Thursday, April 7, 2011

'தாய் மடி தேடி' - சிறுகதைத் தொகுப்பு

'தாய் மடி தேடி' சிறுகதைத் தொகுப்பு பற்றிய விமர்சனக் குறிப்பு

'இலக்கியம் காலத்தின் கண்ணாடி. மக்களே வராலாற்றின் உந்து சக்தி. இலக்கியப் படைப்புக்கள் அந்த மக்களின் வாழ்வை அவர்களது இன்ப துன்பங்களை, போராட்டங்களை, அவர்களது உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும். மக்களை மறந்து வானத்தையும், முகில்களையும், மலைகளையும், தென்றலையும், காதலையும் பற்றி மாத்திரம் எழுதினால் அது இலக்கியமாகி விடாது. இயற்கையுடன் மக்களையும் அவர்களது வாழ்வியலையும் இணைக்காமல் படைப்புகள் புனைவதில் பிரயோசனமில்லை' என்று திரு. நீர்வை பொன்னையன் அவர்களின் முன்னுரையுடனும், பாரதி இராஜநாயகம் அவர்களின் அணிந்துரையுடனும் அமைந்திருக்கும் தாய் மடி தேடி என்ற இந்த சிறுகதைத்தொகுதி 113 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

நான் சீதையல்ல, துள்ள முடியாத புள்ளி மான், தனிமரம், ஊனம், அறுவடையாகாத விதைப்புக்கள், கருமுகில் தாண்டும் நிலவு, உதயம், இப்படியும், தாய் மடி தேடி, எச்சில் என்ற தலைப்புக்களைக் கொண்டு வெளிவந்திருக்கும் 'தாய் மடி தேடி' என்ற இச்சிறுகதைத்தொகுதியின் ஆசிரியர் திருமதி. கார்த்திகாயினி சுபேஸ். இவரது சிறுகதைகளில் மனித நேயம் மிகையாகக் கூறப்பட்டுள்ளது. சமூக அக்கறை எல்லா கதைகளிலும் விரவி நிற்கிறது. போரின் போது ஏற்பட்ட இழப்புக்கள், தவிப்புக்கள் என்பன வடுக்களாக மாறி வதைப்பதை வார்த்தைகளால் வடித்திருக்கிறார்.



'கார்த்திகாயினியின் சிறுகதைகள் ஈழத்து இலக்கிய உலகில் கவனிப்பை பெற்றுக்கொண்டமைக்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமாக சமகாலப்பிரச்சனைகளை அவர் தன்னுடைய கதைகளின் கருவாக பயன்படுத்தியிருக்கிறார். அந்தக் கருவை கதையாகச் சொல்லும் பாணி அவரது வெற்றிக்கு பாலமாக அமைந்துள்ளது' என்ற திரு. பாரதி இராஜநாயம் அவர்களின் கருத்தை ஆமோதித்து கதைக்குள் செல்கிறேன்.

நான் சீதையல்ல என்ற முதல் கதை யுத்தகாலத்தின் நெருக்கடியை களமாக வைத்து எழுதப்பட்டுள்ளது. அதில் சீதா என்ற பெண் தன்னுடைய தோழியின் வீட்டுக்குச் செல்கிறாள். ஆறு மணியாகியும் மகள் இன்னும் வீட்டுக்கு வராததையிட்டு பதற்றப்படும் அம்மா கமலத்தை சமாதானபப்படுத்துகிறார் அப்பா. திடீரென குண்டுச்சத்தம் காதைத் துளைக்கிறது. கமலம் ஓலமிட, சற்றுமுன் சமாதானப்படுத்திய அப்பா, கமலத்துக்கு இவ்வாறு திட்டுகிறார்.

'குமர்ப்பிள்ளையை இந்த நேரத்தில் எங்க விட்டனி? நாடு கிடக்கிற கிடையில நாளைக்கு கலியாணம் முடிச்சுப்போறவளை கண்டபடி றோட்டில திரிய விட்டனியே? அவளுக்கு ஏதும் ஒன்டென்டால் சம்பந்தி வீட்டுக்காரருக்கு என்ன பதிலைச் சொல்லிறது?'

