Sunday, March 13, 2011

'புதிய பாதை' - இளைஞர் இலக்கியம்

'புதிய பாதை' இளைஞர் இலக்கிய நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

இலங்கை தேசிய நூலக அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் சர்வீனா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட புதிய பாதை எனும் இளைஞர் இலக்கிய நூல் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. 32 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் 32 கவிதைகள் இடம்பிடித்திருக்கின்றன.

'புதிய பாதை எனும் இத்தொகுதியை இளைஞர் சமுதாயத்திற்குத் தேவையான பல கருத்துக்களை உள்வாங்கிப் படைத்துள்ளேன். ஆக்கப் பாதையில் ஆக்க பூர்வமான சிந்தனைகளைத் தூண்டுவதுடன் அவர்களின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்க வைப்பதே எனது நோக்கமாகும்' என்கிறார் நூலாசிரியரான தம்பலகாமம் சிவசக்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு. ஞானராசா அவர்கள். இது இவரது இரண்டாவது தொகுதியாகும். முதல் தொகுதி சிறுவர் பா அமுதம் என்ற மகுடத்தில் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



தன்னம்பிக்கை, பயன்பெற வழி, இளைஞர் நாம், காதல் கலை, வெறுக்காதீர், நாட்டு வளம், தொழில் செய்வீரே, தகவல் தொழில்நுட்பம், பொறுப்புணர்ச்சி, கிராம முன்னேற்றம், வெளிநாடு, புதிய பாதை, தொழிற் கல்வி, கலைக்கூடம், உழைப்பும் ஊதியமும், மாதர் சங்கம், ஒற்றுமை, சமாதானம், துணிவே துணை, எதிர்ப்பும் எதிரியும், உதவி செய்ய முன்வாரீர், வாசிக்க வேண்டும், எழுத்துப் பயிற்சி, மதித்து நடத்தல், அகந்தை கூடாது, கோபம் குறைப்போம், மது அருந்தாதே, நடைப் பயிற்சி, தலைமை தாங்குதல், பயிர்ச்செய்கை, புகை பிடிக்காதீர், பொறுமையின் பெருமை எனும் தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம் பெறுகின்றன.

தன்னம்பிக்கை என்ற முதல் கவிதையானது நமது முன்னோர்கள் பற்றி எடுத்தியம்புகிறது. அவர்கள் பாடுபட்டு செய்த பணிகளைக் காட்டி நிற்கிறது.

'முயற்சியும் பயிற்சியும் பெற்று
முன்னேற்றப் பாதை நோக்கி
வியத்தகு சாதனை செய்தார்
விளங்கிடுவீரே அதனை நீரும்..

அயலவர் சுற்றம் அவரை
ஆதரித்து தொண்டு ஆற்றி
துயரினை நீக்கி வைத்தாரே
தூய்மையைக் கடைபிடித்தாரே'

கற்ற கல்வியைக் கொண்டு பயனடைந்தால் மாத்திரமே அந்தக் கல்வி பெருமைக்குரியதாகிறது. இதுபோல அந்தக் கல்வியானது பிறருக்கு உதவாவிட்டால் அது பிரயோசனமற்றதாகி விடும். இதை கீழுள்ள வரிகளில் நிதர்சனமாகக் காணலாம்.

'பாடுபட்டுப் பட்டம்பெற்று
பலருக்கு உதவி செய்து
கூடுவிட்டுப்போகும் முன்னே
கூடி நாம் வாழ்ந்திடுவோம்...

ஏடுதூக்கிப் பயின்றவைகள்
ஏட்டுச் சுரைக்காய் ஆகிடாமல்
ஓடுகின்ற நீரைப் போல
ஒழுங்கில் செயலமைய வேண்டும்'

நாம் செய்யும் நல்ல செயற்பாடுகள்தான் மற்றவர் முன் எம்மை பற்றின நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். நாம் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே ஒழிய பிறரிடம் எமது நாமம் இகழ்ச்சிக்குரியதாக அமைந்துவிடக் கூடாது. கடந்த நாட்களில் அறியாமல் நாம் செய்த பிழைகளை இன்றிலிருந்து விட்டு விட்டு நல்லவர்களாக மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் உலகத்திலுள்ள கெட்டவன் ஒருவன் திருந்தி விட்டான் என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.

'சென்ற நாட்கள் போய்விடட்டும்
செய்தவை போகட்டும்
இன்று புதிதாய் பிறந்ததாக
இளைஞர் நாம் விழிப்போம்

நன்று என்று நான்குபேரும்
நம்மைப் போற்றவே
இன்று தொடக்கம் அணிவகுத்து
இளைஞர் நாம் வெல்வோம்'

என்ற கவி வரிகள் மேற்சொன்ன கருத்தில் அமைந்திருக்கிறது.

