மல்லிகை ஜூலை 2011 இதழுக்கான இரசனைக் குறிப்பு
ஜீவா என்ற தனிமனிதனின் அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் இன்று சஞ்சிகை வரிசையில் மல்லிகை சஞ்சிகையே அதிக காலம் வெளிவருவது நாமெல்லோரும் அறிந்த விடயம். எழுத்துத் துறையில் கால்பதித்த அனைவரும் மல்லிகையைப் பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. மல்லிகைப் பந்தல் வெளியீடு மூலமாக பல காத்திரமான புத்தகங்களையும் இலக்கிய உலகம் பெற்றிருக்கிறது.
அந்த வகையில் ஜூலை மாத இதழ் என் கரம் கிட்டியது. அதில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களும் சிந்தையைக் கவர்வனவாக இருக்கின்றது. அட்டைப் படத்தை அலங்கரித்திருக்கின்றார் தனக்கென்றொரு தனி வழி அமைத்திருக்கும் திரு. தம்பு சிவா அவர்கள்.
ஆசிரியர் தலையங்கமும் சமீபத்தில் தனது 85 வயதை அடைந்திருக்கும் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் வெளிப்பாடுகளாய்ப் பிறந்துள்ளது. ஷமுதன்முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றில் நமது மண்ணில் படைப்பிலக்கியத்திற்கு சாஹித்திய மண்டல பரிசைப் பெற்றுக்கொண்டவன் என்ற பெறுமதிமிக்க இலக்கிய மரியாதை ஏற்கனவே எனக்கு உண்டு. அத்துடன் இந்த மண்ணில் இந்தப் பாரிய யுத்த நெருக்கடிக்குள்ளும் அரை நூற்றாண்டு காலமாக ஓர் இலக்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளிக்கொணர்ந்தவன் என்ற வரலாற்றுப் பொறுப்பும் எனக்கு உண்டு எனத்தொடர்ந்து 46 ஆண்டுகளாக இச் சஞ்சிகை நடாத்திவரும் டொமினிக் ஜீவா அவர்கள், மல்லிகை எனும் இலக்கியச்செடி வளர்வதற்கு என்னென்ன பாடுபட்டார் என்ற அம்சங்களை மேற்கூறியவாறு தொட்டுக்காட்டியிருக்கிறார்.
அட்டைப்பட நாயகரைப்பற்றி கே.ஆர். டேவிட் எழுதியிருக்கின்றார். கடந்த 40 வருட காலமாக இலக்கியப் பணியாற்றிவரும் திரு. தம்புசிவா அவர்கள் யாழ்ப்பாணம் இணுவிலை பிறப்பிடமாகக்கொண்டவர். தம்பு சிவசுப்பிரமணியம், இணுவிலி மாறன், இணுவை வசந்தன், சிவசிவா தம்பு சிவா ஆகிய புனைப்பெயர்களில் தொடர்ச்சியாக இன்றுவரை சகல முன்னோடிப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். 1967ம் ஆண்டு இறைவரித் திணைக்கள்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்று 1985 இல் ஓய்வு பெற்றவர். பின்பு 1987 இல் மாலைதீவில் அரச மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காளராக கடமையாற்றியுள்ளார். பின்பு வடக்கு-கிழக்கு மாகாண சபையின் பதிப்பகத் திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.
கற்பகம் சஞ்சிகையில் பிரசுரமான சிறுகதைகளைத் தொகுத்து காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியீடு செய்ததன் மூலம் தொகுப்பாளனாகவும், இவரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான சொந்தங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் சிறுகதை எழுத்தாளனாகவும், இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற கட்டுரைத் தொகுதி மூலம் சிறந்த கட்டுரையாளனாகவும், தூரத்து கோடை இடிகள், அப்பா ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளைத் தொகுத்து வெளியீடு செய்ததன் மூலம் சிறந்த வெளியீட்டாளனாகவும், அரும்பு, கற்பகம், தமிழ்த் தென்றல், ஓலை போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியதன் மூலம் சிறந்த சஞ்சிகையாளனாகவும் தம்பு சிவா அவர்கள் இனங்காணப்படுகின்றார்.
இலங்கையின் அனைத்து முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தனது படைப்புக்களைத் தவழவிடும் திரு. தம்பு சிவா அவர்கள் பாண்டிச்சேரி புதுவை பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவுநம்பி அவர்களால் சொல்லின்செல்வர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். தம்பு சிவா அவர்கள் மாக்ஸிம் கோக்கியின் நூல்களையே அதிகம் விரும்புபவராக இருக்கின்றார். அநேகமான நாவல்களில் வருகின்ற பாத்திரங்களின் சித்தரிப்பில் கற்பனை வாதம் மேலோங்கியிருப்பாகவும், மாக்ஸிம் கோக்கியின் நாவலில் சாதாரண மக்களின் வாழ்க்கை முறைகளும், இயல்பான முயற்சிகளும் உள்ளடங்கியுள்ளன என்றும் குறிப்பிடுகின்றார். தம்பு சிவா அவர்கள் அடிக்கடி கூறும் ஒரு தாரக மந்திரம் 'ஒரு மனிதருடைய பெயருக்குப் பின்னால் குறிப்பிடப்படுகின்ற பட்டங்களைவிட, அந்த மனிதனின் பெயருக்கு முன்னால் மனிதம் என்ற பட்டம் அமைந்திருக்க வேண்டும். அவர்களையே நான் நேசிக்கிறேன்' என்பதாகும். இளைய படைப்பாளிகளை உற்சாகப்படுத்தியும், சொல்லாலும் செயலாலும் ஒன்றித்தும் வாழும் இலக்கியவாதி திரு. தம்புசிவா அவர்களை நாமும் வாழ்த்துகிறோம்.
