Tuesday, October 18, 2011

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும் பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முயற்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

நாவலில் அபுல்ஹசன் - மைமூனா தம்பதியரின் மகள் ஆயிஷாவை சுற்றி படர்கிறது இந்தக் கதையம்சம். அவளைப் பெண்பார்க்க வரும் தொடக்கத்திலருந்து இறுதிவரை நாவல் தொடர்கிறது. நாவல் முழுவதிலும் தென்பகுதி முஸ்லிம்களின் பேச்சுமொழி விரவிக் கிடக்கிறது.மண்வாசனை மணக்கிறது. மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் அந்த பேச்சு மொழிகளில் லயித்தேன் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஆயிஷாவுக்கு அன்ஸார் என்ற ஆண்மகளை திருமணம் பேசுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சம்பிரதாயபூர்வமான பேச்சுகளுக்குப் பிறகு ஆயிஷாவும் அன்ஸாரும் தனியாக பேச தத்தமது விருப்பத்தை வீட்டாரிடம் ஒப்புவிக்கிறார்கள். வீட்டாருக்கும் திருமணமே முடிந்துவிட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருமணப் பதிவு மாப்பிள்ளை வீட்டில் நடக்க ஏற்பாடாகின்றது. ஆதலால் பெண் வீட்டிலிருந்து சீதனப் பணத்துடன் பழங்கள், தீன் பண்டங்கள் என்பனவும் மாப்பிள்ளை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டில் அனைவருக்கும் பகல் சாப்பாடும் ஏற்பாடாகியிருக்கின்றது.பெண் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் கையளிக்கப்படுகின்றது.

பெண் வீட்டில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து திருமண அழைப்பிதழ்களைக் கொடுக்கவிருக்கும் பொழுது அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது. அன்ஸார் ஏற்கனவே திருமணமானவன் என்ற வதந்தியை அவனது ஊரிவிருந்து புடவை விற்க வரும் வியாபாரி மூலமாக கேள்விப்படுகின்றனர். ஆயிஷாவின் பெண் மனது தீயில் வேகிறது. யா அல்லாஹ் இந்த விஷயம் பொய்யா இருச்சோணும்... என்று அவள் இதயம் பிரார்த்திக்கிறது. அந்த பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதுபோல் விசாரிக்கச் சென்ற ஆயிஷாவின் சகோதரன் சந்தோஷப்பூ தூவுகிறான். அதாவது அதே ஊரில் அன்ஸார் என்ற பெயரில் இன்னொருவன் இருக்கிறான். திருமணமான அவனைப் பற்றித்தான் வியாபாரி தவறுதலாக கூறியிருக்கிறார். மீண்டும் அந்த வீட்டில் கல்யாண களை கட்டுகிறது. ஆரவாரம் பெருகுகின்றது.

இனிதாக திருமணமும் முடிந்துவிட்டது. தாம் எதிர்பார்த்தபடியே துணை அமைந்ததில் ஆயிஷாவும் அன்ஸாரும் இல்லற வாழ்க்கையில் இனிமையையே அனுபவித்தார்கள். திருமணமுடித்து ஆறு மாதங்கள் கடந்தும் ஆயிஷா கருத்தரிக்கவில்லை. அது அன்ஸாரின் மனதிலும் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்திவிடுகிறது. இருந்தும் அன்புள்ளம் கொண்ட அவன் பொறுமை காக்க ஆண்டொன்று கழிய ஆயிஷா கருவுற்றதற்கான அறிகுறி தெரிகிறது. இறைவன் நியதியை தடுக்க யாருக்க முடியும்? அவளது கரு சிதைகிறது. இல்லற வாழ்விலும் ஊமையாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட அது வழிவகுக்கிறது.

வருடங்கள் நகர்கின்றன. ஆயிஷா மீண்டும் கருவுறுகிறாள். அல்லாஹவின் கருணையால்; அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அம்ஜத் என்ற அந்த பிள்ளைக்கு ஐந்து வயதாகும் போது அம்னா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இனிமேல் குழந்தை கிடைத்தால் ஆயிஷாவின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளது கருப்பை நீக்கப்படுகின்றது.

அன்ஸார் வெளிநாடு போகின்றான். காலம் தன்பாட்டில் கழிய அன்ஸாரின் சகோதரன் பாரிஸூக்கும் திருமணம் நிகழ்கிறது. இந்த கட்டத்திலிருந்துதான் கதையின் உச்ச கட்டத்தை சுலைமா சமி அவர்கள் நகர்த்தியிருக்கின்றார்கள். இதுவரை தென்றல் பரப்பிய ஆயிஷா - அன்ஸார் வாழ்வில் புயலை உருவாக்கிவிடுகின்றாள் பாரிஸின் மனைவி பஸ்லியா.

அன்ஸாரின் வளமான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படும் அவள் அன்ஸாரின் வாழ்வில் தீய வழியிலொரு திருப்பத்தை ஏற்படுத்தத் துணிகிறாள். அத்துடன் கணவன் பாரிஸூடனும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று சண்டைப் பிடிக்கிறாள். தனது மாமியாரிடமும் ஆயிஷா சரியில்லாதவள் என்று கட்டுக்கதையைக் கூறி, அவர் மனதையும் மாற்றுகின்றாள். ஏதுமறியாத ஆயிஷா கணவனுடன் வெளிநாட்டில் சென்று வசிக்கின்றாள்.