காதல் என்பது இரு உள்ளங்கள் சம்பந்தட்பட்ட அழகிய விடயம். காதலின் தூய நோக்கம் அறியாமல் காதல் எனும் பெயரில் இன்று நடக்கும் நாகரீகமற்ற விடயங்கள் ஏராளம் உண்டு. சாதி, மதம், பணம் எல்லாவற்றையும் கடந்தது காதல் என்ற உணர்வு. உலகில் எல்லா ஜீவராசிகளும் காதல் செய்கின்றன. ஒருகாலமும் காதல் பின்வருமாறு இருக்கக்கூடாது என்கிறார் திரு. ஞானரசா அவர்கள். அதாவது

'சாதி சமயப் பிரிவு பார்த்து
சரிந்து வீழ்வதா?
பாதியிலே முறி;த்து விட்டுப்
பறந்து செல்வதா?...

கூதலுக்குப் போர்வையாக
கூடி இருப்பதும்
பாதகத்தைச் செய்து பதுங்கி
பயந்துநடப்பதும் காதலில்லையே...'

இன்றைய இளைஞர்களில் பலர் வேலைவெட்டிகள் எதுவுமின்றி வீணாக தமது பொழுதுகளைப் போக்க வல்லவர்களாக இருக்கின்றனர். தாய் தந்தையின் தயவில் வாழும் பலர் தொழில் ஒன்றை கட்டாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை. அவர்கள் தத்தமது செலவுகளையாவது சமாளித்துக்கொள்ளுமளவுக்கு அவர்களின் மனநிலை இன்னும் வளரவில்லையா? வேறு சிலர் தாம் செய்கின்ற தொழில்களை வெளியில் கூறுவதற்கு தயங்குவார்கள். இத்தகையவர்களைப் பார்த்து நூலாசிரியர் கேட்கும் இந்தக்கேள்வி நியாயமானது.

'என்ன தொழில் எனினும்
எல்லாம் தொழில் என்றே
சொன்ன உண்மை காக்க
சோர்வு நீக்கி வருவீரே...'

'... வேலை செய்யாதிருந்து
வெட்டி பேச்சு பேசி
சாலை பார்த்து இருந்தால்
சாவு எழுந்து அழைக்கும்'

இன்றைய நவீன யுகமானது தொழில்நுட்பப் புரட்சியில் கொடி கட்டிப்பறக்கிறது. உலக விடயங்கள் விரல்நுனியில் இருக்கும் காலமிது. இணையம் என்றும், கைத்தொலைப்பேசி என்றும் நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வேகம் கூடிக்கொண்டே போகிறது. தொழிற்சாலைகளிலும் மக்களின் வேலைகளை விட இயந்திரங்களின் பாவனை தான் பல்கிப்பெருகிக்கொண்டு வருகின்றது. வளர்முக நாடுகளில் ரோபோ மூலம் சமையலறை வேலைகளைக்கூட பூர்த்தியாகச்செய்கின்ற வழிமுறைகளைக் கையாண்டிருக்கின்றார்கள். இதைப்பற்றி தகவல் தொழில்நுட்பம் என்ற கவிதையில் மிக அழகாக கூறப்பட்டுள்ளது.

பொறுப்புணர்ச்சி என்ற கவிதையில் வரும் அடிகள், மட்டம் தட்டிப் பேசுவோரைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதாவது மட்டம் தட்டிப்பேசுபவர்கள் முன்னிலையில் நாம் சபதம் பூண்டு நல்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டமிட்ட செயலாலும், தீர்மான உறுதிப்பாட்டாலும் செய்கின்ற கருமங்களை திறம்படச்செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொறுப்புணர்ச்சி ஏற்படுவதற்கு முதலில் பொறுமை வேண்டும் என்ற உன்னத கருத்தை இந்தக்கவிதை இயம்பி நிற்கிறது.

கிராமப்புறங்களில் 'சங்கம்' என்றதொரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கிராமத்தின் பொருளாதார வளர்ச்சிகளை முன்னேற்றும் பல வேலைத்திட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதன் மூலம் வீடுகளை நிர்மாணித்து, பாதைகளை அமைத்து மக்களுக்கான வசதிகளை செய்துகொடுக்கின்றார்கள். மேலும் பண்ணைகளை வைத்தும், விவசாயங்கள் செய்தும் தமது வாழ்வியல் தராதரத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர். இத்தகைய நல்ல விடயங்களுக்காக சிரமதானத்திலும் ஈடுபட்டு சிறியளவிலேனும் மருத்துவ வசதிகள், பாடசாலை வசதிகளை பெற்றுக்கொள்ளவே அந்த மக்கள் ஆசைப்படுகின்றனர். இவர்களின் இந்த அடிப்படை வசதிகள் தொடர்பான விடயங்களை வைத்து எழுதப்பட்டதாக கிராம முன்னேற்றம் என்ற கவிதை காணப்படுவதை அவதானிக்கலாம்.
வெளிநாட்டு முகவர்களைப் பார்த்து 'வெளிநாடு' என்ற கவிதை பின்னப்பட்டுள்ளது. அவர்களின் கவனயீனத்தாலும், பொறுப்பற்ற தன்மையாலும் வெளிநாட்டுக்குப் போய் சீரழிகின்ற பலரின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. அத்தகையவர்கள் வெளிநாடுகளில் படும் துன்பம் சொல்லி மாளாதது. குழந்தைகளை விட்டு, கணவனை விட்டு, மனைவியை விட்டுச்சென்ற எத்தனைப்பேர் இன்று அயல்நாடுகளில் அநியாயமாக துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வகையான மனதை உருக்கும் செய்திகள் நாளாந்தம் நடக்கின்றன. தன்னிடம் இருப்பதை வைத்து சமாளிக்கத் தெரியாமல், வெளிநாட்டு மோகத்தில் அலைபவர்களை கண்டிக்கிறார் நூலாசிரியரான ஞானராசா அவர்கள். அவர் கோபமாப் பாடும் வரிகளைப் பாருங்கள்.

