Friday, August 10, 2012

பாவைப் பிள்ளை - சிறுவர் பாடல் தொகுதி

பாவைப் பிள்ளை சிறுவர் பாடல் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

சிறுவர் படைப்பிலக்கியத்தில் ஆழமாக தனது ஆற்றலை வெளிப்படுத்தி வருபவர்களுள் திருகோணமலை செ. ஞானராசா அவர்களும் முக்கியமானவர். தனது மூன்றாவது சிறுவர் நூலாக பாவைப் பிள்ளை என்ற தொகுதியை வெளயிட்டிருக்கின்றார்.

சிறுவர் பா அமுதம் இவரது முதல் தொhகுதியும், புதிய பாதை என்பது இவரது இரண்டாவது தொகுதியுமாகும்.

அதிபராக கல்விப் பணியாற்றி வருவதுடன் கவிதை, சிறுகதை, கட்டுரை போன்ற துறைகளிலும் தனது ஆளுமையை வெளிப்படுத்தி வரும் செ. ஞானராசா அவர்கள் இலங்கை தேசிய நூலக அபிவிருத்தி சபையால் இப்புத்தகத்துக்குரிய சான்றிதழையும் பெறிருக்கின்றார்.

மொத்தம் 20 பாடல்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இந்நூலானது  47 பக்கங்களில், வர்ணப் படங்களுடன் சர்வீனா வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது.

இவ்விரண்டு வரிகளில் வாழ்க்கையின் அத்தனைப் பகுதிகளையும் தெட்டத் தெளிவாக கூறியிருப்பது திருக்குறள் என்று பலரும் சொல்வர். திருக்குறள் இன்று பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்தகைய மேன்மை பொருந்திய நூல் பற்றி சிறுவர்களும் உணர வேண்டும் என்பதற்காய் திருக்குறள் என்ற முதல் பாடலின் சில வரிகள் இவ்வாறு வருகிறது.

இரண்டு வரியில் உள்ளதாம்.
இனிய கருத்து நிறைந்ததாம்
திரண்ட செய்தி சொல்லுமாம்
திருவள்ளுவர் தந்ததாம்

செய்ய எதை வேண்டுமோ
செய்ய எதை வேண்டாமோ
மெய் உணர்த்தி வைக்குமாம்
மேன்மையான குறளதாம்

வேளைப்பளு அதிகரித்திருக்கும் இன்றைய காலத்தில் தந்தை மாத்திரமன்றி தாயும் தொழிலுக்குச் செல்லும் தேவை அல்லது திண்டாட்டம் வலுப்பெற்றிருக்கிறது. அவ்வாறாயின் அலுவலகத்துக்கு செல்லும் அவதியில் அவசர உணவுகள் தான் இன்று கைகொடுக்கின்றன.

பிட்டு, இடியப்பம், தோசை போன்ற பாரம்பரிய உணவுகள் மறக்கப்பட்டு பாஸ்ட்புட் உணவுகள் எம்மை ஆக்கிரமித்துவிட்டன. நல்லது என்ற தலைப்பிடப்பட்ட பாடல் சத்துணவுகளை இன்னொருமுறை ஞாபகப்படுத்துமாற்போல் இருப்பதை அவதானிக்கலாம்.

பாலும் பழமும் நல்லது
பச்சைக் காய்கறி நல்லது

பருப்பும் கிழங்கும் நல்லது
பலம் தருவதில் வல்லது

மீனும் முட்டை இறைச்சியும்
மிகவும் ஊட்டம் உள்ளது

சிறுவர்களை மாத்திரமல்லாது கவிஞர்களையும் கவர்ந்த ஒரு அதிசயம் நிலா. நிலாவைப் பற்றி எப்படியெல்லாமோ, யார் யாரெல்லாமோ கூறி விட்டார்கள். ஆனாலும் படைப்பாளிகள் ஒவ்வொருவரும் தமது ரசனைக்கேற்றாற்போல நிலவினைப் பற்றி பாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். நூலாசிரியரும் பாடுகிறார் இவ்வாறு..

நிலாப்பாட்டு பாடியே
நிலாவோடு சேருவோம்
உலாப் போகும் வெளியினை
உல்லாசமாய் நாடுவோம்

இரவைத் தேடும் உறவுப்பூ
இருளில் அழகு காட்டுதே
வரவுக்காக காப்பதால்
வழியில் மகிழ்ச்சி பூக்குதே

இலங்கை நாடு எம் நாடு என்று வெறுமனே பாடிக் கொண்டிருக்காமல் மூவின மக்களும் சமமானவர்கள், தாய் நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என்ற கோட்பாட்டை மாணவர்கள் மத்தியில், எதிர்கால சந்ததியினர் மத்தியில் உருவாக்க வேண்டும். அப்போதுதான் நாட்டில் அமைதியும், சுபீட்சமும் தோன்ற வழி பிறக்கும். கடந்த காலங்கள் போன்று எதிர்காலங்கள் ஆகிவிடக்கூடாது. ஒற்றுமையை வலியுறுத்தும்  முயற்சியாக எங்கள் நாடு என்று தலைப்பிட்ட கவிதையின் சில வரிகள் இதோ..

இந்து இஸ்லாம் பௌத்தம்
இனிய கிறிஸ்தவமும்
இந்த நாட்டின் நெறியாய்
இருக்கும் ஒரே விதமாய்

இனங்கள் பல உண்டு
இலங்கையர் நாம் என்று
சனங்கள் உணர்ந்து கொண்டால்
சரிசமமாய் வாழ்வோம்

நலன்புரி நிலையங்களில் வாழ்க்கை நடாத்துபவர்கள் அடிப்படை வசதிகள்கூட இல்லாமல் வாழுவதை அறிந்திருக்கிறோம். அவர்களுக்கு எம்மாலான உதிவிகளைச் செய்ய வேண்டும். சொந்த மண்ணில் இருக்கும்போது மகிழ்ச்சியாக வாழ்ந்தவர்கள் எல்லாம் இன்று கண்ணீர் கதைகளோடும், நினைவுகளோடும் வாழ்கின்றார்கள். கடந்துவிட்ட அவர்களது வாழ்வு மீண்டும் கிடைக்காதா என்ற ஆதங்கத்தோடு வாழு(டு)ம் அவர்கள் பற்றி நூலாசிரியர் செ. ஞானராசா அவர்கள் தனது நலன்புரி நிலையம் என்ற பாடலில் இவ்வாறு கூறியிருக்கின்றார்.

நலன்புரி நிலைய மாணவர்கள்
நலம் பல இழந்து போனவர்கள்
பலன் பெற உதவி செய்திடவே
பாசமாய் எழுந்து வாருங்கள்

வன்னியில் இருந்த போதினிலே
வாய்ப்பு வசதிகள் அவர்க்குண்டு
அன்னியப்பட்டுப் போனதினால்
அடிப்படை உரிமை இழந்தாரே

தனது பாடல்களால் சின்னஞ் சிறார்களை கவரும் வல்லமை ஆசிரியருக்கு இருக்கிறது. நூலுருவாக்கத்தில் நன்கு திட்டமிட்டு பயனுள்ள விடயங்களை சேர்திருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

பெயர் - பாவைப் பிள்ளை (சிறுவர் பாடல்;)
நூலாசிரியர் - செ. ஞானராசா
முகவரி - 993, Anbuvalipuram, Trincomalee, Sri Lanka.
தொலைபேசி - 026 3267891, 077 5956789
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 200 ரூபாய்

குற்றமும் தண்டனையும் - சிறுகதைத் தொகுதி

குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பல வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் எம்.பி.எம். நிஸ்வான் அவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். மூன்றாம் தலாக் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதி பல மட்டங்களிலும் பேசப்பட்டதொரு நூலாகும். அதைத் தொடர்ந்து குற்றமும் தண்டனையும் என்ற தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதி 108 பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது.

தலையங்கங்களுக்கு ஏற்ற விதமாக சிறப்பான படங்களை வழங்கியிருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள்.

சிந்திக்கத் தக்கவை. இன்று எழுதப்படும் பல விடயங்களில் அர்த்தங்கள் என்று எதுவுமிருக்காது. அப்படியின்றி சமூகம் சார்ந்த, உணர்வு பூர்வமான விடயங்களை முன்வைக்கும்போது சிறுகதைகள் வழிகாட்டிகளாகவும் மாறிவிடுகின்றன. இது பற்றி நூலாசரியர் நிஸ்வான் அவர்கள் தனது உரையில் கூறியிருக்கும் வாசகங்கள்.


`கதைகள் மக்கள் பிரச்சினையை யதார்த்தபூர்வமாக சித்தரிக்கும் கலைத்துவ சிருஷ்டிகளாக அமையும் பட்சத்தில் அவை மக்கள் கலையாக மாறுகின்றன. சமூகப் பார்வையற்ற மனிதப் பிரச்சினைகளை அணுகாத கதைகள் யதார்த்தமானதல்ல'.

வெளிநாட்டுக்குச் சென்று உழைத்தல் என்பது இன்று நேற்று நடக்கும் விடயமல்ல. பல வருடங்களாக தொடரும் இந்த பழக்கத்தால் பலர் நன்மை அடைந்திருக்கிறார்கள். பலர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். இத்தொகுதியின் முதல் கதையாக வருகின்ற குற்றமும் தண்டனையும் என்ற கதையும் மேற்சொன்ன பிரச்சினையை இயம்பி நிற்கின்றது.

குடும்பத் தலைவன் தனது மனைவி பிள்ளைகளுக்காக உழைக்கவென்று வெளிநாடு செல்கிறான். வருடங்கள் ஐந்து கடந்த நிலையில் சந்தோஷமாக வீடு திரும்புகிறான். வந்து ஓரிரண்டு தினங்கள் கடந்த நிலையில் மனைவி அவனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறாள். அதற்கான காரணத்தை அறிந்தவனுக்கு தலையே சுற்றுகிறது.

அதாவது ஷமனைவிக்கு வேறொருவனுடன் தொடர்பு இருந்திருக்கிறது|  என்பதை மனைவி மூலமே அறிகின்றான். இதைப்பற்றி ஒரு பெரியவிரடம் ஆலோசனை கேட்கும்போதுதான் தனது பிழையை உணருகிறான் குடும்பத் தலைவன்.

மனைவியை தனிமையில் விட்டுச் சென்றால் சிலவேளைகளில் இவ்வாறான பாதிப்புக்கள் நிகழலாம். அதைப் பற்றின விழிப்புணர்வுக் கதையாகவே இது எழுதப்பட்டுள்ளது.

கல்வி ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஒழுக்கம் என்பதாகும். ஒழுக்கமற்ற கல்வியால் எந்தப் பலனும் கிடையாது. பாடசாலை மாணவர்கள் இன்று மிகவும் துர்நடத்தை உள்ளவர்களாக மாறி வருவதை அவதானிக்கலாம்.

பாதைகளில் போகும்போது வரிசையாக செல்லாமல் கத்திக்கொண்டும், பாதையில் வருவோர் போவோரை பகிடி பண்ணியவாறும் செல்கின்றார்கள். பெண் பிள்ளைகளைக் கண்டால் போதும் ஏதேதோ கூறி தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். ஆசிரியர்களை மதிப்பதில்லை. இவ்வாறான விடயங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையே ஒழுக்கம் இல்லாத கல்வி என்பதாகும்.

காலம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வரதட்சணை என்ற சம்பிரதாயம் மாறுவதாக இல்லை. இன்றைய இளைஞர்கள் இது சம்பந்தமாக சிந்திக்க வேண்டும். மஹர் கொடுத்து மணமுடிக்க வேண்டியவர்கள் சீதனத்தை பெறுவது என்பது எவ்வளவு வெட்கக்கேடான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். நிலைகெட்ட மனிதர்கள் என்ற கதையில் வரும் பிரச்சினையும் மேற்சொன்னதுதான்.

மாமியர் வீட்டுக்குப் போன பெண்ணை மாமியாரும் மதினியும் வார்த்தைளால் கொல்லுகிறார்கள். அந்த ஊரில் ஏதாவது ஒரு திருமணம் நடந்தால் அந்த வீட்டவர்கள் வீடு கொடுத்தார்கள், நகை கொடுத்தார்கள். நீ என்ன கொண்டு வந்தாய் என்றெல்லாம் குத்தலாகப் பேசுவார்கள். கணவனிடம் சொன்னால் உண்மையைத்தானே சொல்கிறார்கள் என்று கணவன் சொல்கிறார். இப்படியிருக்க அந்தப் பேதை தீக்காயங்களுக்கு இரையாகி இறந்து போகிறாள். இது தற்கொலையா, கொலையா என்று யாருக்கும் தெரியவில்லை. பணத்துக்காக என்னென்னமோ நடக்கிறது. இப்படியும் நடக்கிறது என்றவாறு நிறைவுறுகிறது இந்தக் கதை.

அந்த ஒரு நிமிடம் என்ற கதை குடும்பப் பகையையும், காதலையும் உள்ளடக்கியது. சொந்த அண்ணன் தங்கச்சியின் பிள்ளைகளான மச்சானும், மச்சாளும் காதலிக்கிறார்கள். ஆனால் சொத்துப் பிரச்சினையால் குடும்பங்களிரண்டும் ஜென்மப் பகை. ஆதலால் இருவரும் ஊரைவிட்டு ஓட திட்டம் தீட்டுகின்றனர். இந்த விடயம் ஊரிலுள்ள பெரியவர்களுக்கு எட்டுகின்றது. இவ்hறானதொரு இழிகாரியம் நடந்தால் அது சமூகத்துக்கும் பாதிப்பு. குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களுக்கும் பாதிப்பு. ஆதலால் இரு வீட்டாருடன் கலந்து பேசுவதாகக் கூறி சமாதானப்படுத்துகின்றனர் ஊர் பெரியோர்கள்.

கண்டிஷன் மாப்பிள்ளை என்ற கதை சிரிக்கவும் வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. பல லட்சங்கள், நகை, வீடு, மாப்பிள்ளையின் பக்கத்திலிருந்து வருவோர் அனைவருக்கும் சாப்பாடு யாவற்றையும் பெண்ணின் வீட்டார் செய்ய வேண்டும் என்பதும், திருமணம் பெரிய பணக்கார ஹோலில் நடைபெற வேண்டும் என்பதும் மாப்பிள்ளை வீட்டாரின் கண்டிஷன்.

எல்லா கண்டிஷனுக்கும் பெண் வீட்டார் ஒத்துக்கொள்கின்றனர். காரணம் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை. மாப்பிள்ளையின் தகப்பனும் பெரிய தனவந்தர். ஊரில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் முதல் ஆளாக அழைக்கப்படும் செல்வாக்கு கொண்டவர். ஆதலால் எப்படியேனும் அவரின் மகனை தமது மருமகனாக்கிக்கொள்ள பிரயத்தனப்படுகின்றனர்.

திருமண நாளன்று மாப்பிள்ளை வர தாமதமாகிறது. பெண் தரப்பிலிருந்து மாப்பிள்ளையை அழைத்து வரப் பேகின்றார்கள். போன இடத்தில்தான் தெரிகிறது அவர்கள் யாரும் திருமணத்துக்கு வரமாட்டார்கள் என்று. காரணம் ஷஇரண்டாம் இலக்க மண்டபம் மாப்பிள்ளைக்கு போதவில்லையாம். முதல் மண்டபத்தில் கல்யாணம் நடைபெறாதது மாப்பிள்ளைக்கு செய்த அவமரியாதையாம்|.

