Sunday, March 13, 2011

'புதிய பாதை' - இளைஞர் இலக்கியம்

'புதிய பாதை' இளைஞர் இலக்கிய நூல் பற்றிய இரசனைக் குறிப்பு

இலங்கை தேசிய நூலக அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் சர்வீனா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட புதிய பாதை எனும் இளைஞர் இலக்கிய நூல் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. 32 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் 32 கவிதைகள் இடம்பிடித்திருக்கின்றன.

'புதிய பாதை எனும் இத்தொகுதியை இளைஞர் சமுதாயத்திற்குத் தேவையான பல கருத்துக்களை உள்வாங்கிப் படைத்துள்ளேன். ஆக்கப் பாதையில் ஆக்க பூர்வமான சிந்தனைகளைத் தூண்டுவதுடன் அவர்களின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்க வைப்பதே எனது நோக்கமாகும்' என்கிறார் நூலாசிரியரான தம்பலகாமம் சிவசக்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு. ஞானராசா அவர்கள். இது இவரது இரண்டாவது தொகுதியாகும். முதல் தொகுதி சிறுவர் பா அமுதம் என்ற மகுடத்தில் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



தன்னம்பிக்கை, பயன்பெற வழி, இளைஞர் நாம், காதல் கலை, வெறுக்காதீர், நாட்டு வளம், தொழில் செய்வீரே, தகவல் தொழில்நுட்பம், பொறுப்புணர்ச்சி, கிராம முன்னேற்றம், வெளிநாடு, புதிய பாதை, தொழிற் கல்வி, கலைக்கூடம், உழைப்பும் ஊதியமும், மாதர் சங்கம், ஒற்றுமை, சமாதானம், துணிவே துணை, எதிர்ப்பும் எதிரியும், உதவி செய்ய முன்வாரீர், வாசிக்க வேண்டும், எழுத்துப் பயிற்சி, மதித்து நடத்தல், அகந்தை கூடாது, கோபம் குறைப்போம், மது அருந்தாதே, நடைப் பயிற்சி, தலைமை தாங்குதல், பயிர்ச்செய்கை, புகை பிடிக்காதீர், பொறுமையின் பெருமை எனும் தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம் பெறுகின்றன.

தன்னம்பிக்கை என்ற முதல் கவிதையானது நமது முன்னோர்கள் பற்றி எடுத்தியம்புகிறது. அவர்கள் பாடுபட்டு செய்த பணிகளைக் காட்டி நிற்கிறது.

'முயற்சியும் பயிற்சியும் பெற்று
முன்னேற்றப் பாதை நோக்கி
வியத்தகு சாதனை செய்தார்
விளங்கிடுவீரே அதனை நீரும்..

அயலவர் சுற்றம் அவரை
ஆதரித்து தொண்டு ஆற்றி
துயரினை நீக்கி வைத்தாரே
தூய்மையைக் கடைபிடித்தாரே'

கற்ற கல்வியைக் கொண்டு பயனடைந்தால் மாத்திரமே அந்தக் கல்வி பெருமைக்குரியதாகிறது. இதுபோல அந்தக் கல்வியானது பிறருக்கு உதவாவிட்டால் அது பிரயோசனமற்றதாகி விடும். இதை கீழுள்ள வரிகளில் நிதர்சனமாகக் காணலாம்.

'பாடுபட்டுப் பட்டம்பெற்று
பலருக்கு உதவி செய்து
கூடுவிட்டுப்போகும் முன்னே
கூடி நாம் வாழ்ந்திடுவோம்...

ஏடுதூக்கிப் பயின்றவைகள்
ஏட்டுச் சுரைக்காய் ஆகிடாமல்
ஓடுகின்ற நீரைப் போல
ஒழுங்கில் செயலமைய வேண்டும்'

நாம் செய்யும் நல்ல செயற்பாடுகள்தான் மற்றவர் முன் எம்மை பற்றின நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். நாம் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே ஒழிய பிறரிடம் எமது நாமம் இகழ்ச்சிக்குரியதாக அமைந்துவிடக் கூடாது. கடந்த நாட்களில் அறியாமல் நாம் செய்த பிழைகளை இன்றிலிருந்து விட்டு விட்டு நல்லவர்களாக மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் உலகத்திலுள்ள கெட்டவன் ஒருவன் திருந்தி விட்டான் என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.

'சென்ற நாட்கள் போய்விடட்டும்
செய்தவை போகட்டும்
இன்று புதிதாய் பிறந்ததாக
இளைஞர் நாம் விழிப்போம்

நன்று என்று நான்குபேரும்
நம்மைப் போற்றவே
இன்று தொடக்கம் அணிவகுத்து
இளைஞர் நாம் வெல்வோம்'

என்ற கவி வரிகள் மேற்சொன்ன கருத்தில் அமைந்திருக்கிறது.

காதல் என்பது இரு உள்ளங்கள் சம்பந்தட்பட்ட அழகிய விடயம். காதலின் தூய நோக்கம் அறியாமல் காதல் எனும் பெயரில் இன்று நடக்கும் நாகரீகமற்ற விடயங்கள் ஏராளம் உண்டு. சாதி, மதம், பணம் எல்லாவற்றையும் கடந்தது காதல் என்ற உணர்வு. உலகில் எல்லா ஜீவராசிகளும் காதல் செய்கின்றன. ஒருகாலமும் காதல் பின்வருமாறு இருக்கக்கூடாது என்கிறார் திரு. ஞானரசா அவர்கள். அதாவது

'சாதி சமயப் பிரிவு பார்த்து
சரிந்து வீழ்வதா?
பாதியிலே முறி;த்து விட்டுப்
பறந்து செல்வதா?...

கூதலுக்குப் போர்வையாக
கூடி இருப்பதும்
பாதகத்தைச் செய்து பதுங்கி
பயந்துநடப்பதும் காதலில்லையே...'

இன்றைய இளைஞர்களில் பலர் வேலைவெட்டிகள் எதுவுமின்றி வீணாக தமது பொழுதுகளைப் போக்க வல்லவர்களாக இருக்கின்றனர். தாய் தந்தையின் தயவில் வாழும் பலர் தொழில் ஒன்றை கட்டாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை. அவர்கள் தத்தமது செலவுகளையாவது சமாளித்துக்கொள்ளுமளவுக்கு அவர்களின் மனநிலை இன்னும் வளரவில்லையா? வேறு சிலர் தாம் செய்கின்ற தொழில்களை வெளியில் கூறுவதற்கு தயங்குவார்கள். இத்தகையவர்களைப் பார்த்து நூலாசிரியர் கேட்கும் இந்தக்கேள்வி நியாயமானது.

'என்ன தொழில் எனினும்
எல்லாம் தொழில் என்றே
சொன்ன உண்மை காக்க
சோர்வு நீக்கி வருவீரே...'

'... வேலை செய்யாதிருந்து
வெட்டி பேச்சு பேசி
சாலை பார்த்து இருந்தால்
சாவு எழுந்து அழைக்கும்'

இன்றைய நவீன யுகமானது தொழில்நுட்பப் புரட்சியில் கொடி கட்டிப்பறக்கிறது. உலக விடயங்கள் விரல்நுனியில் இருக்கும் காலமிது. இணையம் என்றும், கைத்தொலைப்பேசி என்றும் நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வேகம் கூடிக்கொண்டே போகிறது. தொழிற்சாலைகளிலும் மக்களின் வேலைகளை விட இயந்திரங்களின் பாவனை தான் பல்கிப்பெருகிக்கொண்டு வருகின்றது. வளர்முக நாடுகளில் ரோபோ மூலம் சமையலறை வேலைகளைக்கூட பூர்த்தியாகச்செய்கின்ற வழிமுறைகளைக் கையாண்டிருக்கின்றார்கள். இதைப்பற்றி தகவல் தொழில்நுட்பம் என்ற கவிதையில் மிக அழகாக கூறப்பட்டுள்ளது.

பொறுப்புணர்ச்சி என்ற கவிதையில் வரும் அடிகள், மட்டம் தட்டிப் பேசுவோரைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதாவது மட்டம் தட்டிப்பேசுபவர்கள் முன்னிலையில் நாம் சபதம் பூண்டு நல்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டமிட்ட செயலாலும், தீர்மான உறுதிப்பாட்டாலும் செய்கின்ற கருமங்களை திறம்படச்செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொறுப்புணர்ச்சி ஏற்படுவதற்கு முதலில் பொறுமை வேண்டும் என்ற உன்னத கருத்தை இந்தக்கவிதை இயம்பி நிற்கிறது.

கிராமப்புறங்களில் 'சங்கம்' என்றதொரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கிராமத்தின் பொருளாதார வளர்ச்சிகளை முன்னேற்றும் பல வேலைத்திட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதன் மூலம் வீடுகளை நிர்மாணித்து, பாதைகளை அமைத்து மக்களுக்கான வசதிகளை செய்துகொடுக்கின்றார்கள். மேலும் பண்ணைகளை வைத்தும், விவசாயங்கள் செய்தும் தமது வாழ்வியல் தராதரத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர். இத்தகைய நல்ல விடயங்களுக்காக சிரமதானத்திலும் ஈடுபட்டு சிறியளவிலேனும் மருத்துவ வசதிகள், பாடசாலை வசதிகளை பெற்றுக்கொள்ளவே அந்த மக்கள் ஆசைப்படுகின்றனர். இவர்களின் இந்த அடிப்படை வசதிகள் தொடர்பான விடயங்களை வைத்து எழுதப்பட்டதாக கிராம முன்னேற்றம் என்ற கவிதை காணப்படுவதை அவதானிக்கலாம்.
வெளிநாட்டு முகவர்களைப் பார்த்து 'வெளிநாடு' என்ற கவிதை பின்னப்பட்டுள்ளது. அவர்களின் கவனயீனத்தாலும், பொறுப்பற்ற தன்மையாலும் வெளிநாட்டுக்குப் போய் சீரழிகின்ற பலரின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. அத்தகையவர்கள் வெளிநாடுகளில் படும் துன்பம் சொல்லி மாளாதது. குழந்தைகளை விட்டு, கணவனை விட்டு, மனைவியை விட்டுச்சென்ற எத்தனைப்பேர் இன்று அயல்நாடுகளில் அநியாயமாக துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வகையான மனதை உருக்கும் செய்திகள் நாளாந்தம் நடக்கின்றன. தன்னிடம் இருப்பதை வைத்து சமாளிக்கத் தெரியாமல், வெளிநாட்டு மோகத்தில் அலைபவர்களை கண்டிக்கிறார் நூலாசிரியரான ஞானராசா அவர்கள். அவர் கோபமாப் பாடும் வரிகளைப் பாருங்கள்.

'இல்லையென்றால் அங்கே செல்வீர்
இருந்தால் முயற்சி இங்கு செய்வீர்
தொல்லை தீர்க்கும் வழியைக்கண்டு
தொடர்வீர் பயணம் வெல்வதாக'

புத்தகத்தின் தலைப்பான புதிய பாதை என்ற கவிதையில் பல அறிவுரைகளை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இது இளைஞர்களுக்கு மட்டுமான அறிவுரை அல்ல. அவ் அறிவுரைகள் அனைவரும் கடைப்பிடித்து ஒழுக வேண்டியவையாகும். அன்பு காட்டுதல், பகையற்று வாழ வேண்டும், கோள் சொல்லுதல் கெட்ட பழக்கம் போன்றவை பற்றியும் அவ்வறிவுரைகள் அமைந்திருக்கின்றன.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமலிருப்பதே பெரும் புண்ணியமாகும். அதை விடுத்து பதவி பணத்துக்காக யாருக்கும் பாதகம் செய்யக்கூடாது. ஏழை எளியவர்களை மதிக்கத்தெரிந்தோரே உண்மையான அறிவாளியாவார். அதுபோல சத்தியம் செய்தலானது அதை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது. மேற்சொன்ன விடயங்கள் யாவற்றைப்பற்றியும் அழகிய வரிகளில் ஓசை நயத்துடன் எதிர்ப்பும் எதிரியும் என்ற கவிதையில் கூறப்பட்டுள்ளது.

வாசிப்பின் மகோன்னதம் பற்றியும், எழுத்துப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இதிலுள்ள கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. பகட்டுப்பெருமைகள் அற்று பிறரை மதித்து வாழல், மதுவினால் ஏற்படும் கேடுகள், எல்லோரிடத்திலும் இருக்க வேண்டிய கட்டாயப் பண்புகளில் ஒன்றான தலைமை தாங்குதல் இன்னும் இதர விடங்களைப் பற்றியும் ஏனைய கவிதைகளில் அழகிய முறையில் கூறப்பட்டுள்ளன. இந்தப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாகும். அனைவரும் வாசித்து மகிழக்கூடிய வகையில் அதனை எழுதிய திரு. ஞானராசா அவர்களுக்கு எமது பாராட்டுக்கள.; அவரது தமிழ்த்தொண்டு மேலும் சிறந்துவளர மனமார வாழ்த்துகிறோம்.

