Wednesday, January 18, 2012

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை

மணிமேகலைப் பிரசுரத்தின் வெளியீடாக 46 தலைப்புக்களை உள்ளடக்கி 275 பக்கங்களில் காலக் கண்ணாடியில் ஒரு கலை இலக்கியப் பார்வை என்ற திரு. கே.எஸ் சிவகுமாரன் அவர்களின் நூலை வாசித்தபோது எனக்குள் ஆச்சரியம். காரணம் (இதுவரை) தமிழில் திறனாய்வு சார்ந்த 23 நூல்களை இவர் வெளியிட்டிருக்கின்றமைதான்.

முதல் கட்டுரை பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் சிங்களத்தில் எழுதியதன் மொழிபெயர்ப்பு ஆகும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார் திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்கள். அதைத் தமிழில் தந்தந்திருக்கிறார் முஹம்மது யாகூப் என்பவர். பேராசிரியர் திஸ்ஸ காரியவசம் அவர்கள் எழுதியிருக்கும் இந்த கட்டுரையில் இலங்கையில் நாவல், சிறுகதைகளின் வளர்ச்சி பற்றிய விரிவான பார்வை பதியப்பட்டிருக்கிறது.



இன ஒற்றுமை இலக்கிய வழி என்ற தலைப்பில் இரண்டாவது பத்தி எழுதப்பட்டிருக்கிறது. மக்களின் மொழி, பிரதேச வாதம் போன்றவற்றால் ஓரினத்தின் உள்ளார்ந்த அனுபவங்கள், ஒற்றுமை என்பன மறுதலிக்கப்படுகின்றன. இதற்கான காரணம் புரிந்துணர்வின்மையே ஆகும். அவற்றை இலக்கியத்தினூடாக நிவர்த்தி செய்வதற்கு படைப்புக்கள் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்கிறார் நூலாசிரியர்.

'ஈரினத்தவரின் பொதுப் பிரச்சனைகளை ஈரினத்தவரும் இலக்கிய வழியாக அறிந்துகொள்ளும்போது, ஒற்றுமை ஏற்பட வேண்டிய அவசியம் உணரப்படும். இவ்வாறு உள்ளிருந்து முகிழும் இந்த உணர்வை இலக்கியங்கள் வெளிப்படுத்தும்போது நடைமுறையில் இன ஒற்றுமை சாத்திய வகை ஏற்படுகிறது' என்கிறார் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள்.

எழுத்தாளர் நந்தி பற்றி திரு. ப. ஆப்தீன் மற்றும் திரு. கே. பொன்னுத்துரை ஆகியோர் இணைந்து வெளியிட்ட பேராசிரியர் நந்தியும் மலையகமும் என்ற நூல் இலக்கிய மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் மிகவும் பயனுள்ளது என்று குறிப்பிடும் நூலாசிரியர் 'நமக்குள்ளே நாம் பழங்கதைகள் பேசி மகிழ்வதுண்டு. தொடர்ந்தும் பேச வேண்டும். பேசியும் வருகிறோம்.

பழமையின்றி புதுமையில்லை. புதுமையின் பிறப்பு பழமையின் அடித்தளத்திலிருந்துதான் ஏற்படுகிறதென்பது வரலாற்றுக் கண்ணோட்டமுடையவர்கள் கண்ட முடிவு' என்ற தனது கருத்தையும் சொல்லிருக்கிறார்.

போதை தரும் எழுத்து நடை என்ற மகுடத்தில் லா. ச. ரா, மௌனி ஆகியோரின் சிறுகதைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. அவர்களது எழுத்தில் பெரும்பாலும் நிஜவாழ்க்கை பற்றிய கருத்துக்கள் இல்லாவிட்டாலும் அதை வாசிக்கும்போது இனிய மயக்கம் ஏற்படுகின்றது என்று கூறுகிறார் நூலாசிரியர். உதாரணமாக லா. ச. ரா வின் பச்சைக் கனவு தொகுதியில் இடம்பெற்ற கதையிலிருந்து ஒரு பகுதி வாசகர்களுக்காக தரப்பட்டிருக்கிறது.

'உடல்மேல் உரோமம் அடர்ந்தது போன்று பசும் புற்றரை போர்த்து நின்ற நான்கு மண் குன்றுகள், அவை நடுவில் தாமரை இலைகளும் கொடிகளும் நெருங்கிப் படர்ந்த ஒரு குளம். சில்லிட்ட தண்ணீரில் காலை நனைத்துக்கொண்டு அண்ணாந்து படுத்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் பச்சைக் கத்தாழையும் அதன் பக்கத்தில் சப்பாத்திப் புதரும். சப்பாத்தியில் இரத்தக்கட்டி போன்ற பூவில் ஒரு பச்சை வண்டு ரீங்காரித்துக்கொண்டு வந்து மோதிற்று. ராமா ராமா ராமா. இன்னிக்கு என்ன உங்களுக்கு? இப்போதானே கூடாரத்தில் உக்கார வைத்துவிட்டுப் போனேன். மறுபடியும் வெய்யிலிலே குந்திக் கொண்டிருக்கிறிPங்களே. உங்களுக்கென்ன நிலா காயறதா?'