இவ்வாறான பல சமூக விடயங்களை தனது கதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூல் - குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
நூலாசிரியர் - எம்.பி.எம். நிஸ்வான்
முகவரி - ரஹ்மத், 6 ஏ, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்தை, பாணந்துறை.
தொலைபேசி - 0382297309
வெளியீடு - ரஹ்மத் பதிப்பகம்
விலை -  200 ரூபாய்

Wednesday, June 20, 2012

பூஞ்சிறகுகள் - சிறுவர் பாடல்

பூஞ்சிறகுகள் சிறுவர் பாடல் மீதான இரசனைக் குறிப்பு

புரவலர் புத்தகப் பூங்காவின் வெளியீடாக மேக வாழ்வு எனும் கவிதைத் தொகுதியையும், நோன்பு என்ற பெயரில் சிறுவர் கதை நூலொன்றையும் தந்த வெளிமடை ரபீக் அவர்கள் தனது அடுத்த தொகுதியை சிறுவர் பாடல்களாக வெளிக் கொணர்ந்திருக்கிறார். 22 பக்கங்களை உள்ளடக்கிய பூஞ்சிறுகுகள் என்ற இந்த நூல் வர்ணப் படங்களையும் ஏந்தி அழகாக காட்சியளிக்கின்றது. சிறுவர்களின் மனதைக் கவரும்படியான அழகிய பாடல்களும், படங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை புத்தகத்தின் சிறப்பம்சமாகும்.

வெள்ளாப்பு வெளியின் வெளியீடாக மலர்ந்திருக்கும் இந்நூல் பற்றி குழந்தைகள் போலவே குழந்தை இலக்கிய வடிவங்களும் வடிவழகு மிளிர்பவை. எளிமையும், எழிலும் பூப்பவை. குழைவு மொழியாய் குதூகலிப்பவை. தேனோசையில் சுரந்து வழிபவை. பூஞ்சிறகுகளாய் புளகாங்கிப்பவை என்கிறது வெள்ளாப்பு வெளி வெளியீட்டகம்.


ஈழக்கவி நவாஸ் ஏ. ஹமீட் அவர்கள் நூலின் சிறப்பம்சம் பற்றி இவ்வாறு குறிப்பிட்டிருக்கின்றார். சிறுவர் இலக்கியங்களைப் படைப்போர் குழந்தைக்கல்வி, குழந்தை உளவியல், குழந்தைகளுக்குரிய கற்பித்தலியல், சிறுவர் அழகியல், சிறுர்களுக்கான மொழி, ஓசை, பாடுபொருள் முதலிய பல்வேறு துறைகளிலும் அறிவு மிக்கவர்களாயிருத்தல் இத்தகைய உயிர் துடிப்புமிக்க பாடல்களை எழுதியிருக்கிறார்.

திரு. ரபீக் அவர்கள் ஆரம்பப் பிரவுக்கான ஆசிரியப் பயிற்சியையும் பட்டப்பின் படிப்பின் மூலமாக உளவியலையும் அறியப் பெறறிருப்பவர் ஆரம்ப, உயர்தர வகுப்புக்களுக்கு கற்பித்த ஆசிரியர் ரபீக் அவர்கள் தற்போது வெளிமடை வலயக் கல்விக் காரியாலயத்தில் ஆசிரிய ஆலோசகராக கடமையாற்றுகிறார்,

அம்மா என்ற முதல் பாடலானது அகர வரிசைப்படி எழுதப்பட்டிருக்கின்றது. தாயினதும், இரண்டு பிள்ளைகளினதும் வர்ணப்படமும் இக்கவிதைக்காக சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. அதன் சில வரிகள் இதோ..

அம்மா எங்கள் அம்மா
ஆசையான அம்மா
இனிமையான அம்மா
ஈகை வழங்கும் அம்மா

உணவு சமைக்கும் அம்மா
ஊஞ்சல் ஆட்டும் அம்மா
எனக்கு விருப்பம் அம்மா
ஏற்றம் காட்டும் அம்மா...

தங்கை என்ற பாடல் இனிமையாகவும், ஓசை நயம் மிக்கதாகவும் காணப்படுகின்றது. நிலவைப் பற்றியும் பாடலினூடாக கூறும் கவிஞர் சிறுவர்கள் விரும்பும் பாடலாக இதை புனைந்திருக்கிறார் என்றால் மிகையில்லை.

தங்க நிலவு வானிலே
தவழும் அழகைக் காணவே
தங்கை வந்து நிற்கிறாள் - கையைத்
தட்டித் தட்டிச் சிரிக்கிறாள்!

அங்கும் இங்கும் பார்க்கிறாள் - அந்த
அழகிய நிலவைக் கேட்கிறாள்
மங்கல் வானைப் பார்க்கிறாள் - நிலவு
மறைவதெப்படி? கேட்கிறாள்..

துயில் கொண்டிருக்கும் தன் குட்டித் தம்பியை ஒரு சிறுமி பள்ளிக்கூடம் போவதற்காக எழுப்புகிறாள். அந்த விடயத்தை பாடல் மூலம் தந்திருக்கிறார் கவிஞர். சிறுவன் கட்டிலில் தூங்குவது போன்றும், அவனருகே ஒரு சிறுமியும், கடிகாரமும் சித்திரத்தில் காணப்படுகின்றன. தம்பியை எழுப்பும் அந்தக் காட்சி சித்திரமாக்கப்பட்டிருக்கின்றமை சிறுவர்களை கவர்ந்துகொள்ளும்.

சோம்பல் நீயும் கொள்ளாதே
சோர்ந்து நீயும் தூங்காதே
வீம்பு நீயும் கொள்ளாதே
விரைவாய் தம்பி எழுந்திடுவாய்

பள்ளி செல்ல வேண்டுமே
பாடம் படிக்க வேண்டுமே
துள்ளி நீயும் எழுந்திடுவாய்
தூக்கம் வேண்டாம் எழுந்திடுவாய்!

முத்துப் பற்கள் என்ற தலைப்பில் சிறிய பாடல் ஒன்று எழுதப்பட்டிருக்கிறது. எட்டு வரிகளைக் கொண்ட இந்தப் பாடல் பற்களை பாதுக்காக்க வேண்டும் என்ற தொனியில் எழுதப்பட்டுள்ளது.

கண்ட கண்ட பொருளை பல்லால்
கடிக்கும் பழக்கம் தவிர்திடுவோம்
உண்ட பின்னே உறங்கும் முன்னே
ஒழுங்காய் பல்லைத் துலக்கிடுவோம்

வெட்டும் பற்கள் வேட்டைப் பற்கள்
வேண்டும் நமக்கு நாளுமே
முத்துப் பற்கள் நன்றாய் காத்து
மகிழ்ச்சி காண்போம் வாழ்விலே!

மாலைக்காட்சி, அணில் குஞ்சு, மரம் நடுவோம், பச்சைக்கிளி என்ற தலைப்புக்களிலும் அழகிய கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. சிறுவர்களின் வாசிப்பு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் இவ்வாறான பல நூல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வெளிமடை ரபீக் அவர்களின் பூஞ்சிறகுகுள் என்ற நூலும் தனக்கான தனியிடத்தைப் பெற்று நிற்கின்றது.

குழந்தைகளுக்கு எது நல்லது என்பதை பெற்றோரும், வளர்ந்தவர்களும் நன்கறிவார்கள். இன்றைய இளஞ் சமூகம தனது ஓய்வு நேரங்களை தொழில்நுட்ப வளர்ச்சிக் கருவிகளுடன் கழிக்கின்றது. ஆனால் அதன் பாரதூரங்களை அவர்கள் அறியமாட்டார்கள். நாம்தான் சிறுவர்களுக்கு உகந்தவற்றை கற்றுக்கொடுக்க வேண்டும். அந்த வகையில் நூல்கள் அறிவுக்குத் தீனியாகவும், நல்ல விடங்களைக் கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் திகழ்கின்றன. எனவே பெற்றோர்களே உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தில் சிறந்தவர்களாக மிளிர வேண்டுமானால் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை கற்றக்கொடுங்கள். நூலாசரியருக்கு எமது வாழ்த்துக்கள்!!

நூலின் பெயர் - பூஞ்சிறகுகள் (சிறுவர் பாடல்)
நூலாசிரியர் - வெளிமடை ரபீக்
தொலைபேசி - 077 9790053
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை - 150 ரூபாய்

சின்னச் சிட்டுக் குருவி - சிறுவர் பாடல்

சின்னச் சிட்டுக் குருவி சிறுவர் பாடல் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

சின்னச் சிட்டுக் குருவி என்ற சிறுவர் பாடல் தொகுதியினூடாக இலக்கிய உலகத்துக்கு அறிமுகமாகிறார் திருமதி. சுகிலா ஞானராசா அவர்கள். இவர் எழுத்தாளர் திருகோணமலை செ. ஞானராசா அவர்களின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்ககது.

தி/செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றும் இவரிடம் இயல்பாகவே சிறார்களுக்கு பாடல் புனையும் திறமை இருந்திருப்பதை இந்த நூல் கட்டியம் கூறுகிறது.

சர்வீனா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 41 பக்கங்களில் அமைந்த இத்தொகுதி, கல்வி அமைச்சின் இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன் 17 பாடல்களையும், அவற்றுக்கேற்ற வர்ணப் படங்களையும் அழகாக தன்னகததே கொண்டிருக்கிறது.




சிட்டுக் குருவியே என்ற பாடல் ஓசை நயம் மிக்கதாகவும், ரசிக்கத்தக்கதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

பஞ்சு மெத்தை மேனி
பார்த்தெடுப்பாய் தீனி
அஞ்சு விரல் தொட்டுக்கொள்ள
ஆசைப்படும் தேன் நீ!

மொட்டு விடும் மலரில்
மொய்த்து வரும்போது
கிட்ட நான் வரவும்
கிளம்பி ஏன் பறப்பாய்?

வாசித்தல் மனிதனை பூரணமாக்கும். நூலகம் வாசிப்பிற்கான பொதுத்தளம். இன்றைய சமுதாயத்தில் வாசிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது. பாடசாலைகளிலும் நூலகங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்கள் தவிர ஆசிரியர்களும் வாசிப்பையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் அறிய வேண்டும். அதற்காக நூலகம் என்று தலைப்பிட்ட கீழுள்ள பாடல் பேருதவியாய் அமைகிறது. அதன் அடிகள் இவ்வாறு

நூலகம் நாம் சென்று
நூல் பல கற்று
பாலகப் பருவம் இதை
பயனுளதாக்குவோம்

இரண்டடி எனும் குறள்
இதனுடன் நாலடியார்
தர மெனும் பெருங் காப்பியம்
தகும் எனக் கண்டவை

இயற்கை என்ற பாடல் ரம்மியமாக மனதை வருடுகிறது. அதற்காக இணைக்கப்பட்டுள்ள படமும் மனதில் பதிந்துவிடுகிறது. வானம், கடல், காடு, நிலம் எல்லாமே இயற்கை அழகுக்காக உவமிக்கப்படுபவை. நூலாசிரியரின் வரிகள் இவ்வாறு விரிகிறது..

இயற்கை தந்த செல்வம்
இறைவன் தந்த இன்பம்
வியக்கும்படி இருக்கும்
விதத்தை அறிய இனிக்கும்

மயக்கம் மாலைப் பொழுதில்
மஞ்சல் வெயில் போட்டு
தயக்கம் இல்லாதிருக்க
தக தக வென ஒளிரும்

காலை எழுந்தவுடன் படிப்பு.. பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.. மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா.. என்று கூறியிருக்கிறார் பாரதி. படிப்பைப் போல விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்கும் அவசியத்தை இந்த வரிகள் சுட்டி நிற்கின்றன. திருமதி சுகிலாவும் விளையாடுவோம் என்ற மகுடத்தில் பாடலை பின்வருமாறு இயற்றியிருக்கிறார்.

குந்தி இருந்து நொந்து
குழம்பி போனோம் என்றால்
எந்தப் பயனும் இல்லை
எமக்கு ஏற்றது அல்ல

ஓடி ஆடி விளையாட
ஓடும் குருதி சீராகும்
கூடி மகிழக் குறையும்
குழப்பமான மன நிலையும்

கணிதப் பாடத்தைப் போல் இலேசான பாடமில்லை என்றும், அதைப்போல கஷ்டமான பாடம் இல்லை என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். எது எப்படியிருப்பினும் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டால் கணிதம் சுலபமாக அமையும். ஆனால் பலர் அப்படியின்றி ஷகாப்பியடித்து| விடுகின்றனர். நூலாசிரியரின் நயக்கத்தக்கதாக எழுதியிருக்கும் விதம் இவ்வாறு அமைகிறது.

சாட்டுக்காக பார்த்துச் செய்து
சரி வாங்கிக் கொண்டால்
வீட்டு வேலை தந்தபோது
விரைவில் மாட்டிக்கொள்வீர்

நாளும் பயிற்சி செய்து வர
நன்கு கணக்கு அறிவு
நீளும் இதனை உணர்ந்து
நீரும் பயிற்றி எடுப்பீர்

தனது முதல் தொகுதி என்றாலும் மிக அழகியதாகவும், பாடத்திட்டத்துக்கு பொருந்தியதாகவும் பாடல்களை எழுதியிருக்கிறார் திருமதி சுகிலா அவர்கள். சிறுவர்கள் மாத்திரமின்றி புத்தகத்தை படிப்பவர்களும் பாடல்களால் கவரப்படுவார்கள். இன்னும் பல நூல்களைத் தர வேண்டும் என நூலாசிரியரை வாழ்த்துகிறேன்!!!

பெயர் - சின்னச் சிட்டுக் குருவி (சிறுவர் கவிதைகள்)
நூலாசிரியர் - சுகிலா ஞானராசா
முகவரி - 993, அன்புவழிபுரம், திருகோணமலை.
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 200/=

Tuesday, February 28, 2012

அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

அவாவுறும் நிலம் கவிதைத் தொகுதி மீதான ஒரு பார்வை

முல்லை முஸ்ரிபா என்ற தனித்துவக் கவிஞரின் இரண்டாவது தொகுதியாக அவாவுறும் நிலம் எனும் தொகுதி வெளிவந்திருக்கிறது. 2003 இல் தேசிய, மாகாண சாகித்திய விருதுகளைப் பெற்ற இவரது முதல் கவிதை நூல் இருத்தலுக்கான அழைப்பு என்பதாகும். அதனைத் தொடந்து தனது இரண்டாவது நூலை 103 பக்கங்களில் வெள்ளாப்பு வெளியினூடாக வெளிக் கொணர்ந்திருக்கின்றார்.


மொழித்துறை விரிவுரையாளராக, முதன்மை ஆசிரியராக, இலங்கை வானொலியின் ஒலிபரப்பாளராக தனது பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் இக்கவிஞரின் முதல் தொகுதியிலுள்ள மீதம் என்ற கவிதை க.பொ.த சாதாரணதர தமிழ்ப் பாடப் புத்தகத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பது இவரது ஆளுமையை வெளிக்காட்டுவதாய் அமைந்திருக்கின்றது.