பெயர் - புதிய பாதை (இளைஞர் இலக்கியம்)
நூலாசிரியர் - செ.ஞானராசா
முகவரி - 993, Anbuvalipuram, Trincomalee, Sri Lanka.
தொலைபேசி - 026 3267891, 077 5956789
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 125/=

Thursday, March 3, 2011

செம்மாதுளம்பூ கவிதை தொகுதி

செம்மாதுளம்பூ கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு 

கவிஞர்களுக்கும் கவிதைகளுக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட்டிருப்பவன் தான் இலக்கியவாதி. அவ்வகையான நற்குணங்களும், சமுதாய நோக்கும் உடைய, இன்று ஷெல்லிதாசன் என்று பரவலாக அறியப்பட்ட மாபெரும் கவிஞரான பேரம்பலம் கனகரெத்தினம் அவர்களின் செம்மாதுளம்பூ என்றதொரு இனிமையான தலைப்பையுடைய புத்தகம் 114 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது.

நீங்களும் எழுதலாம் வெளியீடாக வெளிவந்திருக்கும் இத்தொகுதியில் பல அம்சங்களைக்கொண்ட கவிதைகள் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியான விடயம். அத்துடன் இத்தொகுப்பின் இறுதியில் ஷெல்லிதாசன் அவர்கள் எழுதிய மெல்லிசைப்பாடல்களும் இணைக்கப்பட்டிருக்கின்றன.



இத்தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகள் பெரும்பாலும் நீங்களும் எழுதலாம், செங்கதிர், சுட்டும் விழி, இனிய நந்தவனம், இசை உலகம் போன்ற சிற்றிதழ்களிலும், தினக்குரல், வீரகேசரி, சுடர்ஒளி போன்ற வாரப்பத்திரிகைகளிலும் வெளியானவை.

1970 களிலிருந்து இன்று வரையும் சளைக்காமல் கவிதை எழுதி வரும் ஷெல்லிதாசனின் முதல்புத்தகத்தை நீங்களும் எழுதலாம் வெளியீட்டகம் வெளியிட்டது பாராட்டத்தக்க விடயம்.
முதல் கவிதையான 'விழும் வரை நானோயேன்' என்பதில் உழைப்பைப் பற்றியும், உழைப்பில் சோம்பல்தனம் இருக்கக்கூடாது என்பதையும் எடுத்துக்காட்டுகிறார்.

'... வெய்யிலோ மழையோ எனக்கில்லை
வியர்வையிற்குளித்தே தினமெழுவேன்
கையிலே இருக்கும் காலத்தினை - ஏழை
கண்ணீரைத்துடைத்திட கவி புனைவேன்
சோம்பலென்பதை நானறியேன், எந்த
சொந்தத்தை நம்பியும் நான் வாழேன்
வீழும் வரையும் நானோயேன் அதற்கு
வேண்டும் திடங்கொள் மனசிருக்கு!'

இன்று பணத்துக்கு கட்டுப்படாத மனிதனில்லை. பணக்காரருக்கு கொடுக்காத மரியாதையுமில்லை. அவ்வாறு யாராவது ஒருவரின் கீழ் அடிமையாக வாழும் வாழ்க்கையில் சுவாரஷ்யம் இருக்காது. இதை நிஜங்களின் நிழல்கள் என்ற கவிதையில் முதல் அடியில் நறுக்கென்று நான்கு வார்த்தையில் சொல்கிறார் ஷெல்லிதாசன் அவர்கள்,

'உனது
சுயத்தை நீ இழக்காத வரை
உனது
சுதந்திரம் நிலைத்திருக்கும்'

விஞ்ஞான யுகதத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு அதன் வளர்ச்சியும் வீழ்ச்சியும் தெரியாமலிருக்க முடியாது. அந்த வகையில் மண்வாசனை என்ற கவிதை, நவீனத்துவத்தால் ஏற்படும் பிரச்சனைகளை விளக்கி நிற்கிறது.

ஆயிரங்காலத்துப்பயிர் என்றும் திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயயிக்கப்படுகின்றன என்றும் காலங்காலமாக கேட்டு வந்தோம். ஆனால் தற்காலத்தில் திருமணங்கள் வெறுமனே காதல் என்ற போர்வையில் நிகழ்ந்து விடுகின்றன. கீழுள்ள வரிகளில் அதை தெளிவாக புரியலாம்.

'... கைத்தொலைபேசி
கடுகதி அழைப்பில்
அரும்பும் காதல்கள்!
வலையமைப்பின் வலைவீச்சில்
வளைத்துப்பிடித்த திருமணங்கள்...'

'... ஆசை அறுபது நாள்
மோகம் முப்பது நாள்
குறும்பேச்சாகி (SMS)
ஆசை ஆறு நாள்
மோகம் மூன்று நாள் என
சிறகு முறிக்கும்
ஆயிரமாண்டு கால பந்தங்கள்'

திருமணமாகாத பெண்கள் தாலி வரம் கேட்டுத்திரியும் போது திருமணம் முடித்த பெண்கள் கணவனிடம் படும்பாடு தெரியாததொன்றல்ல. சில கணவன்மார் வெளியுலகுக்கு கனவான்களாக இருப்பினும் நான்கு சுவர்களுக்குள் அவர்கள் செய்கின்ற துவம்சம் சொல்லி முடிக்கக்கூடியதல்ல. அத்தகைய ஒரு பெண்ணின் கண்ணீர், கவிதையாக இவ்வாறு விழுகிறது

'மணமாலைக்கும்
மாங்கல்யத்துக்குமாய்
மனமாய்
கழுத்து நீட்டியது
ஒரு மனிதனுக்கல்ல...
கழுதைக்குத்தானென்பதை
காலம் உணர்த்தியது
நாளாந்தம் அது என்னை
காலால் உதைக்கிறது...'

ஆண்மைத்தனம் என்பது பெண்களைப்போலவே கற்போடு வாழ்வதும், கைப்பிடித்த மனைவியிடம் அன்பாக நடப்பதுவும் தான். தவிர பெண்களை அடக்குவதும் ஒடுக்குவதும் ஆண்மைக்கு அழகல்ல என்று உணர்த்துவதற்காக அதே கவிதையில் நக்கலாக கீழுள்ளவாறு குறிப்பிட்டு பெண்ணின் சோகத்தை காட்டி நிற்கிறார்.

'... அடக்கி ஒடுக்குவது
ஆண்களின் ஆளுமையாம்
அடங்கிப்போவது
பெண்மையின் பூர்வீகமாம்
அடித்துச்சொல்கிறான்...
குடித்துக் கும்மாளமடிப்பதும்
கொண்டவளை விட்டு
கண்டவளைத்தழுவி
காலங்கழிப்பதும்
ஆண்மையின்
தத்துவமாம் கேளுங்கள்'

இதே கருத்துடைய இன்னொரு கவிதை 'நானாக நான்'. இதிலும் தான் படும் அவலம் பற்றி பெண்னொருத்தி கூறுவதாக அமையப்பெற்றிருக்கிறது. இந்த கவிதையின் சந்தம் என்னை மிகவும் கவர்ந்தது. பல தடவை வாசிக்க வேண்டும் என்ற உணர்வை தந்தது. உதாரணமாக சில வரிகள்...

' பஞ்சவர்ணக் கிளியாகி
பறந்து வர ஆசைப்பட்டேன்
கூண்டுக்குள்ளே எனை அடைத்து
குதூகலிக்க அவனும் வந்தான்
கலாப மயிலாக மாறி
களி நடனம் புரிய வந்தேன்
நீண்ட தோகை அதைப்பறித்து
நிர்வாணமாக்க அவன் வந்தான்'

அரசியல் தலைவர்கள் என்றுமே மக்களுக்காக போராடுவதில்லை என்ற கருத்தில் 'போதுமே உங்கள் ஜாலங்கள்' என்ற கவிதை எழுதப்பட்டிருக்கிறது. அவர்களிடம் 'பண்டிகை தினங்களில் ஊடகங்களில் வாய்கிழிய பொய் பேசுவதை விட்டாலே எங்கள் வாழ்வு செழிக்கும்' என்று நகைச்சுவையாக இயம்பியுள்ளார் நூலாசிரியர் ஷெல்லிதாசன்.

காலங்காலமாக பரம்பரை பரம்பரையாக அடிமைச் சமுதாயமாக கணிக்கப்பட்டு வரும் மலையக மக்களுக்காய் பாடப்பட்ட கவிதை 'மலையுச்சியில் மையங்கொள்ளும் சூறாவளி'. தேயிலை சுமையுடன் கூடிய மனச்சுமையையும் தினம்தினம் அனுபவிக்கும் அந்த ஆத்மாக்கள் எத்தனை துன்பங்களை சந்திக்கின்றன என்பது எல்லாருக்கும் தெரியாது.
ஆனால் ஒரு கவிஞனால் உணர்ந்துகொள்ள முடியும். குறிப்பிட்ட நபர்களாகவே மாறி சிந்திக்கும் திறன் கவிஞனுக்கு மாத்திரம் தான் உண்டு. பொதுவாக கங்காணி, துரைமார் தன்னலவாதிகளாகவே இருப்பார்கள் என்ற பரவலான கருத்தொற்றுமை எல்லோருக்கும் இருக்கிறது. தொழிலாளிகளின் கஷ்டம் புரியாத அவ்வாறான ஒரு துரை பற்றி இப்படி கூறுகிறார்.

'... அந்த
ஐயா - துரையின்
அழகு மலைத்தோட்டத்தில்
தேயிலை
கொய்யும் ராமசாமியின்
ஐந்து பிள்ளைக்குடும்பத்துக்கு
அன்றாடம் கூலி
ஐந்நூறு ரூபா
அப்பப்பா ரூ மச்சாம்
துரை சொல்லி அழுகிறார்'

இன்று எல்லோரையும் மிக வேகமாக தொற்றிக்கொண்டதொரு நோய் தான் ஈகோ. விட்டுக்கொடுப்பின்மையால் இன்று பல குடும்பங்கள் சீரழிகின்றன. நட்பு வட்டாரங்கள் வலுவற்று போகின்றன. நான், எனது, எனக்கு என்ற தன்னிலைவாதத்தால் சமூகம் புரையோடிப்போயிருக்கிறது. அத்தகையதொரு நிலைப்பாட்டின் எடுத்துக்காட்டாவே 'சுவருடைத்து வெளியே வா' என்ற கவிதை அமைந்திருக்கிறது.

கீழுள்ளவற்றிலிருந்து விடுபட்டு மனிதர்களை நேசிக்கும் ஒருத்தனாக மாறி வருமாறு அழைக்கிறார் கவிஞர் ஷெல்லிதாசன்.

'.. மதிப்பு மரியாதைகள்
பெற்றுக்கொள்வதற்கு மட்டுமே
மட்டுப்படுத்தப்பட்டன
கொடுப்பதற்கல்ல என்ற
உனது
கொள்கை பிரகடனங்கள்
இறுக்கமானதும்
ஏளனம் நிறைந்ததுமான
உனது பார்வைகள்
சிரிப்பை உதிர்க்க மறுக்கும்
உன் உதடுகள்
நடையுடையிலொரு
நாட்டாண்மைக்காரத்தனம்'

ஆளுமைக்கொண்ட அன்னைத்தமிழ் என்ற கவிதையில் தமிழின் பெருமை பறைசாற்றப்பட்டிருக்கிறது. தமிழின் சுவையை அறியாதவர்களால் தமிழைக்கற்று அதன்படி கருமமாற்றுவது கஷ்டமாகத்தானிருக்கும். ஆனால் உலகத்திலேயே இனிமையான மொழி தமிழ் தான் என்பதை நாமெல்லோரும் அறிவோம். கவிஞர் ஷெல்லிதாசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

'பாலையும் தேனையும் நீ பருக - சில
நாளிலே அவைகூட திகட்டிவிடும்
நாலையும் இரண்டையும் பெற்ற தமிழ் - அதை
நாளும் படித்திட சுவைபெருகும்
காதலைப்படித்திட ஆசை வந்தால் - அக
நானூறு இருக்கவே இருக்குதடா
கச்சிதமாகவே அதைப்படித்து - நல்ல
காதலை செய்ததில் மூழ்கிடலாம்'

'நானும் ஒரு இளங்குயிலும்' என்ற கவிதையை ஆரம்பத்தில் வாசிக்கும் போது தொலைந்து விட்ட காதலியைப் பற்றி பாடுவதாக எழுதியருக்கிறாரோ என்று தான் எண்ணினேன். ஆனால் இறுதியில் வெகு சுவாரஷ்யமாக நாமெல்லோரும் சிறுவயதில் படித்த காக்கையும், குயிலும் சம்பவத்தை கூறியிருப்பதைக்கண்டு ஆச்சரியம் ஏற்பட்டது. அழகான சந்தத்துடனும் ஓசை நயத்துடனும் இது எழுதப்பட்டாலும் இறுதியில் வாசகரைப்பார்த்து கேட்டிருக்கும் இரு கேள்விகள் சிந்திக்க வைக்கிறது. அதாவது

'பழைமையில் பல காலம்
பாய்விரித்து படுத்த மனம்
ஒரு நாளில் தன்னுறக்கம்
ஒழித்து கண் விழித்திடுமா?
மூடத்தனங்களிலே
மூழ்கிவிட்ட மனிதனையும்
மாற்றிவிட பலர் வந்தார்
மாறியதா மனிதமனம்?'

