத்திற்கப்பால்
வையகமெல்லாம் ஓடம்
வற்றாத சமுத்திரம்
அவரது கருத்துக்கால்களுக்கு
எல்லைகளில்லை
போதனையலைகள்
ஓள்வதில்லை... என்ற வரிகளில் நாயகம் (ஸல்) அவர்களின் மாண்பு எடுத்துக்காட்ப்பட்டிருக்கிறது.

உலகில் ஆயிரம் சொந்தங்கள் எமக்கிருந்தாலும் தாய்போல் யாரும் துணையில்லை. அந்த வகையில் தாய் பற்றியும், தாயின் சிறப்பு பற்றியும் கூறாத கவிஞர்கள் இருக்கவே முடியாது. கவிஞர் இஸாருதீனின் கவிதைத் தொகுதியிலும் தாய் பற்றிய கவிதைகள் காணப்படுகிறது.

தூங்க வைப்பதற்காக தாலாட்டு
பாடுகிற உம்மா
நான் விழித்துக்கொள்வதற்காக
நீ எப்போது
பாடப்போகிறாய்? என்று கேள்வி கேட்கிறார். அதில்

இரவில் தலைக்கு எண்ணெய்
தேய்க்காதே என்றாய்
ஏனென்று கேட்டேன்
என்னடா எதிர்கேள்வி
கீழ்ப்படி என்றாய்
தேய்ப்பதை நிறுத்தவில்லை
பிறகு தான் அது
தலையணையில் ஒட்டுமென்றாய்
உடனே நிறுத்தி விட்டேன்

என்று கூறும் விடயம் தாய் சொல் தட்டினால் நஷ்டம் விளையும் என்பதை கூறி நிற்கிறது.

இந்தக்கவிதையில் சில யதார்த்தபூர்வமான பிரச்சனையையும் தொட்டுக்காட்டியிருக்கிறார்.

முன்கோபம் கூடாது
இதுவும் உன் அறிவுரை
இப்போது
அடிமை வேலை செய்கிறேன்
அவர்கள் ஆதிக்கிறபோது கூட
நான் ஆத்திரப்படுவதில்லை
முன்கோபம் தானே கூடாதென்றாய்
பின்கோபம் கூட
பெரிதாய் சேர்ந்து விடுகிறது...

மேலும் தாய் என்ற கவிதையில்

...அழகியின் புன்னகைக்கு
ஆண்மை அடக்கம்
தாயின் கண்ணீருக்கோ
தரணியே அடங்கும்...
ஒரு பெண்ணின் சதியால்
போர் நிகழும் என்றால்
தாயொருத்தியால் தான்
நிறுத்தமுடிகிறது...

என்று நிதர்சனமாக கூறப்பட்டிருக்கும் இந்தக்கவிதை பாராட்டுக்குரியனவற்றில் ஒன்று.

காதல் என்று கூறப்படுவது வெறும் இனக்கவர்ச்சிக்காக மட்டுமே என்ற கருத்துநிலையை இன்றைய காலத்தில் மெய்ப்பித்துக்கொண்டிருக்கின்றார்கள். பள்ளிப்பருவத்தில் கூட மாணவர் சமூகம் காதல் என்ற அறியாமையில் மூழ்கி தம்மை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். காதல், காமம் இரண்டுக்குமிடையேயான வித்தியாசத்தை, காமத்துடன் பேசும் காதல் என்ற கவிதையின்

நான் இதயத்தின் பிறப்பு
நீ உணர்ச்சியின் கழிவு
நான் இறைவனின் வரம்
நீ சாத்தானின் பரிசு...
நான் உறவுக்கான பேரின்பம்
நீ பிரிவுக்கான சிற்றின்பம்
நான் மானுடக்கிண்ணத்தில்
ததும்பும் அமுத ரசம்
நீ வேட்டைப்பற்களில் சுரக்கும்
கொடிய விஷம்...

ஆகிய வரிகளிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

வெறியில் துரத்திய முகங்கள் எதிலும்
ஒன்றில் கூட மானுடம் இல்லை
இருந்தவை எல்லாம்
இட்லரின் முகங்கள்
முசோலினியின் கண்கள்
யூத இதயங்கள்

என்ற ஏக்கம் ஓர் அகதியின் பாடல் என்ற கவிதையின் வாயிலாக வடஇலங்கையை விட்டு வெளியேறிய முஸ்லிமகளின் துயராக வெளிப்பட்டு நிற்கிறது.

