Sunday, March 10, 2013

விடுமுறைக்கு விடுமுறை - சிறுகதைத் தொகுதி

விடுமுறைக்கு விடுமுறை சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக்குறிப்பு


ஓரிரண்டு கவிதைகளை எழுதி அவை பத்திரிகையில் வெளிவந்தாலேயே தமக்குத்தாமே கவிஞர் பட்டம் சூட்டிக்கொண்டு திரியும் பலபேர் நம் மத்தியில் இருக்க, விடுமுறைக்கு விடுமுறை என்ற காத்திரமான சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டும் கூட எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருக்கின்றார் திருமதி பவானி தேவதாஸ் அவர்கள்.

தலாத்து ஓயா தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் இவரது கன்னித் தொகுதியான விடுமுறைக்கு விடுமுறை என்ற இச்சிறுகதைத் தொகுதி 11 கதைகளை உள்ளடக்கி 66 பக்கங்களில் புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் வெளிவந்திருக்கிறது.

தற்கால வேலைப்பளுவுக்கு மத்தியில் சிறுகதைகளை வாசகர்கள் வாசிப்பது மிகக்குறைவு. ஆனாலும் பவானி தேவதாஸின் கதைகளை மேலோட்டமாக கண்டுவிட்டாலே அதை முழுவதுமாக வாசித்துவிட வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. எழுதப்பட்ட கதைகளில் அநேகமானவை உண்மைச் சம்பவங்களாக இருப்பதால் அவை மேலும் சிறப்படைகின்றன.



நினைவில் நீங்காதவள் என்ற சிறுகதை 1983 இல் இனக்கலவரம் நடந்தபோது தமிழருக்காக தற்கொலை செய்துகொண்ட நீத்தா என்ற சிங்கள யுவதியை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத் தமிழ்க் குடும்பம் ஒன்றில் வீட்டுவேலை செய்கிறாள் நீத்தா. குறிப்பிட்ட தினமன்று அந்த வீட்டிற்கு சிலர் கல்லெறிந்து கலாட்டா பண்ணியிருக்கிறார்கள். தமிழர் வீட்டில் உனக்கென்ன வேலை என்று கேட்டவர்கள் மறுபடி வரும்போது அவளை அங்கிருந்து போகுமாறு சொல்லிவிட்டு போகிறார்கள்.

எனினும் வீட்டார்கள் அவளை நம்பி விட்டுப்போனதால் அந்தத் தமிழர்களின் உடமைகளை பாதுகாப்பதை தனது கடமையாகவே கருதுகிறாள் நீத்தா. மறுதினம் வன்முறையாளர்கள் வந்து தமிழர்கள் வாழ்ந்த அவ்வீட்டை எரிக்க அத்துக்கம் தாளாமல் அழுதபடியே தாயுடன் வருகிறாள் நீத்தா. யாரும் எதிர்பாராத விதமாக அப்போது வந்த புகைவண்டிக்கு குறுக்காக பாய்ந்து தனது துக்கத்தை வெளிப்படுத்திய நீத்தாவே இக்கதையில் நாயகி.

என் இனிய தோழனே என்ற கதை சிறுவயதிலிருந்து சகோதரனாகவே பழகி வந்த சிங்கள நண்பனின் மரணம் பற்றியது. பஸ்ஸில் மற்ற இளைஞர்கள் கிண்டல் பண்ணும்போது தனது தங்கை என்று கூறி அவர்களுடன் சண்டையிடுகிறான் சூட்டிக்கா என்ற அந்த நண்பன். இறுதியில் இராணுவத்தில் இணைந்து யுத்தத்துக்கு இலக்காகி இறந்துவிடுகிறான். இந்தக் கதையை வாசிக்கும்போது மனம் வலியால் துடிக்கின்றது.

