Tuesday, February 28, 2012

தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்

தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி மீதான ஒரு கண்ணோட்டம்

திருமதி சுமதி குகதாசன் எழுதிய தளிர்களின் சுமைகள் என்ற கவிதைத்தொகுதி இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் வெளியீடாக 93 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் என்ற வரலாற்று நாயகனின் இளைய புதல்வியான சுமதி அவர்கள் தனது கவிதைகளுக்கூடாக சமூகம் பற்றி இருப்பு நிலையை வாசகர்களுக்கு உணர்த்துகிறார்.



சகலவிதமான ஒடுக்கு முறைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் எதிராக குரல்கொடுத்து மக்களை சரியான திசையில் வழிநடாத்தக்கூடிய இலங்கையின் முற்போக்குக் கவிஞர்களின் வரிசையில் திருமதி. சுமதி அவர்களும் ஒருவராக இணைந்துள்ளார் என்று பதிப்புரையில் திரு. நீர்வை பொன்னையன் அவர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்.

அதேபோல் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் தனதுரையில் சாதாரண பேச்சிலிருந்து இவரது கவிதைகள் புனித நெறியைக் காட்டுகின்றன. சிறப்பான எடுத்துக்காட்டாக இதனைச் சொல்லாம். நெருக்கடியான நேரங்களிலும், சோதனை தரும் வேளைகளிலும் இவரது கவிதைகள் நுட்பங்கள் நிறைந்து வெளியாகியுள்ளன என்று குறிப்பிட்டிருக்கிறார்.

திருமதி சுமதி அவர்கள் ஓர் ஆசிரியையாக கடமையாற்றியதால் மாணவர்களோடு ஒன்றுபட்டு அவர்களது அகநிலை சார்ந்த பிரச்சனைகளுக்கும், நெருக்கடிகளுக்கும் எவ்வாறான முறையில் உதவலாம் என்று நன்கறிந்திருப்பவர். ஆதலால் தளிர்களின் சுமைகள் என்று மாணவர்களுக்காக எழுதப்பட்ட கவிதையின் தலைப்பையே புத்தகத்தினதும் மகுட தலைப்பாக்கியிருக்கிறார். அதுபோல நாட்டில் நடக்கின்ற அநீதிகளுக்கு எதிராகவும், ஒடுக்கப்பட்டவர்களின் நல்வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கின்றார் நூலாசரிரியர்.

மாணவம் என்ற கவிதையில்

ஏணிப்படிகள் என
எண்ணிக் கால்வைக்க
உக்கி உருக்குலைந்து
சிதிலங்களாய்ப் போனதில்
இன்னும் இருண்டு கிடக்கின்றேன்
பள்ளிச் சிறைக்குள் (பக்கம் 21)

என்ற கவிதையானது குறிப்பிட்டதொரு விடயத்தை அடைய நினைத்து அதில் ஏமாற்றமடைந்தவர்களின் நிலையை சித்தரிக்கிறது எனலாம். வாழ்க்கையில் எல்லோரும் எத்தனையோ இலட்சியங்களைக் கொண்டிருக்கிறோம். அவற்றில் எல்லாமே ஈடேறுவதில்லை. அத்தகையதொரு மனத்தாக்கதின் வெளிப்பாடாக ஒரு மாணவனின் பார்வையினூடாக இக்கவிதை எழுதப்பட்டிருக்கிறது.

காதல் என்பது பள்ளிக் காலத்திலும் வரலாம். பருவக்காலத்திலும் ஏற்படலாம். ஆனால் பள்ளிக்காலத்தில் வரும் காதல் வெறும் இனக்கவர்ச்சியாக மாத்திரமே இருக்க முடியும். பக்குவப்படாத மனதில் காதல் விதைகளை விதைக்கும் நவீன தொழில்நுட்பங்கள் இன்று வந்தாகிவிட்டன. ஆனால் அனைவரும் பேதமின்றி அவற்றைப் பாவிக்கின்றனர். இத்தகைய வழிமுறைகளினால் மாணவர்கள் சின்னாபின்னமாக்கப்படுகின்றார்கள் என்பது மெய்யான விடயம். அவர்களிடம் காதல் தப்பு என்று சொல்லலாம். எனினும். அத்தகைய சூழலை பிள்ளைகளுககு ஏற்படுத்திக் கொடுப்பதிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள் என்று பெற்றோர்களுக்குச் சொல்வது யார்? அவ்வாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுமானால் மாணவச் சமூகத்தை சிறந்த எதிர்காலத்தின் பிரதிநிதிகளாக மாற்ற வழிவகைகள் ஏற்படும். இது பாதுகாப்பு என்ற இந்தக் கவிதையில் இவ்வாறு வருகிறது.

