Wednesday, December 14, 2011

கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா

கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா






சிங்கள இலக்கியத்தினூடாக நன்கறியப்பட்ட சிட்னி மாகஸ் டயஸ் என்பவரின் 'முல்லைத்தீவ் ஸீயா' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே முல்லைத்தீவு தாத்தா என்ற புத்திளைஞர் நாவலாகும். யுத்த காலத்தில் நிகழ்ந்த மனதுக்கு கஷ்டமான நிகழ்வுகளை உள்ளடக்கி இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. சிரேஷ்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் இந்நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார். தோதன்ன வெளியீடாக 119 பக்கங்களில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மூத்த எழுத்தாளர் மல்லிகை ஜீவா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.



திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் நன்கு பரிச்சயப்பட்ட ஓர் எழுத்தாளர். அண்மையில் அவரது மணிவிழா நிகழ்வும் இடம்பெற்றது. சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர் தென்னிலங்கையின் எழுத்தாளர் பட்டியலில் மிகவும் முக்கியமானவர். சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் ஆகியவற்றை தந்துள்ளதுடன் அவரது ஆளுமையின் வெளிப்பாடாக மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுலகுக்கு அளித்து வருகின்றார். அதனூடாக சகோதர இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை எமக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறார்.

'இலக்கியத்திற்கூடாக சமாதானப் பாலம் அமைக்க எடுத்ததொரு விளைவே முல்லைத்தீவு தாத்தாவாகும். நாலைந்து தசாப்தங்களுக்குள் நமது நாட்டில் நடந்த விடயங்கள் தொடர்பாக எமது சிறுவர் பரம்பரைக்கு போதிய விளக்கமில்லை. விளைவை மட்டுமன்றி அதற்கான காரணத்தையும் சரியாக அறிந்துகொள்ளும் பட்சத்தில்தான் அவர்களால் சமாதானத்திற்காக முறையான பங்களிப்பைச் செய்ய முடியும். முல்லைத்தீவு தாத்தாவினூடாக அதற்கான சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார் சிட்னி மாகஸ் டயஸ் அவர்கள்.

இஸிது, ஹிருனி என்ற சிறுவர்கள் பாடசாலைவிட்டு வந்து படித்துக்கொண்டிருக்கும்போது 'மிஸ்டர் சுமனசேகர' என்றவாறு மறைந்த அவர்களது தாத்தாவின் பெயரை அழைத்தபடி முதியவரொருவர் வருகிறார். இஸிது உடனே பாட்டியிடம் சென்று கூற, அவர் வந்து பார்த்தபோது அது பரராஜசிங்கம் என்று அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகிறார். காரணம் பரராஜசிங்கம் என்பவர் அவரது கணவருடன் ரெயில்வே திணைக்களத்தில் ஒன்றாக பணியாற்றியவர். மேலும் இனக் கலவரத்தின்போது பரராஜசிங்கம் குடும்பத்தினரை காப்பாற்றியவர் சுமனசேகர ஆவார். இஸிது, ஹிருனி விழித்தபடி பார்த்திருக்க பாட்டி அவரை அறிமுகம் செய்கிறார். அப்படி அறிமுகம் செய்யப்படுபவர் தான் நாவலின் கதாநாயகனான முல்லைத்தீவு தாத்தா.

யுத்தத்தில் சுமனசேகரவின் மகன் இறந்துவிட பரராஜசிங்கத்தின் மகனும் காணாமல் போய்விடுகிறார். இவ்விருவரையும் நினைவு கூர்ந்து முதியவர்கள் படும் வேதனை வாசகர்களுக்கும் மனதில் நெருடலை ஏற்படுத்துகிறது. காரணம் உயிருக்குப் போராடிய காலத்தில் முல்லைத்தீவு தாத்தா அவரது மற்ற பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தற்போது தனிமரமாக இலங்கையில் வசிக்கிறார். நோயினாலும், முதுமையினாலும் அவர் உடல் தள்ளாடுகிறது. சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் தமது வீட்டுக்கு வந்துள்ள தாத்தாவை இஸிதுவின் அம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் அடையாளம் கண்டு விசாரித்து அன்பாக உபசரிக்கிறார். பனங்கருப்பட்டி, பாணி, ஒடியல் போன்ற உணவு வகைகள் பற்றி இவ்விடத்தில் கூறப்பட்டிருப்பதினூடாக தமிழ் மக்களின் வாழ்வியலையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