அவாவுறும் நிலம் என்ற தொகுப்பில் உள்ள கவிதைகள் துயர் சுமந்த பாடல்களையும், வாழ்வியல் குறித்த விடயங்களையும் உள்ளடக்கியிருக்கின்றன. புதுப்புது வீச்சான சொற்கள் கவிதையை வாசிக்கும் ஆவலைத் தூண்டி நிற்கின்றன.

முதல் கவிதையான நரம்பு சுண்டிய யாழ் எனும் கவிதை கையேந்தித் திரியும் ஓர் பிச்சைக்காரன் பற்றியது. பிச்சைக்காரர்களைக் கண்டால் காணாதது போல் தலை திருப்பிச் செல்லும் வழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. எல்லோரிடமும் தனது பசியைக் கூறி கை நீட்டும் பழக்கம் பிச்சைக்காரனுக்கும் இருக்கிறது. எனினும் ஓரிருவரைத் தவிர யாரும் அவனை மனிதனாகப் பார்ப்பதில்லை என்பதே கண்கூடு.

பசியை இசையாய் நீ இறக்கிய
வெய்யிற் பொழுதில்
அத்தனைச் சோடிக் காதுகளாலும்
முழுச் செவிடாய்
உன்னைக் கடக்கும்
பெரும் வீதி

தன் மகனைக் கடத்திச் சென்ற சோகம் தாளாமல் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்ட ஒரு தாய்க்கான பாடலாக ஹயாத்தும்மா என்ற கவிதை இருக்கிறது. கீழுள்ள வரிகள் மூலமாக அந்தத் தாயின் துயர் நிரம்பிய இதயத்தை தரிசிக்க முடிகிறது.

நீ நெய்த கனவுகள்
நெய்தல் அலைகளில் கரைந்து அழிகையில்
உன்னால் எய்த முடிந்தது
மரணம் மட்டுமாயிற்று

மனிதர்கள் தனக்குக் கிடைத்தவற்றையிட்டு ஒருபோதும் திருப்தியுறுவதில்லை. எதைப் பெற்றாலும் அதைவிட சிறந்ததைப் பெறுவதற்கே மனம் அலைவதுண்டு. அதை கருத்தாகக்கொண்டு முரண் வாழ்வு என்ற கவிதை பிறந்திருக்கிறது. அழகிய உவமானமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கவிதை, மனித நிலை பற்றி விளக்குவதாக இருக்கின்றது.

குளத்து மீனுக்கு
தூண்டிலும் வலையுமான
அடக்கு முறைக்குள் சிக்காது
கண்ணாடிப் பளிங்குத் தொட்டியில்
வாழும் விருப்பம்

தொட்டி மீனுக்கோ
இன்னது இன்னதென்று எழுதிய
செயற்கை இருப்பின்
சொகுசுச் சிறைக்குள்ளிருந்து விடுபட்டு
குளத்தில் நீந்தவே ஆசை

என் வீட்டு மழை என்ற கவிதை ரசிக்கத்தக்கதாகும். மழைக் காலத்தில் நனையாமல் இருந்த எமது சிறுவயதுப் பொழுதுகள் அபூர்வமாகத்தான் இருக்க முடியும். அந்த அழகிய நாட்களை மனக் கண்முன் கொண்டு வந்து நிறுத்துவதாக இக்கவிதை அமைந்திருக்கிறது. கவிதையின் கடைசி வரிகள் யதார்த்த வாழ்வை சுட்டிக்காட்டுவதாயும் இருக்கிறது.

பழைய வீட்டுக் கொப்பி
விதவிதமாய் கப்பலாகும்
என் கப்பல்கள் கரையேறுவதெப்படி
நான்கு குமர்களோடு உம்மா இருப்பாள்

முல்லை முஸ்ரிபா அவர்கள் ஆசிரியராக இருப்பதினால் மாணவர்களின் சுமைகள் பற்றி உளப்பூர்வமாக உணர்ந்து வைத்திருக்கின்றார். பிள்ளைகளை படி என்று சொல்கின்றோம். ஆனால் அவர்களுக்கு பொருத்தமான துறையில் படிப்பதற்கான அனுமதி மறுக்கப்படுகின்றது. வைத்தியர், பொறியிலாளர் என்ற வரையறைக்குள் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு வலுக்காட்டாயமாக திணிக்கப்படுகிறது. விளைவு, சிலர் ஜெயிக்கிறார்கள். மற்றவர்கள்? கல் தெப்பம் என்ற கவிதையில் ஒரு மாணவனின் மேற்சொன்ன துயரங்கள் கீழுள்ள வரிகளாக...

இதயத்தை தோண்டியெடுத்துவிட்டு
அதனிடத்தில்
ஏதோவொன்றைத் திணிக்கிறீர்கள்
எனதான இலக்குகளை வரையவும்
இலக்கு நோக்கி பறக்கவும் முடியாதபடி
இறக்கைகளைப் பறிக்கிறீர்கள்

எத்தனைப் பிரச்சினைகள் மனதை வாட்டிய போதிலும் மழலையின் மொழி கேட்டால் அவை தூரமாகிவிடும். பெண் என்பவள் போற்றப்படுவதற்குரிய காரணங்களில் ஒன்றாக தாய்மையும் குறிப்பிடப்படுவது இதனால்தான். பெற்றோர்களுக்கு இறைவன் கொடுத்த பரிசு பிள்ளைகள் என்கிறோம். அத்தகைய குழந்தைச் செல்வங்களைப் பற்றியதாக நிலவு துளிர்த்து அமாவாசை கருகி என்ற கவிதை காணப்படுகிறது.

செல்லமே நீ காலுதைக்கவும்
மென்பூச் சிரிப்புதிர்க்கவுமான
வினாடிகளில் மனசு மீளவும்
எல்லையில்லாப் பெருவெளியாய்
விரிகிறது

உள் முகங்கள் என்ற கவிதை தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் நிதர்சனத்தை சொல்லி நிற்கின்றதை அவதானிக்கலாம். மாலை அயர்வில் தேனீர் சுவையாக இருக்கின்றது. சோர்வும் பறக்கின்றது. எனினும் தேயிலைத் தோட்டத்தில் உச்சி வெயில் கொடுமையில் பறிக்கப்பட்ட தேயிலையின் வாசம் தொண்டை வழியால் உள்ளிறங்குகிறது. மீண்டும் முகத்தில் அயர்வின் சாயல் படர்கின்றது என்கிறார் நூலாசிரியர்.

சாறாய்ப் பிழிந்த
உழைப்பின் சக்கை
துயராய்க் கசிகிறது
என் கோப்பைக்குள் இறங்குகிறது
வாழ்தலின் யதார்த்தம்

வவுனியா அகதி முகாமில் வசிக்கும் மக்களுக்காக எழுதப்பட்ட கவிதை இருள்வெளியும் நாளைய சூரியனும். யுத்தம் விட்டுப்போன எச்சங்களாக வாழ்ந்துகொண்டே மரணத்தை அனுபவிக்கும் அந்த மக்களுக்காக தனது துயரை பதிவு செய்திருக்கிறார் முல்லை முஸ்ரிபா அவர்கள். இருளிடம் கையேந்திப் பயனில்லை. சூரியனும் கருகிற்று. காற்றும் அசுத்தமாகிக் கிடக்கின்றது என்றவாறு புறச் சூழலை விபரித்து, இந்த வரிகளின் வழியே அங்குள்ள மக்களின் துயரை துல்லியமாகக் கூறுகின்றார்.

படர்வுறும் முட்கம்பிச் செடி
கிளைப்பதில்லை துளிர்ப்பதில்லை
காய்ப்பதில்லை கனிவதுமில்லையெனின்
குயிலாய்க் கூவித் தோப்பாகும்
கனவுகளுமற்றுப் போக
குரல் கிழிந்து தொங்குகிறது
முட்கம்பி வேலிகளில்

எனது தமிழ்ப்பாட ஆசானாக விளங்கிய இக்கவிஞரின் தொகுதிக்கு எனது குறிப்பை எழுதுவதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன். எனது இலக்கியத்தேடல் பற்றி சொன்னபோது, அந்த ஆவலை தன் எழுத்துக்கள் மூலமும், உற்சாக வழிகாட்டுதல் மூலமும் எனக்குத் தந்த நூலாசிரியர் முல்லை முஸ்ரிபா அவர்களுக்கு இதனூடாக நன்றி நவில்தலை மேற்கொள்வது எனது கடமையாகிறது. நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - அவாவுறும் நிலம் (கவிதைகள்)
நூலாசிரியர் - முல்லை முஸ்ரிபா
வெளியீடு - வெள்ளாப்பு வெளி
விலை - 200 ரூபாய்

தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்

தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்

திருமதி சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற கவிதைத்தொகுதி இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக 93 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்ற வரலாற்று நாயகனின் இளைய புதல்வியான சுமதி அவர்கள் தனது கவிதைகளுக்கூடாக சமூகம் பற்றி இருப்பு நிலையை வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.



சகலவிதமான ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக குரல்கொடுத்து மக்களை சரியான திசையில் வழிநடாத்தக்கூடிய இலங்கையின் முற்போக்குக் கவிஞர்களின் வரிசையில் திருமதி. சுமதி அவர்களும் ஒருவராக இணைந்துள்ளார் என்று பதிப்புரையில் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோல் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தனதுரையில் சாதாரண பேச்சிலிருந்து இவரது கவிதைகள் புனித நெறியைக் காட்டுகின்றன. சிறப்பான எடுத்துக்காட்டாக இதனைச் சொல்லாம். நெருக்கடியான நேரங்களிலும், சோதனை தரும் வேளைகளிலும் இவரது கவிதைகள் நுட்பங்கள் நிறைந்து வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருமதி சுமதி அவர்கள் ஓர் ஆசிரியையாக கடமையாற்றியதால் மாணவர்களோடு ஒன்றுபட்டு அவர்களது அகநிலை சார்ந்த பிரச்சனைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் எவ்வாறான முறையில் உதவலாம் என்று நன்கறிந்திருப்பவர். ஆதலால் தளிர்களின் சுமைகள் என்று மாணவர்களுக்காக எழுதப்பட்ட கவிதையின் தலைப்பையே புத்தகத்தினதும் மகுட தலைப்பாக்கியிருக்கிறார். அதுபோல நாட்டில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கின்றார் நூலாசரிரியர்.

மாணவம் என்ற கவிதையில்

ஏணிப்படிகள் என
எண்ணிக் கால்வைக்க
உக்கி உருக்குலைந்து
சிதிலங்களாய்ப் போனதில்
இன்னும் இருண்டு கிடக்கின்றேன்
பள்ளிச் சிறைக்குள் (பக்கம் 21)

என்ற கவிதையானது குறிப்பிட்டதொரு விடயத்தை அடைய நினைத்து அதில் ஏமாற்றமடைந்தவர்களின் நிலையை சித்தரிக்கிறது எனலாம். வாழ்க்கையில் எல்லோரும் எத்தனையோ இலட்சியங்களைக் கொண்டிருக்கிறோம். அவற்றில் எல்லாமே ஈடேறுவதில்லை. அத்தகையதொரு மனத்தாக்கதின் வெளிப்பாடாக ஒரு மாணவனின் பார்வையினூடாக இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

காதல் என்பது பள்ளிக் காலத்திலும் வரலாம். பருவக்காலத்திலும் ஏற்படலாம். ஆனால் பள்ளிக்காலத்தில் வரும் காதல் வெறும் இனக்கவர்ச்சியாக மாத்திரமே இருக்க முடியும். பக்குவப்படாத மனதில் காதல் விதைகளை விதைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இன்று வந்தாகிவிட்டன. ஆனால் அனைவரும் பேதமின்றி அவற்றைப் பாவிக்கின்றனர். இத்தகைய வழிமுறைகளினால் மாணவர்கள் சின்னாபின்னமாக்கப்படுகின்றார்கள் என்பது மெய்யான விடயம். அவர்களிடம் காதல் தப்பு என்று சொல்லலாம். எனினும். அத்தகைய சூழலை பிள்ளைகளுககு ஏற்படுத்திக் கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்று பெற்றோர்களுக்குச் சொல்வது யார்? அவ்வாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுமானால் மாணவச் சமூகத்தை சிறந்த எதிர்காலத்தின் பிரதிநிதிகளாக மாற்ற வழிவகைகள் ஏற்படும். இது பாதுகாப்பு என்ற இந்தக் கவிதையில் இவ்வாறு வருகிறது.

பருவ வயதில் காதல் பாழ்
பெற்றோர்களும் பாதுகாவலர்களும்
சொல்கிறார்கள் தம்
அறிவு முதிராத குழந்தைகளிடம்
இவர்களிடம் சொல்பவர் யார்
ஆதலினால் அவர்களை
அச்சூழலினின்று
பாதுகாருங்கள் என்று (பக்கம் 34)

சமத்துவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறானதொரு சமத்துவம் வீட்டில் நிலவாதவிடத்து குடும்பங்களுக்குள் சச்சரவுகள் தலை நீட்டிப் பார்க்கின்றன. வெளியிடங்களில் பிரச்சனை என்றால் வீட்டுக்குள் போய் ஒதுங்கியிருக்கலாம். வீட்டிலேயே பிரச்சினை என்றால் யாரிடம் சொல்லியழுவது? ஆட்சி என்ற கவிதை இவ்வாறு

பிழையான ஆட்சி
நாட்டிலே நடந்தால்
வீட்டிற்குள்ளே
பூட்டிக்கிடக்கலாம்
அதுவே வீட்டிலும் என்றால்? (பக்கம் 35)

தளிர்களின் சுமைகள் என்ற கவிதை மாணவர்களின் பிரச்சினையாக உருவகித்திருக்கின்றது. பள்ளி செல்கையில் புத்தகச்சுமை. வகுப்பில் பாடங்களின் சுமை. வீட்டுப்பாடங்களை செய்யாதவிடத்தோ அல்லது ஏதாவது நிகழ்வில் தண்டனைச் சுமை. பிறகு மாலை வகுப்புச் சுமைகள் இப்படியே கழிந்து வீட்டிற்கு வந்தவுடன்

வீடு வந்து சேர்கையிலே
பெற்றோர் தம் எதிர்பார்ப்பு (கள்)
அத்தனையும் பெருஞ்சுமையாய்
மீண்டும் நாளை காலை
பள்ளி செல்கையில்.... (பக்கம் 37)

என்றவாறு கவிதை முடிகிறது. இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக இளங்குருத்துக்கள் படும்பாடு நன்கறிந்ததே. காலையில் சாப்பிட்டும், சாப்பிடாமலும் பாடசாலைக்கு ஓடுகின்றார்கள். பாடசாலை முடிந்து அரக்கப்பறக்க சாப்பிட்டுவிட்டு மாலை வகுப்பு. மாலையில் வீடு வந்து எட்டு மணி வரை இன்னொரு வகுப்பு என்றே அவர்களது காலம் கழிகிறது. பிரச்சினை என்னவென்றால் அவ்வாறு கஷ்டப்பட்டு படித்து பரீட்சையில் தற்செயலாக சித்தியடையாவிட்டால் அவர்கள் உள்ளத்தால் அழுகின்ற வலி வார்த்தைகளில் உள்ளடக்க முடியாது. இந்தளவுக்கு மாணவர்கள் சுமைகளைத் தாங்குகின்றார்கள். அத்தகைய சுமைகளைத்தான் நூலாசிரியர் தனது கவிதையில் மிகச் சுருக்கமாகவும், ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாகவும் தந்திருக்கின்றார்.