இது போன்று பல கவிதைகள் இவ்வாறாக புதுவிதமாகவும், மக்கள் மனதில் இடம்பிடிக்கக்கூடிய வகையில் எளிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது. மெத்தப்படித்தவன் என்று தன்னைக்காட்டிக்கொள்வதற்காக இன்று எழுதப்படும் பல கவிதைகள் யாருக்குமே புரிவதில்லை. அவ்வாறு எழுதப்படுபவை தான் சிறந்த கவிதைகள் என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் பல கால அனுபவமும், திறமையும் ஆளுமையும் கொண்ட ஷெல்லிதாசன் போன்ற சிலரின் கவிதைகள் கருத்து செறிவுள்ளதாகவும், மக்களுக்கு ஏதாவதொரு நல்ல செய்தியை எடுத்துக் கூறுவதாகவும் அமைந்துள்ளது. அவரது கவிதைகளில் வாசகனை திக்குமுக்காடச்செய்யும் சொற்றொடர்கள் வந்து கஷ்டப்படுத்தவில்லை. புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததும் அதை முடியும் வரை வாசித்து விட்டுத்தான் எழும்ப வேண்டும் என்ற பிடிப்பை ஏற்படுத்தியது. அவர் இன்னும் பல புத்தகங்களை வெளியிட வேண்டும் என்றும் இலக்கிய முயற்சிகள் இன்னும் தொடர வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.

நூலின் பெயர் - செம்மாதுளம்பூ
நூலாசிரியர் - ஷெல்லிதாசன்
முகவரி – 11/6, சென்யூட்லேன்,
பாலையூற்று, திருகோணமலை
தொலைபேசி – 026 - 4900648
வெளியீடு – நீங்களும் எழுதலாம்
விலை - 200/=

கருத்துக்கலசம் தொகுதி

கருத்துக்கலசம் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

அகில இலங்கை இளங்கோ கழகத்தின் வெளியீட்டில் 103 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது சூசை எட்வேட் அவர்களின் கருத்தக்கலசம் எனும் நூல். இவ்விரண்டு வரிகளில் பல விதமான கருத்துக்களை உள்ளடக்கி எழுதப்பட்டிருக்கும் இத்தொகுதி, அறிவுரைகள் பலதை சொல்லி நிற்கும் நூலாகவும் விளங்குகின்றது. கவிதையாகவும் இதனை நோக்க முடியும். தத்துவார்த்தமான வரிகளாகவும் நோக்கவியலும்.


எதையும் வாசிக்க விரும்பாத விஞ்ஞான உலகில் தான் தேடித்தேடி வாசித்து அவற்றை சின்னஞ்சிறு பூக்களாக தொகுக்க முற்பட்ட மஞ்சரியாகவும், சூசை எட்வேட்டின் அனுபவ நாட்குறிப்புகளாகவும் இத்தொகுதியை வர்ணிக்கிறார் இத்தொகுதிக்கு முன்னுரை வழங்கியிருக்கும் பெரிய ஐங்கரன் அவர்கள். அவர் நூலின் பிற்குறிப்பில் இவ்வாறு எழுதியிருக்கிறார்.


சில இடங்களில் புறநானூறு பளிச்சிடும். சில இடங்களில் கீதாஞ்சலி பளிச்சிடும். சில இடங்களில் ஜெயகாந்தனின் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' பளிச்சிடும். சில இடங்களில் சுந்தர ராமசாமியின் 'ஒரு புளிய மரத்தின் கதை' பளிச்சிடும். சில இடங்ளில் ரகுநாதனின் 'பஞ்சம் பசியும்' பளிச்சிடும். சில இடங்களில் புதுமைப்பித்தன் வெளிவருவார். சில இடங்களில் காண்டேயர் வெளிவருவார். சில இடங்களில் பாரதியோ, பாரதி தாசனோ வெளிவருவார்கள். சில இடங்களில் பட்டுக்கோட்டையோ, கண்ணதாசனோ வெளிவருவார்கள். சில இடங்களில் மகாத்மா காந்தியோ, அன்னை திரேசாவோ வெயிவருவார்கள். சில இடங்களில் விவேகானந்தரோ, விபுலானந்தரோ வெளிவருவார்கள். பல இடங்களில் வள்ளுவரோ, பட்டணத்தாரோ தலை தூக்குவார்கள். உண்மையில் இத்தகைய பெருஞ்சான்றோர்களின் கருத்துக்களை எல்லாம் இருவரிகளில் கருத்துக்கலசமாக தர முயற்சித்திருப்பதே இந்நூலின் சிறப்பு எனலாம்.

புலன்களை கட்டுப்படுத்தினால் சுகமாக வாழலாம் என்ற கருத்து மிகவும் உண்மையானது. அதனை
'புலன்களின் ஏவலனாயிராது காவலனாய் இருப்பார்க்கு
காலடியில் கிடக்கும் துன்பம்' என்கிறார்.

காலங்காலமாக பேசப்பட்டு வரும் பிரச்சனைகளில் காணிப்பிரச்சினையும் பிரதான இடத்தை வகிக்கின்றது. மற்றவர்கள் எப்படிப்போனாலும், பெற்றவர்களையே பொலிஸ் வரைக்கும் இழுத்துச்செல்லும் எத்தனை பிள்ளைகளை சமூகம் தாங்கி நிற்கிறது? அத்தகைய பிரச்சனையை முதலில் ஏற்படுத்தியவனுக்காக பாடப்பட்ட ஈரடி இது.

'நிலத்துக்கு வேலிபோட்டு தனியுடமைக்கு வித்திட்டவனே
உலகத்தின் முதல் குற்றவாளி'.

நிம்மதியை ஆண்கள் வீட்டிலல்லாது வெளியில் தேடுகின்ற காலம் இன்று நேற்று தோன்றியதல்ல. ஆனால் ஒழுக்கமில்லாத அந்தப்பழக்கத்தை கடைப்பிடித்து வாழ்வோர் ஏராளம். நூற்றுக்கு ஒரு வீதத்தினர் மட்டுமே கற்பு நெறியைக் கடைப்பிடித்து வாழ்கின்றனர். அதைக்கீழுள்ளவாறு குறிப்பிடடுள்ளார்.

'விரும்பாவிடினும் சேர்ந்தே வாழ்ந்து தொலைப்பதற்கு
பெயர் கற்பு நெறி'.

எந்விதமான வேண்டுதல்களும் நிறைவேறவில்லை என்று இறைவனை குறை சொல்பவர்கள் பலர். ஆனால் அதற்கான காரணத்தை அறிந்தவர்கள் சொற்ப தொகையினரே. அதை அழகாக தெளிவுபடுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

'நிறைவோடு இறையை இறைஞ்சாத குறையே
முறையீடு நிறைவேறாக் காரணம்'.

குடும்ப வாழ்வில் ஏற்படும் சிறிய சண்டைகள் சகஜம். அதை யாரும் மிகப்பெரிதாக அலட்டிக்கொள்வதில்லை. பெண் என்பவள் மெண்மையானவள். அவளை அன்பால் அடக்கி ஆளத்தெரியாத கணவன் கையாலாகாதவன். அடிபணிந்து கணவனை தன்வழிக்கு கொண்டு வர முடியாத பெண் முட்டாள். ஆகவே குடும்பவாழ்வுக்கு தகுதியற்ற இவர்களால் தான் குடும்பச்சண்டையில் வெற்றி பெற முடியுமாக இருக்கும். அப்படியில்லாமல் குழந்தையாக மனைவியைப் பார்த்தால் இல்வாழ்வில் இன்பமே ஆறாக ஓடும். இதனை சூசை எட்வேட் அவர்கள் இப்படி எடுத்தியம்புகிறார்.

'மனைவியின் கடுகடுப்பு புறுபுறுப்பை குழந்தையின்
குறும்பாகவே நோக்குவார் அறிவாளர்'.

உழைப்பதையெல்லாம் மனைவிக்கு கொடுத்தால் அன்பு பெருகும் என்று கணவனும், கற்போடு வாழ்வது தான் கணவனுக்கு செய்கின்ற கைமாறு என்று மனைவியும் எண்ணினால் அது மணவாழ்க்கைக்கு மணம் சேர்க்காது. உழைப்பையும், கற்பையும் தவிர அன்பும், பாசமும், விட்டுக்கொடுக்கும் தன்மையும் இருக்க வேண்டும். இன்னும் ஒருவருக்கொருவர் பரஸ்பர புரிந்துணர்வை நிலைநாட்டிக்கொள்ளவும் தெரிந்திருக்க வேண்டும். தன் குடும்பத்தினரையும், துணையின் குடும்பத்தினரையும் சமமாக மதிக்கத்தெரிந்திருக்க வேண்டும். குழந்தைகள் விடயத்தில் இருவரும் சமபங்கு அக்கறை காட்ட வேண்டும். அப்படியில்லாமல் கற்பும் உழைப்பும் மட்டும் போதுமா என்ற கேள்விகளை பின்வருமாறு கேட்டு நிற்கிறார் நூலாசிரியரான சூசை எட்வேட் அவர்கள்.

'கணவனை மகிழ்ச்சிப்படுத்த மனைவியின்
கற்பு மட்டும் போதுமா'

'மனைவியை மகிழ்ச்சியாய் வாழ வைக்க கணவனின்
உழைப்பு மட்டும் போதுமா'

காதல் என்பது புனிதமான ஒரு உறவு. கலியுகத்தில் எல்லாமே தலைகீழாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. கண்டதும் காதல் என்று ஓடி, இறுதியில் கல்யாணமின்றியே காதல் உடைந்து சின்னாபின்னமாவது கண்கூடு. பெற்றவர்களையும், வளர்த்தவர்களையும் எல்லாம் துச்சமென ம(மி)தித்து விட்டுச்செல்லும் காதலர்கள், இறுதியில் கஞ்சிக்கும் வழியில்லாது பாடுபடுகின்றனர். இச்சந்தர்ப்பத்தில் பெண்ணின் நிலை தான் கவலைக்கிடமாக மாறுகிறது. ஆசைவார்த்தை காட்டி அழைத்துச்சென்றவன் பாதியிலேயே காணாமல் போக, கைக்குழந்தையுடன் அல்லாடுகிறாள் பெண். இதை காதல் என்று சொல்ல முடியாது. புரிந்துணர்வின்றி கண்களால் ஆரம்பிக்கும் காதலின் இறுதிநிலையை இவ்வாறு வலியுறுத்தி நிற்கின்றன.

'கண்களால் ஆரம்பிக்கும் காதல் ஆண்
பெண் குறிகளால் முடிவுறும்'.

ஏழையாய் பிறத்தல் பாவம் என்று பலர் சொன்னாலும் அது சாபமல்ல. இயலாதவனிடம் இறுமாப்பு இருக்காது. சொத்து சுகத்தை பாதுகாக்க வேண்டும் என்ற தேவையிருக்காது. ஆனால் பணக்காரர்களுக்கு நிம்மதியிருக்காது. அழகிய கனவு காண உறக்கமிருக்காது. பணக்காரன் சதாவும் தனது செல்வங்களை பாதுகாப்பது எவ்வாறு என்ற யோசனையிலேலே மூளை பிசகிப்போவான். ஆனால் எளிமையானவனோ எக்காலத்திலும் அன்றாட உழைப்பால் உண்டு, குடித்து நிம்மதியாயிருப்பான். இதனை கீழுள்ள வரிகள் நிதர்சனமாக்குகிறது.