வைத்தியர் ஏ. எம். அபூபக்கர் அவர்கள் இஸ்லாமிய நெறி சார்ந்த பாடல்களையும், நூல்களையும் தமிழுலகுக்குத் தந்தவர். அவரது முறையீடு என்ற புத்தகம் சமயச் சார்புடைய பாடல்களை உள்ளடக்கியதொரு தொகுதியாகும். அரபுப் பதங்கள் பாடலில் காணப்படுகின்றன. அவற்றிற்கான தமிழ் விளக்கங்களும் அதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் உள்ளடங்கியுள்ள பாடல்களின் விளக்கங்களும், முன்னுரை, அணிந்துரை வழங்கியவர்களின் விபரங்களும் இந்தக் கட்டுரையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

மூத்த இஸ்லாமிய இலக்கியவாதிகளில் குறிப்பிட்டுச் சொல்லக் கூடியவர்களுள் கலைவாதி கலீல் அவர்களும் முக்கியமான ஒருவர். மன்னாரைச் சேர்ந்த இவர் கவிதை, ஓவியம், சிறுகதை ஆகியவற்றில் மிகுந்த ஈடுபாட்டைக் கொண்டவர். இளம் எழுத்தாளர்களின் இலக்கிய வளர்ச்சிக்கு தன்னாலான எல்லா உதவிகளையும் செய்யத் தயங்காதவர். கலைவாதி கலீல் அவர்களைப் பற்றியும், இவரது கவிதைகள் சிலவற்றையும் மன்னாரிலிருந்து ஒரு மனிதாபிமானக்குரல் என்ற தலைப்பில் திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் எழுதியிருக்கின்றார்.

கருத்துக்களைத் தெரிவிக்கும் பாங்கில் ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்ற தலைப்பில் சில யதார்த்த விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்றைய சில எழுத்தாளர்கள் தமிழ் சொற்பதங்கள் குறித்து அதிக அக்கறை காட்டுவதில்லை. நுண்ணிய சில வேறுபாடுகள் பற்றி அறிய முற்படுவதில்லை. அவ்வாறானதொரு வசனத்துக்கு உதாரணமாக திறனாய்வு - நூல் மதிப்புரை போன்றவற்றைக் குறிப்பிட முடியும். இவை பற்றி நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் அவர்கள் சொல்லும் விளக்கம் பின்வருமாறு:-

'திறனாய்வு, விமர்சனம், புத்தக மதிப்பரை, நூல் நயம், நூல் ஆய்வு என்றெல்லாம் மகுடமிட்டு நூல்கள் பற்றி நமது அபிப்பிராயத்தைத் தெரிவித்து வருகிறோம். ஆயினும் இப்பதங்களுக்கும் தொடர்புள்ள வேறு சில பதங்களுக்கும் இடையிலே சில நுண்ணிய வேறுபாடுகள் இருப்பதை நாம் உணர்வதில்லை.

ஆராய்ச்சி, ஆய்வு, இலக்கிய வரலாறு போன்றவை மிக உயரிய மட்டத்தில் மேற்கொள்ளப்படும் திறனாய்வு முயற்சிகளாகும். இலக்கியத் திறனாய்வும் அவ்விதமானதே. புத்தக மதிப்புரை, நூல் நயம், நூல் விமர்சனம் போன்றவை ஒருபடி கீழே செயற்படும் எழுத்து ஆகும். பத்தி எழுத்துக்கள் அதிலும் கீழ் மட்டமுடையவை. இன்னும் கேலிக்கூத்தான கணிப்பு எதுவென்றால் நையாண்டி, நக்கல், மொட்டைக் குறிப்புக்கள் போன்றனவும் விமர்சனம் என அழைக்கப்படுவதுதான்' என்கிறார். எதைப் பற்றியும் ஒரு தெளிவான சிந்தனை இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது இந்தக்கட்டுரை.

தினகரன் பத்திரிகையின் முன்னாள் அசிரியரான திரு. கே.வி. சிவா சிவசுப்பிரமணியம் அவர்கள் பற்றிய தகவல் உள்ளடங்களாக அவரது இலக்கிய ஆளுமை போன்ற பல விடயங்களும் ஆராயப்பட்டிருக்கின்றன. அதில் சிவா சிவசுப்பிரமணியம் வெளிப்படையாகவே இடதுசாரிச் சிந்தனையுடையவர். இவர் அரசாங்கத்தில் ஓர் எழுதுவினைஞராகச் சேர்ந்து, பல இடங்கிலும் தொழில் பார்த்து, உயர் பதவி பெற்றுத் தனது 45வது வயதில் ஓய்வு பெற்றார் என்று அறிகிறோம். அதன் பின்னர் தன்னந்தனியனாக நின்று தேசாபிமானி என்ற இடதுசாரிக் கட்சி வாராந்த இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். இவர் மொழி வன்மை கொண்ட தமிழாக்க எழுத்தாளர். மும்மொழியிலும் பரிச்சயமுடைய இதழியலாளர். இவரைப் பற்றிய இந்தக் கட்டுரை மும்மொழி பரிச்சயமுள்ள இதழியலாளர் கே.வி. சிவா சிவசுப்பிரமணியம் என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்டிருக்கிறது.

இலக்கிய நெஞ்சங்களின் பெரும் அபிமனத்தைப் பெற்ற புரவலர் ஹாசிம் உமர் அவர்களைப் பற்றியும் இந்நூலில் அறிய முடிகிறது. புத்தகம் வெளிவராத கலைஞர்களின் இலக்கியத் தாகத்துக்கு அமிர்தமாகி இருக்கின்ற புரவலர் ஹாசிம் உமர் அவர்கள் பிறப்பால் மேமன் இனத்தைச் சேர்ந்தவர்.

தமிழ்ப் பற்றுடைய இவரைப் பற்றி பிறர் என்ன கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தொகுத்து, கலைஞர் கலைச் செல்வன் அவர்கள் 'புரவலர் சில பதிவுகள்' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதைப் பார்த்தால் புரவலரின் மேன்மையையும், ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம். இலக்கியக் கூட்டங்களில் முதல் பிரதி பெற்று எழுத்தாளர்களை கௌரவிக்கும் திரு. ஹாசிம் உமர் அவர்களின் மேலான இலக்கியச் சேவையினைப் பற்றி நூலாசிரியர் கே. எஸ். சிவகுமாரன் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்.