சமவெளி - சிகரம் என்ற சிறுகதை இணைபிரியாது பழகி இறுதியில் சுனாமிக்கு பலியான நண்பிகளின் கதையை துல்லியாக கூறி நிற்கிறது. மலைநாட்டைச் சேர்ந்த நந்தினி, மட்டக்களப்பைச் சேர்ந்த மாயா. இருவரும் பிரதான பாத்திரங்கள். படிப்பதற்காக மட்டக்களப்புக்குச் சென்ற நந்தினியுடன் ஐக்கியமாகும் மாயா. உயர்த பரீட்சையின் பின்னர் நந்தினி ஊருக்கு புறப்படுகின்றாள். கிறிஸ்மஸ் தினத்துக்கு மறுநாள் அவளது மனதில் இனம்புரியாத தவிப்பு.. இறுதியில் சுனாமி அரக்கன் மாயாவை கொன்றுவிடுகின்றான். மெய்சிலிர்க்க வைக்கும் கதை. அதற்காக திருமதி பவானி அவர்கள் கையாண்டிருக்கும் அழகான கதையோட்டத்தால் சம்பவம் கண்முன் நிழலாடுகிறது. நெஞ்சம் விம்மித் தணிகின்றது.

பிறந்தகத்தில் பிறந்த நாள் என்ற கதை பலருக்கும் ஏற்பட்ட அனுபவங்களாகவும் இருக்கலாம். திருமணமாகி வேறிடம் போகும் பெண்கள் தமது பிறந்த வீட்டுக்கு கணவர் பிள்ளைகளுடன் வரும்போது எதிர்கொள்ளும் சிக்கல்களை இக்கதை சொல்லி நிற்கிறது. அதுவும் சகோதரர்களின் அலட்சியப்போக்கும், அவர்களின் மனைவிமாரின் சிடுசிடுப்பும் ஏன் வந்துதொலைத்தோம் என்ற மனப்பாங்கை தோற்றுவிக்கும். அதை நிதர்சனபூர்வமாக வெளிப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்.

ஏன் என்ற கதை நோயால் அவதியுற்று இறந்துபோன மகன், மகள், மனைவி பற்றியது. மிகவும் சோகத்துக்குரிய நிகழ்வுகளை உள்ளடக்கியதாக இக்கதை காணப்படுகின்றது. தன்னை விட்டுப் பிரிந்துபோன தனது குடும்பத்தினரை எண்ணி கணவன் படும் அவஸ்தை வாசகருக்கும் தொற்றிவிடுகின்றது.

இவ்வாறு கற்பனைகளுக்கு உயிரிகொடுத்து அவற்றை எல்லாம் கதைகளாக்கும் முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு பெரும்பாலான தனது அனுபவங்களை கருக்களாக்கி அதை சிறுகதைகளாய் பிரசவித்திருக்கிறார் திருமதி. பவானி தேவதாஸ் அவர்கள். அவரது இலக்கிய முயற்சி இன்னும் சிறப்புற வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - விடுமுறைக்கு விடுமுறை (சிறுகதை)
நூலாசிரியர் - பவானி தேவதாஸ்
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150 ரூபாய்

மண்ணில் வேரோடிய மனசோடு - கவிதைத் தொகுதி

மண்ணில் வேரோடிய மனசோடு கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு


பல சந்தர்ப்பங்களில் வானொலி, தொலைக்காட்சிகளின் கவிதை நிகழ்ச்சிகளை அலங்கரித்து வருகின்றவரும், ஆசிரியராக கடமையாற்றி வருகின்றவருமான கலாபூஷணம் யாழ் அஸீம் அவர்களின் மண்ணில் வேரோடிய மனசோடு என்ற தொகுதி 125 பக்கங்களில் ஸூபைதா பதிப்பகத்தினால் வெளிவந்திருக்கிறது. தேசிய நூலபிவிருத்தி ஆவணவாக்கல் சபையின் அனுசரணையுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்நூலில் 23 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. கவிஞரின் கன்னித்தொகுதியான இதில் காத்திரமான கவிதைகள் வெளிவந்திருக்கின்றன.

`கவிஞர்கள் சிலர் பிறக்கிறார்கள். சிலர் உருவாகிறார்கள். யாழ் அஸீம் அவர்களால் மரபுக் கவிதையும் எழுத முடிகிறது. புதுக் கவிதையும் எழுத முடிகிறது...' என தாஜூல் உலூம் கலைவாதி கலீல் அவர்களின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளவாறு அஸீம் அவர்களின் கவிதைகளை வாசித்த மாத்திரத்தில் அவற்றின் தன்மைகளையும், சிறப்புக்களையும் புரிந்துகொள்ளலாம். இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய வகையில், சிறந்த சொல்லாட்சியுடன் எளிமையாக கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. 