இதில் சம்பந்தி வீட்டுக்காரருக்கு என்ன பதிலைச் சொல்லப்போகிறோம் என்று தந்தை கேட்கும் கேள்வி நியாயமானது. எதிர்காலத்தில் எந்தவிதமான கேலிப் பேச்சுக்களுக்கும் சீதா உட்பட்டுவிடக்கூடாது என்ற அவரது எண்ணம் மிகச்சிறப்பாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குப்பின் சீதா வீட்டுக்கு அனுப்பப்படுகிறாள். அவளைப் பார்த்து ஊரவர்கள் 'ஏய். உதில போறாளே. அவள் தான் சீதா. இரண்டு மாதமா ஆமிக்காரன் பிடிச்சு வச்சிருந்தவன்' என்று குத்தலாக பேசுகின்றனர். அந்தச் சம்பவம் சீதா பெற்ற அவமானத்தை கண்முன் நிறுத்தக்கூடிய வகையில் எடுத்தாளப்பட்டிருப்பது சிறப்பாகும். கதையின் இறுதியில் சீதா இரண்டு மாதங்களாய் ஆமியில் நின்றவள் என்பதால் சம்பந்தியர் சீதாவை வேண்டாம் என்றும், தமது மகனுக்கு வேறு இடத்தில் பெண் தேடப் போவதாகவும் கூறுகின்றனர். போதாத குறைக்கு ராமன் சீதையை தீக்குளிக்கச் ;சொன்ன கதையை உவமித்து பேசிவிடுகின்றார்கள். அச்சந்தர்ப்பத்தில் சீதா கோபத்தில் கூறும் வார்த்தைகள் வாசகருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. அதாவது

'அண்டைக்கு அந்தச் சீதை தீக்குளிச்சு ராமனோட சேர்ந்தாள் என்று என்னையும் தீக்குளிக்கச் சொல்லுறியளோ? நான் சீதையல்ல. சீதா' என்ற வரிகள் அச்சொட்டாக அந்தச் சம்பவத்தை அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. இதில் கார்த்திகாயினி அவர்கள் கையாண்டிருக்கும் சீதை, சீதா என்ற பெயர்கள் வலுவாகப் பொருந்தி நிற்கின்றன.

துள்ள முடியாத புள்ளி மான் என்ற கதையிலும் ஒரு பெண்ணின் சோகம் சொல்லப்பட்டிருக்கின்றது தாயானவள் சாந்தாவிடம் திருமணப் பேச்சை எடுக்கும் போதெல்லாம் விரக்திச் சிரிப்பொன்றை உதிர்த்து, எனக்கு நேர்ந்த கதியை தரகருக்கு சொன்னியாம்மா என்று சாந்தா கேட்கும் போது சாந்தாவின் சோகம் நன்கு புலப்படுகின்றது. எப்படியம்மா ஒரு தாயால் இதையெல்லாம் சொல்ல முடியும் என்று சாந்தாவின் தாய் தலையிலடித்து அழும் அழுகையில் இதயம் கடுமையாக வலிக்கிறது.

எதிர்பாராத தினமொன்றில் நடந்த பயங்கரச் சம்பவத்தை ரசனை மாறாமல் அழகிய மொழிநடையுடன் கூறப்பட்டுள்ளமை பாராட்டத்தக்க விடயம். அன்று அந்த சீருடையினர் சாந்தாவுக்கு செய்த அட்டகாசங்கள் அப்பட்டமாக இந்தக் கதையில் சாயம் வெளுக்கப்படுகிறது. தன் கண் முன்னாலேயே அண்ணனை துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாக்கிவிட்டு, சீருடையினர் தரதர என்று சாந்தாவை இழுத்துக்கொண்டு போகின்றனர். இரண்டு நாட்களின் பின் சாந்தா கற்பை இழந்து திரும்பி வருகின்றாள். உயிரை விட பெறுமதியான பெண்மையை அவள் கதறக்கதற சூறையாடிவிட்ட மிருகங்களின் வக்கிரப் புத்தி ஆழமாக சொல்லப்பட்டிருக்கும் இக்கதையின் இறுதி முடிவில், சாந்தா எதிர்பார்த்தது போலவே அவளது திருமணம் தடைப்பட்டுப்போவது கவலையாய் இருக்கிறது.