அன்ஸார் குழந்தைகள் மேல் பிரியம் அதிகமுள்ளவன் என்பதால் அவன் மனதில் இரண்டாவது திருமணத்தை செய்துகொள்ளும் ஆசையை பஸ்லியா ஏற்படுத்திவிடுகிறாள். ஆயிஷாவின் சம்மதமில்லாமல் இது முடியாது என அன்ஸார் சொல்ல தான் கேட்டு சொல்வதாக சொல்கிறாள் பஸ்லியா. எனினும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்காமல் தனது நரிக்குணத்தை அரங்கேற்றும் பஸ்லியா "பிள்ளைகளுக்கும், ஆயிஷாவினது குடும்பத்தினருக்கும் தெரியாமல் அன்ஸார் மனமுடிக்கலாம்" என ஆயிஷா கூறியதாக பஸ்லியா பொய்யுரைக்க, அன்ஸாரின் இரண்டாவது திருமணம் ஆயிஷாவுக்கு தெரியாமலேயே நிகழ்கிறது.

காலவோட்டத்தில் அவள் உண்மையை அறிய "நீ சொன்னதால்தானே நான் முடிச்சேன்" என கூறுகிறான் அன்ஸார். பஸ்லியாவின் சதி என இருவருக்கும் விளங்கவில்லை. தன்னை ஏமாற்றி துரோகம் செய்ததாக புலம்பும் ஆயிஷா, அன்ஸாரை வெறுக்கிறாள்.

அன்ஸார் இரண்டாவதாக மணமுடித்த நிரோஷா அவனை விட மிகவும் வயது குறைந்தவள். தான் இத்தனை வருடம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த காசு, சொத்து அனைத்தையும் கண்மூடித்தனமான காதலால் நிரோஷாவின் பெயருக்கு எழுதி வைக்கிறான் அன்ஸார். இடையில் ஆயிஷாவுக்கு சீனி வியாதி கடுமையாகி கால் பாதம் வரை துண்டாடப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவன் தனது அன்பு மனைவியையும், பிள்ளைகளையும் அடியோடு மறந்துவிட்டு, நிரோஷாவின் இளமையில் மூழ்கியிருக்கும் கட்டத்தில் அன்ஸார் மீது வாசகர்கள் அதீத வெறுப்படைவார்கள். பஸ்லியா மீதும் கோபம் கொள்வார்கள். பஸ்லியா போன்ற பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள் என்ற உண்மையை சுலைமா சமி இக்பால் அவரகள் நன்கு உணர்த்துகின்றார். தம்பதியரை, நண்பர்களை, காதலர்களை இவ்வாறு கோள் சொல்லி பிரிக்கும் பஸ்லியா போன்றவர்களுக்கு தண்டனை என்ன?

தண்டனை இருக்கின்றது. இதையும் கதாசிரியர் சொல்லியிருக்கும் பாங்கில் வாசகர் மனம் அமைதியடைகிறது. நல்லதொரு குடும்பத்தை பிரித்துவிடும் பஸ்லியா தன்வினைத் தன்னைச்சுடும் என்று அறிய கொஞ்ச நாள் செல்கின்றது. அதாவது சதாவும் பாரிஸை குத்திக்காட்டும் அவள் தனது மச்சானான அன்ஸாரின் பணக்கார வாழ்வு பற்றி எடுத்துரைக்கிறாள். பாரிஸ் ஆயிஷாவைப் பற்றி நன்கறிந்தவன் என்பதால் ஆயிஷாவும், அன்ஸாரும் பிரியக் காரணம், தனது மனைவியே என உணர்ந்துவிடுகின்றான். பஸ்லியா எதிர்பாராத தருணமொன்றில் அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. சாராம்சமாக பஸ்லியாவுடன் வாழ்ந்ததில் அவனுக்கு நிம்மதியில்லை என்றும் தான் தொழிலுக்கு வந்த இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருககும் பாரிஸ், கணவனை வேறு பெண்ணுக்கு தாரை வார்க்கும் வேதனையை நீ ஆயிஷாவுக்கு கொடுத்தாய். நீயும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறேன் என்றவாறு கடிதத்தை நிறைவு செய்கிறான். பேரிடி தலையில் விழ ஆயிஷாவிடம் தொலைபேசியில் மன்னிப்பு கோருகிறாள் பஸ்லியா. எல்லாம் முடிய நிரோஷா தன் வயதுக்கேற்ற ஒருவனுடன் ஓடிப்போகிறாள். விரக்தியடையும் அன்ஸார் அவளைத் தேடிப்புறப்பட்ட வேகததில் விபத்துக்கு உட்பட்டு முழுக்காலையும் இழக்கிறான். சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை. மனைவி, பிள்ளை, குடும்பம், மானம், மரியாதை எதுவுமில்லாமல் தனிமரமாக இருக்கும் அவன் எப்படியோ ஊருக்கு வருகின்றான். அவன் கோலத்தைப் பார்த்து அனைவருக்கும் தொண்டை அடைக்கிறது. அம்ஜத்தும் அம்னாவும் தந்தையை வெறுக்க, ஆயிஷா தன் கணவனை மீண்டும் ஏற்றுக்கொள்வதுதான் இறுதிக் கட்டம்.