'புரவலர் புத்தகப் பூங்கா என்ற அமைப்பின் மூலம் இதுவரை நூல்களை வெளியிட முடியாது தவிக்கும் ஆற்றல்மிகு எழுத்தாளர்களின் எழுத்துப் பிரதிகளை வாங்கிப் பெற்று, இலவசமாக தன்னுடைய செலவில் அச்சிட்டு சம்பந்தப்பட்ட எழுத்தாளரிடமே அவற்றைக் கையளித்துவிடுவார். அந்த எழுத்தாளர்களும் தாம் அந்த நூலைப் பெற்று விற்று பணத்தைப் பெற்றுக்கொள்வர். இவர் ஓர் அற்புதமான மனிதாபிமானி. பெரும் செல்வந்தர். வர்த்தக நிறுவனங்களின் நிர்வாக அதிபர். இவர் நீடூழி வாழ்ந்து தனது அளப்பரிய பணிகளைத் தொடர வேண்டும்'.

இது போன்று இங்கே குறிப்பிடாத இன்னும் பல பயனுள்ள விடயங்கள் புத்தகத்தில் காணப்படுகின்றன. காலக் கண்ணாடியில் கலை இலக்கியப் பார்வையைக் காண விரும்பும் ஆர்வலர்கள், திரு கே. எஸ். சிவகுமாரன் அவர்களது இந்த நூலைப் படித்துப் பயன் பெற வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - காலக் கண்ணாடியில் ஒருகலை இலக்கியப் பார்வை
நூலாசரியை - கே.எஸ். சிவகுமாரன்
முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06
வெளியீடு - மணிமேகலைப் பரிசுரம்
தொலைபேசி - 011 2587617
விலை - 300 ரூபாய்

யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்

யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் நிஜங்களின் தரிசனம்

சிறுகதை உலகில் தனக்கென்றதொரு தனியிடத்தை பெற்றிருக்கும் திருமதி. பவானி சிவகுமாரன் அவர்களின் மூன்றாவது சிறுகதை தொகுதியான நிஜங்களின் தரிசனம் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கிறது. யதார்த்தமான 15 கதைகளை உள்ளடக்கிய இந்தத் தொகுப்பு மீரா பதிப்பகத்தின் வெளியீடாக 150 பக்கங்களில் அமைந்திருக்கிறது.

மரம் வைத்தவன், தேடலே வாழ்க்கையாய் ஆகிய தொகுப்புக்களை ஏற்கனவே வெளியிட்ட நூலாசிரியர் பற்றி பேராசிரியர் சபா ஜெயராசா அவர்கள் தனது உரையில் கீழுள்ளவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

சம காலத்தைய மத்திய தரத்தினரின் வாழ்வு இடுக்கினுள் நிகழும் பல்கோணச் சிதறல்களின் தனித்தனிப் பரவல்கள் ஒவ்வொரு சிறுகதைக்குமுரிய தெரிவாகவும், கருவாகவும் அமைகின்றன. அவற்றின் இயல்பு முக்கியத்துவத்தை அடியொட்டி நெட்டாங்கு மற்றும் அகலாங்கு விபரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

படைப்பாளி தன்னை வானத்திலிருத்திக்கொண்டு இலக்கியம் படைக்க முடியாது. தன்னைச் சூழ நடப்பனவற்றிற்கு இலக்கிய வடிவம் கொடுக்கும்போதே அதை வாசிக்கும் வாசகன் அக் கதாபாத்திரங்களை தன் அயலவனாகவோ, உறவினராகவோ, அறிமுகமானவனாகவோ அடையாளம்காண முற்படுகின்றான். அதுதான் அக்கதையின் வெற்றி. யதார்த்தம் இல்லாத எதுவும் காலவோட்டத்தில் காணாமல் போய்விடும் என்று தனது கருத்தை முன்வைத்திருக்கும் திருமதி பவானி அவர்கள் உண்மையில் மனிதநேயமிக்க படைப்பாளி என்பதை அவருடன் பழகிய அனைவரும் உணர்ந்திருப்பர் என்பது திண்ணம். எழுத்துக்கும் செயலுக்கும் வேறுபாடு காட்டாதவனே உண்மை மிக்க கலைஞனாக இருக்க முடியும். அந்த அடிப்படையில் பவானி சிவகுமாரன் அவர்கள் தனது எழுத்துக்கள் போலவே செயற்பாடுகளிலும் உண்மையாக இருக்கிறார்.

சொப்பனத் திருமணம் என்ற முதல் கதையானது திருமணக் கனவுகளுடன் வாழ்ந்த இந்துமதி என்ற பெண்ணின் வாழ்வை அடிப்படையாகக்கொண்டது. கொழும்பில் வீடு வேண்டும் என்றும், நிறம் குறைவு என்றும் இந்துமதியின் திருமணம் காலத்தின் கோலத்தால் தள்ளிப்போகிறது. அன்றாட வாழ்க்கையுடன் வாழப் பழகிக்கொண்ட 32 வயதான இந்துமதி இறுதியாக தோழியின் வழிகாட்டலில் காண்டம் பார்க்கச் செல்கிறாள். அங்கே அவளது ஓலைகள் வாசிக்கப்பட்டு ராகு சர்ப்ப தோஷம் இருப்பதாகவும் அதற்குப் பரிகாரமாக ஒன்பது சுமங்கலிக்கு தானமும், ஒன்பது குழந்தைகளுக்கு இனிப்பு, உடைகள், புத்தகம் ஆகியவை ஒன்பது வகையாகவும் கொடுக்க வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக பஸ்ஸிலிருந்து இறங்கி தோழி வீட்டை அடைவதற்காக பாதையைக் கடக்க முற்படுகின்றாள் இந்துமதி. பாதுகாப்பு வலயத்தைக் காரணம் காட்டி ஒருவழிப் போக்குவரத்துக்கு மாற்றப்பட்டிருந்த வீதியால் வந்த வாகனம் இந்துமதியை தூக்கியெறிகிறது. கல்யாணக் கனவுகளுடன் வந்தவள் இறுதியில் இறந்துபோகிறாள் என்று அக்கதை நிறைவடைகிறது.

