Friday, August 10, 2012

குற்றமும் தண்டனையும் - சிறுகதைத் தொகுதி

குற்றமும் தண்டனையும் சிறுகதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

பல வருடங்களாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றிருக்கும் எம்.பி.எம். நிஸ்வான் அவர்கள் சிறந்த சிறுகதை எழுத்தாளராவார். மூன்றாம் தலாக் என்ற அவரது முதல் சிறுகதைத் தொகுதி பல மட்டங்களிலும் பேசப்பட்டதொரு நூலாகும். அதைத் தொடர்ந்து குற்றமும் தண்டனையும் என்ற தொகுதியை அவர் வெளியிட்டிருக்கிறார். இந்தத் தொகுதி 108 பக்கங்களில் ரஹ்மத் பதிப்பகத்தின் வெளியீடாக மலர்ந்திருக்கிறது.

தலையங்கங்களுக்கு ஏற்ற விதமாக சிறப்பான படங்களை வழங்கியிருக்கிறார் கலைவாதி கலீல் அவர்கள்.

சிந்திக்கத் தக்கவை. இன்று எழுதப்படும் பல விடயங்களில் அர்த்தங்கள் என்று எதுவுமிருக்காது. அப்படியின்றி சமூகம் சார்ந்த, உணர்வு பூர்வமான விடயங்களை முன்வைக்கும்போது சிறுகதைகள் வழிகாட்டிகளாகவும் மாறிவிடுகின்றன. இது பற்றி நூலாசரியர் நிஸ்வான் அவர்கள் தனது உரையில் கூறியிருக்கும் வாசகங்கள்.


`கதைகள் மக்கள் பிரச்சினையை யதார்த்தபூர்வமாக சித்தரிக்கும் கலைத்துவ சிருஷ்டிகளாக அமையும் பட்சத்தில் அவை மக்கள் கலையாக மாறுகின்றன. சமூகப் பார்வையற்ற மனிதப் பிரச்சினைகளை அணுகாத கதைகள் யதார்த்தமானதல்ல'.

வெளிநாட்டுக்குச் சென்று உழைத்தல் என்பது இன்று நேற்று நடக்கும் விடயமல்ல. பல வருடங்களாக தொடரும் இந்த பழக்கத்தால் பலர் நன்மை அடைந்திருக்கிறார்கள். பலர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். இத்தொகுதியின் முதல் கதையாக வருகின்ற குற்றமும் தண்டனையும் என்ற கதையும் மேற்சொன்ன பிரச்சினையை இயம்பி நிற்கின்றது.

குடும்பத் தலைவன் தனது மனைவி பிள்ளைகளுக்காக உழைக்கவென்று வெளிநாடு செல்கிறான். வருடங்கள் ஐந்து கடந்த நிலையில் சந்தோஷமாக வீடு திரும்புகிறான். வந்து ஓரிரண்டு தினங்கள் கடந்த நிலையில் மனைவி அவனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறாள். அதற்கான காரணத்தை அறிந்தவனுக்கு தலையே சுற்றுகிறது.

அதாவது ஷமனைவிக்கு வேறொருவனுடன் தொடர்பு இருந்திருக்கிறது|  என்பதை மனைவி மூலமே அறிகின்றான். இதைப்பற்றி ஒரு பெரியவிரடம் ஆலோசனை கேட்கும்போதுதான் தனது பிழையை உணருகிறான் குடும்பத் தலைவன்.

மனைவியை தனிமையில் விட்டுச் சென்றால் சிலவேளைகளில் இவ்வாறான பாதிப்புக்கள் நிகழலாம். அதைப் பற்றின விழிப்புணர்வுக் கதையாகவே இது எழுதப்பட்டுள்ளது.

கல்வி ஒருவனுக்கு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் ஒழுக்கம் என்பதாகும். ஒழுக்கமற்ற கல்வியால் எந்தப் பலனும் கிடையாது. பாடசாலை மாணவர்கள் இன்று மிகவும் துர்நடத்தை உள்ளவர்களாக மாறி வருவதை அவதானிக்கலாம்.

பாதைகளில் போகும்போது வரிசையாக செல்லாமல் கத்திக்கொண்டும், பாதையில் வருவோர் போவோரை பகிடி பண்ணியவாறும் செல்கின்றார்கள். பெண் பிள்ளைகளைக் கண்டால் போதும் ஏதேதோ கூறி தங்களுக்குள் சிரித்துக்கொள்வார்கள். ஆசிரியர்களை மதிப்பதில்லை. இவ்வாறான விடயங்களை வைத்து எழுதப்பட்டிருக்கும் கதையே ஒழுக்கம் இல்லாத கல்வி என்பதாகும்.