மிக அமைதியாக வாசித்து இந்தக் கதையில் கூறப்பட்ட விடயங்களை அவதானிக்க வேண்டும். சமூகத்தில் உலாவும் போலி முகங்களின் முகமூடியை கிழித்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - ஊற்றை மறந்த நதிகள் (நாவல்)
ஆசிரியர் - சுலைமா சமி இக்பால்
முகவரி - 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, மாவனல்லை.
தொலைபேசி - 035 2246494
விலை - 200 ரூபாய்

37ம் நம்பர் வீடு - நாவல்

37ம் நம்பர் வீடு (நாவல்) பற்றிய இரசனைக் குறிப்பு 

இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் எமது மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்கள் தமது ஈமானை இழந்து பலவீனப்பட்டுப் போய் கிடக்கிறார்கள். அல்லாஹ் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை உலக வஸ்துக்களின் மீது வைத்து அல்லல் படுவதை அவதானிக்க முடிகிறது. சூனியம் என்ற வார்த்தையில் தமது சொத்து சுகங்களை இழந்து தவிக்கின்றவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருப்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது.

இத்தகையவற்றிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க இன்று பலர் தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய ஊடகங்களும் தமது பங்களிப்பை பல்வகைப்பட்ட தன்மைகளில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்கியத் துறையினூடாகவும் ஓர் இஸ்லாமிய புரட்சியை நிகழ்த்தி வருகின்றார் எழுத்தாளர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள். ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக்கூட்டம் ஆகிய நூல்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விடயங்களை, இஸ்லாமிய விழுமியங்களை தனது நாவல்களினூடாக வெளிப்டுத்தும் இவர், சிங்கள மொழியில் கல்வி பயின்று தமிழில் புத்தக வெளியீடுகளை மேற்கொள்பர் என்பது வியக்கத்தகது.

37ம் நம்பர் வீடு என்ற இவரது மூன்றாவது நாவல் சூனியத்திற்காக தனது பணத்தை, ஈமானை இழந்தவர்களின் நிலையை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இது எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 19 அத்தியாயங்களைக் கொண்டு 88 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அஸ்வர் அலி - கதீஜா உம்மா இருவரினதும் பிள்ளைகளான ருஷைத், ருஷ்தா. ருஷைதின் மனைவி ஸஹ்ரா, ருஷ்தாவின் கணவன் ஹிமாஸ். அத்துடன் அந்த வீட்டில் வேலைகளைச் செய்யும் ஹம்ஸியா. இவர்களை வைத்துத்தான் கதையம்சம் பின்னப்பட்டிருக்கிறது. இந்நாவலில், குறிப்பிட்ட ஒரு பாத்திரத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அனைத்து பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் வாசகர் மனதில் பதிந்து விடுகின்றன.



கதீஜாவுக்கு வயதாகிவிட்டதால் அவளுக்கு நுவரெலியாவின் குளிர்நிலை ஒத்துக்கொள்வதில்லை. அஸ்வர் அலியும் கொழும்பில் வீடு வாங்க வேண்டும் என்ற ருஷைதின் ஆசைக்கு இணங்கிவிட அனைவரும் தலைநகருக்கு அண்மித்த ஒர் இடத்தில் வீடு வாங்க முடிவு செய்கின்றனர். புரோக்கர் பல வீடுகளின் விபரங்களைச் சொன்னாலும் குறிப்பிட்டதொரு வீட்டை மாத்திரம் ருஷைதுக்கு பிடித்துவிடுகிறது. காரணம் அழகிய சூழலுடன் கூடிய வாகன தரிப்பிட வசதி கொண்டு அந்த வீடு அமைந்திருப்பதாகும். எனினும் அதை பலரும் பேய் வீடு என்று சொல்வதாக தன் நேர்மையை புரோக்கர் ஒப்பிக்கிறார். பேய், பிசாசு ஆகியவற்றில் நம்பிக்கை அற்ற ருஷைத் வீட்டாரிடம் இது பற்றி எதுவும் கூற வேண்டாம் என்ற கண்டிஷனுடன் அந்த வீட்டை வாங்கும் ஒழுங்குகளை கவனிக்குமாறு கூறுகிறான். தனது பிழைப்பில் மண்ணள்ளிப்போட விரும்பாத புரோக்கரும் எதைப்பற்றியும் வீட்டாரிடம் கூறாதிருக்க, வெகு சீக்கிரமாக வீடு வாங்கி அதில் அனைவரும் குடிபுகுந்து விடுகின்றார்கள். தனது தங்கையின் மகன் சுஹைல், தனது கைக்குழந்தை ஸீனத் ஆகியவர்களின் சுகாதாரத்தை எண்ணி வீட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கிறான் ருஷைத்.