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பிரம்படி கொடுக்கப்படுவதுடன் முழங்காலில் உட்கார வைத்தல் என்ற தண்டனையும் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான தண்டனைகள் எவ்வாறிருக்கும் என்பது அனுபவப்பட்ட மாணவ உள்ளங்களிடம் விசாரித்தால் அறியலாம். முழங்காலில் நிற்க வைத்தல் என்ற தண்டனை குறைவானது என்ற எண்ணத்தை ஆசிரியத்தோழி மாற்றினார் என்று தண்டனை என்ற கவிதையில் கூறப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வாறு மாற்றினார் என்ற கேள்விக்கு கவிதையிலேயே இவ்வாறு பதிலிருக்கின்றதைக் காணலாம்.

ஏழைகளின்
உழைப்புக்காய்
இருக்கும் ஒரே
மூலதனம் உடல்தான்
அதை நாம்
நாசம் பண்ணாமல்
அப்படியே விட்டுவிடுவோம் (பக்கம் 41 - 42)

பெற்றோர்களின் வளர்ப்பு சரியாக இருந்தால் பிள்ளைகள் சரியாகத்தான் வளருவார்கள். பெற்றோர்களின் கண்காணிப்பும், கண்டிப்பும் இல்லாதவிடத்து பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக வளர்ந்து இறுதியில் பெற்ற தாய் தந்தையரைக்கூட மதிக்கமாட்டார்கள். அதை வளர்ப்பு என்ற கவிதை நிதர்சனமாக்கி நிற்கிறது.

பிஞ்சுகள் ஆவதும்
நம்மாலே
அவை நஞ்சுகள்
ஆவதும் நம்மாலோ (பக்கம் 64)

நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் கவிதைகள் அற்புதமானவை. அனைவரும் வாசிக்க வேண்டியவை. திருமதி. சுமதி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தளிர்களின் சுமைகள் (கவிதைகள்)
நூலாசரியர் - திருமதி. சுமதி குகதாசன்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
விலை - 350 ரூபாய்

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

யதார்த்த வாழ்வியலை சித்திரித்து நிற்கும் முதுசம்

முதுசம் என்ற சிறுகதைத் தொகுதியை பிரபல விமர்சகரும் எழுத்தாளருமான திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா) அவர்கள் அண்மையில் வெளியிட்டிருக்கிறார். சேமமடு பதிப்பகத்தின் வெளியீடாக வெளியிடப்பட்டிருக்கும் இத்தொகுதி 154 பக்கங்களைக் கொண்டு அமைந்திருக்கிறது. 19 சிறுகதைகளை உள்ளடக்கியதாக வெளிவந்திருக்கும் இத்தொகுதி மானிடத்தின் மேம்பாட்டுக்காய் உழைத்த உன்னதமானவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. திரு. தம்பு சிவா அவர்கள் கற்பகம் எனும் கலை இலக்கிய சஞ்சிகை மூலம் ஈழத்து இலக்கிய உலகத்துக்கு அறிமுகமானவர். சிறுகதை, கட்டுரை, பத்தி எழுத்து, விமர்சனம் போன்ற துறைகளில் தனது எழுத்தாளுமையை வெளிப்படுத்தி வருகின்றார்.

திருகோணமலை பிரதேச சாகித்திய விருது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருது, நாமக்கல் கு. சின்னப்ப பாரதி அறக்கட்டளை இலக்கிய pவிருது, லண்டன் இணுவில் ஒன்றியத்தின் தமிழ்த்தென்றல் விருது உட்பட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்றவர். இவர் ஏற்கனவே சொந்தங்கள், முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற இரு தொகுதிகளை வெளியிட்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



தனது படைப்புக்கள் எல்லா மட்டத்தில் உள்ளோரையும் சென்றடைய வேண்டும் என்ற நன்நோக்கத்தில் இலகுவான மொழிநடையைப் பிரயோகித்திருக்கிறார். உலகம் இன்று மிகவும் பயங்கரமானதாக மாறியிருக்கிறது. நல்லவர் யார், கெட்டவர் யார் என்று அறிய முடியாதளவுக்கு மனிதர்கள் முகமூடியை அணிந்து எம்மத்தயில் உலா வருகின்றனர். இத்தொகுதியிலுள்ள சிறுகதைகள் மூலம் திரு. தம்புசிவா அவர்கள் அத்தகைய மனிதர்களின் மூகமூடிகளைக் கிழித்தெறிகிறார்.

வாழ்வியலின் யதார்த்தமான நிலைப்பாடுகளை இத்தொகுதியிலுள்ள கதைகள் எடுத்தியம்புகின்றன. வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்பவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள், ஆணாதிக்கத்தினரின் குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப சீரழிவுகள், முறைகேடான தொடர்புகளால் ஏற்படும் சமூக நோய்கள் என்பவற்றுடன் காதலை சொல்லும் சிறுகதைகளும் இத்தொகுதியில் இடம்பெற்றிருக்கின்றன.

வாழ்க்கையின் வேதனைகளால் என்ற சிறுகதையானது வெளிநாட்டுப் பணிப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை சொல்கின்றது. ஏமாற்றப்பட்ட வேதனைகளில் துடிக்கும் மூவினத்தையும் சேர்ந்த அபலைப் பெண்கள் ஆழுதுகொண்டிருக்கின்றனர். அப்போது அந்தக் கூட்டத்தில் இருக்கும் கமலா என்ற பெண்ணை ஒருவன் அடையாளம் காண்கிறான். அவன் கமலாவின் முன்னைய காதலன் முகுந்தன். அவன் அவளை அழைத்துச் சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறான். முகுந்தன் தற்பேர்து ஒரு விதவைப் பெண்ணுக்கு வாழ்வளித்திருப்பதாக அறிகிறாள் கமலா. 1990ல் நேவிக்காரர்கள் தமிழர்களுக்கெதிராக நடாத்திய யுத்தத்தில் தன் குடும்பத்தினரை இழந்து, கணவனின் குடிகார புத்தியினால் அவன் இன்னொருத்தியுடன் சென்றுவிட தனிமரமாக இருக்கின்றாள் கமலா.

அச்சந்தர்ப்பத்தில் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி வெளிநாட்டுக்கு பயணமானவள்தான் கமலா. எனினும் ஏஜன்சியில் தங்க வைத்து அங்கு வரும் வியாபாரியினால் அவள் பெண்மையை இழக்கிறாள். வெளிநாடு சென்றாலும் அந்த வீட்டு எஜமானும் அவளை பலாத்காரம் பண்ணுகிறான். வீட்டு எஜமானியோ வேலை வாங்குவதில் வல்லவள். சம்பளத்தைக் கொடுக்காமல் நித்தமும் சித்திரவதை செய்வாள். ஒருவாறு இலங்கைத் தூதுவராலயத்தில் தஞ்சமடைகிறாள். சில தினங்கள் கழிந்து தற்போது முகுந்தனுடன் அவனது வீட்டுக்கு பயணமாகிறாள். அங்கு முகுந்தனின் மனைவி இவள்தான் கமலா என்று அறியாதபோதும் அன்பாக அவளை வரவேற்று உபசரித்த பின் முகுந்தனைப் பற்றி இவ்வாறு சொல்கிறாள். 'எங்களுக்குள் எந்த உறவும் இல்லை. இவர், தான் விரும்பிய கமலா என்ற பெண் கிடைக்கவில்லை என்ற வேதனையில் தனக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொண்டார்'. இந்த வார்த்தைகள் அவன் கமலா மீதுகொண்ட புனித காதலை சித்தரிக்கின்றன.

இன்று சொத்து சுகங்களுக்காக பெற்றவர்களையும், சகோதரர்களையும் பகைத்து அடிதடிகளில் இறங்கி சீரழிந்த குடும்பங்கள் பல காணப்படுகின்றன. அதற்கான முக்கிய காரணம் பேராசை. முதுசம் என்ற இந்தக் கதையும் பேராசைப் பிடித்து அலையும் ஒரு தகப்பனைப் பற்றி இயம்பியுள்ளது. தனது சகோதரியை ஏமாற்றி அவளது காணியை சொந்தமாக்குகின்றார் முருகேசு. தனது இரு பெண் பிள்ளைகளையும் முதுசம் உள்ளவனுக்குத்தான் கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் வாழ்ந்து வருகின்றார். இப்படியிருக்க முருகேசுவின் மூத்த மகள் அவரது சகோதரியின் மகனான செல்வம் என்பவனை திருமணம் முடிக்கிறாள். இரண்டாவது மகளுக்கத்தானும் முதுசக்கார மாப்பிள்ளை கிடைக்கும் என்ற நினைப்பு முருகேசருக்கு. இறுதியில் இளையவளும் கராஜ் வைத்திருக்கும் ஒருவனுக்கு வாழ்க்கைப்படுகின்றாள். முதுசத்தினால் பிள்ளைகளை இழந்து நிற்பவரின் கதைதான் இது.

வாழ வைத்த தெய்வம் என்ற கதை தாயன்பை வெளிப்படுத்தி நிற்கின்றது. கற்பகம் என்ற அந்தத் தாய் சிறுவயது முதலே மிகவும் கஷ்டங்களை அனுபவித்தவள். அவளது சிற்றன்னை ஆரம்பத்தில் கற்பகத்துடன் அன்பாக இருந்தாலும் அவளுக்கென்று பிள்ளைகள் பிறந்த பிறகு வேறுபாட்டை காட்டத் துவங்கினாள். அந்த துன்பங்களை சகிக்க முடியாமல் கற்பகத்தின் தாய்மாமன் அவளை அழைத்துவந்து தனது வீட்டில் இருக்க வைத்தார். அதை அவரது மனைவி விரும்பாததால் கற்பகம் அன்பு இலத்தில் சேர்க்கப்பட்டாள். அவள் வளர்ந்து பெரியவளானதும் கணேசு என்பவன் அவளை திருமணம் முடித்தான். அந்த குடிகார கணவனுடன் மிகவும் வறுiமைப்பாட்டுக்குள் தன் ஜீவிதத்தை கடத்தினாள் கற்பகம். அவரும் இறந்து போக, கஷ்டப்பட்டு உழைத்து தனது மகன் அற்புதனை படிப்பித்து பட்டதாரியாக்கிவிட்டாள் அவள்.

அற்புதனின் மனைவி சுமதி. அவளது சகோதரர்கள் வெளிநாட்டில் நல்ல வசதியுடன் இருப்பதால் தாங்களும் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நச்சரிப்பை கொடுத்த வண்ணமிருக்கிறாள். மனமுடைந்துபோன அவன் அம்மாவான கற்பகத்தை தனியே விட்டுவிட்டு எவ்வாறு போவது என்று சிந்திக்கிறான். கற்பகத்துக்கும் தன் மகனை விட்டுப் பிரிந்திருக்க முடியாது. ஆனாலும் மருமகளுடைய பிடிவாதத்தைக் கண்டு அவனை அவளுடன் போகும்படி சொல்கிறாள் தாய். அதனால் கோபப்பட்ட அற்புதன் தாயிடம் 'அம்மா அவள் விசரி. வெளிநாட்டு மோகத்தில் கத்துகிறாள். நீங்கள் பேசாமல் இருங்கோ. நான் உங்களை தனியவிட்டு ஒரு இடமும் போகமாட்டன். தயவு செய்து என்னை தொந்தரவு செய்யாதேங்கோ' என்கிறான்.

இறுதியில் அம்மா வற்புறுத்தவே மனமில்லாமல் மனைவியுடன் புறப்பட ஆயத்தமகின்றான். புறப்பட வேண்டிய நாளும் வந்துவிட்டது. வாசலுக்கு வந்த அற்புதன் கண்ணீருடன் தாயைத் திரும்பிப் பார்க்கிறான். அவள் அங்கே விழுந்து கிடக்கிறாள். மூச்சடங்கி சொற்ப நேரமே ஆகியிருந்தது. தனது கஷ்டத்துக்காக மகனது வாழ்வு பாழ்பட்டு விடக்கூடாது என்று நினைத்தது அந்த தாயுள்ளம். ஆனாலும் அவனது பிரிவைத் தாங்க முடியாமல் அவள் இதயம் தனது செயற்பாட்டை நிறுத்திக்கொண்டுவிட்டது.

நான் வகுத்த வியூகம் என்ற கதை துரோகத்தை மையப்படுத்தி எழுதுப்பட்டுள்ளது. பாலா என்பவன் தனது தொழில் நிமித்தம் கொழும்புக்கு வந்து அறை தேடுகிறான். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தேவராஜன் எனும் நண்பன் அவனது அறையில் பாலாவைத் தங்க வைக்கின்றான். வசதிகள் குறைந்த அந்த அறையில் தங்குகிறான் பாலா. சிறிது நாட்களுக்குப்பின் பல நிபந்தனைகளுடன் ஒரு வாடகை அறை கிடைக்கிறது. ஏற்கனவே காசு கட்டியிருப்பதால் ஒருமாதம் கழித்து புது அறைக்கு தானும் வருவதாக தேவராஜன் சொல்கிறான்.

பாலாவின் அறையிலிருந்து எதிர்புறமாக இருக்கும் வீட்டில் ஒரு அழகான யுவதி இருக்கிறாள். அவளை தினமும் பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும், தேவராஜன் வந்துவிட்டால் அவ்வாறு அந்தப் பெண்ணுடன் பழக முடியாது என்பதால் பாலா பொய் கூறி தேவராஜன் அந்த அறைக்கு வருவதைத் தடுக்கின்றான். அப்படியிருக்க வீட்டுக்காரர்கள் இல்லாத சமயத்தில் அவர்களின் மூத்த மகள் பாலாவுடன் சகஜமாகப் பழகுகின்றாள். அவள் தனது காதலன் வருவதால் இந்த அறையை தமக்கு தருமாறு பாலாவிடம் கேட்க பாலாவும் அறையை கொடுத்துவிட்டு வெளியே காவல் இருக்கிறான். நாழிகை கழிந்து வீட்டுக்கார்கள் வருகிறார்கள். பயந்துபோன பாலா கதவைத் தட்டி அவர்களை காப்பாற்ற நினைக்கிறான். ஆனால் கதவு தானாகவே திறந்து கிடக்க கட்டிலில் அருவருப்பான கோலத்துடன் அந்தப் பெண் (மூத்த மகள்) மாத்திரம் கிடக்கிறாள். அவளை எழுப்பச் சென்ற பாலாவை தனக்கு மேலால் இழுத்து விடுகிறாள் அவள். இதை அவளது பெற்றோர் பார்த்துவிட பீதியில் பாலாவுக்கு சர்வாங்கமும் ஒடுங்குகின்றது. உடனே பாலா எதிர்பாராத தருணத்தில் அவள் அபாண்டமாக கீழுள்ளவாறு பலியை சுமத்திவிடுகிறாள்;.