'உள்ளவனுக்கு உள்ளதாலுள்ள கவலை தெரிந்தால்
இல்லாதவன் கவலை கொள்ளான்'.

கற்ற கல்வியை கசடறக்கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஆனால் அந்தக்கல்வியை தினசரி கற்றாலும் தேவையான போது நினைவுக்கு வருவதே பயனாகும். இந்த கருத்து கீழுள்ளவாறு கையசைத்துக்காட்டுகிறது.

'தினசரி கற்றாலும் தேவையேற்படும்போது நமது
நினைவுக்கு வருவதே அறிவு'.

பெண்களின் ஆழ்மனதில் உள்ளவற்றை எந்த அறிவாளிகளாலும் கண்டு பிடிக்க முடியாது. அவள் என்ன நினைக்கிறாள் என்று அவளுக்குத்தான் தெரியும். மனசைத்திறந்து எதுவும் சொல்லாத பேசாமடந்தை பெண். அவள் பேசினால் எத்தகைய மாற்றம் வரும் என்று இந்த வரிகளால் கோடிட்டு காட்டியிருக்கிறார் ஆசிரியர்.

'மனந்திறந்து பெண்ணொருத்தி பேசினால் அதுவே உலகின்
தலை சிறந்த நாவலாக இருக்கும்'.

நமது ஒவ்வொரு நாளும் நமக்கொரு பாடத்தை கற்றுத்தருகிறது. உலகத்தில் வாழ்ந்து முடியும் வரைக்கும் அது குறைவின்றி நடக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அது தான் உண்மை. அதை

'எதைத் தராவிடினும் உலகம் சாகுமட்டும்
பாடம் தந்துகொண்டே இருக்கும்' என்கிறார்.

இளமையில் எல்லாவிதமான கேளிக்கை களியாட்டங்களில் ஈடுபடும் மனிதன், இறுதிக்காலத்தில் பக்தியாக வாழ எத்தனித்து கோவில், குளம், பள்ளிவாசல் என்று சுற்றித்திரிவது விந்தையானது. ஆனால் அதற்கான உண்மைக்காரணத்தை அறிகையில் அவ்வாறு பாவமன்னிப்பு தேடாமல் இருப்பதும் ஆபத்தானது என்பது புலப்படுகிறது.

'முதுமை நோய் மரணம் இருப்பதாலேயே
தீமை புரிவோர் திருந்த முயல்கிறார்'.

இவ்வாறான பற்பல கருத்துக்களை உள்ளடக்கியதாக கருத்துக்கலசம் வெளிவந்திருக்கிறது. இலக்கியத்துறையில் ஈடுபாடு உடையவர்களுக்கு இந்தப்புத்தகமும் ஒரு புதுவித அனுபவமாக அமையும் என்பதில் நம்பிக்கை உண்டு. படைப்பாளி சூசை எட்வேட் அவர்களின் இலக்கிய ஆளுமை மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.

பெயர் - கருத்துக்கலசம்
நூலாசிரியர் - சூசை எட்வேட்
முகவரி – 1004, அன்புவழிபுரம், திருக்கோணமலை.
தொலைபேசி – 026 - 3268838
வெளியீடு – அகில இலங்கை இளங்கோ கழகம்
விலை - 200/=

Tuesday, February 22, 2011

விடியலில் ஓர் அஸ்தமனம் - நாவல்

விடியலில் ஓர் அஸ்தமனம் - நாவல் பற்றிய இரசனைக் குறிப்பு 

ஈழத்தில் பெண்கள் நாவல் படைக்கும் வீதம் நாளுக்கு நாள் விருத்தியாகிக்கொண்டு வருகிறது. வெறுமனே பொழுது போக்கு நாவல்களை விடுத்து சமூகநோக்கோடு எழுதப்படும் நாவல்கள் என்றும் காலத்தால் அழிவதில்லை. அந்த விதமான நாவல்களை வாசிக்கும்போது மனதில் ஓர் உணர்வு தோன்ற வேண்டும். அந்த நாவல்களுக்கூடாக இதயத்தை தொடுகின்ற ஒரு வலி ஏற்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகர் மனதில் நின்று நிலைத்து பெயர் சொல்லக்கூடிய நாவல்களாக அவை மாறும். நாவல்கள் மகிழ்வூட்டக்கூடியதாக இருக்கின்றனவோ இல்லையோ நெகிழ்வூட்டக்கூடியனவாக இருந்தால் மிகச்சிறப்பாக இருப்பது நிதர்சனம்.

அந்த வகையில் குருணாகலை, தெளியாகொண்ணை ஹிஸ்புள்ளாஹ் நவோதய பாடசாலையில் தமிழ்பாடம் கற்பிக்கும் கலைப்பட்டதாரி ஆசிரியரான எம். ஏ சுமைரா அவர்களின் விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற நாவலை வாசித்த போது எனக்குள் ஒரு வலி ஊடுறுவியது. அந்த சுகமான அனுபவத்தை இந்நாவலை வாசித்தால் மாத்திரமே உணர முடியும். புரவலர் புத்தகப்பூங்காவின் 21வது வெளியீடாக வந்திருக்கும் இந்த நாவல் 13 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. ஏற்கனவே இவர் 2003 ஆம் ஆண்டில் சிந்தனை வட்டத்தின் 174வது வெளியீடாக எண்ணச்சிதறல்கள் என்ற கவிதைத்தொகுதியை தனது கன்னி நூலாக வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விடியலில் ஓர் அஸ்மனம் என்ற இந்த தொகுதி, அவரது நாவல் முயற்சியின் முதல் பிரசவமாகும். அந்த முதல் பிரசவத்திலேயே அழகியதொரு குழந்தையாக இந்நாவல் அமைந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.



கல்கி, ஜெயகாந்தன், சாண்டில்யன், அகிலன், நா. பார்த்தசாரதி, சுபைர் இளங்கீரன், செங்கை ஆழியான், தெணியான், கே. டானியல் போன்ற படைப்பாளிகளினதும், ஜனரஞ்சக எழுத்தாளர்களான லஷ்மி, ரமணிச் சந்திரன், ராஜேஸ்குமார் போன்றவர்களினதும் வித்தியாசமான அனுபவங்களே இவரது விரல்களுக்கு வீரியம் அளித்துள்ளது என நூலாசிரியர் பற்றிய குறிப்பில் கலைஞர் கலைச்செல்வன் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

நாவலின் கரு மாமி மருமகள் பற்றிய பிரச்சனைகளை மையமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. ஆரம்ப காலம் தொடக்கம் தற்காலம் வரை இலக்கியத்திலும், சினிமாவிலும் யதார்த்தமாக பேசப்பட்டு வரும் பிரச்சனை என்றால் அதற்கு சிறந்த முன் உதாரணம் தான் இந்த மாமியார் மருமகள் பிரச்சனை. அதனால் சீர்குலைந்து போன குடும்பங்கள் ஏராளம்.

ப. ஆப்தீன் அவர்கள் தன் உரையில் குறிப்பிட்டிருப்பது போல் ஒன்று மாமியார் நல்லவராக இருந்து மருமகள் எதிரும் புதிருமாக கூட்டுக்குடும்பத்தை நரகலோகமாக மாற்றிவிடுவாள். அல்லது மருமகள் குணசாலியாக இருந்து, மாமியார் கொடூரமாக நடந்து இல்லற வாழ்க்கையைக் கெடுத்துவிடுவாள். அதனால் அந்த வீட்டு ஆண்மகன் படும் அவஸ்தைகளை வார்த்தைகளால் அளவிட முடியாது. வருடங்கள் பல தனக்காக வாழ்ந்த தாயில் கோபம் கொள்வதா அல்லது வாழ்நாள் முழுவதும் தன்னை நம்பி வந்திருக்கும் மனைவி மீது கோபம் கொள்வதா என்று இருதலைக்கொள்ளி எறும்புகளாக தவிப்பார்கள்.

தாய், தாரம் என்ற இருவேறுபட்ட உறவுகளும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலுவதே கண்கூடு. எங்கே தன் மகன் தன்னைவிட்டுவிட்டு நேற்று வந்த மருமகளே கதி என்றாகி விடுவானோ என்ற கவலையில் தாயும், தன் கணவன் தன்;னைப்பற்றி சிந்திக்காமல் சதாவும் அம்மா பிள்ளையாக இருக்கிறாரே என தாரமும் சிந்திக்கத் தொடங்கினால் மகனின் இல்வாழ்வு எந்தளவு பாதிக்கப்படும்? அந்த வகையான ஒரு சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கும் இந்நாவல் சமுதாயத்துக்கு எடுத்துக்கூறும் படிப்பினைகள் பல.

இந்நாவலில் வரும் ஆகாஷ், தாயும் சகோதரியுமே தன் உலகம் என்று நினைத்து வாழ்ந்தவன் வாழ்பவன். சிறு வயதிலேயே தந்தையை இழந்து விட்ட அவர்களை வளர்த்தெடுக்க, தன் தாய் பட்ட வேதனைகளைப் பார்த்து வளர்ந்தவனுக்கு தாய் மீது அலாதி பற்று. தன் உயிரையும் விட தாயை நேசிக்கிறான் ஆகாஷ். தாயும் கூட மகன் ஆகாஷின் அன்பும் உபசரிப்பும் தன் வாழ்நாள் முழுவதும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிற நல்லவள். எனினும் மருமகள் விடயத்தில் தான் பொல்லாத பாத்திரமாக மாற்றப்படுகிறாள். ஆகாஷின் சகோதரி தான்தோன்றித்தனமான பாத்திரம். தன் சுயநலத்துக்காக தனயனின் இன்பங்களைப் பற்றி யோசிக்கத் தெரியாதவள். அவளது பிடிவாதத்தால் தங்கமான கணவரையும் பிரிந்து வந்து ஆகாஷின் சீவியத்தில் வாழ்க்கையை கழிக்கிறாள். ஆகாஷின் மனைவி பிருந்தா வாயில்லாத பூச்சி. எது நடந்தாலும் கணவனுக்காக வேண்டி பொறுத்துக்கொண்டு, நிம்மதியற்ற வாழ்வை வாழ்ந்து தொலைப்பவள்.

மகன் வேலைவிட்டு வரும்போதே தாய் மருமகள் பற்றிய புராணத்தை இப்படி பாடுகிறாள்.

'ஆ.. வா... ப்.. பா! நல்ல நேரம் வந்தே. உன் சுந்தரிக்கு காய்ச்சலாம். போத்திப்படுக்குறா. வேலைக் கள்ளிக்கு புள்ள சாட்டாம். தெனம் தெனம் அவவுக்கு மட்டும் அப்படி என்ன காய்ச்சலோ? நாம என்ன வேலய வாங்குறோம்?'

அது போல மனைவி பிருந்தா மீது ஆகாஷ் கொண்டுள்ள வெறுப்பு கீழுள்ள வரிகளில் நன்கு புலப்படுகிறது.

'சதாவும் அழுது வடியும் முகமும், எதையோ பறிகொடுத்தது போன்ற பார்வையும் எனக்குள் இன்னும் எரிச்சலைத் தந்தது. அம்மா சொல்வது சரி தான் என்று எண்ணத் தோன்றியது. கணவன் அலுவலகத்திலிருந்து வரும்போது, மனைவி லெட்சணமா வாயில் வரை வந்து வரவேற்காது வருடத்தில் பாதி நாள் நோய் . அது போதாதென்று 'வேலைக்காரி' போல் எந்த அலங்காரங்களுமின்றி தூங்கு மூஞ்சாக உம் என்றிருப்பது எனக்கு மேலும் வெறுப்பை ஏற்றியது..'

திருமணம் முடித்து இரண்டு ஆண்டுகள் கழிந்தும் ஆகாஷ் - பிருந்தா தம்பதியினருக்குள் ஒற்றுமையில்லை. அந்நியோன்னியமில்லை. அதனால் ஒவ்வொரு நாளும் மனப்போராட்டங்களுடன் விடியும் இரவுகள் ஆகாஷூக்கு சொந்தமாகிக் கொண்டிருந்தன. பிருந்தாவும் தனக்கெதிராக வீட்டில் அரங்கேறும் அநியாயங்களை கணவனுக்குக் கூறாமல் தானும் தன் குழந்தையும் என்று வாழ்வதால் உண்மை நிலவரம் தெரியாமல் தன் வாழ்க்கையே வெறுத்திருக்கிறான் ஆகாஷ்.