அனைவருக்கும் வீடு மிகவும் பிடித்துப்போகிறது. எனினும் அந்த வீட்டில் அடிக்கடி சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இரவு பன்னிரண்டு மணிக்கு ஹம்ஸியா முற்றம் கூட்டுவதாகவும் அதை நிறுத்தும்படி சொல்லச் சொல்லியும் மேல்மாடியில் இருக்கும் மனைவி ருஷ்தாவிடமிருந்து ஹிமாஸூக்கு தொலைபேசி வருகிறது. அவன் வெளியில் சென்று பார்க்க ஹம்ஸியா சமையலைக்குள் புகுந்து விடுகிறாள். மீண்டும் உடனே தனது அறைக்குள் சென்று விடுகிறாள். அவளது அறையருகே நிற்பது பெருந்தப்பு என்பதை உணர்ந்து ஹிமாஸ் நகர எத்தனிக்கையில் மாமா அஸ்வர் கோபப் பார்வையால் சுட்டெரிக்கிறார். அவமானம் தாங்காமல் ருஷ்தாவின் விளையாட்டுத்தனத்துக்கு அளவில்லை என்று கர்ஜித்தவாறு மாடியை அடைந்தவனுக்கு மனைவி தூங்கிக்கொண்டிருப்பது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. கடைசியாக தனக்கு வந்த அழைப்பு இலக்கங்களை பார்த்தவனுக்கு இரத்தம் உறைகிறது. பத்தரை மணிக்கு தனது நண்பன் பேசிய இலக்கம் தான் தொலைபேசியில் பதிவாகியிருக்கிறது. எனினும் மாமா தன்னை அடிக்கடி சந்தேகிப்பது அவனளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அடுத்தாக ருஷ்தா, வீட்டிலிருக்கும் ஜன்னலருகில் யாரோ இருப்பதைக் காணுகிறாள். வெளியே வந்து பார்த்தால் ஒரு பெண் மழைக்கு ஒதுங்கியிருக்கிறாள். அவளை வீட்டுக்குள் அழைத்து வந்த ருஷ்தாவை அந்தப்பெண் தீட்சண்யமான பார்வை பார்க்க ருஷ்தாவுக்கு சர்வ நாடியும் அடங்கி மயக்கம் ஏற்பட்டு விடுகிறது. கண்கள் சொருகி, பேச்சு மூச்சற்று உணர்விழக்கிறாள்.

வைத்தியத் தரப்பில் அவள் மனநோயாளி என்ற கட்டத்திலிருந்து பைத்தியக்காரி என்ற பட்டம் பெறுமளவுக்கு அவளது செயற்பாடுகள் அமைந்துவிடுகிறது. அடிக்கடி இரவில் ருஷ்தா பயங்கரமாகச் சிரிப்பதைக் கண்டு ஹிமாஸ் அலறுகிறான். வீட்டிலுள்ளவர்கள் வந்து பார்த்த போது ருஷ்தா அயர்ந்து தூங்கியிருக்கிறாள். எதிர்பாராத விதமாக மீண்டும் ருஷ்தா கட்டில் நகருமளவுக்கு சிரித்த விதம் வீட்டிலுள்ள அனைவரையும் பீதியடையச் செய்கிறது. ஹம்சியாவினதும் நிலை அதே கதியாக இருக்கிறது. தனியறையில் தூங்கும் போது அவளை யாரோ கழுத்தை நெரிப்பதாகவும், சமையலறையில் யாரோ தன்னை ஊடுறுவிப் பார்ப்பதாகவும் கூறி அவள் கதறுகிறாள். ஸஹ்ராவுக்கும் இடைக்கிடையே பயங்கரமானதொரு சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆனால் இது எதையுமே நம்பாதவனாக ருஷைத் இருப்பது அவனது ஈமானை வலியுறுத்துகிறது. எனினும் ஷைத்தான் தனது விளையாட்டை ருஷைதிடமும் காட்டிவிடுகின்றான்.

அதாவது ருஷைத் ஓர் நாள் கனவு காணுகிறான். அதில் ருஷ்தாவின் மகன் சுஹைல், ருஷைதிடம் வந்து 'மாமா ருசியா இருக்குது' என்கிறான். எது என ருஷைத் கேட்டதற்கு ஸீனத்துட ரத்தம் என்கிறான். சுஹைல் விரலை வாயில் வைத்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். அவன் வாயில் இரத்தம். ருஷைத் ஸீனத்தைப் பார்க்க அவளது குரல்வளை துண்டிக்கப்பட்டு இரத்தம் வருகிறது. அதிர்ச்சியடைந்தவன் 'ஏன்ட தங்கமே ஸீனத்' என கனவில் கத்த ஸஹ்ரா அவனைத் தட்டி எழுப்புகிறாள். இந்த கனவுதான் ருஷைதின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடுகிறது. அனைவரும் பரிசாரிகளை அழைத்து வந்து பூஜைகளை செய்கின்றனர். ருஷைதுக்கு இது உறுத்தலாக இருந்தாலும் கனவின் தாக்கம் வாயடைக்கச் செய்கிறது. ஹஜ் கடமைக்காக அஸ்வர் அலி சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்ச கொஞ்சமாக பரிசாரியிடம் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் எந்த வித நலவுகளும் ஏற்படவில்லை.