'அம்மா நான் மாட்டன் மாட்டன் என்று சொல்ல, இவர்தான் என்னை தூக்கிவந்து கட்டிலில் போட்டு இப்படிச் செய்து போட்டார்.'

எதிர்வீட்டு பெண்ணை சைட் அடிப்பதற்காக நண்பனை ஏமாற்றிய வியூகம் தன்னைப் பெரிய ஆபத்தில் மாட்டிவிட்டதை உணர்ந்த பாலா கனத்த மனதுடன் நண்பனை தேடிச் செல்கிறான்.

இவ்வாறு சாயமிழந்து போன வாழ்க்கையையும், நிராதரவாக வாழும் பெண்கள் பற்றியும், குடிகார கணவன்மார் பற்றியும் அலசி ஆராய்ந்து நிதர்சனமாக விடயங்களை வெளிக்காட்டி நிற்கின்றன இந்தக் கதைகள். நூலாசிரியர் திரு. தம்பு சிவா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முதுசம் (சிறுகதைகள்)
நூலாசரியர் - திரு. த. சிவசுப்பிரமணியம் (தம்பு சிவா)
வெளியீடு - சேமமடு பதிப்பகம்
தொலைபேசி - 011 4902406, 0718 676482
விலை - 280 ரூபாய்

சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்

சிறுவர்களுக்கான அறிவுரைகளைக் கூறி நிற்கும் பலே பலே வைத்தியர்

நாவல், சிறுகதை, பத்தி எழுத்துக்கள், நாடகம், நூலாய்வு போன்ற பல்வேறு துறைகளில் ஆளுமைகளைக் கொண்டவர் கே. விஜயன் அவர்கள். விடிவுகால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள் என்ற நாவல்களையும், அன்னையின் நிழல் என்ற சிறுகதைத் தொகுதியையும் வெளியிட்டிருக்கும் இவரது அடுத்த நூல் பலே பலே வைத்தியர். சிறுவர்களுக்கான இந்நூல் 98 பக்கங்களில் 20 கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது.


'இந்தப் புத்தகத்தில் காணப்படும் பெரும்பாலான கதைகள் மலையாள சிறுவர் சஞ்சிகைகளில் வாசித்து இன்புற்ற குட்டிக் கதைகளாகும். உட்கரு கதையோட்டத்தின் நிகழ்வுகளாக, நாடகத் தன்மையுடன் அமைதல் வேண்டும். பாத்திரங்களின் இயல்புத்தன்மை சித்திரங்களாக உருவாக்கப்பட வேண்டும். சிறுவர்களின் பிஞ்சு மனங்கள் அப்போதுதான் வாசிப்பில் ஈர்ப்புடன் ஈடுபடும். எளிமையான மொழிநடை இதற்கு பெரும் துணையாக அமையும்' என்கிறார் நூலாசிரியர் கே. விஜயன் அவர்கள். குட்டிக் கரணமடித்த குண்டு பயில்வான் என்ற கதையில் இரு எலி நண்பர்கள் பற்றியும், அவை குண்டு பயில்வான் ஒருவனுக்கு செய்யும் அட்டகாசங்கள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது. பயில்வானின் தோற்றத்தையும், பரபரப்பையும் கண்டு கேலியாக கதைக்கும் எலிகளை கல்லால் அடிக்கிறான் பயில்வான். அவன் கயிற்றில் ஏறி சர்க்கஸ் செய்யும்போது எலி தன் கூரிய பற்களால் கயிற்றை கடித்துவிட கயிறு அறுந்து பயில்வான் விழுகிறான் என்றவாறு இக்கதை அமைந்திருக்கிறது.


பலே பலே வைத்தியர் என்ற கதையில் வரும் அமைச்சரவை வைத்தயர் மிகவும் புத்திக்கூர்மை உள்ளவர். சதாவும் சாப்பிட்டுவிட்டு உறங்கும் மன்னன், உடல் பருத்து அலங்கோலமாகிறான். அவன் தனது உடற் கட்டமைப்பை சீராக வைத்துக்கொள்வதற்கான மருந்தை வைத்தியரிடம் கேட்கிறான். அதற்கு உடற்பயிற்சி அவசியம் என்று சொல்கிறான் வைத்தியன். மன்னனுக்கு அதைக் கேட்கவே அலுப்பாக இருக்கிறது. இறுதியில் மன்னன் உடற்பயிற்சி செய்வதற்காக என்று கூறி பூங்காவிற்குச் செல்கிறான். பூங்காவில் பெரிய நாய் ஒன்று மன்னனை நோக்கி வருகிறது. பயந்த மன்னன் பூங்காவைச் சுற்றிச்சுற்றி ஓடுகிறான். வழக்கமாக இந்த நாய்த் தொல்லை நிகழ்கிறது. இதற்குக் காரணம் வைத்தியன் என்று அறிந்து மன்னன் கோபப்படுகிறான். ஆனாலும் மன்னனின் உடல் இளைப்பதற்காகவே இவ்வாறு நிகழ்த்தப்பட்டது என்று வைத்தியன் கூறியதும் மன்னன் மகிழ்கிறான். அன்று முதல் அளவான சாப்பாடும், உடற் பயிற்சியும் என்று கடைப்பிடித்து அழகாக வாழ்வதுடன் நாடு முழவதும் தேகப்பயிற்சி நிலையங்களையும் நிறுவுகிறான். மனிதனுக்கு ஓய்வு, சாப்பாடு, தூக்கம் போன்றவை எவ்வளவு அவசியமோ அதே போன்று உடற் பயிற்சியும், அளவான ஆகாரமும் அவசியம் என்ற அறிவுரை இந்தக் கதையினூடாக சொல்லப்படுகிறது. இந்த அறிவுரை சிறுவர்களுக்கு மட்டுமானதல்ல. அனைவருக்கும் உரியதாகும்.

பண்டிதரின் பரலோக யாத்திரை என்ற கதை சுவாரஷ்யமானது. தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கனம் பிடித்து அலைவோருக்கான சரியான பாடம் இந்தக் கதை. அதில் பண்டிதர் ஒருவரும் படகோட்டியும் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள். தனது அறிவுத்திறனை படகுக்காரனிடம் பீற்றிக் கொள்வதற்காக ஷசாஸ்திரங்கள் படித்திருக்கிறாயா? புராணங்கள் தெரியுமா? எழுதப்படிக்கத் தெரியுமா| என்று கேட்கிறார் பண்டிதர். படகோட்டி எதற்கும் தெரியாது என்கிறான். முகம் சுளித்த பண்டிதர் 'உன் வாழ்க்கையின் முக்கால் பாகமே தொலைந்துவிட்டது' என்;கிறார். காற்று பலமாக அடிக்கிறது. நீர் மட்டம் உயர்ந்து படகு கவிழப் பார்க்கிறது. படகோட்டி பண்டிதரைப் பார்த்துக் கேட்கிறான். ஷசாமி உங்களுக்கு நீச்சல் தெரியுமா?| என்று. பண்டிதருக்கு நீச்சல் தெரியாது. படகோட்டி சொல்கிறான் 'ஐயோ சாமி உங்கள் முழு ஆயுசும் இன்றோடு தொலைந்தது'.

இன்பமும் துன்பமும் என்ற கதை படிப்பினைக்குரிய கதையாகும். ஒரு இளைஞனும், வயோதிபரும் காட்டு வழியாக பயணம் செய்கின்றனர். நீண்ட தூரம் அவ்வாறு பயணம் செய்ததால் இருவரும் நண்பர்களாகின்றனர். இப்படி சென்று கொண்டிருக்கையில் இளைஞனுக்கு ஒரு பொதி கிடைக்கிறது. அதில் தங்கங்களும் வைரங்களும் காணப்படுகின்றன. எனினும் தனக்கு அவ்வாறானதொரு பொதி கிடைத்ததாக அவன் முதியவரிடம் காட்டிக் கொள்வில்லை. கொஞ்ச தூரம் சென்றதும் அது பற்றி முதியவர் விசாரிக்கிறார். இளைஞன் பதில் சொல்லவில்லை. முதியவர் மீண்டும் குடைகிறார். 'நாம் ஒன்றாக பயணிக்கும்போது இன்பமோ துன்பமோ சமமமாகப் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்' என்கிறார். அதைக்கேட்ட இளைஞன் கிழவரை நக்கலாகப் பேசிவிட்டு இந்தப் பையில் என்ன இருந்தால் உங்களுக்கென்ன? அதைக் கண்டெடுத்தவன் நான். எனக்குத்தான் சொந்தம் என்று முகத்திலடித்தாற்போல் சொல்கிறான். முதியவர் எதுவும் பேசவில்லை.

சற்று தூரம் நடந்திருப்பார்கள். திடீரென குதிரைகளின் காலடிச் சத்தம் கேட்கிறது. அரண்மனை நகைகள் களவு போய்விட்டன. யாரிடமிருக்கிறதோ அவருக்கு கடும் தண்டனை வழங்கப்படும் என்ற அறிவித்தலும் கேட்கிறது. கலக்கமடைந்த இளைஞன் முதியரைப் பார்க்கிறான். 'நமக்கு தண்டனை கிடைக்கும்' என்கிறான்.

முதியவர் அதற்கு நிதானமாக, 'நீதான் தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் நான் காணவில்லை. நீதான் கண்டாய். எடுத்தாய். அதனால் தண்டனை உனக்கு மட்டும்தான்' என்று பதிலளிக்கிறார்.
திகைத்து நின்ற வாலிபனை அரண்மனை சேவகர்கள் பிடித்துக்கொண்டு போனார்கள். முதியவர் தனியாகப் பயணத்தைத் தொடர்ந்தார் என்று நிறைவடைந்திருக்கும் இக்கதையானது தனது சந்தோஷத்தில் சேர்த்துக் கொள்ளாமல், கஷ்டத்தில் மாத்திரம் மாட்டிவிடும் நண்பர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற படிப்பினையையும், மூத்தோர் சொல் கேட்க வேண்டும் என்ற அறிவுரையையும் சொல்லி நிற்கிறது.

இவ்வாறு மாணவர்கள் கட்டாயம் படித்து பயன்பெற வேண்டிய நூலாக அமைந்திருக்கிறது கே.விஜயனின் பலே பலே வைத்தியர் என்ற இந்த சிறுவர் நூல். சிறுவர்களுக்கு கூறப்படும் புத்திமதிகள் வெறும் போதனைகளாக இருக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கே. விஜயன் அவர்கள், தான் சொல்லவந்த அறிவுரைகளை சிறுவர்களின் பிஞ்சு மனங்களில் பதிய வைக்கும் வண்ணம் கதைகள் அனைத்தையும் சித்திரங்களுடன் சொல்லியிருக்கும் பாங்கு சிறப்பம்சமாகும். இன்னுமின்னும் பல நூல்களை கே. விஜயன் அவர்கள் வெளியிட வேண்டுமென்பதே எங்கள் எல்லோரதும் பேரவா. அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - பலே பலே வைத்தியர்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் - கலாபூஷணம் கே. விஜயன்
டிவளியீடு - வீ.ஐ. புறமோ பதிப்பகம்
தொலைபேசி - 011 455 1098
விலை - 200 ரூபாய்

சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்

சிறுவர்களின் சிந்தையைக் கவரும் குள்ளன்

கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர் எழுதிய குள்ளன் என்ற சிறுவர் நூல் அண்iயில் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. 32 பக்கங்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலானது கல்வியமைச்சின் இலங்கைத் தேசிய நூலாக்க அபிவிருத்திச் சபையின் அனுசரனையுடன் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எழுத்தளர் மன்ஸூர் அவர்கள் இலக்கிய உலகில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றார். இவரது முன்னோடியாக இருந்தவர் எழுத்தாளர் ஏ.பி.வி. கோமஸ் அவர்களாவார். மூத்த பத்திரிகையாளரான எஸ்.டி. சிவநாயகம் அவர்களால் பத்திரிகை உலகுக்குள் நுழைந்த நூலாசிரியர் சிறுவர்களின் சிந்தையைக் கவரும் வகையில் எழுதி வெளியிட்ட இந்நூல் சிறுவர்கள் விரும்பும் வகையில் அழகான வண்ணப் படங்களை உள்ளடக்கி அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.



இந்தக் கதையில் வருகின்ற குடியானவன் மாலை வேளையில் வீடு திரும்புகிறான். குளிர் காய்வதற்காக விறகை மூட்டி அருகே அமர்ந்து கொள்கிறான். அப்போது அவளருகில் அவனது மனைவியும் வந்து அமர்ந்து கொள்கிறாள். தமக்கு குழந்தைச் செல்வம் இல்லாதிருப்பதை எண்ணி இருவரும் மிகவும் வருந்துகின்றார்கள். அப்போது அவனது மனைவி கீழுள்ள அபிப்பிராயத்தை ஆதங்கத்தடன் கணவனிடம் கூறுகிறாள்.

'எமக்கு அதிகம் தேவையில்லை. இந்த விரலின் அளவாவது ஒரு குழந்தை இருப்பதாக இருந்தால் எவ்வளவு போதும்'

இவ்வாறு கூறி வெகுகாலம் செல்லும் முன்பே ஆள்காட்டி விரலின் அளவில் ஒரு குழந்தை பிறக்கிறது. அந்த பிள்ளை வளர்ந்து பெரியவனாகும் என்று எதிர்பார்த்தார்கள் பெற்றோர். ஆனால் அவனோ குள்ளமாகவே வளர்ந்தான். குள்ளமாக இருந்தாலும் புத்தி சாதூர்யமிக்கவன். எனவே அவன் தனது தந்தையுடன் தொழிலுக்கு செல்ல ஆசைப்படுகிறான். எனினும் தந்தை அதை விரும்பவில்லை. தாயிடம் கெஞ்சி அனுமதி பெற்று குதிரையின் காதோரமாக உட்கார்ந்து தந்தை தொழில் செய்யுமிடத்துக்குச் செல்கிறான் குள்ளன்.

இவ்வழியால் போகும்போது குதிரையிடம் வேகமாகப் போ - மெதுவாகப்போ என்று கட்டளையிட, குள்ளன் சொல்லும் கட்டளைக்கிணங்க குதிரையும் ஓடியது. இவ்வாறு பேச்சுச் சத்தம் கேட்டாலும் மனிதர் எவரையும் காணாத வழிப்போக்கர் இருவர் குதிரையின் பின்னாலேயே வந்து என்ன அதிசயம் இது என்று கவனிக்கிறார்கள். அப்போது குள்ளன் அவனது தந்தையிடம் கூறி தன்னை கீழே இறக்கச் சொல்கிறான். இதைக் கண்ட வழிப்போக்கர்கள் தந்தையிடம் இந்தக் குள்ளனை தமக்கு விற்குமாறு கேட்டுக்கொள்கின்றனர். குள்ளனின் தந்தை மறுக்கிறார். எனினும் தன்னை விற்றுவிடும் படியும், தான் எப்படியாவது தப்பித்து வந்துவிடுவதாகவும் தந்தையின் காதில் குள்ளன் சொல்கிறான். அதன் பிறகு அந்த வழிப்போக்கர்கள் தொப்பியினுள் குள்ளனை வைத்துக்கொண்டு போகிறார்கள். தொப்பியின் விளிம்பைப் பிடித்தவாறு குள்ளன் இயற்கைக் காட்சிகளைப் பார்த்து ரசித்;துக்;கொண்டு போகிறான்.