தோற்ற மயக்கங்கள் என்ற சிறுகதை இன்றைய மாணவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்கின்றது. தனியார் வகுப்புக்களுக்குப் போகும் சில மாணவர்கள் கைத்தொலைபேசி காதை விட்டு அகலாதபடி உலகை மறந்து கதைக்கின்றனர். 'இயர்போனை' மாட்டிக்கொண்டு தமக்கு மாத்திரம் தான் பாடல் கேட்கத் தெரியும் என்ற வகையில் நடக்கின்றனர். புகையிரத பாதைகளில் தன்னை மறந்தபடி பாடல் கேட்டவாறு சென்ற மாணவர்கள் பலர் புகையிரத விபத்துக்களில் சிக்கி உயிரிழந்த சம்பவங்கள் ஏராளம் இடம்பெற்றிருக்கின்றன. ஆடை விவகாரத்தில் மாணவிகள் அடிமட்டத்தில் இருக்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையும் ஏற்பட்டிருக்கிறது. இவ்வாறான விடயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருக்கும் இச் சிறுகதை தாய் தந்தையர் படும் கஷ்ட நஷ்டங்கள் பற்றி விளக்குவதோடு பிள்ளைகள் பின்விளைவுகளை யோசிக்காமல் தனக்கு பிடித்தவர்களுடன் வாழ்க்கையை ஆரம்பிக்குமளவுக்கு துணிச்சலடைந்து விடுகிறார்கள் என்ற உண்மையையும் சொல்லி நிற்பதை அவதானிக்க முடிகிறது.

பெண்களுக்கு உத்தியோகம் அவசியமா இல்லையா என்ற பட்டிமன்றம் இன்றுவரை நடந்துகொண்டுதான் இருக்கிறது. பொருளாதார மேம்பாட்டுக்காக பெண்கள் தொழில் பார்க்கலாம் என்று ஒரு சிலரும், பெண்கள் ஆணுக்கு குறைந்தவளல்ல அவளும் தொழில் செய்யலாம் என்று இன்னொரு சாராரும், பெண்கள் வீட்டிலிருப்பதே சிறந்தது என வேறு சிலரும் கூறி வருகின்றனர். எது எப்படிப்போனாலும் பிள்ளைகளை வளர்த்தல், சமைத்தல், வீட்டு வேலைகள் செய்தல் போன்ற பொறுப்புக்கள் பெண்களைச் சார்ந்தததாக இருக்கின்றது. கோடைகாலத் தூறலகள் என்ற சிறுகதையில் வரும் தயாளினியும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஓய்வொழிச்சலின்றி இருக்கிறாள். அப்படியிருக்க இன்னொரு தலையிடியாக வந்து சேர்கிறாள் கணவனின் ஒன்றுவிட்ட சகோதரியான ஆனந்தி. வெளிநாடு போவதற்காக விசா வரும் வரை ஆனந்தி தயாளினியின் வீட்டில் தங்குவதாக ஏற்பாடு.

ஆனந்தியின் பிள்ளைகள் செய்கின்ற அட்டகாசங்கள் தயாளினியை கோபம் கொள்ளச்செய்தாலும் தயாளினியின் வேலைகளில் முக்கால்வாசியை ஆனந்தி பொறுப்பேற்கிறாள். டே கெயாரில் விடப்படும் தயாளினியின் மகனையும் ஆனந்தியே வளர்க்கிறாள். இவ்வாறிருக்க எட்டு மாதங்களின் பின் ஆனந்திக்கு விசா வருகிறது. அவள் புறப்படும் நாளுக்கு முந்தின நாள் இரவு தயாளினியிடம்,

'நான் தனியப் பிள்ளைகளோட சண்டைக்க எவ்வளவு கஷ்டப்பட்டன். ஏழு வருஷம்... இவ்வளவு நாள் நானும் கணவரும் பிரிஞ்சிருப்பம் என்று நினைக்கல்ல. நீங்க இல்லாட்டா நான் கொழும்பில கஷ்டப்பட்டிருப்பன். நானோ பிள்ளைகளோ தெரியாம ஏதாவது பிழை விட்டிருந்தால் மனசுல வச்சிருக்காதேங்கோ' என்று அழும் காட்சி மனதை நெருடுகிறது.

இவ்வாறான உரையாடல்களை உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கும் நூலாசிரியர் பவானி சிவகுமாரன் அவர்கள் ஆனந்தியின் பிள்ளைகள் வீட்டிலுள்ள டெப், க்ளாஸ் ஆகியவற்றை உடைக்கையில் 'பிள்ளைகளாம் பிள்ளைகள். சரியான குரங்குகள். தாயும் பிள்ளைகளும் சரியான பட்டிக்காடுகள்' என்றவாறு நகைச்சுவையூட்டக்கூடிய சிலவரிகளை எழுதியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியில் ஆனந்தி சென்றுவிட இதுவரை ஆனந்தியிடம் ப்ரியமாக இருந்த தயாளினியின் மகன் மிகவும் சோர்வுற்றுப் போகிறான். அவனது முகத்தில் சந்தோஷம் காணாமல் போகிறது. அவன் தாயிடம் வேலைக்குப்போக வேண்டாம் என்று கூற தயாளினி பிள்ளைக்கும் தனக்குமாக கீழுள்ளவாறு சமாதானம் கூறிக்கொள்கிறாள் என்றவாறு கதை நிறைவடைகிறது.