இறுதியில் ஒரு பிச்சைக்காரியின் கூற்றுக்கிணங்க கதீஜா, அஸ்வர் அலி, ருஷைத் மூவரும் 37ம் நம்பர் வீட்டிலுள்ள ஒரு பெண்மணியை சந்திக்கிறார்கள். அந்த மூதாட்டி மிகவும் பக்தி உடையவர். அதிகம் படிப்பறிவில்லாவிட்டாலும் படைத்தவன் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர். இவர்களின் வீட்டு நிலைமைகளை அறிந்து தனது கதையை அவர்களிடம் விபரிக்கிறார். அவருக்கும் இதை விட பலமடங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் நாடிப் போகவில்லை. நோயைக் உருவாக்கியவன் மருந்தைப் படைத்திருக்கிறான். அது போலவே பிரச்சனைகளுக்கும் தீர்வை வல்ல அல்லாஹ்வே தர வேண்டுமென்று சதாவும் திக்ரிலும், ஓதலிலும் (இறை தியானம்) தனது காலத்தை கடத்தி வந்திருக்கிறார். அநாதைப் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தனது மகன்மாருக்கும் அநாதைக் குமர்களையே மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். பாடசாலை செல்லாத அந்த மூதாட்டி பலரிடம் கெஞ்சி தமிழ் எழுத்துக்களைப் படித்து அதன் பிறகு பல சன்மார்க்க புத்தகங்களை வாசித்தாகக் கூறி இராக்கைகளைக் காட்டுகிறார். காட்டிய இராக்கையில் ஒரு பக்க சுவர் மறையுமளவுக்கு புத்தகங்கள் இருக்கின்றன. அதைக் கண்ட ருஷைத் உட்பட ருஷைதின் பெற்றோரும் புதினப்படுகின்றனர்.

பல வீடுகளில் இன்று திக்ரு, ஸலவாத்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது. காரணம் தொலைக்காட்சி. அதில் வரும் உருவங்களும், இசையும் ஷைத்தானுக்கு மிகப் பிரியமானவை. அதனால் பல உள்ளங்கள் இன்று சீர்கெட்டு அலைகின்றன. எந்த கஷ்டம் என்றாலும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். நாம் நமது கோரிக்கையை விடுக்கும்போது அதை நிறைவேற்றித்தர அல்லாஹ் காத்திருக்கிறான். அவன் கருணையுள்ள ரஹ்மான். எந்தத் தீங்கும் அவனை மிஞ்சி நடந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்றவாறு அந்த மூதாட்டி அறிவுரை சொல்ல அனைவரும் மன நிம்மதி அடைந்தவர்களாக வீடு செல்கிறார்கள். இனிமேல் அவர்கள் எதற்காகவும் அல்லாஹ்வைத் தவிர பிற வஸ்துக்களிடம் பாதுகாப்பு தேடப் போவதில்லை. மறுமை வாழ்வுக்காக தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது நாவல்.

ஈமான் வற்றிய இதயங்களுக்கு இந்நாவல் மழையாக இருக்கிறது. அல்லல் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கிறது. ஆகவே அனைவரும் இவ்விதமான புத்தகங்களை வாசித்து பயனடைய வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - 37ம் நம்பர் வீடு
நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு – எக்மி பதிப்பகம்
முகவரி – 120 H, Bogahawatta Road, Welivita.
தொலைNசி– 011 5020936
விலை - 250/=

'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும் பெற்றிருக்கிறார்.

சொல்லப்போனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இவரது இந்த இலக்கிய ஊழியம், கலை இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம் ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள் தமது எழுத்துருக்களை முதற்கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரை சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே. சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர் பார்வைக்கு வருவதுமுண்டு. கே.எஸ். சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலம் அல்லது தன் சொந்த தேடலாகவோ இந்நூல்களைப் படித்து தன் கண்ணோட்டத்தைப் பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும், படைப்புக்கும் மூன்றாவது வாசகர் பார்வை அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ். சிவகுமாரன் தன் கண்ணோட்டத்தை அடக்கிய தனது நூலுருக்களை தொகுப்பு நூலாக்கல்... என திரு. கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிய அவதானத்தை கிழக்கு மண் இணையத்தளம் தந்திருக்கின்றது.



சோமகாந்தனின் பத்தி எழுத்து என்ற மகுடத்தில் சோமகாந்தனைப் பற்றி இந்நூல் எமக்கு அறியத்தருகின்றது. தினகரன் வார மஞ்சரியில் காந்தனின் கண்ணோட்டம் என்ற தலைப்பில் வாராவாரம் சோமகாந்தனின் பத்தி எழுத்துக்கள் வெளி வந்திருக்கின்றன. சோமகாந்தனின் எழுத்துக்களை ரசித்ததாகக் கூறும் நூலாசிரியர் அதற்கான சில காரணங்களாக பின்வருவனவற்றை கூறியிருக்கின்றார்.

தமிழ் மொழியின் சொல் வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தில் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளங்காகிதம் அடைந்தமை, தெரியாத சில விபரங்களைக் கோர்த்து அவர் தரும் பாங்கு என் அறிவை விருத்தி செய்ய உதவியமை, சோமகாந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத்தன்மை கொண்டவையாதலால் அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெற்றமை.

எழுத்து, சமயம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர்தர அரசாங்க உத்தியோகத்தரான சோமகாந்தனைப் பற்றி இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்களோ என்ன வோ? திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் புத்தகங்களில் படித்து அறியக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது எனலாம்.