வழிப்போக்கர்களில் ஒருவன் மற்றவனிடம் இந்தக் குள்ளனை பெரிய தொகைக்கு விற்றுவிடுவோம் என்று கூறுகிறான். அதற்கு மற்றவன் இவ்வாறு விற்றால் எமக்கு கொஞ்சம்தான் பணம் கிடைக்கும். வாரமொரு முறை கூடும் சந்தையில் இவனைக் காட்டி காசு பெறலாம் என்று கூற அந்த யோசனை ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. அவர்கள் இருவரும் இது பற்றி பேசும் போது சந்தைக்கு தன்னைக் கூட்டிச் செல்வது பற்றி மகிழச்சியடைகிறான் குள்ளன். குள்ளன் வர முடியாது என்று பிடிவாதம் பிடிப்பானோ என்று பயந்துகொண்டிருந்த இருவரும் குள்ளனின் பதிலைக் கேட்டு சந்தோஷமடைந்தனர். அதன் பிறகு குள்ளனை ஒரு சந்தைக்குக் கூட்டிச் சென்று அவனைக் காட்டிக் காட்டி பணம் வசூலித்துக் கொண்டிருந்தனர். இதுதான் தருணம் என்று பார்த்திருந்த குள்ளன் காய்கறி வாங்க வந்த பெண்ணின் கூடையில் ஏறி அமர்ந்து அவளது வீட்டுக்குச் செல்கின்றான்.

அந்தப் பெண்ணின் கணவர் ஒரு சர்க்கஸ்காரன். ஆதலால் அவன் அணியும் ஆடையின் பொக்கட்டில் போய் ஒழிந்துகொள்கிறான் குள்ளன். அடுத்த நாள் சர்க்கஸ்காரன் தனது ஆடையை அணியும்போது குள்ளனின் குரல் கேட்கிறது. சட்டைப் பைக்குள் இருந்த குள்ளனைக் கண்டு அதிசயித்து குள்ளனையும் சர்க்கஸில் சேர்க்கின்றார். அத்துடன் சர்க்கஸ் நடைபெறும் இடத்தையும் சுற்றிக் காட்டுகிறார். அப்போது குள்ளன் தான் தப்பித்துக்கொள்ளும் வழியைக் கண்டு வெளியே ஓடுகிறான். இருளடைகிறது. அப்போது அங்கிருந்த நத்தைக் கூட்டில் ஒழிகிறான். மறுநாள் அவ்வழியால் வந்தவர்களிடம் உதவிபெற்று அவர்களுக்கு தான் உதவி செய்வதாகக் கூறுகிறான் குள்ளன். அவர்கள் திருடர்கள். எனவே தனவந்தரின் வீட்டுக்கு குள்ளனை அழைத்துச் சென்றாலும் வேலைக்காரன் கண்காணிப்பதைக் கண்டு திருடர்கள் ஓடிவிடுகிறார்கள். குள்ளன் அங்கிருக்கும் வைக்கோல் பண்ணையில் நுழைகிறான். பசுவுக்கு சாப்பாடு கொடுக்கப்படும் வைக்கோலுடன் குள்ளன் பசுவின் வயிற்றிற்குள் செல்கிறான். பசுவின் வயிற்றுக்குள் இருந்து குள்ளன் பேசுவதை பசுதான் பேசுகிறது என்று நினைத்து அதிசயித்தவர்கள் பசுவை மிருக வைத்தியரிடம் காட்டுகிறார்கள். அடுத்தநாள் பசுவின் சாணியுடன் குள்ளன் வெளியேறி அவ்வூரிலிருந்து தனது ஊர்வழியாகச் செல்லும் மாட்டு வண்டியில் ஏறிக்கொள்கின்றான். அவனது வீடு அமைந்திருக்கும் இடம் வந்ததும் சந்தோஷத்துடன் ஓடிச்சென்று பெற்றோருடன் சேர்ந்து கொள்கின்றான்.

இந்தக் கதை வர்ணச் சித்திரங்களை உள்ளடக்கி சிறுவர்கள் மகிழ்வடையும் வண்ணம் அமையப் பெற்றிருக்கிறது. இன்னுமின்னும் சிறந்த நூல்களை வெளியிட வேண்டுமென்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - குள்ளன் (சிறுவர் கதை)
நூலாசரியர் - கலாபூஷணம் எம்.எம். மன்ஸூர்
முகவரி - 460ஃ16 அடுவாவலவத்த, பெலிகம்மன, மாவனெல்ல.
தொலைபேசி - 0773 706374
விலை - 100 ரூபாய்

Wednesday, January 18, 2012

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் நூலை வாசித்தபோது எனக்குள் ஆச்சரியம். காரணம் (இதுவரை) தமிழில் திறனாய்வு சார்ந்த 23 நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றமைதான்.

முதல் கட்டுரை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் சிங்களத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு ஆகும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அதைத் தமிழில் தந்தந்திருக்கிறார் முஹம்மது யாகூப் என்பவர். பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கட்டுரையில் இலங்கையில் நாவல், சிறுகதைகளின் வளர்ச்சி பற்றிய விரிவான பார்வை பதியப்பட்டிருக்கிறது.



இன ஒற்றுமை இலக்கிய வழி என்ற தலைப்பில் இரண்டாவது பத்தி எழுதப்பட்டிருக்கிறது. மக்களின் மொழி, பிரதேச வாதம் போன்றவற்றால் ஓரினத்தின் உள்ளார்ந்த அனுபவங்கள், ஒற்றுமை என்பன மறுதலிக்கப்படுகின்றன. இதற்கான காரணம் புரிந்துணர்வின்மையே ஆகும். அவற்றை இலக்கியத்தினூடாக நிவர்த்தி செய்வதற்கு படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

'ஈரினத்தவரின் பொதுப் பிரச்சனைகளை ஈரினத்தவரும் இலக்கிய வழியாக அறிந்துகொள்ளும்போது, ஒற்றுமை ஏற்பட வேண்டிய அவசியம் உணரப்படும். இவ்வாறு உள்ளிருந்து முகிழும் இந்த உணர்வை இலக்கியங்கள் வெளிப்படுத்தும்போது நடைமுறையில் இன ஒற்றுமை சாத்திய வகை ஏற்படுகிறது' என்கிறார் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள்.

எழுத்தாளர் நந்தி பற்றி திரு. ப. ஆப்தீன் மற்றும் திரு. கே. பொன்னுத்துரை ஆகியோர் இணைந்து வெளியிட்ட பேராசிரியர் நந்தியும் மலையகமும் என்ற நூல் இலக்கிய மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் மிகவும் பயனுள்ளது என்று குறிப்பிடும் நூலாசிரியர் 'நமக்குள்ளே நாம் பழங்கதைகள் பேசி மகிழ்வதுண்டு. தொடர்ந்தும் பேச வேண்டும். பேசியும் வருகிறோம்.

பழமையின்றி புதுமையில்லை. புதுமையின் பிறப்பு பழமையின் அடித்தளத்திலிருந்துதான் ஏற்படுகிறதென்பது வரலாற்றுக் கண்ணோட்டமுடையவர்கள் கண்ட முடிவு' என்ற தனது கருத்தையும் சொல்லிருக்கிறார்.

போதை தரும் எழுத்து நடை என்ற மகுடத்தில் லா. ச. ரா, மௌனி ஆகியோரின் சிறுகதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. அவர்களது எழுத்தில் பெரும்பாலும் நிஜவாழ்க்கை பற்றிய கருத்துக்கள் இல்லாவிட்டாலும் அதை வாசிக்கும்போது இனிய மயக்கம் ஏற்படுகின்றது என்று கூறுகிறார் நூலாசிரியர். உதாரணமாக லா. ச. ரா வின் பச்சைக் கனவு தொகுதியில் இடம்பெற்ற கதையிலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக தரப்பட்டிருக்கிறது.

'உடல்மேல் உரோமம் அடர்ந்தது போன்று பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள், அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம். சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக்கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும். சப்பாத்தியில் இரத்தக்கட்டி போன்ற பூவில் ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக்கொண்டு வந்து மோதிற்று. ராமா ராமா ராமா. இன்னிக்கு என்ன உங்களுக்கு? இப்போதானே கூடாரத்தில் உக்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறிPங்களே. உங்களுக்கென்ன நிலா காயறதா?'

வைத்தியர் ஏ. எம். அபூபக்கர் அவர்கள் இஸ்லாமிய நெறி சார்ந்த பாடல்களையும், நூல்களையும் தமிழுலகுக்குத் தந்தவர். அவரது முறையீடு என்ற புத்தகம் சமயச் சார்புடைய பாடல்களை உள்ளடக்கியதொரு தொகுதியாகும். அரபுப் பதங்கள் பாடலில் காணப்படுகின்றன. அவற்றிற்கான தமிழ் விளக்கங்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ளடங்கியுள்ள பாடல்களின் விளக்கங்களும், முன்னுரை, அணிந்துரை வழங்கியவர்களின் விபரங்களும் இந்தக் கட்டுரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூத்த இஸ்லாமிய இலக்கியவாதிகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களுள் கலைவாதி கலீல் அவர்களும் முக்கியமான ஒருவர். மன்னாரைச் சேர்ந்த இவர் கவிதை, ஓவியம், சிறுகதை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டவர். இளம் எழுத்தாளர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் செய்யத் தயங்காதவர். கலைவாதி கலீல் அவர்களைப் பற்றியும், இவரது கவிதைகள் சிலவற்றையும் மன்னாரிலிருந்து ஒரு மனிதாபிமானக்குரல் என்ற தலைப்பில் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதியிருக்கின்றார்.

கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்கில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்ற தலைப்பில் சில யதார்த்த விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சில எழுத்தாளர்கள் தமிழ் சொற்பதங்கள் குறித்து அதிக அக்கறை காட்டுவதில்லை. நுண்ணிய சில வேறுபாடுகள் பற்றி அறிய முற்படுவதில்லை. அவ்வாறானதொரு வசனத்துக்கு உதாரணமாக திறனாய்வு - நூல் மதிப்புரை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். இவை பற்றி நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் சொல்லும் விளக்கம் பின்வருமாறு:-

'திறனாய்வு, விமர்சனம், புத்தக மதிப்பரை, நூல் நயம், நூல் ஆய்வு என்றெல்லாம் மகுடமிட்டு நூல்கள் பற்றி நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்து வருகிறோம். ஆயினும் இப்பதங்களுக்கும் தொடர்புள்ள வேறு சில பதங்களுக்கும் இடையிலே சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை நாம் உணர்வதில்லை.

ஆராய்ச்சி, ஆய்வு, இலக்கிய வரலாறு போன்றவை மிக உயரிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திறனாய்வு முயற்சிகளாகும். இலக்கியத் திறனாய்வும் அவ்விதமானதே. புத்தக மதிப்புரை, நூல் நயம், நூல் விமர்சனம் போன்றவை ஒருபடி கீழே செயற்படும் எழுத்து ஆகும். பத்தி எழுத்துக்கள் அதிலும் கீழ் மட்டமுடையவை. இன்னும் கேலிக்கூத்தான கணிப்பு எதுவென்றால் நையாண்டி, நக்கல், மொட்டைக் குறிப்புக்கள் போன்றனவும் விமர்சனம் என அழைக்கப்படுவதுதான்' என்கிறார். எதைப் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தக்கட்டுரை.

தினகரன் பத்திரிகையின் முன்னாள் அசிரியரான திரு. கே.வி. சிவா சிவசுப்பிரமணியம் அவர்கள் பற்றிய தகவல் உள்ளடங்களாக அவரது இலக்கிய ஆளுமை போன்ற பல விடயங்களும் ஆராயப்பட்டிருக்கின்றன. அதில் சிவா சிவசுப்பிரமணியம் வெளிப்படையாகவே இடதுசாரிச் சிந்தனையுடையவர். இவர் அரசாங்கத்தில் ஓர் எழுதுவினைஞராகச் சேர்ந்து, பல இடங்கிலும் தொழில் பார்த்து, உயர் பதவி பெற்றுத் தனது 45வது வயதில் ஓய்வு பெற்றார் என்று அறிகிறோம். அதன் பின்னர் தன்னந்தனியனாக நின்று தேசாபிமானி என்ற இடதுசாரிக் கட்சி வாராந்த இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவர் மொழி வன்மை கொண்ட தமிழாக்க எழுத்தாளர். மும்மொழியிலும் பரிச்சயமுடைய இதழியலாளர். இவரைப் பற்றிய இந்தக் கட்டுரை மும்மொழி பரிச்சயமுள்ள இதழியலாளர் கே.வி. சிவா சிவசுப்பிரமணியம் என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது.

இலக்கிய நெஞ்சங்களின் பெரும் அபிமனத்தைப் பெற்ற புரவலர் ஹாசிம் உமர் அவர்களைப் பற்றியும் இந்நூலில் அறிய முடிகிறது. புத்தகம் வெளிவராத கலைஞர்களின் இலக்கியத் தாகத்துக்கு அமிர்தமாகி இருக்கின்ற புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பிறப்பால் மேமன் இனத்தைச் சேர்ந்தவர்.

தமிழ்ப் பற்றுடைய இவரைப் பற்றி பிறர் என்ன கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தொகுத்து, கலைஞர் கலைச் செல்வன் அவர்கள் 'புரவலர் சில பதிவுகள்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்தால் புரவலரின் மேன்மையையும், ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம். இலக்கியக் கூட்டங்களில் முதல் பிரதி பெற்று எழுத்தாளர்களை கௌரவிக்கும் திரு. ஹாசிம் உமர் அவர்களின் மேலான இலக்கியச் சேவையினைப் பற்றி நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

'புரவலர் புத்தகப் பூங்கா என்ற அமைப்பின் மூலம் இதுவரை நூல்களை வெளியிட முடியாது தவிக்கும் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் எழுத்துப் பிரதிகளை வாங்கிப் பெற்று, இலவசமாக தன்னுடைய செலவில் அச்சிட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடமே அவற்றைக் கையளித்துவிடுவார். அந்த எழுத்தாளர்களும் தாம் அந்த நூலைப் பெற்று விற்று பணத்தைப் பெற்றுக்கொள்வர். இவர் ஓர் அற்புதமான மனிதாபிமானி. பெரும் செல்வந்தர். வர்த்தக நிறுவனங்களின் நிர்வாக அதிபர். இவர் நீடூழி வாழ்ந்து தனது அளப்பரிய பணிகளைத் தொடர வேண்டும்'.