வட புல முஸ்லிம்கள் மொத்தமாக துடைத்தெறியப்பட்ட வேதனைகளின் விசும்பல்கள் கவிதைத்தொகுதி முழுவதிலும் முகாரியாக ஒலிக்கிறது. `வேரோடு பிடுங்கி வீசப்பட்டு வலிகளுக்குள் வாழும் வடபுல முஸ்லிம்கள் யாவருக்கும்' இத்தொகுதி சமர்ப்பிக்கபட்டிருக்கின்றது. சொந்த மண்ணைவிட்டு இடம்பெயர்ந்து வாழும் ஒட்டுமொத்த இதயங்களின் ஓலமாக மிளிர்ந்திருக்கிறது மண்ணில் வேரோடிய மனசோடு என்ற இந்தக் கவிதைத்தொகுதி.


இது கவிதையல்ல (பக்கம் 06) என்ற முதல் கவிதை காயம்பட்ட இதயத்தை கண் முன்னால் நிறுத்தி வைக்கிறது. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளாய் கூடி வாழ்ந்தவர்கள் இடையில் துவேசம் கொண்டவர்களாக ஆனதில் உள்ள விரக்தியைக் காண முடிகிறது. ஆரம்பத்தில் தமிழ் பேசுவதால் இஸ்லாமியத் தமிழர் என உறவு கொண்டாடி மகிழ்ந்தவர்கள்தாம் முஸ்லிம்களும், தமிழர்களும். ஆனால் இடையில் ஏற்பட்ட இனச் சுத்திகரிப்பு முழு முஸ்லிம் சமுதாயத்தையும் இடம்பெயரச் செய்துவிட்டது. இப்போது எம்மை எந்தத் தமிழரென அழைக்கப்போகிறீர் என கவிஞர் கேட்டிருக்கும் கேள்வி, இதற்கு தூண்டுதலாக அமைந்தவர்களின் நாக்கைப் பிடுங்கவல்லது எனலாம்.

இது கவிதையல்ல 
கற்கள்
நேயம் கொண்ட இதயம்
காயப்பட்டதால்..
இதயத்திலிருந்து
இதயத்துக்கு வீசும்
கவிதைக் கற்கள்
ஒட்டி வாழ்ந்த உறவுகளை
வெட்டி வீழ்த்திய வீரர்களே!

இஸ்லாமியத் தமிழரென
எமை அழைத்தீர்
இப்போது
எந்த வகைத் தமிழரென
எமை வெறுத்தீர்!

வாழ்க்கையில் எந்த பதவி உயர்வு கிடைத்தாலும், அந்தப் பதிவியுயர்வாலோ அல்லது கல்வியாலோ வேறு தேசம் சென்றாலும் தாய் மண்ணின் சுகத்தை நினைக்கையில் ஆன்மா கதறியழும்.  ஊர்மண்ணில் வெறுங்காலில் திரிய மனம் அவா கொள்ளும். இப்படியிருக்க துரத்தியடிக்கப்ட்வர்கள் இனி எப்போது ஊருக்கு செல்வோம் என்றே தெரியாமல் இருக்கும்போது அவர்கள் மனம் எத்தகைய பாடுபடும் என்பதை மண்ணின் காலடிக்கு.. (பக்கம் 20) என்ற கவிதையிலுள்ள கீழுள்ள வரிகள் மூலம் நமக்கு உணர்த்துகின்றார். தாய் 

பொன்னிழந்து வாழ்ந்திடலாம்
பொருளிழந்து வாழ்ந்திடலாம்
மண்ணிழந்து வாழ்வதொரு வாழ்வோ
கண்ணிழந்த வாழ்வு போலன்றோ?