பெண்களை போகப்பொருளாக மட்டுமே நோக்கிய ஒரு காலம் இருந்தது. இன்று அவற்றையெல்லாம் தகர்த்து புதுப்பொலிவாக பிறப்பொடுத்திருக்கிறாள் பெண். தாய்மையில் முழுமையடையும் பெண்ணின் பெருமையை கற்பு என்பது என்ற கவிதையில் அழகாக பறைசாற்றியிருக்கிறார் இஸாருதீன் அவர்கள்.

...ஒவ்வொரு பெண்ணும்
பிரமாண்டத்தின் இரகசியம்
ஒவ்வொரு பெண்ணும்
பிரபஞ்ச மர்மத்தின் பரகசியம்
ஒவ்வொரு பெண்ணும்
மாய்ந்துபோன இதயத்திற்கு
உயிரூட்டும் ஆனந்தம்...

என்ற கருத்துக்களில் அதை புரிந்து கொள்ளலாம்.

நெற்கதிர்களே என்ற கவிதையில் அவை மஞ்சள் நிறமாய் இருப்பதற்கு பொன்னாடை போர்த்தியவர் யார் என்று கேள்வி கேட்டு அதிசயிக்க வைக்கிறார்.

கலியுகத்தினில் கவலைகளோடு போராடாத மனிதர்கள் இல்லை. எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் ஓர் துன்பம் ஆழப்புதைந்திருப்பது கண்கூடு. அத்தகைய தருணங்களில் எல்லாம் தலைபோய்விட்டது போல வேதனை கொள்ளும் மனிதர்களுக்கு ஆறுதல் சொல்லும் தன்மை கவிஞனுக்கு இயல்பாக வந்த கலை தான். இஸாருதீனும் கூட இப்படிக்கவி பாடி ஆறுதல் தருகிறார்.

... அகம் மகிழ்கையில்
ஆழிப்பேரலை வந்து
அனர்த்தம் கூட நிகழ்த்தலாம்
எது நிகழ்ந்தால் என்ன
... எத்தனை துயர் வந்தாலும்
புன்னகையில் முகம் கழுவிப்பார்...

எத்தனை அர்த்தபுஷ்டியான வரிகளிவை? புன்னகையை வரவழைத்துக்கொண்டால் துன்பங்களேது என்றவாறு அமையப்பெற்றிருக்கிறது மேலுள்ள வரிகளைத்தாங்கிய மனங்கொள் மனிதா என்ற கவிதை.

எனக்கு கவிதை எழுதத்தெரியாதே என்று கூறுபவர்களுக்கு உனக்கும் கவிதை வரும் என்று அதற்கான காரணங்களைக் கற்றுத்தருகிறார் நூலாசிரியர். அதாவது தாயின் பிரசவ வேதனையை உணர்ந்தவர்களுக்கும், தன்னைத்தொலைத்து கண்டெடுத்தவர்களுக்கும், யாரோ ஓர் அப்பாவியின் சோகத்துக்காய் அழுதவர்களுக்கும், மரண அவஸ்தையறிந்து பிறப்பின் பெருமையை அறிந்தவர்களுக்கும் கவிதை வரும் என்கிறார்.

இஸாருதீனின் கவிதை வரிகளில் ஆழமாக மூச்செடுத்தவர்களுக்கு நிச்சயம் கவிதை வரும். அந்தளவிற்கு சுவாரஷ்யமாகவும், கருத்தாழம் மிக்கவையாகவும் கூறுவதுடன் நிறுத்திடாமல் பல கோணங்களில் சிந்தித்து, கெட்ட விடயங்களை நிந்தித்து ரசிக்கத்தகதாக மட்டுமன்றி சிந்திக்கத்தக்க விதமான கவிதைகளையும் தந்திருக்கிறார். இவரது அனைத்து கவிதைகள் பற்றியும் அழகாக வாழ்த்த முடியும் என்றாலும் புத்தகத்தை வாங்குபவர்கள் வாசித்தறிய வேண்டும் என்பதற்காக நிறுத்தி, அவரது இலக்கியப்பணி தொடர்ந்து நடைபெற என்றும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்!!!

பெயர் - மழை நதி கடல் (கவிதைகள்)
நூலாசிரியர் - இனியவன் இஸாருதீன்
முகவரி - அறபா பாடசாலை வீதி, அட்டாளைச்சேனை - 10
தொலைபேசி - 0094 672278404
மின்னஞ்சல் முகவரி - isarudeen@gmail.com
வெளியீடு - எழுவான் வெளியீட்டகம்
விலை - 400/=