'இல்லையென்றால் அங்கே செல்வீர்
இருந்தால் முயற்சி இங்கு செய்வீர்
தொல்லை தீர்க்கும் வழியைக்கண்டு
தொடர்வீர் பயணம் வெல்வதாக'

புத்தகத்தின் தலைப்பான புதிய பாதை என்ற கவிதையில் பல அறிவுரைகளை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இது இளைஞர்களுக்கு மட்டுமான அறிவுரை அல்ல. அவ் அறிவுரைகள் அனைவரும் கடைப்பிடித்து ஒழுக வேண்டியவையாகும். அன்பு காட்டுதல், பகையற்று வாழ வேண்டும், கோள் சொல்லுதல் கெட்ட பழக்கம் போன்றவை பற்றியும் அவ்வறிவுரைகள் அமைந்திருக்கின்றன.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமலிருப்பதே பெரும் புண்ணியமாகும். அதை விடுத்து பதவி பணத்துக்காக யாருக்கும் பாதகம் செய்யக்கூடாது. ஏழை எளியவர்களை மதிக்கத்தெரிந்தோரே உண்மையான அறிவாளியாவார். அதுபோல சத்தியம் செய்தலானது அதை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது. மேற்சொன்ன விடயங்கள் யாவற்றைப்பற்றியும் அழகிய வரிகளில் ஓசை நயத்துடன் எதிர்ப்பும் எதிரியும் என்ற கவிதையில் கூறப்பட்டுள்ளது.

வாசிப்பின் மகோன்னதம் பற்றியும், எழுத்துப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இதிலுள்ள கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. பகட்டுப்பெருமைகள் அற்று பிறரை மதித்து வாழல், மதுவினால் ஏற்படும் கேடுகள், எல்லோரிடத்திலும் இருக்க வேண்டிய கட்டாயப் பண்புகளில் ஒன்றான தலைமை தாங்குதல் இன்னும் இதர விடங்களைப் பற்றியும் ஏனைய கவிதைகளில் அழகிய முறையில் கூறப்பட்டுள்ளன. இந்தப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாகும். அனைவரும் வாசித்து மகிழக்கூடிய வகையில் அதனை எழுதிய திரு. ஞானராசா அவர்களுக்கு எமது பாராட்டுக்கள.; அவரது தமிழ்த்தொண்டு மேலும் சிறந்துவளர மனமார வாழ்த்துகிறோம்.

பெயர் - புதிய பாதை (இளைஞர் இலக்கியம்)
நூலாசிரியர் - செ.ஞானராசா
முகவரி - 993, Anbuvalipuram, Trincomalee, Sri Lanka.
தொலைபேசி - 026 3267891, 077 5956789
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 125/=

Thursday, March 3, 2011

செம்மாதுளம்பூ கவிதை தொகுதி

செம்மாதுளம்பூ கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட்டிருப்பவன் தான் இலக்கியவாதி. அவ்வகையான நற்குணங்களும், சமுதாய நோக்கும் உடைய, இன்று ஷெல்லிதாசன் என்று பரவலாக அறியப்பட்ட மாபெரும் கவிஞரான பேரம்பலம் கனகரெத்தினம் அவர்களின் செம்மாதுளம்பூ என்றதொரு இனிமையான தலைப்பையுடைய புத்தகம் 114 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

நீங்களும் எழுதலாம் வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் பல அம்சங்களைக்கொண்ட கவிதைகள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியான விடயம். அத்துடன் இத்தொகுப்பின் இறுதியில் ஷெல்லிதாசன் அவர்கள் எழுதிய மெல்லிசைப்பாடல்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.



இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் பெரும்பாலும் நீங்களும் எழுதலாம், செங்கதிர், சுட்டும் விழி, இனிய நந்தவனம், இசை உலகம் போன்ற சிற்றிதழ்களிலும், தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி போன்ற வாரப்பத்திரிகைகளிலும் வெளியானவை.