'அம்மா வேலைக்குப் போனாத்தானே பிள்ளைக்கு வடிவான டீ சேட், ஷூஸ், ஸ்கூல் பேக் வாங்கலாம். பிள்ளையின் ரூமுக்கு ஏஸி போடுவமா? கார் வாங்கலாம். ராகவ் அண்ணா மாதிரி நிறைய படிக்கலாம்...'

நிழல் கொஞ்சம் தா என்ற கதை பாட்டி பேரப்பிள்ளைகளுக்கு கதை சொல்வதினூடாக நற்பழக்க வழக்கங்களை புகட்டுவதாய் அமைந்துள்ளது. மகன் மயூரனுடன் வசிக்கும் அந்தத்தாய் தனது சகோதரியின் மகளின் திருமணத்துக்காக தன் தாலியையும் காப்பையும் கொடுக்கின்றாள். அதையறிந்த மகன் தாயுடன் வாக்குவாதப்படுகின்றான். இரவு பேரப்பிள்ளைகள் பாட்டியிடம் கதை கேட்கப்போகிறார்கள். அவர் கூறும் கதை பாண்டவர் பற்றியது. அதில் தர்மனிடம் எந்தத் தம்பியை உயிருடன் பெற்றுக்கொள்ளப் போகிறாய்? என்று தர்மதேவதை கேட்டபோது, தர்மர் நகுலனைத் தருமாறு கேட்கிறார் காரணம் ஷஎனது தாய் குந்தி தேவிக்கு நான் இருப்பது போல எனது சிற்றன்னைக்கு அவரது மகன் நகுலன் இருக்கட்டுமே| என்கிறார். அதைக்கேட்டு தர்மதேவதை நான்கு தம்பிமாரையும் உயிரோடு திருப்பிக்கொடுக்கிறது. இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்து பாட்டி கதை சொல்லி இறுதியில் உன்னைப்போல் பிறரை நேசி என்ற தத்துவத்தை விளக்குகிறாள். இதைக் கேட்டுக்கொண்டிருந்த மகன் மயூரன் மனம் மாறி இறுதியில் தாயிடம் இவ்வாறு கூறுகிறான்.

'அம்மா நான் நாளைக்கு வேலையால வரேக்க ரெடியா இருங்கோ. பிள்ளைகள் சின்னன்ல போட்ட காப்பு, மோதிரம் எல்லாம் சும்மாதானே இருக்கு. வெறுங்கையோட இருக்க வேண்டாம். உங்களுக்கு காப்பு வாங்கி வரலாம்...'

ஒரு சின்ன விடயத்தை வைத்து அழகிய கதையை ஆக்கும் திறமையுள்ள பவானி சிவகுமாரன் அவர்கள் மேலும் பல படைப்புக்களைத்தர வேண்டுமென்று வாழ்த்துகிறோம்!!!

நூலின் பெயர் - நிஜங்களின் தரிசனம்
நூலாசரியை - பவானி சிவகுமாரன்
விலாசம் - 37 ஏ, ஸ்ரீ மகா விகார வீதி, களுபோவில, தெஹிவளை.
வெளியீடு - மீரா பதிப்பகம்
தொலைNசி - 011 2721382
விலை - 300 ரூபாய்

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் - நாவல்

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் நாவலுக்கான இரசனைக்குறிப்பு

சிந்தனை வட்டத்தின் 339 ஆவது வெளியீடான வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவல் 12 அத்தியாயங்களை உள்ளடக்கி 88 பக்கங்களில் அமைந்திருக்கிறது. 2003ம் ஆண்டு எண்ணச் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியையும், 2009ம் ஆண்டு புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற நாவலையும் வெளியிட்ட திருமதி சுமைரா அன்வர், தனது மூன்றாவது வெளியீடாக வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவலைத் தந்து, இலக்கியத் துறையில் தனக்கான பாதையை விரிவுபடுத்தியுள்ளார்.



நாவலின் நாயகன் மோஹித், தங்கைகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்காகவும், தனது இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் திருமணத்தை தள்ளிப்போடுகிறான். அவனது மனதில் சீதனமில்லாமல் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் நிலைத்து நிற்கிறது. தங்கைகள் திருமண வயதை அடைந்து நிற்கையில் மோஹித்துக்கு பணக்கார இடத்திலிருந்து திருமணம் பேசி வருகிறார்கள். குடும்பப் பொறுப்புக்களாலும், பெற்றோரின் அநாதரவான நிலையினாலும் மோஹித் தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து அசைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக சுமைரா அவர்கள் கையாண்ட கீழுள்ள உவமானம் சிறப்பாக இருக்கிறது.

'மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய மல்லிகை மொட்டுக்கள் வண்டுகளுக்கு சீர் கொடுக்க வழியில்லாததால் ஏக்கங்களைச் சுமந்து அண்ணன் நான் கரை சேர்ப்பேன் என்ற அசட்டு நம்பிக்கையில்...' ஆக மொத்தத்தில் புரட்சிகரமாக சீதனம் வேண்டாம் என்று முழங்கியவன் சகோதரிகளின் திருமணத்தை ஒப்பேற்ற வேண்டுமே என்ற இக்கட்டான நிலையில் விஜி என்ற பணக்காரப் பெண்ணை திருமணம் செய்கிறான்.