பத்தி எழுத்தும் சண் அங்கிளும் என்ற பார்வையில் பொ. சண்முகநாதனைப் பற்றி அறியத் தந்திருக்கிறார். உதயன் நாளிதழில் நினைக்க.. சிரிக்க.. சிந்திக்க என்ற தலைப்பில் எழுதி வந்த பொ. சண்முகநாதன் தனது சொந்தப் பெயரிலும் நீண்ட நாட்களாக ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் எழுதி வந்த ஒரு படைப்பாளி. தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாகவும், தெளிவாகவும் சொல்லி முடிக்கும் பாங்கு பலரிடம் இல்லை. எனினும் பத்தி எழுத்துக்கள் மூலமாக பொ. சண்முகநாதன் அவர்கள் கூறும் பாங்கு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

பல முக்கிய செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய கிளைச் செய்திகளையும் சுருக்கமாகத் தந்த பின்னர் சிந்திக்கத்தக்க கருத்துக்களையும் பலவந்தமாகத் திணிக்காமல் எடுத்துக்கொண்ட பொருளுடன் ஒட்டியதாக அவர் எழுதும் முறை ஆசிரியரின் முதிர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் காட்டி நிற்கிறது என தனது பாராட்டை தெளித்திருக்கிறார் திரு. சிவகுமாரன் அவர்கள்.

1958 – 1966 காலப் பகுதியில் சிற்பி சிவசரவணபவன் வெளியிட்ட ஷகலைச்செல்வி| நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்பது பலரின் கணிப்பு. சிற்பி அவர்கள் தீபம் என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் இவர் எழுதிய இலங்கைக் கடிதத்தொடரால் எமது நாட்டு இலக்கிய முயற்சிகளை இந்தியர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பை அளித்தது. இவர் சத்திய தரிசனம், உனக்காக கண்ணே, ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமேரி என்ற பெண்பாற்புலவரைப் பற்றியும் இத்தொகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. திருகோணமலையைச் சேர்ந்த இவர் மரபு சார்ந்த கவிதைகளையும், பாடல்களையும் எழுதி வருகிறார். இவரது பாடல்களில் லயம், ஓசை என்பன காணப்படுவதையும், சொல்லாட்சியிருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் ஞானமேரி அவர்களின் இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் விதைந்துரைக்கப்பட்ட பாடநூலாக இருப்பது அவசியம் கூறுகின்றார்.

திரு. கௌசிகன் நடாத்திய ஓவியப் பயிற்சி கண்காட்சியின் நிகழ்வொன்றையும் இந்த புத்தகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கொழும்பு வாழ் பல பெண்கள் இந்த பயிற்சிக் கல்லூரியின் மாணவிகளாவர். இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திரு. திருமதி. கௌசிகன் இருவரும் நவீனத்தவமும், இயற் பண்பும் கொண்ட ஓவியங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இளைஞர், யுவதிகளின் இந்த திறமையை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சி பெப்ரவரி மாதம் கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்பத்தில் இடம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இஸ்லாமியப் பெண்ணின் எழுத்தாற்றல் என்ற வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் அது பற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

கிழக்கிலங்கை இஸ்லாமியரும், யாழ்ப்பாண நகரின் இஸ்லாமியரும் தமிழைத் தம் வசமாக்கி தனித்துவமான படைப்பக்களை இப்பொழுது தந்துகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆயினும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் வெலிகம என்ற ஊரைச் சேர்ந்த ரிம்ஸா முஹம்மத் தமிழை ஆள்வது எனக்கு வியப்பைத் தந்தது. புதுக்கவிதை என்ற பெயரில் வழமையாக பலர் எழுதும் செயற்கைத் தன்மையான கேள்விகளும், சூளுரைத்தல்களும் போன்று நமது கவிஞரும் எழுதி விடுவாரோ என்ற எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் அமைதி கண்டு யதார்த்த அனுபவத்தை அவர் பதிவு செய்வது எனக்கு திருப்தியளித்தது'. என்றவாறு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தன் மனவோட்டத்தைக் கூறியிருக்கின்றார்.

எல்லாக் கலைகளுமே களிப்பூட்டுவன என்றாலும் பெரும்பாலானவை பெருவாரியான பொது மக்களின் ரசனை மட்டத்தை திருப்திப்படுத்துவன. அந்த வகையில் சினிமாவும் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இத்தகைய திரைப்படங்கள் ஜனரஞ்சகமானவை என்கிறார்கள். சில நேரங்களில் ஜனரஞ்சகமானவை கலைத் தரமுடையiவாக அமையும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.