இது போன்று இங்கே குறிப்பிடாத இன்னும் பல பயனுள்ள விடயங்கள் புத்தகத்தில் காணப்படுகின்றன. காலக் கண்ணாடியில் கலை இலக்கியப் பார்வையைக் காண விரும்பும் ஆர்வலர்கள், திரு கே. எஸ். சிவகுமாரன் அவர்களது இந்த நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - காலக் கண்ணாடியில் ஒருகலை இலக்கியப் பார்வை
நூலாசரியை - கே.எஸ். சிவகுமாரன்
முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06
வெளியீடு - மணிமேகலைப் பரிசுரம்
தொலைபேசி - 011 2587617
விலை - 300 ரூபாய்

யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்

யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்

சிறுகதை உலகில் தனக்கென்றதொரு தனியிடத்தை பெற்றிருக்கும் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுதியான நிஜங்களின் தரிசனம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான 15 கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் வெளியீடாக 150 பக்கங்களில் அமைந்திருக்கிறது.

மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய் ஆகிய தொகுப்புக்களை ஏற்கனவே வெளியிட்ட நூலாசிரியர் பற்றி பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

சம காலத்தைய மத்திய தரத்தினரின் வாழ்வு இடுக்கினுள் நிகழும் பல்கோணச் சிதறல்களின் தனித்தனிப் பரவல்கள் ஒவ்வொரு சிறுகதைக்குமுரிய தெரிவாகவும், கருவாகவும் அமைகின்றன. அவற்றின் இயல்பு முக்கியத்துவத்தை அடியொட்டி நெட்டாங்கு மற்றும் அகலாங்கு விபரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படைப்பாளி தன்னை வானத்திலிருத்திக்கொண்டு இலக்கியம் படைக்க முடியாது. தன்னைச் சூழ நடப்பனவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கும்போதே அதை வாசிக்கும் வாசகன் அக் கதாபாத்திரங்களை தன் அயலவனாகவோ, உறவினராகவோ, அறிமுகமானவனாகவோ அடையாளம்காண முற்படுகின்றான். அதுதான் அக்கதையின் வெற்றி. யதார்த்தம் இல்லாத எதுவும் காலவோட்டத்தில் காணாமல் போய்விடும் என்று தனது கருத்தை முன்வைத்திருக்கும் திருமதி பவானி அவர்கள் உண்மையில் மனிதநேயமிக்க படைப்பாளி என்பதை அவருடன் பழகிய அனைவரும் உணர்ந்திருப்பர் என்பது திண்ணம். எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு காட்டாதவனே உண்மை மிக்க கலைஞனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் பவானி சிவகுமாரன் அவர்கள் தனது எழுத்துக்கள் போலவே செயற்பாடுகளிலும் உண்மையாக இருக்கிறார்.

சொப்பனத் திருமணம் என்ற முதல் கதையானது திருமணக் கனவுகளுடன் வாழ்ந்த இந்துமதி என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக்கொண்டது. கொழும்பில் வீடு வேண்டும் என்றும், நிறம் குறைவு என்றும் இந்துமதியின் திருமணம் காலத்தின் கோலத்தால் தள்ளிப்போகிறது. அன்றாட வாழ்க்கையுடன் வாழப் பழகிக்கொண்ட 32 வயதான இந்துமதி இறுதியாக தோழியின் வழிகாட்டலில் காண்டம் பார்க்கச் செல்கிறாள். அங்கே அவளது ஓலைகள் வாசிக்கப்பட்டு ராகு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதற்குப் பரிகாரமாக ஒன்பது சுமங்கலிக்கு தானமும், ஒன்பது குழந்தைகளுக்கு இனிப்பு, உடைகள், புத்தகம் ஆகியவை ஒன்பது வகையாகவும் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக பஸ்ஸிலிருந்து இறங்கி தோழி வீட்டை அடைவதற்காக பாதையைக் கடக்க முற்படுகின்றாள் இந்துமதி. பாதுகாப்பு வலயத்தைக் காரணம் காட்டி ஒருவழிப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டிருந்த வீதியால் வந்த வாகனம் இந்துமதியை தூக்கியெறிகிறது. கல்யாணக் கனவுகளுடன் வந்தவள் இறுதியில் இறந்துபோகிறாள் என்று அக்கதை நிறைவடைகிறது.

தோற்ற மயக்கங்கள் என்ற சிறுகதை இன்றைய மாணவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது. தனியார் வகுப்புக்களுக்குப் போகும் சில மாணவர்கள் கைத்தொலைபேசி காதை விட்டு அகலாதபடி உலகை மறந்து கதைக்கின்றனர். 'இயர்போனை' மாட்டிக்கொண்டு தமக்கு மாத்திரம் தான் பாடல் கேட்கத் தெரியும் என்ற வகையில் நடக்கின்றனர். புகையிரத பாதைகளில் தன்னை மறந்தபடி பாடல் கேட்டவாறு சென்ற மாணவர்கள் பலர் புகையிரத விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் ஏராளம் இடம்பெற்றிருக்கின்றன. ஆடை விவகாரத்தில் மாணவிகள் அடிமட்டத்தில் இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் இச் சிறுகதை தாய் தந்தையர் படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றி விளக்குவதோடு பிள்ளைகள் பின்விளைவுகளை யோசிக்காமல் தனக்கு பிடித்தவர்களுடன் வாழ்க்கையை ஆரம்பிக்குமளவுக்கு துணிச்சலடைந்து விடுகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லி நிற்பதை அவதானிக்க முடிகிறது.

பெண்களுக்கு உத்தியோகம் அவசியமா இல்லையா என்ற பட்டிமன்றம் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டுக்காக பெண்கள் தொழில் பார்க்கலாம் என்று ஒரு சிலரும், பெண்கள் ஆணுக்கு குறைந்தவளல்ல அவளும் தொழில் செய்யலாம் என்று இன்னொரு சாராரும், பெண்கள் வீட்டிலிருப்பதே சிறந்தது என வேறு சிலரும் கூறி வருகின்றனர். எது எப்படிப்போனாலும் பிள்ளைகளை வளர்த்தல், சமைத்தல், வீட்டு வேலைகள் செய்தல் போன்ற பொறுப்புக்கள் பெண்களைச் சார்ந்தததாக இருக்கின்றது. கோடைகாலத் தூறலகள் என்ற சிறுகதையில் வரும் தயாளினியும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஓய்வொழிச்சலின்றி இருக்கிறாள். அப்படியிருக்க இன்னொரு தலையிடியாக வந்து சேர்கிறாள் கணவனின் ஒன்றுவிட்ட சகோதரியான ஆனந்தி. வெளிநாடு போவதற்காக விசா வரும் வரை ஆனந்தி தயாளினியின் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

ஆனந்தியின் பிள்ளைகள் செய்கின்ற அட்டகாசங்கள் தயாளினியை கோபம் கொள்ளச்செய்தாலும் தயாளினியின் வேலைகளில் முக்கால்வாசியை ஆனந்தி பொறுப்பேற்கிறாள். டே கெயாரில் விடப்படும் தயாளினியின் மகனையும் ஆனந்தியே வளர்க்கிறாள். இவ்வாறிருக்க எட்டு மாதங்களின் பின் ஆனந்திக்கு விசா வருகிறது. அவள் புறப்படும் நாளுக்கு முந்தின நாள் இரவு தயாளினியிடம்,

'நான் தனியப் பிள்ளைகளோட சண்டைக்க எவ்வளவு கஷ்டப்பட்டன். ஏழு வருஷம்... இவ்வளவு நாள் நானும் கணவரும் பிரிஞ்சிருப்பம் என்று நினைக்கல்ல. நீங்க இல்லாட்டா நான் கொழும்பில கஷ்டப்பட்டிருப்பன். நானோ பிள்ளைகளோ தெரியாம ஏதாவது பிழை விட்டிருந்தால் மனசுல வச்சிருக்காதேங்கோ' என்று அழும் காட்சி மனதை நெருடுகிறது.

இவ்வாறான உரையாடல்களை உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கும் நூலாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்கள் ஆனந்தியின் பிள்ளைகள் வீட்டிலுள்ள டெப், க்ளாஸ் ஆகியவற்றை உடைக்கையில் 'பிள்ளைகளாம் பிள்ளைகள். சரியான குரங்குகள். தாயும் பிள்ளைகளும் சரியான பட்டிக்காடுகள்' என்றவாறு நகைச்சுவையூட்டக்கூடிய சிலவரிகளை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ஆனந்தி சென்றுவிட இதுவரை ஆனந்தியிடம் ப்ரியமாக இருந்த தயாளினியின் மகன் மிகவும் சோர்வுற்றுப் போகிறான். அவனது முகத்தில் சந்தோஷம் காணாமல் போகிறது. அவன் தாயிடம் வேலைக்குப்போக வேண்டாம் என்று கூற தயாளினி பிள்ளைக்கும் தனக்குமாக கீழுள்ளவாறு சமாதானம் கூறிக்கொள்கிறாள் என்றவாறு கதை நிறைவடைகிறது.

'அம்மா வேலைக்குப் போனாத்தானே பிள்ளைக்கு வடிவான டீ சேட், ஷூஸ், ஸ்கூல் பேக் வாங்கலாம். பிள்ளையின் ரூமுக்கு ஏஸி போடுவமா? கார் வாங்கலாம். ராகவ் அண்ணா மாதிரி நிறைய படிக்கலாம்...'

நிழல் கொஞ்சம் தா என்ற கதை பாட்டி பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்வதினூடாக நற்பழக்க வழக்கங்களை புகட்டுவதாய் அமைந்துள்ளது. மகன் மயூரனுடன் வசிக்கும் அந்தத்தாய் தனது சகோதரியின் மகளின் திருமணத்துக்காக தன் தாலியையும் காப்பையும் கொடுக்கின்றாள். அதையறிந்த மகன் தாயுடன் வாக்குவாதப்படுகின்றான். இரவு பேரப்பிள்ளைகள் பாட்டியிடம் கதை கேட்கப்போகிறார்கள். அவர் கூறும் கதை பாண்டவர் பற்றியது. அதில் தர்மனிடம் எந்தத் தம்பியை உயிருடன் பெற்றுக்கொள்ளப் போகிறாய்? என்று தர்மதேவதை கேட்டபோது, தர்மர் நகுலனைத் தருமாறு கேட்கிறார் காரணம் ஷஎனது தாய் குந்தி தேவிக்கு நான் இருப்பது போல எனது சிற்றன்னைக்கு அவரது மகன் நகுலன் இருக்கட்டுமே| என்கிறார். அதைக்கேட்டு தர்மதேவதை நான்கு தம்பிமாரையும் உயிரோடு திருப்பிக்கொடுக்கிறது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாட்டி கதை சொல்லி இறுதியில் உன்னைப்போல் பிறரை நேசி என்ற தத்துவத்தை விளக்குகிறாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மகன் மயூரன் மனம் மாறி இறுதியில் தாயிடம் இவ்வாறு கூறுகிறான்.

'அம்மா நான் நாளைக்கு வேலையால வரேக்க ரெடியா இருங்கோ. பிள்ளைகள் சின்னன்ல போட்ட காப்பு, மோதிரம் எல்லாம் சும்மாதானே இருக்கு. வெறுங்கையோட இருக்க வேண்டாம். உங்களுக்கு காப்பு வாங்கி வரலாம்...'

ஒரு சின்ன விடயத்தை வைத்து அழகிய கதையை ஆக்கும் திறமையுள்ள பவானி சிவகுமாரன் அவர்கள் மேலும் பல படைப்புக்களைத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - நிஜங்களின் தரிசனம்
நூலாசரியை - பவானி சிவகுமாரன்
விலாசம் - 37 ஏ, ஸ்ரீ மகா விகார வீதி, களுபோவில, தெஹிவளை.
வெளியீடு - மீரா பதிப்பகம்
தொலைNசி - 011 2721382
விலை - 300 ரூபாய்

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் - நாவல்

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் நாவலுக்கான இரசனைக்குறிப்பு

சிந்தனை வட்டத்தின் 339 ஆவது வெளியீடான வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவல் 12 அத்தியாயங்களை உள்ளடக்கி 88 பக்கங்களில் அமைந்திருக்கிறது. 2003ம் ஆண்டு எண்ணச் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியையும், 2009ம் ஆண்டு புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற நாவலையும் வெளியிட்ட திருமதி சுமைரா அன்வர், தனது மூன்றாவது வெளியீடாக வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவலைத் தந்து, இலக்கியத் துறையில் தனக்கான பாதையை விரிவுபடுத்தியுள்ளார்.



நாவலின் நாயகன் மோஹித், தங்கைகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்காகவும், தனது இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் திருமணத்தை தள்ளிப்போடுகிறான். அவனது மனதில் சீதனமில்லாமல் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் நிலைத்து நிற்கிறது. தங்கைகள் திருமண வயதை அடைந்து நிற்கையில் மோஹித்துக்கு பணக்கார இடத்திலிருந்து திருமணம் பேசி வருகிறார்கள். குடும்பப் பொறுப்புக்களாலும், பெற்றோரின் அநாதரவான நிலையினாலும் மோஹித் தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து அசைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக சுமைரா அவர்கள் கையாண்ட கீழுள்ள உவமானம் சிறப்பாக இருக்கிறது.

'மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய மல்லிகை மொட்டுக்கள் வண்டுகளுக்கு சீர் கொடுக்க வழியில்லாததால் ஏக்கங்களைச் சுமந்து அண்ணன் நான் கரை சேர்ப்பேன் என்ற அசட்டு நம்பிக்கையில்...' ஆக மொத்தத்தில் புரட்சிகரமாக சீதனம் வேண்டாம் என்று முழங்கியவன் சகோதரிகளின் திருமணத்தை ஒப்பேற்ற வேண்டுமே என்ற இக்கட்டான நிலையில் விஜி என்ற பணக்காரப் பெண்ணை திருமணம் செய்கிறான்.

பல விடயங்களில் விஜிக்கும் மோஹித்துக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. மோஹித் அழகியலை ரசிப்பவன். விஜி அறிவியலை ரசிப்பவள். இவன் கூட்டுக் குடும்ப அபிமானி. அவள் தனிமை விரும்பி. அவன் தார்மீகமாக சிந்தனை செய்ய, விஜியோ தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறாள். விஜி தன்னை ஆள்கிறாள் என்ற எண்ணமும், சீதனத்தை வாங்கி விட்டோமே என்ற தாழ்வுச் சிக்கலும் மோஹித்தை வருத்துகிறது. அத்துடன் விஜி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சொன்னமை அவனுள் பெரிய இடியை இறக்குகிறது. தன் நிலையை மோஹித் இவ்வாறு உணர்கிறான்.

'நான் விற்கப்பட்ட பண்டம். அவள் வாங்கிய எஜமானி', 'வித்த மாடாயிற்றே... பெற்றோருக்கு என்னை உரிமை பாராட்டவா முடியும்?'

தொழிலிருந்து வேறு கிளைக்கு விஜி மாற்றம் பெற்றுப் போகிறாள். அவள் தன் கணவனை தன்னுடன் வந்து இருக்குமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஊரின் கேலிப் பேச்சுக்குப் பயந்தும் பெற்றோர்கள் வேதனைப்படுவார்கள் என்று உணர்ந்தும் மௌனமாக அவளுடன் செல்கிறான் மோஹித். சமைப்பதில் உதவிசெய்தல், மளிகைச் சாமான் வாங்கி வருதல், விஜியை ஆபிசுக்கு அழைத்துச் செல்லல், வீட்டிற்கு அழைத்து வருதல், கூட்டங்கள் கொண்டாட்டங்களுக்கு கூட்டிப் போதல் போன்ற சில்லறை வேலைகள் யாவும் மோஹித்தின் தலையில் சுமத்தப்படுகின்றது.