ஒரு நாள் அலுவலகத்துக்கு சென்ற போது அவனது உயிர் நன்பணான தேவ் அங்கு வீற்றிருக்கிறான். அவர்கள் பால்ய காலம் முதல் பல்கலைக்கழகம் வரை ஒன்றாக படித்தவர்கள். வறுமையின் கொடுமையால் ஒன்றாக வெளிநாட்டுக்கு பறந்தவர்கள். இனம்புரியாத மகிழ்ச்சியுடன் தேவ் ஐ வரவேற்கிறான் ஆகாஷ். தன் மனைவி மூன்றாவது தடiவாக கர்ப்பமாக இருப்பதாகவும், நாளைக்கு ஆகாஷ் குடும்பத்தினரை விருந்துக்கு வரும்படியும் அறிவித்துவிட்டு தேவ் சென்றுவிடுகிறான்.

இந்த சந்தோஷத்துடனேயே அன்றைய அலுவல்களை முடித்து உற்சாகமாக வீடு வந்தபோது அம்மா மாத்திரம் அவனை எதிர்பார்த்து காத்திருக்க பிருந்தாவை அவன் கண்கள் தேடுகிறது. அதை புரிந்த தாய் மீண்டும் மருமகள் பற்றி மகனிடம் வத்தி வைக்கிறாள்.

'வா.. ப்.. பா! உன் சுந்தரிய தேடுறியா? அம்மாவும், புள்ளயும் கொஞ்சி குலாவிக்கிட்டிருக்காங்க. நீ பாட்டுக்கு ஒழச்சி.. களைச்சி... கஷ்டப்பட்டுட்டு வர்றே.. இங்க இவளுக்கு சொகுசு மெத்திப்போச்சி. களைச்சி வர்ற புருஷன ஆசுவாசப்படுத்தவாவது பொழுதில்ல.. வேல கள்ளிக்கு புள்ள சாட்டு.. கழுதய விடு.. நீ உள்ள வாப்பா. சாப்பாடு வைக்கிறன்..'

ஆகாஷ் அறைக்கு சென்று பார்க்கிறபோது பிருந்தா தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவனுக்கு கோபம் கோபமாக வருகிறது. குடும்பப் பாரத்தை உணர்த்தி தன்னை கஷ்டப்பட்டு வளர்த்த தாய், தனக்காக இன்னும் கஷ்டப்படுகிறாளே என்று எண்ணியெண்ணி மனசுக்குள் குமைந்தான் ஆகாஷ்.

இரண்டு வருடங்களுக்கு முதல் தான் திருமணம் புரிய சம்மதித்த நினைவுகள் ஆகாஷின் மனக்கண் முன் தோன்றுகிறது. முப்பத்தாறு வயதில் அம்மா அக்காவின் விருப்பத்துக்காக திருமணம் செய்ய விருப்பம் கொள்கிறான். மேலும் பிருந்தாவின் அழகு, அவளது கண்களில் வீசும் காந்த ஒளி, சாந்த முறுவல் யாவும் ஆகாஷை சந்நியாசி வாழ்விலிருந்து சம்சார வாழ்விற்கு இட்டுச்செல்கிறது. அப்படி ஆசை ஆசையாக திருமணம் முடித்தும், இன்று அந்த பிருந்தாவால் தனக்கும், தன் தாய்க்கும் கஷ்டம் தானே என்று எண்ணி தன் தந்தை காலமான போது அழுததற்கு பிறகு அன்றைய இரவில் அழுது தீர்க்கிறான் ஆகாஷ்.

அடுத்த நாள் அலுவலகம் விட்டு தேவ் இன் வீட்டுக்குப்போய் விருந்துண்டு மகிழ்ச்சியாக இருக்கிறான் ஆகாஷ். தேவ் உம் அவனது மனைவி திவியும் காதலில் கசிந்துருகி வாழ்பவர்கள். வாழ்வை இன்பமாக்கும் கலையை கற்றுத் தேர்ந்தவர்கள். அவர்களை பார்க்கும் போது ஆகாஷின் மனதை வெறுமை ஆட்கொள்கிறது. அவனது வாழ்க்கை, எதிர்காலத்தை காட்டி பயமுறுத்துகிறது. மீண்டும் நாளைக்கு பிருந்தாவுடன் வருமாறு தேவ் திவி தம்பதி ஆகாஷூக்கு கட்டளையிட, மறுக்க முடியாமல் சரி என்கிறான் ஆகாஷ். அடுத்த நாள் காலையில் அலுவலகம் போன போது ஆகாஷூக்கு தொல்லையாக இருக்கும் ரோசி என்பவள் எதிர்படுகிறாள். அவள் ஆகாஷின் கம்பீரத்துக்கு வசியப்பட்டவள். எனினும் ஆகாஷ் அவளை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ரோசி - ஆகாஷின் ஊரையாடல் பின்வருமாறு அமைகிறது.

'என்ன சேர் கடமைக்காக தேங்ஸ் சொல்றீங்க? மலர்ந்த முகத்தோட புன்முறுவலோட சொல்லுங்களேன். என்ன கொறஞ்சா போயிடும்? உங்க சிரிப்பு இருக்கே. அப்பப்பா என்ன ஒரு மின்சக்தி...'

'ஸ்டொப் ரோசி. திஸ் இஸ் டூ மச். மைன்ட் யுவர் லேங்குவேஜ். ஐ எம் மெரீட். நான்ஸன்ஸ். ப்ளீஸ் கோ அவுட்' (நிறுத்து ரோசி. அளவுக்கதிகமா பேசுற. வார்த்தைகளை அளந்து பேசு. நான் திருமணம் முடித்தவன். வெளியே போ)

'ஓ கே. நான் போயிடுறேன் சேர். ஆனா ஒன்டு சொல்லட்டுமா? கோபத்திலேயும் உங்க மீசை துடிக்கும் போது அலாதியான அழகு தான். உங்க வைஃப் லக்கி லேடி. பாய் சேர்'

ஒரு பெண்ணின் பார்வை ஒன்றையை வேதமாக ஏற்று வாழும் பல ஆண்களுக்கு மத்தியில் தேடி வரும் பெண்ணையும் ஒதுக்கிவிடும் ஆகாஷ் போன்ற நல்லவர்கள் இன்று நம்மில் எத்தனை பேர் இருக்கிறார்கள். ஒரு ஜென்டில் மேனாகவே நடந்து கொள்ளும் ஆகாஷ், ஏன் தன் மனைவி குழந்தைகள் மீது மட்டும் இவ்வாறு வேறுபாடு காட்டுகிறான்? ஏன் அவனால் தன் தாயும் சகோதரியும் நடாத்தும் நாடகத்தை புரிந்துகொள்ள முடியவில்லை என்று என்னில் பல எண்ணங்கள் உருவெடுத்தது. அதற்குக்காரணம் வீட்டார்கள் மீது கொண்டுள்ள கண்மூடித்தனமான அன்பும், நம்பிக்கையும் தான் என்பது வாசிக்கும் போது புரிந்தது.

மீண்டும் அடுத்த நாள் ஆகாஷ் பிருந்தாவுடன் தேவ் வீட்டுக்கு சென்று அவளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறான். தன் குடும்பப் பிரச்சனைகளை தேவ் அறிந்து கொள்ளக்கூடாது என்பதற்காக மனைவி பிருந்தாவிடம் எதையும் சொல்லிடாதே என ஆகாஷ் எச்சரிக்கிறான். அவளும் அதே போல நடந்துகொள்கிறாள்.

அவனது அலுவலகத்தின் புதிய கிளை திறந்து வைக்கப்படுகிறது. எதிர்பாராவிதமாக ஆகாஷை அந்த நிறுவனத்தின் தலைவராக்குகிறார் மேலதிகாரி. இவற்றையெல்லாம் பார்க்க தன் தந்தை இல்லையே என்றும் தாய் கண்டால் மிகவும் சந்தோஷப்படுவார் என்றும் நினைத்து கண்ணீர் சிந்துகிறான் ஆகாஷ்.

எதிர்பாராத இந்த வெற்றியைக் கொண்டாட தாய்க்கும், சகோதரிக்கும் ஆடைகளை வாங்கிக் கொடுத்தவன் மனைவி பிள்ளைகளை வேண்டுமென்றே தவிர்த்துவிடுகிறான். ஒரு ஓரமாக இருந்து இதையெல்லாம் பார்த்து கண்ணீர் வடிக்கும் பிருந்தாவைக் கண்டதும் ஆகாஷூக்கு சுருக் என்கிறது. எனினும் அதைப்பற்றி கவலைப்படாமல் வேறு பக்கமாக திரும்பி அம்மாவினதும் அக்காவினதும் சந்தோசத்தை பார்த்து மகிழ்கிறான். அத்தியாயம் நான்கு வரைக்கும் இவ்வாறான கதையாடல் தான் விரிந்து செல்கிறது. ஐந்தாவது அத்தியாயத்திலிருந்து தான் இந்நாவலின் தலைப்புக்கேற்ற கதை நகர்த்தப்பட்டிருக்கிறது.

அதாவது இரண்டு மாதங்களுக்குப்பின் ஒரு நாள் தேவ் வீட்டுக்கு சென்ற ஆகாஷ் மொட்டை மாடிக்கு செல்கிறான். அங்கிருந்து பார்த்தால் ஆகாஷின் வீடு நன்கு தெரியும். எதேச்சையாக எதையோ கண்டு அவன் மனம் புழுவாய் துடிக்கிறது. ஆம்! தன் தாயும் சகோதரியும் மனைவி பிருந்தாவுக்கு செய்யும் கொடுமைகளை காண்கிறான் ஆகாஷ். அம்மா பிருந்தாவை கீழே தள்ளிவிட அவள் தலை எதிலோ மோதுகிறது. பின் ஆடைகளைக் கழுவுகிறாள். இடையிடையே அழுகிற குழந்தையை ஆசுவாசப்படுத்துகிறாள். ஆகாஷூக்கு தன் கண்ணையே நம்ப முடியவில்லை. கருணைக்கு பெயரான அம்மா ஏன் இப்படி மூர்க்கத்தனமாக நடக்கிறாள்? ஆயிரம் வினாக்கள் மனதில் விரிய, அவன் தோள்களை இரண்டு கைகள் பற்றுகிறது.

ஆகாஷ் பார்த்த அந்த காட்சியை தாம் இரண்டு மாதங்களாக பார்த்துக்கொண்டு இருப்பதாகவும், பிருந்தாவில் எந்த தப்புமில்லை என தேவும், திவியும் கூறுகிறார்கள். திருமணம் செய்வதற்கு முதலேயே தனக்கென பணம் சேமித்து, வீடும் கட்டியதால் இன்று தாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பதாக விளக்குகிறான் தேவ். ஆனால் ஆகாஷோ அவ்வாறான எண்ணமில்லாதபடியால் தன் சொந்த வாழ்வை விடுத்து வீட்டார்களின் நலவைப்பற்றி மாத்திரமே சிந்தித்ததால் தற்போது அவன் படும் வேதனை பற்றியும் விளக்கினார்கள். இனிமேல் நடக்க வேண்டிதை மூவருமாக ஆலோசிக்கிறார்கள். தன் தவறை உணர்ந்த படியாலும், பிருந்தா மீது எந்தவிதமான தப்பும் இல்லாத படியாலும் தன் மனைவி மீது ஆகாஷிற்கு அளவு கடந்த காதல் பிறக்கிறது. எனினும் அதை உடனே வெளிக்காட்டுவது ஆபத்து என்பதால் மெதுமெதுவாக அவளை தன்வயப்படுத்துவது என்று முடிவெடுக்கிறான் ஆகாஷ்.

அதே வேகத்தில் அக்காவின் கணவரான ஹரி அத்தானை சந்தித்த போது அவரில் எந்த விதமான பிழையுமில்லை என்பதை உணர்கிறான் ஆகாஷ். அதை ஒருநாள் அக்காவிடம் கூறிய போதும் அவளது பிடிவாதத்தால் ஹரியுடன் வாழ மறுக்கிறாள். செய்யாத குற்றத்துக்காக கணவனை குறை சொல்லும் பெண்தான் தனது சகோதரி என்பது ஆகாஷூக்கு புரிகிறது.

இத்தனை நாளும் மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் பிருந்தாவில் குறை கண்டவன், தற்போது சிந்தனை தெளிந்தவனானபடியால் எல்லா கோணங்களில் இருந்தும் யோசிக்கத் தொடங்கினான்.

அன்று நேரகாலத்துடன் வீட்டுக்குப் போனபோது நிகழ்ந்த உரையாடலில் அம்மாவினதும் அக்காவினதும் சுயருபம் தெரிகிறது.