வியாபார நோக்கத்திற்காக திரைப்படம் தயாரிப்பவர்கள் ரசிகர்களின் ரசனையை மதிப்பவர்களாக பெரும்பாலும் இல்லை. முதலீட்டை கைப்பற்றவே அவர்களது மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். அதாவது தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும், சம்பவங்களைக் கூட வசனத்தில் மீண்டும் எடுத்துரைக்கும் விதத்திலும் பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே வணிகப்படங்கள் கைத்தொழில் முயற்சிகளின் விளைவுகள் எனலாம். கலைநயமான படங்கள் உயர் மட்ட ரசனை உடையவர்களின் ஆய்வறிவுக்கு விருந்தளிப்பன. மக்கள் ரசனை உயரும்போது ஆக்கபூர்வமான கலைப்படங்கள் தாராளமாக நமது பார்வைக்கு வரும் என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

தான் எழுதிய விடிவு கால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள், அன்னையின் நிழல் ஆகிய நூல்களுடன் அண்மையில் பலே பலே வைத்தியர் என்ற சிறுவர் நூலையும் எழுதி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கே.விஜயன் அவர்களைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் இவர், இதழியலாளராக இருந்தவராவார். மார்க்சிய சிந்தனை உடைய இவர் மலையாளக் கதைகள் சிலவற்றையும் தமிழில் தந்திருக்கின்றார். சிறுவர்களைக் கவரக் கூடியதும், பெரியவர்களை திருப்திபடுத்தக்கூடியதுமான கே. விஜயன் அவர்களின் பலே பலே வைத்தியர் என்ற நூல் 98 பக்கங்களில் 20 கதைகளுடன் வெளிவந்திருக்கிறது.

தனது எழுத்துக்களாலும், தன் நிகரற்ற பண்பினாலும் பல இலக்கிய நெஞ்சங்களின் அன்பை வென்றெடுத்த மாமேதை திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் நூலுக்கு எனது இரசனைக்குறிப்பை எழுதியதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவரைப் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இன்னுமின்னும் சாதனைப் படைக்கவும் வாழ்த்துகிறேன்!!!

நூல் - கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சிலள
ஆசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06
விலை - 200 ரூபாய்

Wednesday, October 12, 2011

முகங்கள் தொகுப்பு

முகங்கள் தொகுப்புக்கான (சிறுகதைகள்) இரசனைக் குறிப்பு

புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

விஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.



தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தை திறந்திருக்கிறார்.

ஓராண்டுகால பதிப்பகத்துறை அனுபவம்,
மூன்றாண்டுகால எழுத்துத்துறை அனுபவம்,
இருபத்து மூன்றாண்டுகால புலம்பெயர்வாழ்வு அனுபவம்.

இந்த மூன்றும் எனக்குத் தந்த தைரியமும், என் முகம் தெரியாமலேயே என்னை ஆதரித்த என் எழுத்தாள நண்பர்கள் தந்த ஆதரவும் தான் இந்த தொகுப்பு உங்கள் கையில் தவழ காரணமாய் அமைகிறது.

இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்பட அநேக எழுத்தாளர்கள் இலங்கை மக்களிடமிருந்தும், இலங்கை இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் அந்நியப்படுவது பற்றி என்றுமே எனக்கு மனவருத்தம் உண்டு. ... இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது ராமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடலில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் தான். தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பிள்ளை எவ்வாறு பெற்றோருக்கு பிறத்தியாகுமோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய்ப் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய ஒரு மாத்திரைதான் என்கிறார் திரு. வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளை தொகுத்து கனதியான புத்தகமாக ஆக்கியிருக்கும் அவரது முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பிட்ட நாட்டில் வதியும் படைப்பாளிகளின் படைப்புக்கள் சேர்த்து அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு பல நாடுகளிலும் வதியும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒன்றுதிரட்டி இந்தப் புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார் திரு வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

முதல் சிறுகதையான முதிர்பனைகளை நியூசிலாந்தைச் சேர்ந்த அகில் எழுதியிருக்கிறார். மூன்று புதல்வர்களின் திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்துபோகிறார் அம்மா பார்வதி. அதற்கான காரணங்களை மூன்று மகன்மாரும் சொல்வதாக இக்கதை அமைந்திருக்கிறது.

முதல் மகன் சேர்ஜன் சிவரூபன். தான் காதலித்த நிர்மலா என்ற பெண்ணை பெற்றோர்கள் விரும்பாத காரணத்தால் சிவரூபனால் திருமணம் முடிக்க இயலாமல் போகிறது. தற்போது அவருக்கு நாற்பத்தைந்து வயதாகியும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். இரண்டாவது மகன் சிவநேசன். 39 வயது. கப்பலின் தலையாய எஞ்சினியர். கப்பல் எந்த நாட்டின் கரையில் நங்கூரமிடுகிறதோ அங்கே சிவநேசன் புது மாப்பிள்ளை ஆகிவிடுவார். மரணத்தின் கதவுகளைத் தட்டும் பாலியல் நோயைக் கொண்டவர். ஆதலால் மனசாட்சி விழித்ததன் நிமித்தம் திருமணத்தை இரத்து செய்து விடுகின்றார். மூன்றாவது மகன் சிவச்செல்வன். போர் விமானத்தின் விமானியோட்டி. யுத்தங்களைப் பாரத்த அதிர்ச்சியில் மனநல மருத்துவரைத் தேடிப்போக அவர் சில மருந்துகள் கொடுக்கின்றார். அவை ஒருவரின் ஆண்மையை இழக்கப்பண்ணி விடுகிறது. சிவச்செல்வனும் இந்த பாதிப்புக்கு உள்ளானதால் இவரும் மணமுடிக்காமலேயே இருந்துவிடுகிறார். ஆக மொத்தத்தில் பிள்ளைகளில் ஒருவருடைய திருமணத்தையாவது தாய் பார்க்கவில்லை. அருமையான கதையாடலைக்கொண்டது இந்த சிறுகதை.