1970 களிலிருந்து இன்று வரையும் சளைக்காமல் கவிதை எழுதி வரும் ஷெல்லிதாசனின் முதல்புத்தகத்தை நீங்களும் எழுதலாம் வெளியீட்டகம் வெளியிட்டது பாராட்டத்தக்க விடயம்.
முதல் கவிதையான 'விழும் வரை நானோயேன்' என்பதில் உழைப்பைப் பற்றியும், உழைப்பில் சோம்பல்தனம் இருக்கக்கூடாது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.

'... வெய்யிலோ மழையோ எனக்கில்லை
வியர்வையிற்குளித்தே தினமெழுவேன்
கையிலே இருக்கும் காலத்தினை - ஏழை
கண்ணீரைத்துடைத்திட கவி புனைவேன்
சோம்பலென்பதை நானறியேன், எந்த
சொந்தத்தை நம்பியும் நான் வாழேன்
வீழும் வரையும் நானோயேன் அதற்கு
வேண்டும் திடங்கொள் மனசிருக்கு!'

இன்று பணத்துக்கு கட்டுப்படாத மனிதனில்லை. பணக்காரருக்கு கொடுக்காத மரியாதையுமில்லை. அவ்வாறு யாராவது ஒருவரின் கீழ் அடிமையாக வாழும் வாழ்க்கையில் சுவாரஷ்யம் இருக்காது. இதை நிஜங்களின் நிழல்கள் என்ற கவிதையில் முதல் அடியில் நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்கிறார் ஷெல்லிதாசன் அவர்கள்,

'உனது
சுயத்தை நீ இழக்காத வரை
உனது
சுதந்திரம் நிலைத்திருக்கும்'

விஞ்ஞான யுகதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தெரியாமலிருக்க முடியாது. அந்த வகையில் மண்வாசனை என்ற கவிதை, நவீனத்துவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கி நிற்கிறது.

ஆயிரங்காலத்துப்பயிர் என்றும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயயிக்கப்படுகின்றன என்றும் காலங்காலமாக கேட்டு வந்தோம். ஆனால் தற்காலத்தில் திருமணங்கள் வெறுமனே காதல் என்ற போர்வையில் நிகழ்ந்து விடுகின்றன. கீழுள்ள வரிகளில் அதை தெளிவாக புரியலாம்.

'... கைத்தொலைபேசி
கடுகதி அழைப்பில்
அரும்பும் காதல்கள்!
வலையமைப்பின் வலைவீச்சில்
வளைத்துப்பிடித்த திருமணங்கள்...'

'... ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
குறும்பேச்சாகி (SMS)
ஆசை ஆறு நாள்
மோகம் மூன்று நாள் என
சிறகு முறிக்கும்
ஆயிரமாண்டு கால பந்தங்கள்'

திருமணமாகாத பெண்கள் தாலி வரம் கேட்டுத்திரியும் போது திருமணம் முடித்த பெண்கள் கணவனிடம் படும்பாடு தெரியாததொன்றல்ல. சில கணவன்மார் வெளியுலகுக்கு கனவான்களாக இருப்பினும் நான்கு சுவர்களுக்குள் அவர்கள் செய்கின்ற துவம்சம் சொல்லி முடிக்கக்கூடியதல்ல. அத்தகைய ஒரு பெண்ணின் கண்ணீர், கவிதையாக இவ்வாறு விழுகிறது

'மணமாலைக்கும்
மாங்கல்யத்துக்குமாய்
மனமாய்
கழுத்து நீட்டியது
ஒரு மனிதனுக்கல்ல...
கழுதைக்குத்தானென்பதை
காலம் உணர்த்தியது
நாளாந்தம் அது என்னை
காலால் உதைக்கிறது...'

ஆண்மைத்தனம் என்பது பெண்களைப்போலவே கற்போடு வாழ்வதும், கைப்பிடித்த மனைவியிடம் அன்பாக நடப்பதுவும் தான். தவிர பெண்களை அடக்குவதும் ஒடுக்குவதும் ஆண்மைக்கு அழகல்ல என்று உணர்த்துவதற்காக அதே கவிதையில் நக்கலாக கீழுள்ளவாறு குறிப்பிட்டு பெண்ணின் சோகத்தை காட்டி நிற்கிறார்.

'... அடக்கி ஒடுக்குவது
ஆண்களின் ஆளுமையாம்
அடங்கிப்போவது
பெண்மையின் பூர்வீகமாம்
அடித்துச்சொல்கிறான்...
குடித்துக் கும்மாளமடிப்பதும்
கொண்டவளை விட்டு
கண்டவளைத்தழுவி
காலங்கழிப்பதும்
ஆண்மையின்
தத்துவமாம் கேளுங்கள்'

இதே கருத்துடைய இன்னொரு கவிதை 'நானாக நான்'. இதிலும் தான் படும் அவலம் பற்றி பெண்னொருத்தி கூறுவதாக அமையப்பெற்றிருக்கிறது. இந்த கவிதையின் சந்தம் என்னை மிகவும் கவர்ந்தது. பல தடவை வாசிக்க வேண்டும் என்ற உணர்வை தந்தது. உதாரணமாக சில வரிகள்...