ஒரு நிலா இரவில் சாந்தா வாசற்படியில் அமர்ந்து வெளியே நோக்குகையில் தூரத்தில் நெடிய வளர்ந்த பனையும், அதன் அருகே வாரிசைப்போல சிறிய பனையும் காணப்படுவதாக கதையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இறுதித்தருவாயில் சாந்தாவின் தாய் இறந்துவிட்டாதாகக் கூறியது மட்டுமில்லாமல் அவள் அன்று பார்த்த அந்த நெடிய பனை மரமும் காணப்படவில்லை என்று கூறி பனையை தாய்க்கு உவமித்து கதை கூறியிருக்கும் பாங்கு சுவாரஷ்யமாக இருக்கிறது.

தனிமரம் என்ற சிறுகதையானது சுனாமியின் கொடுமையை மீண்டும் நினைவுபடுத்திச் செல்கின்றது. மனைவி செல்வியுடனும், குழந்தைகளான விஜி, ஜெனியுடனும் ஆனந்தமாக வாழுகிறான் தாஸ். யுத்த நெருக்கடியிலிருந்து சற்று விடுபட்ட தாஸ், நத்தார் தினத்தை குதூகலமாகக் கழிக்க பிள்ளைகளையும் அழைத்து, சுற்றத்தாருடன் சேச்சுக்கு செல்கின்றான்.

பொழுதுபட நாளை காலையில் முக்கிய அலுவல் இருப்பதாகவும் சீக்கிரம் வீட்டுக்குப் போகலாம் என்றும் கூறி செல்வியை அழைக்கிறான் தாஸ். தன் சுற்றத்தாருடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்த செல்வியும், பிள்ளைகளை அழைத்துக்கொண்டு 'ஆ. அப்ப சரி. நான் போறன்' என்று விடைபெறுகிறாள்.

'போறன் என்று சொல்லாதை பிள்ளை, போட்டு வாறன் என்று சொல்லு. கவனமாய்ப் பாத்துப்போட்டு வாங்கோ' என்று கூறி வழியனுப்பி வைக்கின்றனர் சுற்றத்தார். நாயொன்று பெரிதாகக் குரைக்க, அதைப் பார்த்து பயப்படும் செல்வியை கிண்டலடிக்கிறான் தாஸ். எனினும் செல்வியின் மனத்திரையில் ஏதோ நடக்கக்கூடாததொன்று நடக்கப் போவதாக பயங்கரக் காட்சிகள் நர்த்தனமாடுகின்றன.

அடுத்தநாள் விஜி தாஸிடம் பட்டாசு வாங்கிவருமாறு தன் மழலை மொழியில் கூற அவர்களிடமிருந்து விடைபெறுகின்றான் தாஸ். கொஞ்ச நேரத்தில் அலை வருது, அலை வருது என்ற மரண ஓலம் செல்வியின் காதில் விழ, அந்த கணத்திலும் அவளுக்கு யுத்தகால வாழ்வு ஞாபகத்துக்கு வருகிறது. ஆமி வருது ஓடுங்கோ என்று கேள்விப்பட்டிருந்த அவளால் அலை வருது ஓடுங்கோ என்ற கூக்குரலை சுதாகரித்துக்கொள்ளுமளவு நேரமிருக்கவில்லை. காரணம் கண்ணுக்கெட்டிய தூரத்தில் வரும் கடல் அலை. பிள்ளைகளை இறுகப் பற்றியவாறு செல்வி ஓட எத்தனிக்கையில் விழுந்துவிடுகிறாள், விஜியைப் பிடித்திருந்த பிடி தளர்ந்து அவள் கண் முன்னாலேயே அலையின் ராட்சத வாய்க்குள் விஜி அகப்பட்டதை பார்த்து கதறுகிறாள் செல்வி.