பல விடயங்களில் விஜிக்கும் மோஹித்துக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. மோஹித் அழகியலை ரசிப்பவன். விஜி அறிவியலை ரசிப்பவள். இவன் கூட்டுக் குடும்ப அபிமானி. அவள் தனிமை விரும்பி. அவன் தார்மீகமாக சிந்தனை செய்ய, விஜியோ தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறாள். விஜி தன்னை ஆள்கிறாள் என்ற எண்ணமும், சீதனத்தை வாங்கி விட்டோமே என்ற தாழ்வுச் சிக்கலும் மோஹித்தை வருத்துகிறது. அத்துடன் விஜி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சொன்னமை அவனுள் பெரிய இடியை இறக்குகிறது. தன் நிலையை மோஹித் இவ்வாறு உணர்கிறான்.

'நான் விற்கப்பட்ட பண்டம். அவள் வாங்கிய எஜமானி', 'வித்த மாடாயிற்றே... பெற்றோருக்கு என்னை உரிமை பாராட்டவா முடியும்?'

தொழிலிருந்து வேறு கிளைக்கு விஜி மாற்றம் பெற்றுப் போகிறாள். அவள் தன் கணவனை தன்னுடன் வந்து இருக்குமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஊரின் கேலிப் பேச்சுக்குப் பயந்தும் பெற்றோர்கள் வேதனைப்படுவார்கள் என்று உணர்ந்தும் மௌனமாக அவளுடன் செல்கிறான் மோஹித். சமைப்பதில் உதவிசெய்தல், மளிகைச் சாமான் வாங்கி வருதல், விஜியை ஆபிசுக்கு அழைத்துச் செல்லல், வீட்டிற்கு அழைத்து வருதல், கூட்டங்கள் கொண்டாட்டங்களுக்கு கூட்டிப் போதல் போன்ற சில்லறை வேலைகள் யாவும் மோஹித்தின் தலையில் சுமத்தப்படுகின்றது.

காதல் உணர்வினால் மனைவிக்கு பணிவிடை செய்யாவிட்டாலும், அடிபணிதல் என்ற உணர்வில் அவளுக்கான வேலைகளை செய்து வருகிறான் மோஹித். காலங்கள் கழிய அவன் அப்பாவாகப் போவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறான். எனினும் விஜி சொல்லும் பதில் அவனை மட்டுமன்றி வாசிப்போரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவளுக்கு குழந்தை தேவையில்லை என்றும், அதை கலைக்கப் போவதாகவும் கூறுவதுமே அதற்கான காரணம். எனினும் மனசாட்சியின் உறுத்தலுக்கு விஜி மசிந்ததால் ஆண் குழந்தையொன்று ஆரோக்கியமாக பிறக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் விஜியின் பணத்தைக் கொண்டு மோஹித்தின் சகோதரிகளின் திருமணமும் செவ்வனே நடைபெறுகிறது. விஜியின் குழந்தையான வினோத் விஜியின் பராமரிப்பிலின்றி மோஹித்தின் பராமரிப்பில் விடப்படுகிறான். அடிக்கடி வேலைக்கு லீவு போடுவது பெரும் தொல்லையாகிவிட ஒரு ஆயாவை நியமிக்கிறான் மோஹித்.

விஜியின் சந்தேகக் குணம் ஆயாவையும், மோஹித்தையும் இணைத்து தப்பான கண்ணோட்டத்தில் சிந்திக்கிறது. பெண்களுக்குரிய மரியாதையை அறிந்ததாலும், சகோதரிகளுடன் பிறந்ததாலும் மோஹித்தால் இதைத் தாங்க முடியாமல் போகிறது. அதை அறிந்து, மோஹித்தை விடவும் வயதில் மூத்த ஆயா வீட்டிற்கு வராமல் இருந்து விடுகிறாள். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏற மோஹித் பொறுமை இழக்கிறான். அவனது கத்தலை கணக்கிலும் எடுக்காத விஜி சீதனம் எடுத்தது பற்றியும், குழந்தை வேண்டும் என்று மோஹித் அங்கலாய்த்தது பற்றியும், தற்போது பராமரிக்கும் வேலை மட்டும் விஜிக்குரியதல்ல. அது மோஹித்துக்கும் உரியதுதான் என்றும் முழங்க, அவள் கூறியவற்றிலுள்ள உண்மையறிந்து மோஹித் மீண்டும் அவளிடமே சரணடைகிறான்.

விஜிக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட தினமொன்றில் மீண்டும் கணவன் மனைவிக்கடையில் நெருக்கம் அதிகமாகிறது. அந்தத் தருணத்தில் டேகெயாரில் விடப்பட்ட வினோத் அங்கு நிகழும் சில அசௌகரியங்களால் மீண்டும் வீட்டிலேயே இருக்கத் தொடங்குகிறான். இந்த முறையும் மோஹித்தின் பாடு பெரும் திண்டாட்டமாகிறது. ஆகவே பழைய ஆயாவை அழைத்துப் பார்த்தபோது அவள் தனக்குத் தெரிந்த பூவிழி என்ற இளம் பெண்ணை அனுப்பி வைக்கிறாள்.

விதி யாரை விட்டது. மீண்டும் தாய்மையடைந்த விஜி இந்தத் தடவை கருவை அழிக்க முயற்சிக்கிறாள். எனினும் காலம் பிந்தியதல் அது சாத்தியமாகவில்லை. கருவை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் பாதிப்படைந்த சிசு (பெண் குழந்தை) மூளை வளர்ச்சி குன்றி பிறக்கிறது. கெட்ட குடியே கெடும் என்பதற்கிணங்க இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கு முன் வேறொரு கோணத்தில் பிரச்சினை எழுகிறது. வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வந்த பூவிழி திருமணமாகாமலேயே கர்ப்பமாகிறாள். விஜி, அவளது பெற்றோர் அனைவரும் மோஹித்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தும்போது அதை மறுப்பதற்கான வழிகளற்று அநாதரவான நிலையில் இருக்கிறான் மோஹித். வாசகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகும் இந்த கதையோட்டத்தை நூலாசிரியர் தன் கற்பனைத் திறனால் மேலும் நகர்த்திச் செல்கிறார்.