பருவ வயதில் காதல் பாழ்
பெற்றோர்களும் பாதுகாவலர்களும்
சொல்கிறார்கள் தம்
அறிவு முதிராத குழந்தைகளிடம்
இவர்களிடம் சொல்பவர் யார்
ஆதலினால் அவர்களை
அச்சூழலினின்று
பாதுகாருங்கள் என்று (பக்கம் 34)

சமத்துவம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உரித்தானது. அதை யாராலும் மறுக்க முடியாது. அவ்வாறானதொரு சமத்துவம் வீட்டில் நிலவாதவிடத்து குடும்பங்களுக்குள் சச்சரவுகள் தலை நீட்டிப் பார்க்கின்றன. வெளியிடங்களில் பிரச்சனை என்றால் வீட்டுக்குள் போய் ஒதுங்கியிருக்கலாம். வீட்டிலேயே பிரச்சினை என்றால் யாரிடம் சொல்லியழுவது? ஆட்சி என்ற கவிதை இவ்வாறு

பிழையான ஆட்சி
நாட்டிலே நடந்தால்
வீட்டிற்குள்ளே
பூட்டிக்கிடக்கலாம்
அதுவே வீட்டிலும் என்றால்? (பக்கம் 35)

தளிர்களின் சுமைகள் என்ற கவிதை மாணவர்களின் பிரச்சினையாக உருவகித்திருக்கின்றது. பள்ளி செல்கையில் புத்தகச்சுமை. வகுப்பில் பாடங்களின் சுமை. வீட்டுப்பாடங்களை செய்யாதவிடத்தோ அல்லது ஏதாவது நிகழ்வில் தண்டனைச் சுமை. பிறகு மாலை வகுப்புச் சுமைகள் இப்படியே கழிந்து வீட்டிற்கு வந்தவுடன்

வீடு வந்து சேர்கையிலே
பெற்றோர் தம் எதிர்பார்ப்பு (கள்)
அத்தனையும் பெருஞ்சுமையாய்
மீண்டும் நாளை காலை
பள்ளி செல்கையில்.... (பக்கம் 37)

என்றவாறு கவிதை முடிகிறது. இன்று ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக இளங்குருத்துக்கள் படும்பாடு நன்கறிந்ததே. காலையில் சாப்பிட்டும், சாப்பிடாமலும் பாடசாலைக்கு ஓடுகின்றார்கள். பாடசாலை முடிந்து அரக்கப்பறக்க சாப்பிட்டுவிட்டு மாலை வகுப்பு. மாலையில் வீடு வந்து எட்டு மணி வரை இன்னொரு வகுப்பு என்றே அவர்களது காலம் கழிகிறது. பிரச்சினை என்னவென்றால் அவ்வாறு கஷ்டப்பட்டு படித்து பரீட்சையில் தற்செயலாக சித்தியடையாவிட்டால் அவர்கள் உள்ளத்தால் அழுகின்ற வலி வார்த்தைகளில் உள்ளடக்க முடியாது. இந்தளவுக்கு மாணவர்கள் சுமைகளைத் தாங்குகின்றார்கள். அத்தகைய சுமைகளைத்தான் நூலாசிரியர் தனது கவிதையில் மிகச் சுருக்கமாகவும், ஆழ்ந்த அர்த்தம் பொதிந்ததாகவும் தந்திருக்கின்றார்.

பாடசாலைகளில் பிள்ளைகளுக்கு பிரம்படி கொடுக்கப்படுவதுடன் முழங்காலில் உட்கார வைத்தல் என்ற தண்டனையும் இடம்பெறுவதுண்டு. அவ்வாறான தண்டனைகள் எவ்வாறிருக்கும் என்பது அனுபவப்பட்ட மாணவ உள்ளங்களிடம் விசாரித்தால் அறியலாம். முழங்காலில் நிற்க வைத்தல் என்ற தண்டனை குறைவானது என்ற எண்ணத்தை ஆசிரியத்தோழி மாற்றினார் என்று தண்டனை என்ற கவிதையில் கூறப்பட்டிருக்கிறது. ஏன் அவ்வாறு மாற்றினார் என்ற கேள்விக்கு கவிதையிலேயே இவ்வாறு பதிலிருக்கின்றதைக் காணலாம்.

ஏழைகளின்
உழைப்புக்காய்
இருக்கும் ஒரே
மூலதனம் உடல்தான்
அதை நாம்
நாசம் பண்ணாமல்
அப்படியே விட்டுவிடுவோம் (பக்கம் 41 - 42)

பெற்றோர்களின் வளர்ப்பு சரியாக இருந்தால் பிள்ளைகள் சரியாகத்தான் வளருவார்கள். பெற்றோர்களின் கண்காணிப்பும், கண்டிப்பும் இல்லாதவிடத்து பிள்ளைகள் தான்தோன்றித்தனமாக வளர்ந்து இறுதியில் பெற்ற தாய் தந்தையரைக்கூட மதிக்கமாட்டார்கள். அதை வளர்ப்பு என்ற கவிதை நிதர்சனமாக்கி நிற்கிறது.

பிஞ்சுகள் ஆவதும்
நம்மாலே
அவை நஞ்சுகள்
ஆவதும் நம்மாலோ (பக்கம் 64)

நூலாசிரியர் சமூகப்பான்மையோடு எழுதியிருக்கும் இந்தக் கவிதைகள் அற்புதமானவை. அனைவரும் வாசிக்க வேண்டியவை. திருமதி. சுமதி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - தளிர்களின் சுமைகள் (கவிதைகள்)
நூலாசரியர் - திருமதி. சுமதி குகதாசன்
வெளியீடு - இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்
விலை - 350 ரூபாய்

No comments:

Post a Comment