விடயம் கேள்விப்பட்டு வந்த தாஸ் ஊரின் தலையெழுத்தே மாறிப்போயிருந்த நிலையில் தன் மனைவி பிள்ளைகளுக்கு எதுவும் ஆகியிருக்கக்கூடாது என்று வேண்டிக்கொண்டு திரும்பும் போது எதிலோ கால் இடறுகிறது. குனிந்து பார்த்தால் அங்கே செல்வியும், ஜெனியும் இறந்து கிடக்கிறார்கள். தாஸ் அவர்களை தன் மடியில் இருத்தி கதறியழுதவாறு விஜியைத் தேடுகிறான். மருத்துவமனையில் சில பிரேதங்கள் இருப்பதாக அறிந்து அங்கு சென்று பார்க்க... அங்கே விஜியின் உயிரற்ற உடலும் காணப்படுகின்றது. மூவரையும் கடலலைக்கு பலிகொடுத்த தாஸ் பைத்தியமாகிறான். கடலருகில் பட்டாசுப் பொதியுடன் நின்றவாறு தன் மனைவி பிள்ளைகளைத் தருமாறு கடல் அலையிடம் கேட்டுத் திரிவதாக கதை நிறைவு செய்யப்பட்டிருக்கின்றது. நான் மலையகத்தைச் சேர்ந்தவள் என்றபடியால் சுனாமியின் கோரப் பற்களின் வடுக்களையாவது பார்க்க நேரவில்லை. அது தொடர்பாக பல விடயங்களை நான் அறிந்திருந்தேன். எனினும் தனிமரம் என்ற இந்தச்சிறுகதை சொல்லபட்டிருக்கும் விதத்தில் சுனாமியை கண்முன் தரிசித்ததொரு அதிர்ச்சி நிலை என்னில் தொற்றிக்கொண்டது. வாழ்த்துக்கள் திருமதி. கார்த்திகாயினி.

ஊனம் என்ற சிறுகதை வாழ்வின் அர்த்தத்தை போதிப்பதாக அமைந்து நிற்கிறது. வாலிப வயதில் ஆண்மை மிடுக்குடன் வாழ்ந்து வந்த மகாலிங்கத்தார், தனது வாழ்வின் அந்திம காலத்தில் படுகின்ற பாட்டைத்தான் இக்கதை விளக்கி நிற்கின்றது. மனைவியை மதிக்காமல், அவளது ஆலோசனைகளையும் கேட்காமல் வாழ்ந்த அவருக்கு மனைவியை இழந்த பிற்பாடுதான் அவளின் அருமை புரிகிறது. காலம் கடந்துவிட்டது... என்ன பயன்? அவர் அழுகிறார். அது தன் ஊனமான வாழ்வை நினைத்தா? மனைவியை நினைத்தா? இல்லை! மகாலிங்கத்தார் வாழ்வில் கடைசி விளிம்பில் நிற்பதையும், வாழ்ந்த காலங்கள் வீணாகிவிட்டன என்பதையும் எண்ணித்தான் அழுகிறார் என்று கதையை நிறைவு செய்திருக்கிறார் கதாசிரியர்.

அறுவடையாகாத விதைப்புக்கள் என்ற கதையும் சீருடையினரின் அடாவடித்தனத்தை பிரதிபலிப்பதாகத்தான் புனையப்பட்டிருக்கிறது. தனது மானம் போய்விட்டது என்ற அவமானத்தில் தற்கொலைக்குத் துணிந்த கோகிலாவின் கதைதான் இது. கிணற்றில் குதித்து தற்கொலை செய்யப்போன அவளை எப்படியோ காப்பாற்றிவிடுகின்றார்கள். தாயில்லாத கோகிலாவை வளர்த்து வரும் ஆச்சியும், தந்தையும் தற்கொலைக்கான காரணத்தை அறிந்து துடித்துப் போகின்றார்கள். எவ்வளவு வைத்தியம் செய்தும் வயிற்றில் தங்கிய கருவை அழிக்க அவகாசம் போதாததால் பிள்ளையைப் பெறுவது என்று முடிவெடுக்கப்படுகின்றது. பிள்ளைப் பேற்றின் போது கோகிலா இறந்துவிட அந்தத் துயர் தாங்காமல் அவளின் தந்தையும் இறந்துவிடுகின்றார். பிறந்து ஆறு வருடங்கள் கழிந்தும் பேச்சின்றியும் ஊனமாகவும் இருக்கும் அந்தப் பாலகனுக்காக எண்பது வயதுக் கிழவியான ஆச்சி வாழ்கின்றாள். விதி விளையாட ஆச்சியும் இறந்து விட, ஏதுமறியாத அந்த ஊனமான குழந்தை அழுதுகொண்டிருக்கின்றது. இக்கதைக்கு அறுவடையாகாத விதைப்புக்கள் என்ற பெயர் மிகப்பொருத்தமானதாக இடப்பட்டிருக்கின்றது.