காலம் எவ்வளவுதான் முன்னேறினாலும் வரதட்சணை என்ற சம்பிரதாயம் மாறுவதாக இல்லை. இன்றைய இளைஞர்கள் இது சம்பந்தமாக சிந்திக்க வேண்டும். மஹர் கொடுத்து மணமுடிக்க வேண்டியவர்கள் சீதனத்தை பெறுவது என்பது எவ்வளவு வெட்கக்கேடான செயல் என்பதை சிந்திக்க வேண்டும். நிலைகெட்ட மனிதர்கள் என்ற கதையில் வரும் பிரச்சினையும் மேற்சொன்னதுதான்.

மாமியர் வீட்டுக்குப் போன பெண்ணை மாமியாரும் மதினியும் வார்த்தைளால் கொல்லுகிறார்கள். அந்த ஊரில் ஏதாவது ஒரு திருமணம் நடந்தால் அந்த வீட்டவர்கள் வீடு கொடுத்தார்கள், நகை கொடுத்தார்கள். நீ என்ன கொண்டு வந்தாய் என்றெல்லாம் குத்தலாகப் பேசுவார்கள். கணவனிடம் சொன்னால் உண்மையைத்தானே சொல்கிறார்கள் என்று கணவன் சொல்கிறார். இப்படியிருக்க அந்தப் பேதை தீக்காயங்களுக்கு இரையாகி இறந்து போகிறாள். இது தற்கொலையா, கொலையா என்று யாருக்கும் தெரியவில்லை. பணத்துக்காக என்னென்னமோ நடக்கிறது. இப்படியும் நடக்கிறது என்றவாறு நிறைவுறுகிறது இந்தக் கதை.

அந்த ஒரு நிமிடம் என்ற கதை குடும்பப் பகையையும், காதலையும் உள்ளடக்கியது. சொந்த அண்ணன் தங்கச்சியின் பிள்ளைகளான மச்சானும், மச்சாளும் காதலிக்கிறார்கள். ஆனால் சொத்துப் பிரச்சினையால் குடும்பங்களிரண்டும் ஜென்மப் பகை. ஆதலால் இருவரும் ஊரைவிட்டு ஓட திட்டம் தீட்டுகின்றனர். இந்த விடயம் ஊரிலுள்ள பெரியவர்களுக்கு எட்டுகின்றது. இவ்hறானதொரு இழிகாரியம் நடந்தால் அது சமூகத்துக்கும் பாதிப்பு. குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களுக்கும் பாதிப்பு. ஆதலால் இரு வீட்டாருடன் கலந்து பேசுவதாகக் கூறி சமாதானப்படுத்துகின்றனர் ஊர் பெரியோர்கள்.

கண்டிஷன் மாப்பிள்ளை என்ற கதை சிரிக்கவும் வைக்கிறது. சிந்திக்கவும் வைக்கிறது. பல லட்சங்கள், நகை, வீடு, மாப்பிள்ளையின் பக்கத்திலிருந்து வருவோர் அனைவருக்கும் சாப்பாடு யாவற்றையும் பெண்ணின் வீட்டார் செய்ய வேண்டும் என்பதும், திருமணம் பெரிய பணக்கார ஹோலில் நடைபெற வேண்டும் என்பதும் மாப்பிள்ளை வீட்டாரின் கண்டிஷன்.

எல்லா கண்டிஷனுக்கும் பெண் வீட்டார் ஒத்துக்கொள்கின்றனர். காரணம் மாப்பிள்ளை வெளிநாட்டில் வேலை. மாப்பிள்ளையின் தகப்பனும் பெரிய தனவந்தர். ஊரில் நடக்கும் எல்லா காரியங்களுக்கும் முதல் ஆளாக அழைக்கப்படும் செல்வாக்கு கொண்டவர். ஆதலால் எப்படியேனும் அவரின் மகனை தமது மருமகனாக்கிக்கொள்ள பிரயத்தனப்படுகின்றனர்.

திருமண நாளன்று மாப்பிள்ளை வர தாமதமாகிறது. பெண் தரப்பிலிருந்து மாப்பிள்ளையை அழைத்து வரப் பேகின்றார்கள். போன இடத்தில்தான் தெரிகிறது அவர்கள் யாரும் திருமணத்துக்கு வரமாட்டார்கள் என்று. காரணம் ஷஇரண்டாம் இலக்க மண்டபம் மாப்பிள்ளைக்கு போதவில்லையாம். முதல் மண்டபத்தில் கல்யாணம் நடைபெறாதது மாப்பிள்ளைக்கு செய்த அவமரியாதையாம்|.

இவ்வாறான பல சமூக விடயங்களை தனது கதைகளில் உள்ளடக்கி விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நூலாசிரியருக்கு எமது வாழ்த்துக்கள். அவரிடமிருந்து இன்னும் பல படைப்புகளை எதிர்பார்க்கிறோம்!!!

நூல் - குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
நூலாசிரியர் - எம்.பி.எம். நிஸ்வான்
முகவரி - ரஹ்மத், 6 ஏ, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்தை, பாணந்துறை.
தொலைபேசி - 0382297309
வெளியீடு - ரஹ்மத் பதிப்பகம்
விலை -  200 ரூபாய்

No comments:

Post a Comment