' பஞ்சவர்ணக் கிளியாகி
பறந்து வர ஆசைப்பட்டேன்
கூண்டுக்குள்ளே எனை அடைத்து
குதூகலிக்க அவனும் வந்தான்
கலாப மயிலாக மாறி
களி நடனம் புரிய வந்தேன்
நீண்ட தோகை அதைப்பறித்து
நிர்வாணமாக்க அவன் வந்தான்'

அரசியல் தலைவர்கள் என்றுமே மக்களுக்காக போராடுவதில்லை என்ற கருத்தில் 'போதுமே உங்கள் ஜாலங்கள்' என்ற கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அவர்களிடம் 'பண்டிகை தினங்களில் ஊடகங்களில் வாய்கிழிய பொய் பேசுவதை விட்டாலே எங்கள் வாழ்வு செழிக்கும்' என்று நகைச்சுவையாக இயம்பியுள்ளார் நூலாசிரியர் ஷெல்லிதாசன்.

காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக அடிமைச் சமுதாயமாக கணிக்கப்பட்டு வரும் மலையக மக்களுக்காய் பாடப்பட்ட கவிதை 'மலையுச்சியில் மையங்கொள்ளும் சூறாவளி'. தேயிலை சுமையுடன் கூடிய மனச்சுமையையும் தினம்தினம் அனுபவிக்கும் அந்த ஆத்மாக்கள் எத்தனை துன்பங்களை சந்திக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியாது.
ஆனால் ஒரு கவிஞனால் உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட நபர்களாகவே மாறி சிந்திக்கும் திறன் கவிஞனுக்கு மாத்திரம் தான் உண்டு. பொதுவாக கங்காணி, துரைமார் தன்னலவாதிகளாகவே இருப்பார்கள் என்ற பரவலான கருத்தொற்றுமை எல்லோருக்கும் இருக்கிறது. தொழிலாளிகளின் கஷ்டம் புரியாத அவ்வாறான ஒரு துரை பற்றி இப்படி கூறுகிறார்.

'... அந்த
ஐயா - துரையின்
அழகு மலைத்தோட்டத்தில்
தேயிலை
கொய்யும் ராமசாமியின்
ஐந்து பிள்ளைக்குடும்பத்துக்கு
அன்றாடம் கூலி
ஐந்நூறு ரூபா
அப்பப்பா ரூ மச்சாம்
துரை சொல்லி அழுகிறார்'

இன்று எல்லோரையும் மிக வேகமாக தொற்றிக்கொண்டதொரு நோய் தான் ஈகோ. விட்டுக்கொடுப்பின்மையால் இன்று பல குடும்பங்கள் சீரழிகின்றன. நட்பு வட்டாரங்கள் வலுவற்று போகின்றன. நான், எனது, எனக்கு என்ற தன்னிலைவாதத்தால் சமூகம் புரையோடிப்போயிருக்கிறது. அத்தகையதொரு நிலைப்பாட்டின் எடுத்துக்காட்டாவே 'சுவருடைத்து வெளியே வா' என்ற கவிதை அமைந்திருக்கிறது.

கீழுள்ளவற்றிலிருந்து விடுபட்டு மனிதர்களை நேசிக்கும் ஒருத்தனாக மாறி வருமாறு அழைக்கிறார் கவிஞர் ஷெல்லிதாசன்.

'.. மதிப்பு மரியாதைகள்
பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே
மட்டுப்படுத்தப்பட்டன
கொடுப்பதற்கல்ல என்ற
உனது
கொள்கை பிரகடனங்கள்
இறுக்கமானதும்
ஏளனம் நிறைந்ததுமான
உனது பார்வைகள்
சிரிப்பை உதிர்க்க மறுக்கும்
உன் உதடுகள்
நடையுடையிலொரு
நாட்டாண்மைக்காரத்தனம்'

ஆளுமைக்கொண்ட அன்னைத்தமிழ் என்ற கவிதையில் தமிழின் பெருமை பறைசாற்றப்பட்டிருக்கிறது. தமிழின் சுவையை அறியாதவர்களால் தமிழைக்கற்று அதன்படி கருமமாற்றுவது கஷ்டமாகத்தானிருக்கும். ஆனால் உலகத்திலேயே இனிமையான மொழி தமிழ் தான் என்பதை நாமெல்லோரும் அறிவோம். கவிஞர் ஷெல்லிதாசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

'பாலையும் தேனையும் நீ பருக - சில
நாளிலே அவைகூட திகட்டிவிடும்
நாலையும் இரண்டையும் பெற்ற தமிழ் - அதை
நாளும் படித்திட சுவைபெருகும்
காதலைப்படித்திட ஆசை வந்தால் - அக
நானூறு இருக்கவே இருக்குதடா
கச்சிதமாகவே அதைப்படித்து - நல்ல
காதலை செய்ததில் மூழ்கிடலாம்'