என்னடி.. இன்னும் சமையல் பண்ணல? எத்தின மணிக்கடியம்மா நாம சாப்பிடறது? என்ற தாய்க்கு சாதகமாக 'இரு.. இரு.. ஆகாஷ் வரட்டும். இன்று பிட்டுப்பிட்டு வைக்கிறேன்' என அக்காவும் கூறுவது, ஆகாஷூக்கு உண்மையை உணரச்செய்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாது வீட்டில் நுழைகிறான். அவனது வரவை அந்நேரத்தில் எதிர்பார்க்காத தாய் முதலில் அதிர்ந்துபோகிறாள்.

அப்போது அடுக்களையிலிருந்து வெளியே வந்த மனைவியின் கோலம் அவள்மீது கழிவிரக்கம் கொள்ளச்செய்கிறது. அந்த வேதனையை ஆகாஷின் மனதில் கீழுள்ளவாறான எண்ணத்தைத் தோற்றுவிக்கிறது. ஷநெற்றியில் துணியால் கட்டுப்போட்டிருக்கிறாள். தோளில் குழந்தை. துணியெல்லாம் துவைத்து.. இப்போ சமைக்கிறாள். ஓ.. இங்கே இவள் வேலைக்காரி. இவர்கள் வேலை வாங்குகிறார்கள். கவனித்துக்கொள்கிறேன் என மனதுக்குள் பொருமினேன்.

மனைவிக்கு ஓய்வு கொடுப்பதற்காக அம்மாவிடம் சமைத்துக்கேட்பதும், பிருந்தா தன்னருகே இருக்க வேண்டும் என்பதற்காக சுத்தமாக இருக்கிற தன் அறையை இழுத்துப்போட்டு சுத்தம் செய்யும் படி ஏவுவதும், தைலம் தடவி விடச் சொல்வதும், அவனது அலுவலக வேலைகளில் அவளை இணைத்துக்கொள்வதுமாக பிருந்தாவை தன் அருகே இருத்திக்கொள்ள அதிகம் பிரயச்சித்தப்படுகிறான் ஆகாஷ். ஆகாஷின் இந்த மாற்றம் அம்மாவுக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. அம்மாவினதும் ஆகாஷினதும் நெருக்கம் அம்மா மருமகள் மீது கொண்ட பொறாமையால் மெதுமெதுவாக சீர்குலைகிறது.

தேவ் திவியின் வழிகாட்டுதலாலும் ஆகாஷ் பிருந்தாவைப் புரிந்து கொண்டதாலும் அவர்கள் இன்பமாக வாழ்வதற்காய் தனிக்குடித்தனம் போகிறார்கள்.

இடையிடையே அம்மாவின் நினைவுகள் எழுந்து மனதை வதைத்தாலும் பிருந்தாவின் அருகாமையால் கவலைகள் மறக்கிறான் ஆகாஷ். இதுவரை ஒட்டாதிருந்த மகள் துஷாக்குட்டியும் தந்தையுடன் ஐக்கியமாகிறாள். அன்பான மனைவி, அழகான குடும்பம் என்று ஆகாஷின் வாழ்க்கை அழகாக செல்கிறது. 'உன் சுந்தரிக்கு காய்ச்சலாம்' என்று தன் அம்மா அடிக்கடி கூறும்போது விளங்காத ஆகாஷூக்கு, பின்பொருநாள் அவளது நெற்றியில் எதேச்சையாக கை பட்டபொழுது பாரதூரம் விளங்குகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் கதை. கதையின் இறுதியில் பிருந்தா இரத்த புற்று நோயால் இறக்கிறாள். மனதை நெகிழ்வடையச் செய்யக்கூடிய வரிகள் இறுதியில் இவ்வாறு அமைந்திருக்கிறது.

'என்னுயிர் பிருந்தா.. அவதிப்பட்டு.. துடிதுடித்து.. அலங்கோலமாகி... ஆறாவது நாள் அடங்கியே போனாள்'

'என் இதயம் ஸ்தம்பித்தது.. என் விடியல் அஸ்தமனமாவது கண்டு நான் சிலையானேன்'

அவதிப்பட்ட ஒரு குடும்பத்தை அருகிலிருந்து பார்த்த உணர்வில் நாவல் முழுவதும் நான் ஒன்றித்தேன். மிக அருமையாகவும், வசன இடர்பாடுகள் அற்றதாகவும் சீரான போக்கில் அமைந்திருக்கிறது இந்த நாவல். இது போல இன்னும் பல படைப்புக்களைத்தந்து சுமைரா அவர்களின் இலக்கிய வளர்ச்சி இமயமாய் வளர வாழ்த்துகிறேன்!

இந்நாவலை நீங்களும் பெற விரும்பினால் கீழுள்ள விலாசத்தோடு தொடர்பு கொள்ளுங்கள்!!!

பெயர் - விடியலில் ஒர் அஸ்தமனம் (நாவல்)
நூலாசிரியர் - எம். ஏ. சுமைரா
முகவரி - K.K.M. Garden, Thakkiya Road,
Mallawapitiya, Kurunegala,
Sri Lanka.
தொலைபேசி - 00 94 72 3670515
வெளியீடு - புரவலர் புத்தகப் பூங்கா
விலை - 150/=


http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13158:2011-02-22-11-44-13&catid=4:reviews&Itemid=267

Thursday, December 16, 2010

மழை நதி கடல் - கவிதை தொகுதி

மழை நதி கடல் கவிதை தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

இனம் மதம் மொழி என்ற வகைமைக்குள் பாகுபட்டுப்போகும் மனிதன் இயற்கையில் ஒன்றிணைகிறான். காலங்காலமாக பாடப்பட்டு வரும் கவிதைகளில் சிலர் பிரிவினைப்பட்டாலும், இயற்கையை பாடுபொருளாகக்கொண்டவற்றில் யாவருமே கட்டுண்டுப்போவது தான் உண்மை. அந்த வகையில் மழை நதி கடல் என்ற இனிமையான ஒரு தலைப்பை கொண்ட புத்தகத்தைத் தந்திருக்கிறார் நூலாசிரியர் இனியவன் இஸாருதீன்.


318 பக்கங்களைக்கொண்டு மிகக் கனதியாக, எழுவான் பப்ளிகேஷனின் வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுதியில் 91 கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன. அத்துடன் கவிக்கோ அப்துல்ரகுமானின் அணிந்துரையுடனும், ஆசுகவி அன்புடீனின் மதிப்புரையுடனும், எம். ஏ. பௌசுர் ரஹ்மானின் மதிப்புரையுடனும்; ஆசிபெறுகிறது இவரது கவிதைத் தொகுதி.


அமெரிக்க விஞ்ஞானிகளும் ரஷிய விஞ்ஞானிகளும்
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்துகொண்டிருப்பது மாதிரி
மழை நின்ற பிறகும்
இலையில் தூங்கும் ஒவ்வொரு நீர்;த்துளியையும்
ஆராதித்து
நானும் ஆராச்சி செய்துகொண்டிருக்கிறேன்...

என்று கவிஞர் முன்னுரையில் கூறியிருக்கும் வரிகளில் இயற்கையோடிணைந்த அவரது வாழ்வைக்காணலாம்.
இறைவனின் வல்லமைகள் பற்றியும், அவன் நமக்களித்த அருட்கொடைகள் பற்றியும் முதல் கவிதையான இறைவா உன்னிடம் கவிதை பேசுகிறது.

...இம்மையின் அதிபதி நீ
மறுமையின் நீதிபதி நீ
இம்மைக்கும் மறுமைக்கும்
நிலையான தலைவனே நீ... மேலும்
அழகின் இனிமை கான
விழிகள் ஆக்கினாய்
புகழின் மேன்மை கேட்க
செவிகள் ஆக்கினாய்
வாழ்வின் தூய்மை காக்க
இதயம் ஆக்கினாய்... என தொடர்கின்றன வரிகள்.

வல்ல அல்லாஹ்வுக்குப்பின் நாம் போற்ற வேண்டிய உத்தமர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பற்றிய கவிதையாக நாயகம் எங்கள் தாயகம் அமைந்திருக்கிறது. அதில் அவரை பூந்தாது கொண்டு வந்த ஹிறாத்தென்றல் என்று குறிப்பிட்டிருக்கும் உவமை ரசிக்கக்கூடியதாக இருக்கிறது.

கணிப்புகளுக்கு அப்பால்
காலவெள்ளத்தின் வேகத்திற்கப்பால்
வையகமெல்லாம் ஓடம்
வற்றாத சமுத்திரம்
அவரது கருத்துக்கால்களுக்கு
எல்லைகளில்லை
போதனையலைகள்
ஓள்வதில்லை... என்ற வரிகளில் நாயகம் (ஸல்) அவர்களின் மாண்பு எடுத்துக்காட்ப்பட்டிருக்கிறது.

உலகில் ஆயிரம் சொந்தங்கள் எமக்கிருந்தாலும் தாய்போல் யாரும் துணையில்லை. அந்த வகையில் தாய் பற்றியும், தாயின் சிறப்பு பற்றியும் கூறாத கவிஞர்கள் இருக்கவே முடியாது. கவிஞர் இஸாருதீனின் கவிதைத் தொகுதியிலும் தாய் பற்றிய கவிதைகள் காணப்படுகிறது.

தூங்க வைப்பதற்காக தாலாட்டு
பாடுகிற உம்மா
நான் விழித்துக்கொள்வதற்காக
நீ எப்போது
பாடப்போகிறாய்? என்று கேள்வி கேட்கிறார். அதில்

இரவில் தலைக்கு எண்ணெய்
தேய்க்காதே என்றாய்
ஏனென்று கேட்டேன்
என்னடா எதிர்கேள்வி
கீழ்ப்படி என்றாய்
தேய்ப்பதை நிறுத்தவில்லை
பிறகு தான் அது
தலையணையில் ஒட்டுமென்றாய்
உடனே நிறுத்தி விட்டேன்

என்று கூறும் விடயம் தாய் சொல் தட்டினால் நஷ்டம் விளையும் என்பதை கூறி நிற்கிறது.

இந்தக்கவிதையில் சில யதார்த்தபூர்வமான பிரச்சனையையும் தொட்டுக்காட்டியிருக்கிறார்.

முன்கோபம் கூடாது
இதுவும் உன் அறிவுரை
இப்போது
அடிமை வேலை செய்கிறேன்
அவர்கள் ஆதிக்கிறபோது கூட
நான் ஆத்திரப்படுவதில்லை
முன்கோபம் தானே கூடாதென்றாய்
பின்கோபம் கூட
பெரிதாய் சேர்ந்து விடுகிறது...

மேலும் தாய் என்ற கவிதையில்

...அழகியின் புன்னகைக்கு
ஆண்மை அடக்கம்
தாயின் கண்ணீருக்கோ
தரணியே அடங்கும்...
ஒரு பெண்ணின் சதியால்
போர் நிகழும் என்றால்
தாயொருத்தியால் தான்
நிறுத்தமுடிகிறது...

என்று நிதர்சனமாக கூறப்பட்டிருக்கும் இந்தக்கவிதை பாராட்டுக்குரியனவற்றில் ஒன்று.

காதல் என்று கூறப்படுவது வெறும் இனக்கவர்ச்சிக்காக மட்டுமே என்ற கருத்துநிலையை இன்றைய காலத்தில் மெய்ப்பித்துக்கொண்டிருக்கின்றார்கள். பள்ளிப்பருவத்தில் கூட மாணவர் சமூகம் காதல் என்ற அறியாமையில் மூழ்கி தம்மை சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள். காதல், காமம் இரண்டுக்குமிடையேயான வித்தியாசத்தை, காமத்துடன் பேசும் காதல் என்ற கவிதையின்

நான் இதயத்தின் பிறப்பு
நீ உணர்ச்சியின் கழிவு
நான் இறைவனின் வரம்
நீ சாத்தானின் பரிசு...
நான் உறவுக்கான பேரின்பம்
நீ பிரிவுக்கான சிற்றின்பம்
நான் மானுடக்கிண்ணத்தில்
ததும்பும் அமுத ரசம்
நீ வேட்டைப்பற்களில் சுரக்கும்
கொடிய விஷம்...

ஆகிய வரிகளிலிருந்து தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.

வெறியில் துரத்திய முகங்கள் எதிலும்
ஒன்றில் கூட மானுடம் இல்லை
இருந்தவை எல்லாம்
இட்லரின் முகங்கள்
முசோலினியின் கண்கள்
யூத இதயங்கள்

என்ற ஏக்கம் ஓர் அகதியின் பாடல் என்ற கவிதையின் வாயிலாக வடஇலங்கையை விட்டு வெளியேறிய முஸ்லிமகளின் துயராக வெளிப்பட்டு நிற்கிறது.