பால்ய வயதுகளில் நண்பர்களோடு இணைந்து செய்த குறும்புத்தனங்கள் இப்போது நினைவு வந்தாலும், தூறல் மழையில் நனைவது போன்ற இதத்தை ஏற்படுத்திச் செல்லும். அவ்வாறே சிறுவயதில் சாப்பிட்ட இனிப்புக்கள், பலகாரங்கள், ஊரின் விசேட சாப்பாடுகள் என்பன ஞாபகத்துக்கு வரும் வேளைகளில் சிறுகுழந்தையாய் இதயம் தடுக்கிவிழும். அவ்வாறானதொரு நிகழ்வையும், அந்தச் சுகம் இனி சொந்த மண்ணில் கிட்டுமா என்ற எதிர்பார்ப்போடும் கவிஞர் கீழுள்ள வரிகளை கூறியிருக்கிறார். மண்ணில் வேரோடிய மனசோடு (பக்கம் 41)

கணங்கள் யாவுமே
கதைகள் பல சொல்ல
கனவுகளாய் விர்ந்து
கண்ணுக்குள் நிழலாட
நெஞ்சுக்குள் இனிக்கிறது

மண்ணில் வேரோடிய 
மனசோடு வாழுகிறோம்
மீட்டிடும் பொழுதுகள் யாவும்
மீளாதோ மீண்டும்
நிஜங்களாய் நாளை!

எந்த மதத்தவர் என்றாலும் தத்தமது மதத்துக்குரிய பக்தி அவர்களிடம் காணப்படுதல் இயல்பே. அவ்வகையில் புனித இஸ்லாம் மதத்தைக் கொண்ட நாங்களும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்து அவன் தூதர் வழி நடப்பதுதான் வெற்றியைத் தரும். எது நடப்பினும் எனக்குக் கவிலையில்லை. எனது குருதியின் ஒவ்வொரு துளியும் உச்சரிக்கும் கலிமாவை என்று ஈமானிய ரசம் பொங்க உறுதியாக கூறி நிற்கிறார் யாழ் அஸீம் அவர்கள். இது எங்கள் வரலாறு (பக்கம் 55)

என்னை
வெட்டித் துண்டாக்கு
சுட்டுப் பொசுக்கு
வேரோடு பிடுங்கி வீசு!
வீழும் உடலின்
ஒவ்வோர் அணுவும்
ஓடும் குருதியின்
ஒவ்வொரு துளியும்
உச்சரிக்கும் கலிமாவை!

முகாம்களில் அடைந்து வாழும் வாழ்க்கையப் பற்றியும் கவிதை எழுதத் தவறவில்லை யாழ் அஸீம் அவர்கள். எந்தவித சுகாதார வசதிகளும் அற்று, அடுத்த வேளை உணவுக்காய் அல்லல்படும் மனிதர்களின் மனங்கள் எத்தகைய துன்பத்தை அனுபவிக்கும். பணக்காரராக வாழ்ந்தவர்கள் பரதேசிகளாக ஆன நிலையில் காலத்தை கடத்தும் வேதனையை யாரிடம் சொல்லி அழுவார்கள்? வெளிச்சம் வெளியேயும் இல்லை (பக்கம் 63) என்ற கவிதை வரிகள் எம் மனதையும் நெகிழ வைக்கின்றன.

புன்னகையை விற்றுக்
கண்ணீரைக் கடன் வாங்கிய
இவர்கள் வியாபாரத்தில்
எஞ்சியது சில மூச்சுக்கள்தான்!

கிழிந்த ஆடைகளைப் பற்றிக் 
கவலைப்படுவதில்லை
இவர்கள் கவலையெல்லாம் - நம்
கிழிந்த வாழ்க்கையைப் பற்றித்தான்!

பல்வேறுபட்ட ஆளுமைகளைக் கொண்டிருக்கும் கவிஞர் யாழ் அஸீம் அவர்கள் சிறந்த கவிதைத் தொகுதியை வெளியிட்டு, அவற்றை மக்கள் மனதில் பதியச் செய்துவிட்டார். அவர்; இன்னும் பல படைப்புக்களை எழுதி புத்தகங்களாய் வெளியிட வேண்டுமென்று வாழ்த்துகிறேன்.


நூலின் பெயர் - மண்ணில் வேரோடிய மனசோடு 
நூலாசிரியர் - யாழ் அஸீம்
வெளியீடு - ஸுபைதா பதிப்பகம்
முகவரி – 228/1, ஜும்ஆ மஸ்ஜித் வீதி, மாளிகாவத்தை, கொழும்பு – 10.
தொலைபேசி – 0717 268466
விலை - 300 ரூபாய்