'நானும் ஒரு இளங்குயிலும்' என்ற கவிதையை ஆரம்பத்தில் வாசிக்கும் போது தொலைந்து விட்ட காதலியைப் பற்றி பாடுவதாக எழுதியருக்கிறாரோ என்று தான் எண்ணினேன். ஆனால் இறுதியில் வெகு சுவாரஷ்யமாக நாமெல்லோரும் சிறுவயதில் படித்த காக்கையும், குயிலும் சம்பவத்தை கூறியிருப்பதைக்கண்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அழகான சந்தத்துடனும் ஓசை நயத்துடனும் இது எழுதப்பட்டாலும் இறுதியில் வாசகரைப்பார்த்து கேட்டிருக்கும் இரு கேள்விகள் சிந்திக்க வைக்கிறது. அதாவது

'பழைமையில் பல காலம்
பாய்விரித்து படுத்த மனம்
ஒரு நாளில் தன்னுறக்கம்
ஒழித்து கண் விழித்திடுமா?
மூடத்தனங்களிலே
மூழ்கிவிட்ட மனிதனையும்
மாற்றிவிட பலர் வந்தார்
மாறியதா மனிதமனம்?'

இது போன்று பல கவிதைகள் இவ்வாறாக புதுவிதமாகவும், மக்கள் மனதில் இடம்பிடிக்கக்கூடிய வகையில் எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. மெத்தப்படித்தவன் என்று தன்னைக்காட்டிக்கொள்வதற்காக இன்று எழுதப்படும் பல கவிதைகள் யாருக்குமே புரிவதில்லை. அவ்வாறு எழுதப்படுபவை தான் சிறந்த கவிதைகள் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பல கால அனுபவமும், திறமையும் ஆளுமையும் கொண்ட ஷெல்லிதாசன் போன்ற சிலரின் கவிதைகள் கருத்து செறிவுள்ளதாகவும், மக்களுக்கு ஏதாவதொரு நல்ல செய்தியை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. அவரது கவிதைகளில் வாசகனை திக்குமுக்காடச்செய்யும் சொற்றொடர்கள் வந்து கஷ்டப்படுத்தவில்லை. புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் அதை முடியும் வரை வாசித்து விட்டுத்தான் எழும்ப வேண்டும் என்ற பிடிப்பை ஏற்படுத்தியது. அவர் இன்னும் பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்றும் இலக்கிய முயற்சிகள் இன்னும் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - செம்மாதுளம்பூ
நூலாசிரியர் - ஷெல்லிதாசன்
முகவரி – 11/6, சென்யூட்லேன்,
பாலையூற்று, திருகோணமலை
தொலைபேசி – 026 - 4900648
வெளியீடு – நீங்களும் எழுதலாம்
விலை - 200/=

கருத்துக்கலசம் தொகுதி

கருத்துக்கலசம் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அகில இலங்கை இளங்கோ கழகத்தின் வெளியீட்டில் 103 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது சூசை எட்வேட் அவர்களின் கருத்தக்கலசம் எனும் நூல். இவ்விரண்டு வரிகளில் பல விதமான கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும் இத்தொகுதி, அறிவுரைகள் பலதை சொல்லி நிற்கும் நூலாகவும் விளங்குகின்றது. கவிதையாகவும் இதனை நோக்க முடியும். தத்துவார்த்தமான வரிகளாகவும் நோக்கவியலும்.


எதையும் வாசிக்க விரும்பாத விஞ்ஞான உலகில் தான் தேடித்தேடி வாசித்து அவற்றை சின்னஞ்சிறு பூக்களாக தொகுக்க முற்பட்ட மஞ்சரியாகவும், சூசை எட்வேட்டின் அனுபவ நாட்குறிப்புகளாகவும் இத்தொகுதியை வர்ணிக்கிறார் இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பெரிய ஐங்கரன் அவர்கள். அவர் நூலின் பிற்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.


சில இடங்களில் புறநானூறு பளிச்சிடும். சில இடங்களில் கீதாஞ்சலி பளிச்சிடும். சில இடங்களில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பளிச்சிடும். சில இடங்களில் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை' பளிச்சிடும். சில இடங்ளில் ரகுநாதனின் 'பஞ்சம் பசியும்' பளிச்சிடும். சில இடங்களில் புதுமைப்பித்தன் வெளிவருவார். சில இடங்களில் காண்டேயர் வெளிவருவார். சில இடங்களில் பாரதியோ, பாரதி தாசனோ வெளிவருவார்கள். சில இடங்களில் பட்டுக்கோட்டையோ, கண்ணதாசனோ வெளிவருவார்கள். சில இடங்களில் மகாத்மா காந்தியோ, அன்னை திரேசாவோ வெயிவருவார்கள். சில இடங்களில் விவேகானந்தரோ, விபுலானந்தரோ வெளிவருவார்கள். பல இடங்களில் வள்ளுவரோ, பட்டணத்தாரோ தலை தூக்குவார்கள். உண்மையில் இத்தகைய பெருஞ்சான்றோர்களின் கருத்துக்களை எல்லாம் இருவரிகளில் கருத்துக்கலசமாக தர முயற்சித்திருப்பதே இந்நூலின் சிறப்பு எனலாம்.