கருமுகில் தாண்டும் நிலவு என்ற சிறுகதை ஒரு சிறுமி சொல்வது போல சொல்லப்பட்டிருக்கிறது. சதாவும் தன் மனைவியை அடித்துத் துன்புறுத்தும் பாலா மாஸ்டர் ஒரு பெண் பித்தன். உடற்கல்வி பாடம் படிப்பிக்கும் போது மாணவிகளை உரசி அவர்களின் கையைக் காலைப் பிடித்து பாடம் நடாத்துவதில் வல்லவர். அதனால் அவரை யாருக்கும் பிடிப்பதில்லை. குடித்துவிட்டு வந்து சதாவும் மனைவியை துன்புறுத்துவார். காலங்கள் செல்ல மனைவியான சீதாக்காவுக்கு இனியும் பொறுக்கேலாது என்ற நிலை. அவள் வீட்டை விட்டுப்போகும் போது பாலா மாஸ்டர், சீதாவை நடத்தை கெட்டவள் என்று கூறி, 'இந்தக் குழந்தை எனக்குப் பிறந்ததென்றால் விட்டிட்டுப்போ. இல்லாவிட்டால் எனக்கு பிறந்த பிள்ளை இல்லையென்று கற்பூரத்தில சத்தியம் செய்துவிட்டுப்போ' என்று ஆவேசமடைகின்றார். சீதாக்கிவின் நற்குணமறிந்த ஊரார், பாலா மாஸ்டர் மீது வெறுப்படைந்து நிற்க, சீதா கற்பூரத்திலடித்து செய்யும் சத்தியம் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதிர்ச்சி தெளிந்த பின்பு செய்யப்பட்ட சத்தியத்தின் உள்ளார்ந்த வலியும், நியாயமும் தெரிகிறது.

'சத்தியமாய் என்ர பிள்ளைக்கு நீ அப்பனில்லை. உன்னாலை நல்ல அப்பனாய் இருக்கவும் முடியாது' - இது தான் அந்த சத்தியம். கருமுகிலுக்குள் மறைந்திருந்த நிலவு வெளியே வந்து பிரகாசமாக இருந்தது போல இனி சீத்தாக்காவும் தனது வாழ்வை வளமாக வாழ்வார் என்ற விதத்தில் கதை சொல்லும் பாணி சிறப்பாக கையாளப்பட்டுள்ளது.