அதாவது பூவிழி தான் காதலித்த பையனுடன் எல்லை மீறிப் பழகுகிறாள். அதனால் வந்த வினைதான் இதுவென்று விஜி அறிந்து கொண்டாலும் அவளது செயற்பாடுகளில் கனிவு இருக்கவில்லை. அவள் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். எதிர்பாராத ஒரு நாளில் மோஹித்தின் நண்பன் வந்து மோஹித்தைச் சந்திக்கிறான். அவனது பிரச்சினைகளை விளங்கிய நண்பன் மோஹித்தின் மாமி, மாமனாரை வரவழைக்கிறான். அதன் பின்பு விஜி பற்றி அவர்கள் சொல்லும் தகவல் தான் நாவலின் சிறப்பம்சமாக இருக்கிறது.

ஆம்! விஜி அவர்களது மகளே இல்லை. சிறு வயதில் அவளது பெற்றோர் விபத்தொன்றில் சிக்கி இறந்தபோது அதைப் பார்த்திருந்த விஜி முதன் முதலாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாள். அதன் பிறகு அவள் உயிராய் நேசித்த தோழியுடன் ஏற்பட்ட நட்பு, சடுதியாக அஸ்தமித்ததால் ஏற்பட்ட மன விரக்தி ஆகியவற்றால் பாதிப்படைந்து யாரோடும் பழகாமல் படிப்பொன்றே தனது மூச்சு என்று செயற்பட்டு வந்திருக்கிறாள். இதன்போது பல்கலைக்கழக சீனியரைக் காதலித்து அவர் பணக்கார சம்பந்தம் வந்ததால் விஜியை நிராகரித்த போது உள ரீதியாக மேலும் தாக்கப்படுகிறாள்.

பயம், வெறுப்பு, இயலாமை, ஏமாற்றம் என்பவை விஜியை மன நோயாளியாக்கிவிட்டது. அவளுடைய மென்மைகள் ஒழிந்து ஆண்மைக் குணம் ஒட்டிக்கொண்டது. இப்படியிருக்கும் போதுதான் விஜியின் அம்மாவுக்கு (வளர்த்த அம்மா) நெஞ்சு வலி ஏற்படுகிறது. அதைப் பார்த்து துடித்த விஜியிடம் இந்தச் சாட்டை வைத்து திருமணம் முடிக்க கெஞ்சுகின்றனர் அவளது பெற்றோர். ஏதோ நோக்கத்தில் அவள் ஒத்துக்கொள்ள, ஊரில் மதிப்பாகவும், கண்ணியமாகவும் வாழ்ந்த மோஹித்தை மருமகனாக்க முனைகின்றனர். காரணம் குடும்பப் பொறுப்பும், பொறுமையும், நற்குணமும் பொருந்திய மோஹித் விஜியை நன்றாக பார்ப்பான் என்ற நம்பிக்கை.

விஜியின் கடுமையான போக்குக்கு காரணம் அறிந்த மோஹித் வேதனையால் துடிக்கிறான். அவனுக்கு விஜி மீது கழிவிரக்கம் பிறக்கிறது. நண்பன் கூறியது போல டாக்டரிடம் காட்டி விஜியை முழுமையாக சுகப்படுத்திவிட வேண்டும் என்று அவன் மனம் திடசங்கற்பம் கொள்கிறது என்பதாக நாவல் நிறைவடைகிறது. கடைசி வரைக்கும் விஜி மீது வாசகர்கள் வெறுப்பு கொண்டாலும், இறுதியில் அவள் மீது அநுதாபம் கொள்வார்கள் என்பது ஐயமில்லை.

சீதனத்தை எதிர்த்தும், கணவன் மனைவிக்கிடையில் இருக்க வேண்டிய புரிந்துணர்வு பற்றியும் துல்லியமாக சித்தரிக்கிறது இந்த நாவல். திருமதி. சுமைரா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (நாவல்)
நூலாசரியை - சுமைரா அன்வர்
விலாசம் - கே.கே.எம். கார்டன்ஸ், தக்கியா ரோட், மல்லவப்பிட்டிய, குருணாகலை.
வெளியீடு - சிந்தனை வட்டம்
தொலைNசி – 0723 670515
விலை - 200 ரூபாய்

சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

இலங்கையில் சிறுவர்களுக்கான இலக்கியம் முன்னேற்றமாக வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள் ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைகளடங்கிய நூலை வெளியிட்டிருக்கின்றார். சிறுவர்கள் பலரின் முகத்தைத் தாங்கி புத்தகத்தின் அட்டை வெளிவந்திருக்கிறது. எக்மி பதிப்பகத்தின் வெளியீட்டில் 39 பக்கங்களை உள்ளடக்கி அமையப் பெற்றிருக்கும் இந்த நூல் வர்ண எழுத்துக்களில், கண்ணைக் கவரும் வர்ணச் சித்திரங்களுடன் அமைந்திருப்பதை சிறப்பம்சமாகக் கொள்ளலாம். ஓர் அபலையின் டயறி, இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு ஆகிய தொகுதிகளுடன் ரோஜாக்கூட்டம் நூலையும் தந்திருக்கிறார் நூலாசிரியர் திருமதி ஜரீனா முஸ்தபா அவர்கள். இந்நூலானது கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