புலன்களை கட்டுப்படுத்தினால் சுகமாக வாழலாம் என்ற கருத்து மிகவும் உண்மையானது. அதனை
'புலன்களின் ஏவலனாயிராது காவலனாய் இருப்பார்க்கு
காலடியில் கிடக்கும் துன்பம்' என்கிறார்.

காலங்காலமாக பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் காணிப்பிரச்சினையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. மற்றவர்கள் எப்படிப்போனாலும், பெற்றவர்களையே பொலிஸ் வரைக்கும் இழுத்துச்செல்லும் எத்தனை பிள்ளைகளை சமூகம் தாங்கி நிற்கிறது? அத்தகைய பிரச்சனையை முதலில் ஏற்படுத்தியவனுக்காக பாடப்பட்ட ஈரடி இது.

'நிலத்துக்கு வேலிபோட்டு தனியுடமைக்கு வித்திட்டவனே
உலகத்தின் முதல் குற்றவாளி'.

நிம்மதியை ஆண்கள் வீட்டிலல்லாது வெளியில் தேடுகின்ற காலம் இன்று நேற்று தோன்றியதல்ல. ஆனால் ஒழுக்கமில்லாத அந்தப்பழக்கத்தை கடைப்பிடித்து வாழ்வோர் ஏராளம். நூற்றுக்கு ஒரு வீதத்தினர் மட்டுமே கற்பு நெறியைக் கடைப்பிடித்து வாழ்கின்றனர். அதைக்கீழுள்ளவாறு குறிப்பிடடுள்ளார்.

'விரும்பாவிடினும் சேர்ந்தே வாழ்ந்து தொலைப்பதற்கு
பெயர் கற்பு நெறி'.

எந்விதமான வேண்டுதல்களும் நிறைவேறவில்லை என்று இறைவனை குறை சொல்பவர்கள் பலர். ஆனால் அதற்கான காரணத்தை அறிந்தவர்கள் சொற்ப தொகையினரே. அதை அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

'நிறைவோடு இறையை இறைஞ்சாத குறையே
முறையீடு நிறைவேறாக் காரணம்'.

குடும்ப வாழ்வில் ஏற்படும் சிறிய சண்டைகள் சகஜம். அதை யாரும் மிகப்பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பெண் என்பவள் மெண்மையானவள். அவளை அன்பால் அடக்கி ஆளத்தெரியாத கணவன் கையாலாகாதவன். அடிபணிந்து கணவனை தன்வழிக்கு கொண்டு வர முடியாத பெண் முட்டாள். ஆகவே குடும்பவாழ்வுக்கு தகுதியற்ற இவர்களால் தான் குடும்பச்சண்டையில் வெற்றி பெற முடியுமாக இருக்கும். அப்படியில்லாமல் குழந்தையாக மனைவியைப் பார்த்தால் இல்வாழ்வில் இன்பமே ஆறாக ஓடும். இதனை சூசை எட்வேட் அவர்கள் இப்படி எடுத்தியம்புகிறார்.

'மனைவியின் கடுகடுப்பு புறுபுறுப்பை குழந்தையின்
குறும்பாகவே நோக்குவார் அறிவாளர்'.

உழைப்பதையெல்லாம் மனைவிக்கு கொடுத்தால் அன்பு பெருகும் என்று கணவனும், கற்போடு வாழ்வது தான் கணவனுக்கு செய்கின்ற கைமாறு என்று மனைவியும் எண்ணினால் அது மணவாழ்க்கைக்கு மணம் சேர்க்காது. உழைப்பையும், கற்பையும் தவிர அன்பும், பாசமும், விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருக்க வேண்டும். இன்னும் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வை நிலைநாட்டிக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். தன் குடும்பத்தினரையும், துணையின் குடும்பத்தினரையும் சமமாக மதிக்கத்தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகள் விடயத்தில் இருவரும் சமபங்கு அக்கறை காட்ட வேண்டும். அப்படியில்லாமல் கற்பும் உழைப்பும் மட்டும் போதுமா என்ற கேள்விகளை பின்வருமாறு கேட்டு நிற்கிறார் நூலாசிரியரான சூசை எட்வேட் அவர்கள்.