அம்மா அம்மா தான் என்ற கதையை யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுதியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வருகிறாள் மகள் மதுரா. மதுரா உட்பட அவளின் மகளும் நாகரீகத்திற்கேற்ப ஆடை அணிபவர்கள். ஒருமுறை மதுராவின் பெரியம்மாவின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாணியில் ஆடைகளை அணிவதைக் கண்டு அம்மம்மா திட்டிவிடுகிறாள். அதே போன்று தனது மகளை தனது அம்மா திட்டி விடுவாரோ என்று பயப்படுகின்றாள் மதுரா.

ஆனால் என்ன ஆச்சரியம். அக்கம்பக்க வீட்டு பிள்ளைகளுக்கு அம்மா இப்படிச் சொல்வதைக் கண்டு ஆனந்தமடைகிறாள் மதுரா.

"என்ர பேரப்பிள்ளையளைப் பாத்தியளே! என்ன ஸ்ரையிலாய் ஸ்மாட்டாய் இருக்கினம். நீங்களும் அந்த மாதிரி இருக்க பழகுங்கோ. அவையளைப் போல உடுத்து, அவையளைப் போல பேசி..''

பிரான்சிலிருந்து ஜோதிலிங்கம் எழுதிய "லா சப்பல்" என்ற கதை அளவுக்கு மீறி நாகரீகத்தில் திளைத்து இறுதியில் உயிரை இழந்த யுவதியைப் பற்றியது. பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மாணவ மாணவிகள், விரிவுரையாhளர்கள் இணைந்து ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கழுத்தடி பட்டினை பூட்டாமல் வெளிக்கிட்ட மகளை தடுத்து நிறுத்தும் பரிமளம் அதை பூட்டச்சொல்லி அதட்டுகிறாள். அதற்கு சிவரஞ்சனியோ "அது ரை கட்டினால்தான் பூட்டிறது அம்மா. ஆக்கள் பாத்தால் சிரிப்பினம்" எனகிறாள்.

"அது சிரித்தால் சிரிக்கட்டும். நீ வடிவாய் பூட்டு. குமருகளுக்கு ஏதும் நடந்து முடிஞ்சாப் பிறகு ஊர் உலகம் சிரிக்கிறதுக்கு முதல் இது பரவாயில்லை" என்கிறாள் அம்மா பரிமளம்.

அம்மாவின் வழமையான சுப்பிரபாதத்தை காதில் வாங்காமல் புறப்படும் சிவரஞ்சனி புகையிரத நிலையத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்து அநாகரீகமான ஆடை, உதட்டில் கறுப்பு மை பூசி வித்தியாசமான போக்கில் தனது நண்பிகளுடன் இணைந்து பயணிக்கிறாள்.

மாலையில் ஆபிஸ் முடிந்தவுடன் லா சப்பலுக்குப் போய் மரக்கறி வேண்டி அப்படியே கோயிலுக்கும் போய் மகளையும் காரில் அழைத்து வரலாம் என்று கணவர் பாக்கியநாதன் மனைவியை ஆறுதல் படுத்துகிறார். ஏனெனில் பரிமளம் சதாவும் சிவரஞ்சனியின் போக்கு பற்றி அங்கலாய்ப்பதே இதற்கான காரணம். மாலையில் சிவரஞ்சனியின் மொபைலுக்கு கோல் பண்ண ரிங் போய்க்கொண்டு இருக்கிறதே ஒழிய சிவரஞ்சனியின் பேச்சு வரவில்லை. பாக்கியநாதனுக்கும் அடிவயிற்றில் பற்றுகிறது.

லா சப்பல் வீதிக்கு இருவரும் வருகிறார்கள். வீதி பரபரப்பாக இருக்கிறது. "யாரோ ஒரு பெண்பிள்ளை ரொயிலட்டில் கொலை செய்யப்பட்டிருக்கிறாளாம். ரேப் கேஸாம்" என்று சனம் கதைக்கிறது என்ற செய்தியோடு பாக்கியநாதனுக்கு பொலிஸாரிமிருந்து கோல் வருகிறது. பாக்கியநாதனின் முகம் மாறுவதைக்கண்டு பரிமளமும் கலவரமடைகிறாள். சிவரஞ்சனி பிணமாக குப்புறக்கிடக்கிறாள். அவளது மார்பிலும் தோளிலும் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. தொப்புளில் வளையம் தொங்குகிறது. கலாச்சாரம் து(ம)றந்து அநாச்சாரங்களில் மூழ்கிப் போனால் யாவருக்கும் இதே நிலைமை தான் என இக்கதை அருமையாக சுட்டி நிற்கிறது.

இந்தத் தொகுப்பில் நியூசிலாந்து, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவீடன், பெர்லின், சுவிற்ஸ்லாந்து, பிரான்சு, ஹொலன்ட், இந்தியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றமை கூடுதல் சிறப்பு எனலாம்.

இவ்வாறானதொரு மகத்தான பணியைச் செய்திருக்கும் தொகுப்பாசிரியர் வீ. ஜீவகுமாரனின் இலக்கிய பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முகங்கள் (சிறுகதைகள்)
தொகுப்பாசிரியர் - வீ. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கிய பாலம்
தொடர்புகளுக்கு - visvasethu@gmail.com