பெண்களை போகப்பொருளாக மட்டுமே நோக்கிய ஒரு காலம் இருந்தது. இன்று அவற்றையெல்லாம் தகர்த்து புதுப்பொலிவாக பிறப்பொடுத்திருக்கிறாள் பெண். தாய்மையில் முழுமையடையும் பெண்ணின் பெருமையை கற்பு என்பது என்ற கவிதையில் அழகாக பறைசாற்றியிருக்கிறார் இஸாருதீன் அவர்கள்.

...ஒவ்வொரு பெண்ணும்
பிரமாண்டத்தின் இரகசியம்
ஒவ்வொரு பெண்ணும்
பிரபஞ்ச மர்மத்தின் பரகசியம்
ஒவ்வொரு பெண்ணும்
மாய்ந்துபோன இதயத்திற்கு
உயிரூட்டும் ஆனந்தம்...

என்ற கருத்துக்களில் அதை புரிந்து கொள்ளலாம்.

நெற்கதிர்களே என்ற கவிதையில் அவை மஞ்சள் நிறமாய் இருப்பதற்கு பொன்னாடை போர்த்தியவர் யார் என்று கேள்வி கேட்டு அதிசயிக்க வைக்கிறார்.

கலியுகத்தினில் கவலைகளோடு போராடாத மனிதர்கள் இல்லை. எந்த விடயத்தை எடுத்தாலும் அதில் ஓர் துன்பம் ஆழப்புதைந்திருப்பது கண்கூடு. அத்தகைய தருணங்களில் எல்லாம் தலைபோய்விட்டது போல வேதனை கொள்ளும் மனிதர்களுக்கு ஆறுதல் சொல்லும் தன்மை கவிஞனுக்கு இயல்பாக வந்த கலை தான். இஸாருதீனும் கூட இப்படிக்கவி பாடி ஆறுதல் தருகிறார்.

... அகம் மகிழ்கையில்
ஆழிப்பேரலை வந்து
அனர்த்தம் கூட நிகழ்த்தலாம்
எது நிகழ்ந்தால் என்ன
... எத்தனை துயர் வந்தாலும்
புன்னகையில் முகம் கழுவிப்பார்...

எத்தனை அர்த்தபுஷ்டியான வரிகளிவை? புன்னகையை வரவழைத்துக்கொண்டால் துன்பங்களேது என்றவாறு அமையப்பெற்றிருக்கிறது மேலுள்ள வரிகளைத்தாங்கிய மனங்கொள் மனிதா என்ற கவிதை.

எனக்கு கவிதை எழுதத்தெரியாதே என்று கூறுபவர்களுக்கு உனக்கும் கவிதை வரும் என்று அதற்கான காரணங்களைக் கற்றுத்தருகிறார் நூலாசிரியர். அதாவது தாயின் பிரசவ வேதனையை உணர்ந்தவர்களுக்கும், தன்னைத்தொலைத்து கண்டெடுத்தவர்களுக்கும், யாரோ ஓர் அப்பாவியின் சோகத்துக்காய் அழுதவர்களுக்கும், மரண அவஸ்தையறிந்து பிறப்பின் பெருமையை அறிந்தவர்களுக்கும் கவிதை வரும் என்கிறார்.

இஸாருதீனின் கவிதை வரிகளில் ஆழமாக மூச்செடுத்தவர்களுக்கு நிச்சயம் கவிதை வரும். அந்தளவிற்கு சுவாரஷ்யமாகவும், கருத்தாழம் மிக்கவையாகவும் கூறுவதுடன் நிறுத்திடாமல் பல கோணங்களில் சிந்தித்து, கெட்ட விடயங்களை நிந்தித்து ரசிக்கத்தகதாக மட்டுமன்றி சிந்திக்கத்தக்க விதமான கவிதைகளையும் தந்திருக்கிறார். இவரது அனைத்து கவிதைகள் பற்றியும் அழகாக வாழ்த்த முடியும் என்றாலும் புத்தகத்தை வாங்குபவர்கள் வாசித்தறிய வேண்டும் என்பதற்காக நிறுத்தி, அவரது இலக்கியப்பணி தொடர்ந்து நடைபெற என்றும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்!!!

பெயர் - மழை நதி கடல் (கவிதைகள்)
நூலாசிரியர் - இனியவன் இஸாருதீன்
முகவரி - அறபா பாடசாலை வீதி, அட்டாளைச்சேனை - 10
தொலைபேசி - 0094 672278404
மின்னஞ்சல் முகவரி - isarudeen@gmail.com
வெளியீடு - எழுவான் வெளியீட்டகம்
விலை - 400/=

Sunday, November 28, 2010

சிகரம் தொட வா - சிறுவர் கவிதைகள் தொகுதி

சிகரம் தொட வா - சிறுவர் கவிதைகள் தொகுதி பற்றிய ரசனைக் குறிப்பு

சிறுவர்களுக்கான இலக்கியங்கள் படைப்பது பெரும் சிரமம். கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதை விட குழந்தை இலக்கியத்தை படைப்பது மிகவும் கஷ்டமான வித்தை என்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மேற்சொன்ன கருத்தையெல்லாம் தகர்த்து ஆரம்பகால படைப்புகளையெல்லாம் கொடிய சுனாமி கொண்டு சென்ற போதிலும், சிறுவர்களுக்கு தன்னால் முடிந்த தொண்டுகளை செய்யும் நல்ல நோக்கத்துடன், துணிச்சலாக காத்திரமானதொரு சிறுவர் தொகுதியை கிண்ணியாவிலிருந்து திருமதி. பாயிஷா அலி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

`சிகரம் தொட வா' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் இந்த நூல் தி/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய இலக்கிய மன்றத்தால் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 35 பக்கங்களில் 22 கவிதைகளை உள்ளடக்கி இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.



கண்ணியமாக வாழந்திடுவோம், சிகரம் தொட வா, வண்ணக்கவிதைகள் படைப்போமா, துணைவருவாயா வெண்ணிலவே, அம்மாவின் முத்தம், வானவில்லை ரசித்திடுவோம், துளியே துளியே விழுந்திடு, நவீன ஆமையும் முயலும் கதை, கற்போம் கணனி, அப்பமும் பூனைக்குட்டிகளும், தண்ணீர்.. தண்ணீர், முயலின் தந்திரம், செல்ல நாய்க்குட்டி, உலகை வெல்வோம் நிச்சயமே, எறும்பும் வெட்டுக்கிளியும், நல்ல விருந்து, உணர்ந்திடுவாய், செல்லிடத்தொலைபேசி, வெற்றிக்கனியை சுவைப்போம், எங்களுர் கிண்ணியா, சின்னச்சிட்டுக்குருவிகளே, மீன்கள் வளர்ப்போமே என்ற தலைப்பிலான கவிதைகளை தாங்கியிருக்கிறது இப்புத்தகம்.

எளியமையான சொல் நடையுடன் சிறுவர்கள் சீக்கிரம் புரிந்துகொள்ளுமளவுக்கு விடயங்களை நுட்பமாகவும, கருத்துள்ளவையாகவும் யாத்துள்ளார் திருமதி பாயிஷா அலி அவர்கள். வசனங்களில் எதுகை மோனை அமைப்பு ரசிக்கத்தக்க விதமாகவும், சிறுவர்கள் இலகுவில் பாடல்களை நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையாகவும் எழுதியிருக்கிறார்.

'கண்ணியமாகவே வாழ்ந்திடுவோம்' என்ற கவிதையில்

'சொல்லும் கலிமா பொருளுணர்வோம்
ஐந்து நேரம் தொழுதிடுவோம்
செல்வம் தனிலே ஸகாத் ஈந்து
சிறப்பாய் நோன்பு நோற்றிடுவோம்...'

என்ற பாடலடிகளினூடாக இஸ்லாத்தின் அடிப்படைகளை மாணவர்களைக் கவரும் வண்ணம் சொல்லியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பாக சிகரம் தொட வா என்ற கவிதை, சின்னஞ்சிறார்களுக்கு துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் தரும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

வண்ணக் கவிதைகள் படைப்போமா எனும் கவிதையில் சிறுவர்களும் இலக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்கான வழிவகைகளைக் கீழுள்ளவாறு கூறியிருக்கிறார்.

'... காற்றும் கடலும் மழையும் பார்
களிப்பாய் நீந்தும் மீன்கள் பார்
நாற்றும் வயலும் கதிரும் பார்
நல்ல கவிதை நீ படைப்பாய்

வீட்டில் கோழி பூனை பார்
வெள்ளைக் கொக்கும் முயலும் பார்
கூட்டில் பேசும் கிளிகள் பார்
கொட்டும் கவிதை மழை போலே..'

'துணை வருவாயா வெண்ணிலவே' என்ற கவிதை சிறுவர்களுக்கு மட்டுமானதன்று. அதில் பொதிந்துள்ள சேதிகள் ஏராளம். ஊர் உறங்கும் வேளையில் ஒளி வீசும் நிலாவிடம் உலகத்தாரின் உளக்கரைகளை நீக்குமாறு கோரிக்கை விடுகிறார் ஆசிரியர். அது போலவே மேகமெனும் துன்பங்கள் சந்திரனை மறைக்கையில் முட்டிமோதும் தைரியம் போல், சோகங்கள் மனிதனை ஆட்கொள்ளும் போது அதிலிருந்து மீள்வது எவ்வாறு என்று தன் மன ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.

தாயின் முத்தத்தில் ஒளிந்திருக்கும் சுகானுபவத்தை 'அம்மாவின் முத்தம்' கவிதை உணர்த்திச்செல்கிறது. பொம்மையாலும், பூக்களாலும், வேறு விளையாட்டுப்பொருட்களாலும் அமைதிப்படுத்த முடியாத குழந்தையை தாயின் அணைத்துத் தரும் முத்தம் சுகமாய் துயில்கொள்ளச்செய்கிறது.

மேலும் இன்றைய நூற்றாண்டில் சிறுவர் முதல் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் சாதனம் கணனியாகும். கணனி கற்காதிருந்தால் எதிர்காலத்தில் தொழிலே இல்லை என்ற நிலை இன்று நிலவி வருகிறது. அதனடிப்படையில் கணணியை பயனுள்ள விதத்தில் கற்க வேண்டும் என்ற கருத்தை 'கற்போம் கணனி' எனும் கவிதை எடுத்தியம்புகிறது.

குரங்கிடம் அப்பம் கொடுத்து ஏமாந்த பூனைக்குட்டிகள் பற்றி சிறுவயதில் படித்திருப்போம். ஆனால் இந்த தொகுதியில் எழுதப்பட்டிருக்கும் 'அப்பமும் பூனைக்குட்டியும்' என்ற கவிதை நயக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலடிகள் பின்வருமாறு..

'.. சண்டையிட்டது குட்டிகளும்
சமனாய் அப்பம் பிரித்திடவே
கண்டே வந்தார் குரங்காரும்
'கணக்காய் பகிர்வேன்' என்றாரே

'வேண்டாம் நீங்கள் வஞ்சகராம்'
வீட்டில் பாட்டி சொன்னார்கள்
துண்டு துண்டாய் விழுங்கிடுவீர்
தூர விலகிடுவீர் குரங்காரே..'

அதே போன்று ஆரம்ப வகுப்புகளில் பக்கம் பக்கமாக வாசித்த முயல் சிங்கத்தின் கதையை வெகு சுவாரஷ்யமாக 20 வரிகளில் 'சின்ன முயலின் தந்திரம்' என்ற கவிதையூடாக சொல்லப்பட்டிருப்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எதிரிகளையும் மன்னித்தல் தான் நற்பண்பு என்பதை 'கொக்கும் நரியும்' என்ற கவிதை காட்டி நிற்கிறது. தட்டில் உள்ள பாலை நெடிய சொண்டால் பருகிட முடியாமல் கொக்கு தவிக்கும் போது நரி குறுநகை செய்கிறது. ஆனால் அடுத்த நாள் கொக்கின் வீட்டில் நரிக்கு அறுசுவை உணவு விருந்தாய் கிடைக்கிறது. பலி வாங்கப்படுவேனோ என்று எண்ணிய நரி இறுதியில் கொக்கிடம் மன்னிப்பு கேட்கிறது. மிகவும் அழகாகவும் கருத்தாழமும் மிக்க கவிதை இது. சிறுவர்கள் மனதில் இனிமேல் இவ்வாறான கவிதைகள் தான் பதிக்கப்பட வேண்டும். அதனால் பகைமை எல்லோராலும் மிதிக்கப்பட வேண்டும் என்பதை நன்றாக விளக்கியிருக்கிறார் பாயிஷா அலி அவர்கள்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலத்தில் அதே வேகத்தில் செல்லிடத்தொலைபேசிகளும் முக்கியத்துவம் பெற்று விட்டன. அதிலும் ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி ஏன் பாடசாலை மாணவர்களும் இன்று கைத்தொலைப்பேசி பாவிப்பது கண்கூடு. ஆகவே தொலைபேசியானது தொல்லைபேசி ஆகிவிடக்கூடாது என்ற அறிவுரையை 'செல்லிடத்தொலைபேசி' என்ற கவிதையில் இழையோடச்செய்திருக்கிறார் நூலாசிரியர்.