உதயம் என்ற கதை பிள்ளைப் பேறின்மையால் தவிக்கும் தம்பதியினரை அடிப்படையாகக் கொண்டு பின்னப்பட்டிருக்கிறது. தான் தாயாகவில்லை என்ற ஒரே காரணத்தால் பல விஷேச வைபவங்களுக்கும் போகமுடியாத பெண்களின் வேதனையை கொட்டித்தீர்க்கிறாள் கதைப்பாத்திரமான நித்தியா. பல பிள்ளைகளையும் பெற்று இறுதியில் தனியாயிருக்கும் பெற்றோர், சுனாமியில் பிள்ளைகளை பறிகொடுத்த பெற்றோர், ஊனமான பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர் அனைவரும் பிள்ளையைப் பெற்று விட்டோம் என்று நிம்மதியாக இருக்கிறார்களா என்று நித்தியா கேட்கும் கேள்வி சமூகத்தில் பெண்களை மலடி என்று வாட்டுகின்ற ஒவ்வொருவரிடமும் கேட்கப்பட வேண்டியதாகும். பூனை நான்கு குட்டிகளை ஈனுவதும், சோடை பத்திப்போன தென்னம் பிள்ளையைக் கேட்டு வருபவரிடம் நித்தியாவின் கணவன் பார்த்திபன், அது காய்க்கும் என்று சொல்லுவதும் அவர்கள் எதிர்காலத்தில் பெற்றோர் ஆகுவது நிச்சயம் என்ற அர்த்தத்தை ஏற்று நிற்கின்றமை வாசகனை மகிழ்ச்சியடையச் செய்கின்றது. ஒருநாள் பார்த்தீபன் கூப்பிடும் சத்தத்தில் ஓடிப்போய் பார்க்கும் நித்தியா, அங்கு தென்னையிலிருந்து அழகாக பாளை வெளித் தள்ளியிருப்பதைக் கண்டு ஆனந்தமடைகிறாள். அதனூடாக தான் வெகு சீக்கிரம் தாயாகிவிடலாம் என்ற மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறாள் என்ற விதத்தில் கதையை நிறைவு செய்திருக்கிறார்.

இப்படியும் என்ற கதையில் ஐந்தறிவு ஜீவன்களில் ஒன்றான நாயின் அன்பைப் பற்றி கூறப்பட்டுள்ளது. சந்திரசேகரன் அந்த ஜோடி நாய்களுடன் மிகவும் பிரியமாக இருந்தவர். வேலைக்குப் போகும் போது அவற்றுக்கு சாப்பாடும் எடுத்துக்கொண்டு போவார். அவையும் இவருடன் நல்ல ஒட்டுதல். ஒருநாள் இவரை கண்டதும் மகிழ்ச்சியுடன் ஓடி வருகிறது பெட்டை நாய். பெட்டை நாயை தொடர்ந்து வந்த ஆண் நாய் குறுக்கே வந்த ரயிலுக்கு அடிபட்டு தலைவேறு உடம்பு வேறாகிப்போவதைக்கண்டு அதிர்ச்சியின் உச்சத்தையடைகிறார் சந்திரசேகரன். அவர் காலையில் பெண் நாய்க்கு சாப்பாடு கொண்டு போகிறார். ஆண் நாயை புதைத்த இடத்தில் நேற்று சுற்றிச்சுற்றி வந்த பெண் நாய் விறைத்து நிற்கிறது. மனிதர் உணர்ந்து கொள்ள அது மனிதர் காதல் அல்ல என்ற வரியை ஞாபகப்படுத்திப் போனது இந்தக்கதை.

நூலின் மகுடத் தலைப்பைக்கொண்ட தாய்மடி தேடி என்ற கதை, போரின் தாக்குதலுக்கு உள்ளான சிறுவனின் மனநிலையை பிரதிபலிக்கின்றது. பத்து பதினொரு வயதான சிறுவன் வைத்தியசாலையில் இருந்தவாறு தனது அம்மா, அப்பா, சகோதர, சகோதரிகளை எண்ணி தவிக்கின்றான். அவனுக்கு ஆறுதல் சொல்லும் நர்ஸ் தனது அம்மாவின் சாயலில் இருப்பதால் நர்ஸம்மா என்று அழைக்கிறான். சற்று சுகமானதும் அவன் போன்ற பல சிறுவர்களை ஏற்றிப்போக வாகனம் வருகிறது. வீட்டுக்குப் போகப்போறேன் என்ற அவனது கனவு, அகதிமுகாமில் கொண்டு போய்விட்டதும் கனவாகவே முடிகின்றது. தெரிந்தவர்கள் யாரும் இல்லை. வெக்கையாக இருக்கிறது. தூரத்தில் பருந்துக்குப் பயந்து கொக்கரிக்கும் கோழியின் சத்தம். பார்த்திருக்க பருந்து குஞ்சொன்றைக் கௌவி பறந்து செல்ல குஞ்சியின் அவலக்குரல் காற்றில் வந்து சிறுவனின் இதயத்தை அறைகிறது. குண்டு போடப்பட்ட போது தனது பெற்றோர், சகோதரர்களும் இப்படித்தான் அவல ஒலி எழுப்பியிருப்பார்கள் என்று எண்ணியவாறு மயக்கமடைகிறான் சிறுவன். அதில் கையாளப்பட்டிருக்கும் மொழிநடை யதார்த்தத்தை சித்திரித்தவாறு எழுதப்பட்டிருப்பது பாராட்டத்தக்கதாகும்.