எலி என்ற மொழிபெயர்ப்புக் கதையை திக்குவல்லை கமாலும், மழை என்ற சிறுகதையை சமரபாகு சி. உதயகுமாரும் எழுதியிருக்கின்றார். சண்முகம் சிவலிங்கத்தின் சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் என்ற கவிதை நூலுக்கான அவதானக்குறிப்பை அன்புடீன் எழுதியிருக்கிறார்.
பார்வதி என்ற சிறுகதையை எழுதியிருக்கும் ஆனந்தி, ஒரு கூலிவேலை செய்யும் பெண் பற்றி மனப்பதிவை சிறுகதையூடாக சிதத்ரித்திருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. பாறி என்று அழைக்கப்படும் இந்த கூலி வேலை செய்கிற பெண்ணின் உண்மையான பெயர் என்ன? பார்வதியா என்று மலர் என்ற பெண் கேட்டுநிற்கும் கேள்வி மனதில் கனக்கிறது. பக்கெட் மாவிலும், மிக்ஸி இயந்திரத்தால் அரைக்கப்படும் மாவால், மாவிடித்து உழைக்கும் பாறி போன்ற பலரின் ஜீவனோபாயம் இல்லாமலாகி இருக்கிறது. மலருக்கு பாறியயைப் பற்றி அதிக கவலை. கதையினிடையே மலரின் மச்சாளான சீதா வந்து யோசித்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். என்ன காரணம் என மலர் கேட்டதற்கு ஊரில் தற்போது மாவிடிக்கவும் யாருமில்லை என்று விளக்கமளிக்கிறாள். பாறி எங்கே என்ற மலரின் அடுத்த கேள்விக்கு சீதா சொல்லும் பதில் சரிதான். அவள் இப்ப புதுப் பணக்காரி. அவளுக்கென்ன? பிள்ளை சுவிஸிலை. இனி நாங்கள்தான் அவளுக்கு மா இடிக்கப் போவணும் என்ற பதிலைக் கேட்டு ஆனந்தியும் மலரின் நல்ல பண்பும் கதையின் இறுதியில் சுட்டிக் காட்டப்படுகின்றது.
உண்மையைச் சொல்லிவிடு என்ற கா. தாரணியின் கவிதை சுவாரஷ்யமாக இருக்கின்றது. பெண் என்ற சொல்லின் மறுவடிவம் சீதனப்பிரச்சனை என்று சொல்லுமளவுக்கு வரதட்சனை கொடுமையாகிவிட்டது. காதலிக்கும்போது தோன்றாத ஜாதியும், மதமும் சீதனம் தர வக்கில்லை எனும்போது மாடி வீட்டுக்கிளிகளிடம் மாட்டுப்பட்டு சிக்கியழிகிறது. தாரணியின் கவிதையிலும் நாசூக்காக சொல்லபட்டிருக்கும் சில வரிகள்..
மூங்கில் ஓரம்
பற்றைகளின் மறைவில்
நாங்கள் சல்லாயித்திருந்த
பொழுதுகளில்
உனக்கு சீதனமாய்த்தர
எங்களிடம் வெள்ளவத்தையில்
சொந்தவீடோ
அதுவாங்க வசதியோ
இல்லையென்பது
உனக்குத் தெரியாதா?
****
உன் சாதகம் இப்போது
வேல் அமுதன்
திருமண சேவையில்
பத்து மில்லியன்
பிரிவுக் கோப்பிலும்
என் பெயர்
ஊராரின்
நடத்தைக்கெட்டவள்
பட்டியலிலும் இருப்பது
உனக்குத் தெரியாதா?
வி. ஜீவகுமாரன், சி. விமலன், செல்லக்கண்ணு, பிரகலாத ஆனந்த், ஆகியோரின் கட்டுரைகளும், புலோலியூர் வேல் நந்தனின் கவிதையும், வேல் அமுதனின் குறுங்கதையும் மற்றும் மேமன்கவி, யோகேஸ்வரி, முருகபூபதி, வி.ரி. இளங்கோவன், லெனின் மதிவானம் ஆகியோரின் ஆக்கங்களும் மேலும் வழமையான தூண்டில் வாசகர் கடிதங்கள் ஆகியனவும் மல்லிகை இதழை அலங்கரித்துள்ளன.
நூல் - மல்லிகை (சஞ்சிகை)
ஆசிரியர் - டொமினிக் ஜீவா
முகவரி - 201/4 ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13.
தொலைபேசி - 011 2320721
விலை - 40/=