இவ்வாறு பல விடயங்களை ஏந்தி புதுப்பொலிவுடன் சிறார்கள் மகிழும்வண்ணம் வெளிவந்திருக்கிறது இப்புத்தகம்.

பெற்றோர், ஆசிரியர்கள் இதை குழந்தைகளுக்கு பெற்றுக்கொடுத்து, அவற்றைக் கற்றுக்கொடுத்து இலகுவாக குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவிடும் வகையில் மொழி நடை தடுமாற்றமின்றி வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை போன்று இன்னும் பல படைப்புக்களைத் தரவேண்டும் என்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!

பெயர் - சிகரம் தொட வா (சிறுவர் கவிதைகள்)
நூலாசிரியர் - கிண்ணியா எஸ். பாயிஷா அலி
முகவரி – 'அலி அரிசி ஆலை', மட்டக்களப்பு வீதி, கிண்ணியா – 03.
மின்னஞ்சல் முகவரி - sfmali@kinniyans.net , sfmali08@gmail.com
வெளியீடு – தி/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய இலக்கிய மன்றம்
விலை - 100/=

Monday, November 8, 2010

வெறிச்சோடும் மனங்கள் - கவிதைத் தொகுதி

வெறிச்சோடும் மனங்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் சில யதார்த்தப் பின்னல்களோடும், கடந்த காலத்தில் காயங்களைத் தந்துவிட்டுப்போன சுவடுகளோடும் வெளிவந்திருக்கிறது வெ. துஷ்யந்தனின் வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிiதைத்தொகுதி. ஷஎதிர்கால இலக்கிய சிற்பிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும்| என்ற உயர்ந்த இலட்சிய நோக்கைக்கொண்ட ஜீவநதியின் நான்காவது வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பில் இருபத்தைந்து கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

வலிகளோடு வாலாயப்பட்ட கவிதைகள் ஏராளம் பரந்து கிடக்கும் இத்தொகுதி சாமான்ய இளைஞனால் வெளிக்கொணரப்பட்டிருப்பது ஆச்சரியம் தான். கடந்த பல வருட காலமாக இந்த சின்னஞ்சிறிய இலங்கையில் தலைவிரித்தாடி தன் கூர் நகங்களால் மனிதர்களின் தொண்டைக்குழியை அடைத்து, யுத்த அரக்கன் படுத்திய பாடுகள், பலரின் படைப்புக்கள் வழியாக நம் எல்லோருக்கும் தெரிய வந்த விடயம் தான். அத்தகையதொரு சூழ்நிலையை எதிர்கொண்டு உடலாலும், உள்ளத்தாலும் காயப்பட்டு வாழும் நிலையில் இருக்கின்ற பல சகோதரர்களின் எண்ண அலைகளின் வெளிப்பாடுதான் துஷ்யந்தனின் இந்தக் கவிதைத்தொகுதி.



ஆர்ப்பாட்டமில்லாத, அலங்காரங்களின் அடுக்குகள் இல்லாத ஆனால் அர்த்தங்கள் நிரம்பிய பல கவிதைகளை இத்தொகுப்பில் தரிசிக்க முடிகிறது. வசனங்களில் இடர்பட்டு சிக்க வேண்டிய அவசியங்கள் இத்தொகுப்பில் இல்லை என்பது மகிழ்ச்சியான விடயம். சிலரது கவிதைகளைப் பார்த்தால் வார்த்தைகளை கண்டு அஞ்சி ஓடிவிடும் நிலைமை பலருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து மொத்தமாய் விலகி சாதாரண மக்களின் மனங்களிலும் நெகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக விதைத்துச் செல்கிறது வெறிச்சோடும் மனங்கள்.

..... தாம் வாழுகின்ற சூழல், அவலம், காதல் என பல்வேறு உணர்வுகளைத் தன் கவிதைகளுக்கூடாக வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் சமூகம், மொழி எடுத்துரைப்பு, படிமம் என பல்வேறு தனித்துவங்களையும் இவரது கவிதைகளை அடையாளப்படுத்தத் தவறவில்லை... என்கிறார் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கும் இரா. அகிலன் அவர்கள்.

தொகுப்பின் முதல் கவிதையான புரியாத வேதாந்தங்களில்

வீறுகொண்டெழும்
ஆறாத ரணங்களின்
ஆற்றாமையின் வெளிப்பாடாய்
புழுங்கிப்போனது மனித மனங்கள்...
இருப்பினும்
மாறுதல்களின் விளைவாய்
இவ்வளவு காலமும் இல்லாமல்
இப்போது மட்டும் விளைந்திடும்
சில புரியாத வேதாந்தங்களின்
முற்றுகையின் பெயரால்
அலையத்தொடங்கிற்று
மானுட ஆன்மா.. (பக்கம் - 01)

என்ற கவிதை வரிகள் சிந்திக்கத்தக்கவை. யுத்தகால நெருக்கடிகளை முன்வைத்து இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. இருந்துமென்ன முடிந்து போயிற்று என்று கூறிக்கொண்டாலும் அதன் வடுக்கள் இன்றும் எம்மத்தியில் பொங்கி நிற்கின்றன என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

அத்துடன் வலிகளுடனான வாழ்க்கை என்ற கவிதையில் வேதனையை கிளப்பிவிட்ட பாடுபொருள்களாக காதலும், போரும் இடம்பெற்றிருக்கின்றது. அமானுஷ்ய வாழ்வு என்ற கவிதை வழியே கனவுகளின் மீதான அதீத நேசம் இறுதியில் அமானுஷ்யமாகும் படி சபிக்கப்பட்டிருப்பதும் வித்தியாசமான பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது.
மனித மனங்கள் மரத்துப்போன இந்த உலகத்தில் வலி இல்லாத இதயம் உண்டா என்ற ஏக்கத்தின் கேள்வி வாசகனை மனம் உருக வைக்கிறது. நம்தேசத்தின் தற்கால சூழ்நிலையில் இவரது கேள்விக்கான விடை இயலாமைகளுடன் வாழ்ந்து சோர்ந்த நெஞ்சங்களுக்கு இதமாய் இருக்கும். தன்னளவில் நின்று தம் பிரச்சனைகள் பற்றி தாமே கூறுவது போன்றதொரு நிலையை தோற்றுவிக்கின்றன துஷ்யந்தனின் கவிதைகள்.

போரினால் போராளிகளாகிய பலருக்கு மத்தியில் கவிஞராக உருவெடுத்திருக்கிறார் துஷ்யந்தன். இளமையின் ஏக்கங்கள் இவரது கவிதைகளில் இடம்பிடிக்கத்தவறவில்லை.

..... விடை தெரிந்த வினாவுக்கு
விடை தெரிந்தும்
எழுத முடியாமல் தவிப்பது போல்
என் இதயம் அங்கலாய்ப்பு கொள்கிறது...
வந்த வேகத்திலேயே
சற்று புன்முறுவலையும்
தருவித்து விடுகிறாய் !
சிரிப்பு சர்வதேச மொழி என்ற
இறுமாப்புடன்
நானும் சிரிக்கிறேன்... (கனவுகளில் வாழ்தல் பக்கம் - 07)

... அப்பொழுதெல்லாம்
கற்பனைகளின் விசித்திரத்தில்
நினைந்து கொள்வேன்
எனது கவிதையொன்றை
இன்னொரு கவிதையே
விமர்சித்து விடும் யோகம்
யாருக்கு கிடைத்து விடும் என்று... ( கவிதைக்குள் கருவானவள் பக்கம் - 28)
என்ற வரிகள் அதற்கான சான்றுகளாயிருப்பது கண்கூடு.

நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய வாழ்க்கை சூன்யத்தை உற்பவித்து எம் மனங்களில் தீராத சோகத்தின் நிர்க்கதியான நிலைமையை தோற்றுவித்திருப்பதை தகர்ந்து போகும் பிடிமானங்கள வழியாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர். ஆனாலும் வாழ்க்கை குறித்த எமது நம்பிக்கைகள் இன்னும் தீர்;ந்துபோய்விடவில்லையென்று கூறும் வரிகள் வெறும் கவிதைகளாக மட்டும் நோக்க முடியாது. நிரந்தரமாகிவிட்ட மறுத்தல்களின் விம்பங்களும், ஒடிந்து போன இதயங்களின் வெளிப்பாடுகளும் விரவிக்கிடப்பதை உணர முடிகிறது.

..... காகங்கள் தயாராகின்றன சுவைப்பதற்கு
நாலைந்து நாய்கள்
கூட்டம் போடுகிறது
பங்கீடு தொடர்பாக... (மரணங்களும் மனிதங்களும் பக்கம் - 17)

என்ற வரிகள் போராளிகளின் வலையில் சிக்கி உயிர் துறந்த பல பெண்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்தியது. கண்டும் காணாதது போல இருந்ததொரு சூழ்நிலையில் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்ட பல சகோதரிகளின் அந்தரங்கம், இக்கவிதையூடாக வெளிப்பட்டிருப்பது போன்ற உணர்வு எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

காதலில் சிக்காத மனிதரில்லை. காதலில் சிக்காதோர் மனிதரில்லை என்று எங்கேயோ வாசித்த கூற்று ஆதலால் காதல் செய்வீர் என்ற கவிதையை வாசித்தபோது நினைவுக்கு வந்தது. காதலின் போது பல பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. அத்தருணங்களில் துணையின் அருகாமையும் வலியாய் இருக்கிறது. விலகலும் வலியாய் இருக்கிறது. இந்த கருத்தைத்தான்

காதலில் வலிகள் உருவங்களாக மாறும்
உருவங்கள் வலிகளாக மாறும்
அவஸ்தைகள் உருப்பெறும்
இருப்பினும்
அவை மகிழ்தலுக்கான ஆரம்பங்கள்... (ஆதலால் காதல் செய்வீர் பக்கம் - 18)
என்று துல்லியமாக சொல்லி விடுகிறார் நூலாசிரியர்.

அடுத்து கவிதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்த வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிதை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற ஸ்திரத்தன்மையை விளக்கிக்கூறுகிறது. எண்ணங்களைக்கூட வண்ணங்களாக நோக்க விடாமல் வேட்டுச்சத்தங்களால் உள்ளத்தில் பயம் என்ற அரக்கனை விதைத்துச்சென்ற காலம் இக்கவிதை மூலம் கண்முன்னே விரிகிறது.

..... நாளை என்ற பேச்சே
நாதியற்றுப்போக
நகர்கின்ற நாழிகைகளின்
ஆயுட்காலம் கண்டு
நீர்க்குமிழிகளே பரிதாபம் கொள்ளும்... | (வெறிச்சோடும் மனங்கள் பக்கம் - 32)
என்று எம்மையெல்லாம் ஆக்கிரமித்த துயரத்தை எம்முள்ளும் கலவை செய்வதால் எம் மனங்களும் சோகங்களால் வெறிச்சோடிப்போகிறது.

மொத்தத்தில் கவிதைத்தொகுப்பை வாசிக்கும் இறுதித்தருவாயில் கவிதைகள் முடியப்போகிறதே என்ற மனத்தவிப்பைத் தரவல்ல துஷ்யந்தனின் கவிதைகளை வாசிக்க நீங்களும் தயாராக இருந்தால் கீழுள்ள முகவரிகளினூடாக தொடர்பு கொண்டு இலக்கியத்துக்கு வளம் சேருங்கள். இந்த இளைஞனின் ரசனைக்கு களம் தாருங்கள். இன்னும் பல படைப்புக்களைத்தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
!

பெயர் - வெறிச்சோடும் மனங்கள் (கவிதை)
நூலாசிரியர் - வெ. துஷ்யந்தன்
முகவரி - ரதிமஹால், அல்வாய்.
தொலைபேசி - 0777 111 855
மின்னஞ்சல் முகவரி - bvthushy@yahoo.com
வெளியீடு - ஜீவநதி
விலை - 200/=