எச்சில் சிறுகதை சாதியத்தை அடிப்படையாகக்கொண்டது. கந்தனின் மகன் சிறுவனாயிருக்கும் போது வேலாயுதத்தாரின் தண்ணீர் செம்பில் கை வைத்ததற்காய் கொய்யா மரக் கம்பினால் அடிவாங்குகிறான்.

'சிரட்டையில குடிக்கிற நாயளுக்கு, செம்பில தண்ணி கேக்குதோ| என்று வசைமாரி பொழிந்து கந்தனையும் ஏசிவிட்டுச்செல்கிறார் வேலாயுதத்தார். கைவைத்ததற்காக இப்படி கொதிக்கிறார் என்றால், வாய்வைத்து தண்ணீரைக் குடித்திருந்தால்???

காலம் கனிய வேலாயுதத்தாரின் மகனை விட நன்றாக கற்று பல்கலைக்கழகம் செல்கிறான் கந்தனின் மகன். அந்தக் கோபத்தில் தன் மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிடுகிறார் வேலாயுதத்தார்.

வருடங்கள் உருண்டோடுகிறது. மனைவியும் இறந்துபோக அதற்குப்பின் மகனுடன் வாழ லண்டனுக்கு செல்கிறார் வேலாயுதத்தார். கந்தனின் மகனிடம்தான் வேலாயுதத்தின் மகன் வேலை செய்கிறான். அத்துடன் ஒருநாள் நடக்கிற விருந்தில் வைத்து கந்தனின் பேத்தியுடைய (அதாவது கந்தனின் மகனின் குழந்தை) தட்டிலிருந்த இனிப்பை தெரியாமல் சாப்பிட்டுவிடுகிறார் வேலாயுதத்தார். அவர் அப்படி சாப்பிட்டதையும், தான் கந்தனின் மகனிடம் தான் வேலை செய்கிறேன் என்றும் தந்தையிடம் விபரிக்கிறான் மகன். மகன் கூறிய விடயங்களைக் கேட்டு தீ மிதித்தவர் போல் ஆகின்றார் வேலாயுதம்.

'கந்தனின் மகன் என்டு சொன்னனியல்லோ? ஆளைச் சரியாப் பாத்தியா?' என்று வேலாயுதத்தார் இயலாமையின் உச்சகட்டத்தில் தன் மகனிடம் கேட்க, அவன் அவரை அலட்சியமாக பார்த்து விட்டுச் செல்கிறான். அதைத்தாங்க முடியாதவராய் உட்கார்ந்திருக்கிறார் வேலாயுதத்தார்.

இவ்வாறு தன்னைச் சுற்றியிருந்த சூழலை மையமாக வைத்தும், மானிட நேயத்தை வலியுறுத்தியும், சுமார் முப்பது ஆண்டுகாலமாக எமது தாய்நாட்டை தின்ற யுத்தத்தின் வடுக்கள் பற்றியும் அழகிய முறையில் கதைகளைக் கூறியிருக்கும் பாணி வாசிக்கும் எல்லோரையும் கவரும் என்பதில் ஐயமில்லை. சொல்லவந்த விடயத்தை அலட்டல்களன்றி சொல்கின்ற திருமதி. கார்த்தியாயினியின் எழுத்துநடை எளிமையாகவும், இயல்பாகவும் காணப்படுகின்றது. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

பெயர் - தாய் மடி தேடி (சிறுகதைகள்)
நூலாசிரியர் - கார்த்திகாயினி சுபேஸ்
முகவரி - இல 111, படித்த மகளிர் திட்டம், மிருசுவில்.
வெளியீடு - மீரா பதிப்பகம்
விலை - 300/=

No comments:

Post a Comment