சமூகத்தில் காணப்படும் சில தீய விடயங்களும், சூழலும் பிள்ளைகள் நல்லவற்றிலிருந்து விடுபட்டு தீய வழிகளில் செல்வதற்கு பெரும் துணை புரிகின்றன. பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் வழிகாட்டுதல்களில் பிள்ளைகள் இருந்தாலும் கூட தொலைக்காட்சி, கைத்தோலைபேசி, இன்டர்நெட் போன்றன வழிகேட்டிற்கு இழுத்துச் செல்கின்றமை கண்கூடான விடயங்களாகும். அத்தகையவற்றிலிருந்து பிள்ளைச் செல்வங்களை மீட்டிக்கொள்ள நல் அறிவுரைகளைப் பகிர்ந்து நிற்கும் நூல்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். அந்த வகையில் ரோஜாக்கூட்டம் என்ற நூலில் உள்ள சிறுவர் கதைகள் அழகிய அறிவுரைகளை அழகாக இயம்புகின்றன. உண்மையான நட்பு, அன்னையின் ஆசிர்வாதம், அப்பா கஞ்சத்தனம் வேண்டாம், சிறைப் பறவை, தண்டனை, கல்விக்கு காதல் தடை வேண்டாமே, உறுதி வேண்டும் ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் அமைந்திருக்கின்றன.

முதல் கதையான உண்மையான நட்பு என்ற கதை துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பைப் பற்றி பேசுகின்றது. குமார் என்ற பணக்காரச் செல்வனுக்கு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் குமாரின் தாத்தா. ஒரு விபத்தில் குமாரின் தந்தையும், தாயும் இறந்துவிட அவன் பாட்டனின் பராமரிப்பில் வளருகிறான். அத்துடன் பாடசாலையிலும் குமார் முரடனாக காணப்பட்டான். நண்பர்களிடம் செல்வாக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிதடிகளுக்கும் சென்றுவிடுவான். இத்தனைக்கும் இவன் நான்காம் தரம் படிக்கும் சின்ன மாணவன். அந்த வகுப்பில் சதீஸ் என்றொரு ஏழை மாணவனும் இருக்கிறான். அவனை எல்லோரும் ஆப்பக்காரா என்று கிண்டல் செய்வார்கள். ஒருநாள் குமாரின் தாத்தா இறந்துவிட அவனுக்கிருந்த பணச்செல்வாக்கும் குறைகிறது. அவனிடம் பணமில்லை என்றதும் மற்ற நண்பர்கள் அவனைவிட்டு ஒதுங்கிவிட, சதீஸ்தான் குமாரின் நண்பனாகிறான். அவன் குமாரை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரித்து பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்பதை உணர்த்துகிறான்.

அன்னையின் ஆசிர்வாதம் என்ற கதை பெண் பிள்ளைகளுக்கான அறிவுரையைக்கூறி நிற்கின்றது. பஸரியா, இமாஸா என்ற ஒத்த வயதுடைய இரு நண்பிகளை வைத்து இக்கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. பாடசாலைவிட்டு வரும்போது இமாஸாவின் தாயாருக்கு சுகமில்லாததால் பஸரியாவின் தாயும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக அறிகின்றனர். பிறகு பஸரியா தன் வீட்டுக்குச்சென்று சமைத்து, துணிகளைத் துவைத்து, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள். ஆனால் இமாஸாவின் வீடு இருந்தபடி குப்பையாகவே இருக்க, அவள் பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறாள். பஸரியா சாப்பிடடுவிட்டு இமாஸாவின் வீட்டுக்குச் சென்றதும் இமாஸாவும், அவளது தம்பியும் பசியில் இருப்பதைக் கண்டு, தான் சமைத்த சாப்பாட்டைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அதைப் பார்த்து இமாஸாவுக்கு சரியான ஆச்சரியம். தானும், பஸரியாவும் ஒரே வயதுடையவர்கள். எனினும் அவளால் அனைத்து வீட்டு வேலைகளையும் சுயமாகச் செய்ய முடிகிறதே என்று எண்ணி அதைப்பற்றி வினவுகிறாள். பஸரியா பாடசாலை செல்வதற்கு முதல் தன்னால் ஆன அனைத்து வேலைகளையும் தன் தாயாருக்கு செய்து கொடுத்துவிட்டுத்தான் போவாள். அதனால் மகிழ்வடையும் தாய் அவளை அணைத்து முத்தமிட்டு வழியனுப்புகிறாள். அந்த ஆசிர்வாதத்தால் பாடசாலைக்கும் சந்தோஷமாகச் சென்று படிப்பிலும் கவனம் செலுத்த பஸரியாவால் முடியுமாக இருக்கின்றது என்பதை அறிந்த இமாஸா இனி தானும் தனது தாயாருக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றாள்.

இவ்வாறு சின்னஞ்சிறார்கள் வாசித்து மகிழக்கூடியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு சொல்லப்படக்கூடிய ஆலோசனைகள் கதைப் பாங்கில் அமைந்திருப்பதால் அது வாசிப்புக்கு வழிகாட்டுவதுடன் பிஞ்சு இதயங்களில் ஆணித்தரமாக பதிய வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. வெறுமனே கார்ட்டூன்களைப் பார்த்து பொழுதைப் போக்கும் சிறுவர்கள் இவ்வாறான தரமுள்ள புத்தகங்களை இணங்கண்டு வாசிப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். நூலாசிரியர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - ரோஜாக்கூட்டம்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் - ஏ.சி. ஜரீனா முஸ்தபா
வெளியீடு - எக்மி பதிப்பகம்
தொலைபேசி - 011 5020936
விலை - 150 ரூபாய்