காதல் உணர்வினால் மனைவிக்கு பணிவிடை செய்யாவிட்டாலும், அடிபணிதல் என்ற உணர்வில் அவளுக்கான வேலைகளை செய்து வருகிறான் மோஹித். காலங்கள் கழிய அவன் அப்பாவாகப் போவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறான். எனினும் விஜி சொல்லும் பதில் அவனை மட்டுமன்றி வாசிப்போரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவளுக்கு குழந்தை தேவையில்லை என்றும், அதை கலைக்கப் போவதாகவும் கூறுவதுமே அதற்கான காரணம். எனினும் மனசாட்சியின் உறுத்தலுக்கு விஜி மசிந்ததால் ஆண் குழந்தையொன்று ஆரோக்கியமாக பிறக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் விஜியின் பணத்தைக் கொண்டு மோஹித்தின் சகோதரிகளின் திருமணமும் செவ்வனே நடைபெறுகிறது. விஜியின் குழந்தையான வினோத் விஜியின் பராமரிப்பிலின்றி மோஹித்தின் பராமரிப்பில் விடப்படுகிறான். அடிக்கடி வேலைக்கு லீவு போடுவது பெரும் தொல்லையாகிவிட ஒரு ஆயாவை நியமிக்கிறான் மோஹித்.

விஜியின் சந்தேகக் குணம் ஆயாவையும், மோஹித்தையும் இணைத்து தப்பான கண்ணோட்டத்தில் சிந்திக்கிறது. பெண்களுக்குரிய மரியாதையை அறிந்ததாலும், சகோதரிகளுடன் பிறந்ததாலும் மோஹித்தால் இதைத் தாங்க முடியாமல் போகிறது. அதை அறிந்து, மோஹித்தை விடவும் வயதில் மூத்த ஆயா வீட்டிற்கு வராமல் இருந்து விடுகிறாள். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏற மோஹித் பொறுமை இழக்கிறான். அவனது கத்தலை கணக்கிலும் எடுக்காத விஜி சீதனம் எடுத்தது பற்றியும், குழந்தை வேண்டும் என்று மோஹித் அங்கலாய்த்தது பற்றியும், தற்போது பராமரிக்கும் வேலை மட்டும் விஜிக்குரியதல்ல. அது மோஹித்துக்கும் உரியதுதான் என்றும் முழங்க, அவள் கூறியவற்றிலுள்ள உண்மையறிந்து மோஹித் மீண்டும் அவளிடமே சரணடைகிறான்.

விஜிக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட தினமொன்றில் மீண்டும் கணவன் மனைவிக்கடையில் நெருக்கம் அதிகமாகிறது. அந்தத் தருணத்தில் டேகெயாரில் விடப்பட்ட வினோத் அங்கு நிகழும் சில அசௌகரியங்களால் மீண்டும் வீட்டிலேயே இருக்கத் தொடங்குகிறான். இந்த முறையும் மோஹித்தின் பாடு பெரும் திண்டாட்டமாகிறது. ஆகவே பழைய ஆயாவை அழைத்துப் பார்த்தபோது அவள் தனக்குத் தெரிந்த பூவிழி என்ற இளம் பெண்ணை அனுப்பி வைக்கிறாள்.

விதி யாரை விட்டது. மீண்டும் தாய்மையடைந்த விஜி இந்தத் தடவை கருவை அழிக்க முயற்சிக்கிறாள். எனினும் காலம் பிந்தியதல் அது சாத்தியமாகவில்லை. கருவை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் பாதிப்படைந்த சிசு (பெண் குழந்தை) மூளை வளர்ச்சி குன்றி பிறக்கிறது. கெட்ட குடியே கெடும் என்பதற்கிணங்க இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கு முன் வேறொரு கோணத்தில் பிரச்சினை எழுகிறது. வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வந்த பூவிழி திருமணமாகாமலேயே கர்ப்பமாகிறாள். விஜி, அவளது பெற்றோர் அனைவரும் மோஹித்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தும்போது அதை மறுப்பதற்கான வழிகளற்று அநாதரவான நிலையில் இருக்கிறான் மோஹித். வாசகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகும் இந்த கதையோட்டத்தை நூலாசிரியர் தன் கற்பனைத் திறனால் மேலும் நகர்த்திச் செல்கிறார்.

அதாவது பூவிழி தான் காதலித்த பையனுடன் எல்லை மீறிப் பழகுகிறாள். அதனால் வந்த வினைதான் இதுவென்று விஜி அறிந்து கொண்டாலும் அவளது செயற்பாடுகளில் கனிவு இருக்கவில்லை. அவள் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். எதிர்பாராத ஒரு நாளில் மோஹித்தின் நண்பன் வந்து மோஹித்தைச் சந்திக்கிறான். அவனது பிரச்சினைகளை விளங்கிய நண்பன் மோஹித்தின் மாமி, மாமனாரை வரவழைக்கிறான். அதன் பின்பு விஜி பற்றி அவர்கள் சொல்லும் தகவல் தான் நாவலின் சிறப்பம்சமாக இருக்கிறது.

ஆம்! விஜி அவர்களது மகளே இல்லை. சிறு வயதில் அவளது பெற்றோர் விபத்தொன்றில் சிக்கி இறந்தபோது அதைப் பார்த்திருந்த விஜி முதன் முதலாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாள். அதன் பிறகு அவள் உயிராய் நேசித்த தோழியுடன் ஏற்பட்ட நட்பு, சடுதியாக அஸ்தமித்ததால் ஏற்பட்ட மன விரக்தி ஆகியவற்றால் பாதிப்படைந்து யாரோடும் பழகாமல் படிப்பொன்றே தனது மூச்சு என்று செயற்பட்டு வந்திருக்கிறாள். இதன்போது பல்கலைக்கழக சீனியரைக் காதலித்து அவர் பணக்கார சம்பந்தம் வந்ததால் விஜியை நிராகரித்த போது உள ரீதியாக மேலும் தாக்கப்படுகிறாள்.

பயம், வெறுப்பு, இயலாமை, ஏமாற்றம் என்பவை விஜியை மன நோயாளியாக்கிவிட்டது. அவளுடைய மென்மைகள் ஒழிந்து ஆண்மைக் குணம் ஒட்டிக்கொண்டது. இப்படியிருக்கும் போதுதான் விஜியின் அம்மாவுக்கு (வளர்த்த அம்மா) நெஞ்சு வலி ஏற்படுகிறது. அதைப் பார்த்து துடித்த விஜியிடம் இந்தச் சாட்டை வைத்து திருமணம் முடிக்க கெஞ்சுகின்றனர் அவளது பெற்றோர். ஏதோ நோக்கத்தில் அவள் ஒத்துக்கொள்ள, ஊரில் மதிப்பாகவும், கண்ணியமாகவும் வாழ்ந்த மோஹித்தை மருமகனாக்க முனைகின்றனர். காரணம் குடும்பப் பொறுப்பும், பொறுமையும், நற்குணமும் பொருந்திய மோஹித் விஜியை நன்றாக பார்ப்பான் என்ற நம்பிக்கை.

விஜியின் கடுமையான போக்குக்கு காரணம் அறிந்த மோஹித் வேதனையால் துடிக்கிறான். அவனுக்கு விஜி மீது கழிவிரக்கம் பிறக்கிறது. நண்பன் கூறியது போல டாக்டரிடம் காட்டி விஜியை முழுமையாக சுகப்படுத்திவிட வேண்டும் என்று அவன் மனம் திடசங்கற்பம் கொள்கிறது என்பதாக நாவல் நிறைவடைகிறது. கடைசி வரைக்கும் விஜி மீது வாசகர்கள் வெறுப்பு கொண்டாலும், இறுதியில் அவள் மீது அநுதாபம் கொள்வார்கள் என்பது ஐயமில்லை.

சீதனத்தை எதிர்த்தும், கணவன் மனைவிக்கிடையில் இருக்க வேண்டிய புரிந்துணர்வு பற்றியும் துல்லியமாக சித்தரிக்கிறது இந்த நாவல். திருமதி. சுமைரா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (நாவல்)
நூலாசரியை - சுமைரா அன்வர்
விலாசம் - கே.கே.எம். கார்டன்ஸ், தக்கியா ரோட், மல்லவப்பிட்டிய, குருணாகலை.
வெளியீடு - சிந்தனை வட்டம்
தொலைNசி – 0723 670515
விலை - 200 ரூபாய்

சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

இலங்கையில் சிறுவர்களுக்கான இலக்கியம் முன்னேற்றமாக வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள் ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைகளடங்கிய நூலை வெளியிட்டிருக்கின்றார். சிறுவர்கள் பலரின் முகத்தைத் தாங்கி புத்தகத்தின் அட்டை வெளிவந்திருக்கிறது. எக்மி பதிப்பகத்தின் வெளியீட்டில் 39 பக்கங்களை உள்ளடக்கி அமையப் பெற்றிருக்கும் இந்த நூல் வர்ண எழுத்துக்களில், கண்ணைக் கவரும் வர்ணச் சித்திரங்களுடன் அமைந்திருப்பதை சிறப்பம்சமாகக் கொள்ளலாம். ஓர் அபலையின் டயறி, இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு ஆகிய தொகுதிகளுடன் ரோஜாக்கூட்டம் நூலையும் தந்திருக்கிறார் நூலாசிரியர் திருமதி ஜரீனா முஸ்தபா அவர்கள். இந்நூலானது கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



சமூகத்தில் காணப்படும் சில தீய விடயங்களும், சூழலும் பிள்ளைகள் நல்லவற்றிலிருந்து விடுபட்டு தீய வழிகளில் செல்வதற்கு பெரும் துணை புரிகின்றன. பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் வழிகாட்டுதல்களில் பிள்ளைகள் இருந்தாலும் கூட தொலைக்காட்சி, கைத்தோலைபேசி, இன்டர்நெட் போன்றன வழிகேட்டிற்கு இழுத்துச் செல்கின்றமை கண்கூடான விடயங்களாகும். அத்தகையவற்றிலிருந்து பிள்ளைச் செல்வங்களை மீட்டிக்கொள்ள நல் அறிவுரைகளைப் பகிர்ந்து நிற்கும் நூல்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். அந்த வகையில் ரோஜாக்கூட்டம் என்ற நூலில் உள்ள சிறுவர் கதைகள் அழகிய அறிவுரைகளை அழகாக இயம்புகின்றன. உண்மையான நட்பு, அன்னையின் ஆசிர்வாதம், அப்பா கஞ்சத்தனம் வேண்டாம், சிறைப் பறவை, தண்டனை, கல்விக்கு காதல் தடை வேண்டாமே, உறுதி வேண்டும் ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் அமைந்திருக்கின்றன.

முதல் கதையான உண்மையான நட்பு என்ற கதை துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பைப் பற்றி பேசுகின்றது. குமார் என்ற பணக்காரச் செல்வனுக்கு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் குமாரின் தாத்தா. ஒரு விபத்தில் குமாரின் தந்தையும், தாயும் இறந்துவிட அவன் பாட்டனின் பராமரிப்பில் வளருகிறான். அத்துடன் பாடசாலையிலும் குமார் முரடனாக காணப்பட்டான். நண்பர்களிடம் செல்வாக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிதடிகளுக்கும் சென்றுவிடுவான். இத்தனைக்கும் இவன் நான்காம் தரம் படிக்கும் சின்ன மாணவன். அந்த வகுப்பில் சதீஸ் என்றொரு ஏழை மாணவனும் இருக்கிறான். அவனை எல்லோரும் ஆப்பக்காரா என்று கிண்டல் செய்வார்கள். ஒருநாள் குமாரின் தாத்தா இறந்துவிட அவனுக்கிருந்த பணச்செல்வாக்கும் குறைகிறது. அவனிடம் பணமில்லை என்றதும் மற்ற நண்பர்கள் அவனைவிட்டு ஒதுங்கிவிட, சதீஸ்தான் குமாரின் நண்பனாகிறான். அவன் குமாரை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரித்து பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்பதை உணர்த்துகிறான்.

அன்னையின் ஆசிர்வாதம் என்ற கதை பெண் பிள்ளைகளுக்கான அறிவுரையைக்கூறி நிற்கின்றது. பஸரியா, இமாஸா என்ற ஒத்த வயதுடைய இரு நண்பிகளை வைத்து இக்கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. பாடசாலைவிட்டு வரும்போது இமாஸாவின் தாயாருக்கு சுகமில்லாததால் பஸரியாவின் தாயும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக அறிகின்றனர். பிறகு பஸரியா தன் வீட்டுக்குச்சென்று சமைத்து, துணிகளைத் துவைத்து, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள். ஆனால் இமாஸாவின் வீடு இருந்தபடி குப்பையாகவே இருக்க, அவள் பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறாள். பஸரியா சாப்பிடடுவிட்டு இமாஸாவின் வீட்டுக்குச் சென்றதும் இமாஸாவும், அவளது தம்பியும் பசியில் இருப்பதைக் கண்டு, தான் சமைத்த சாப்பாட்டைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அதைப் பார்த்து இமாஸாவுக்கு சரியான ஆச்சரியம். தானும், பஸரியாவும் ஒரே வயதுடையவர்கள். எனினும் அவளால் அனைத்து வீட்டு வேலைகளையும் சுயமாகச் செய்ய முடிகிறதே என்று எண்ணி அதைப்பற்றி வினவுகிறாள். பஸரியா பாடசாலை செல்வதற்கு முதல் தன்னால் ஆன அனைத்து வேலைகளையும் தன் தாயாருக்கு செய்து கொடுத்துவிட்டுத்தான் போவாள். அதனால் மகிழ்வடையும் தாய் அவளை அணைத்து முத்தமிட்டு வழியனுப்புகிறாள். அந்த ஆசிர்வாதத்தால் பாடசாலைக்கும் சந்தோஷமாகச் சென்று படிப்பிலும் கவனம் செலுத்த பஸரியாவால் முடியுமாக இருக்கின்றது என்பதை அறிந்த இமாஸா இனி தானும் தனது தாயாருக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றாள்.

இவ்வாறு சின்னஞ்சிறார்கள் வாசித்து மகிழக்கூடியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு சொல்லப்படக்கூடிய ஆலோசனைகள் கதைப் பாங்கில் அமைந்திருப்பதால் அது வாசிப்புக்கு வழிகாட்டுவதுடன் பிஞ்சு இதயங்களில் ஆணித்தரமாக பதிய வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. வெறுமனே கார்ட்டூன்களைப் பார்த்து பொழுதைப் போக்கும் சிறுவர்கள் இவ்வாறான தரமுள்ள புத்தகங்களை இணங்கண்டு வாசிப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். நூலாசிரியர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - ரோஜாக்கூட்டம்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் - ஏ.சி. ஜரீனா முஸ்தபா
வெளியீடு - எக்மி பதிப்பகம்
தொலைபேசி - 011 5020936
விலை - 150 ரூபாய்