'கணவனை மகிழ்ச்சிப்படுத்த மனைவியின்
கற்பு மட்டும் போதுமா'

'மனைவியை மகிழ்ச்சியாய் வாழ வைக்க கணவனின்
உழைப்பு மட்டும் போதுமா'

காதல் என்பது புனிதமான ஒரு உறவு. கலியுகத்தில் எல்லாமே தலைகீழாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கண்டதும் காதல் என்று ஓடி, இறுதியில் கல்யாணமின்றியே காதல் உடைந்து சின்னாபின்னமாவது கண்கூடு. பெற்றவர்களையும், வளர்த்தவர்களையும் எல்லாம் துச்சமென ம(மி)தித்து விட்டுச்செல்லும் காதலர்கள், இறுதியில் கஞ்சிக்கும் வழியில்லாது பாடுபடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் பெண்ணின் நிலை தான் கவலைக்கிடமாக மாறுகிறது. ஆசைவார்த்தை காட்டி அழைத்துச்சென்றவன் பாதியிலேயே காணாமல் போக, கைக்குழந்தையுடன் அல்லாடுகிறாள் பெண். இதை காதல் என்று சொல்ல முடியாது. புரிந்துணர்வின்றி கண்களால் ஆரம்பிக்கும் காதலின் இறுதிநிலையை இவ்வாறு வலியுறுத்தி நிற்கின்றன.

'கண்களால் ஆரம்பிக்கும் காதல் ஆண்
பெண் குறிகளால் முடிவுறும்'.

ஏழையாய் பிறத்தல் பாவம் என்று பலர் சொன்னாலும் அது சாபமல்ல. இயலாதவனிடம் இறுமாப்பு இருக்காது. சொத்து சுகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தேவையிருக்காது. ஆனால் பணக்காரர்களுக்கு நிம்மதியிருக்காது. அழகிய கனவு காண உறக்கமிருக்காது. பணக்காரன் சதாவும் தனது செல்வங்களை பாதுகாப்பது எவ்வாறு என்ற யோசனையிலேலே மூளை பிசகிப்போவான். ஆனால் எளிமையானவனோ எக்காலத்திலும் அன்றாட உழைப்பால் உண்டு, குடித்து நிம்மதியாயிருப்பான். இதனை கீழுள்ள வரிகள் நிதர்சனமாக்குகிறது.

'உள்ளவனுக்கு உள்ளதாலுள்ள கவலை தெரிந்தால்
இல்லாதவன் கவலை கொள்ளான்'.

கற்ற கல்வியை கசடறக்கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆனால் அந்தக்கல்வியை தினசரி கற்றாலும் தேவையான போது நினைவுக்கு வருவதே பயனாகும். இந்த கருத்து கீழுள்ளவாறு கையசைத்துக்காட்டுகிறது.

'தினசரி கற்றாலும் தேவையேற்படும்போது நமது
நினைவுக்கு வருவதே அறிவு'.

பெண்களின் ஆழ்மனதில் உள்ளவற்றை எந்த அறிவாளிகளாலும் கண்டு பிடிக்க முடியாது. அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்குத்தான் தெரியும். மனசைத்திறந்து எதுவும் சொல்லாத பேசாமடந்தை பெண். அவள் பேசினால் எத்தகைய மாற்றம் வரும் என்று இந்த வரிகளால் கோடிட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

'மனந்திறந்து பெண்ணொருத்தி பேசினால் அதுவே உலகின்
தலை சிறந்த நாவலாக இருக்கும்'.

நமது ஒவ்வொரு நாளும் நமக்கொரு பாடத்தை கற்றுத்தருகிறது. உலகத்தில் வாழ்ந்து முடியும் வரைக்கும் அது குறைவின்றி நடக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது தான் உண்மை. அதை

'எதைத் தராவிடினும் உலகம் சாகுமட்டும்
பாடம் தந்துகொண்டே இருக்கும்' என்கிறார்.

இளமையில் எல்லாவிதமான கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடும் மனிதன், இறுதிக்காலத்தில் பக்தியாக வாழ எத்தனித்து கோவில், குளம், பள்ளிவாசல் என்று சுற்றித்திரிவது விந்தையானது. ஆனால் அதற்கான உண்மைக்காரணத்தை அறிகையில் அவ்வாறு பாவமன்னிப்பு தேடாமல் இருப்பதும் ஆபத்தானது என்பது புலப்படுகிறது.

'முதுமை நோய் மரணம் இருப்பதாலேயே
தீமை புரிவோர் திருந்த முயல்கிறார்'.

இவ்வாறான பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதாக கருத்துக்கலசம் வெளிவந்திருக்கிறது. இலக்கியத்துறையில் ஈடுபாடு உடையவர்களுக்கு இந்தப்புத்தகமும் ஒரு புதுவித அனுபவமாக அமையும் என்பதில் நம்பிக்கை உண்டு. படைப்பாளி சூசை எட்வேட் அவர்களின் இலக்கிய ஆளுமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

பெயர் - கருத்துக்கலசம்
நூலாசிரியர் - சூசை எட்வேட்
முகவரி – 1004, அன்புவழிபுரம், திருக்கோணமலை.
தொலைபேசி – 026 - 3268838
வெளியீடு – அகில இலங்கை இளங்கோ கழகம்
விலை - 200/=