மேலும் இனங்களுக்கிடையிலேயான யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை முல்லைத்தீவு தாத்தா சிறுவர்களுக்கு விளக்குகிறார். அவ்வாறு விளக்குவதனால் இனி ஒரு காலமும் யுத்த பூமியொன்று உருவாகிவிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார். பின்வரும் விடயங்களின் அடிப்படையில் சில கருத்துக்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்ப‌டவில்லை. இதன் காரணமாக தமிழ் தலைவர்கள் வெவ்வேறு உரிமைகளைக் கேட்க முனைந்தனர். தமிழ் மக்களையும் அவர்கள் சமமான பிரஜைகளாக காண விரும்பினர். தனிநாடு பற்றிய கருத்து அவர்களுக்கு இருக்கவில்லை. இருந்தும் அவர்களுக்கு வன்முறையே பரிசாகக் கிடைத்தது. இதனால் எங்கள் இளைஞர்கள் விரக்திக்குள்ளாகி இருந்தனர். இருந்தும் இதற்கு மத்தியில் எங்களைப் போன்ற தமிழ் மக்கள் உங்களது தாத்தா, பாட்டி பேன்ற நல்ல சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம்...

1978ல் யாழ்ப்பாண நகரத்தில் நடைபெற்ற சங்கீத கச்சேரியின் போதும், 1983ல் நடைபெற்ற அதே போன்றதொரு நிகழ்வின் போதும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் தாக்குதல்கள் நடைபெற்றன. அது பரவி பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. மேலும் இச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டும், அவர்களது உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டும் வந்தன. இந்த மாதம் தான் கறுப்பு ஜூலை எனப்படுகிறது என்ற விடயமும் இவ்வாறான உரையாடல்களின் மூலமாக அறியக்கிடைக்கிறது.

மேலதிக தகல்களை அறியும் வகையில் கீழுள்ள வரிகள் அமைந்திருக்கின்றன.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற சிலர் எங்கள் இதயம் போன்ற பொது நூல் நிலைய‌த்தையும் முற்றுமுழுதாக எரித்து சாம்பலாக்கினார்கள். இயக்கங்களாக ஒன்று சேர்ந்திருந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது இதன் பின்னர்தான். இவ்வளவு காலமாக அடி உதைபட்டது போதுமென்று சிந்திக்கத் தலைப்பட்டனர். சிறுபான்மையினர் என்று தமிழ் மக்களை இரண்டாம் பட்சமாக நடாத்தியதை அவர்கள விரும்பவில்லை. அத்தோடு யுத்தம் ஆரம்பமாகியது. தமிழ் மக்க‌ளுக்கு தனியான நாடொன்றை உருவாக்கிக்கொள்ளும் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. வடக்கு கிழக்கு உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியை தமிழ் ஈழம் என்ற நாடாக அமைக்க விரும்பினார்கள்.

என்றவாறு கடந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த கோரங்களை தாத்தா கூறுகிறார். மேலும் எதிர்காலத்தில் எவரும் பிரிவினைப்பட்டு விடாமல் அழகிய இலங்கை உருவாக வேண்டும் என்று எண்ணி வருந்துகிறார் முல்லைத்தீவு தாத்தா. ஓரிரு நாள் கழித்து சுமனசேகரவின் மூத்த மகனும் தாத்தாவைப் பார்க்க குடும்பம் சகிதம் வந்து நலம் விசாரிக்கையில் அவரது மகன், மகளைப் பற்றியும் விசாரிக்கிறார்.

பரராஜசிங்கத்திடமிருந்து தொலைபேசி இலக்கத்தை வாங்கி எஸ்.எம்.எஸ் பண்ணி ஸ்கைப் முகவரியைப் பெறும் சுமனசேகரவின் மகன் தமது பால்ய கால வாழ்க்கையில் மனம் லயிக்கிறார்.

கொழும்பிலிருந்து வந்த சுமனசேகரவின் மூத்த மகன், பரராஜசிங்கம் அங்கிளுக்காக தயிர் கொண்டு வந்திருந்தார். அனைவரும் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளும் தாத்தாவைப்போல சோற்றில் தயிறு, வாழைப்பழம் ஆகியவற்றை பிசைந்து சாப்பிடுகிறார்கள். தாத்தாவுக்காக அந்த சிங்கள இனச் சகோதரர்கள் சைவ உணவை சமைத்தாக கூறப்பட்டிருப்பதானது ஒற்றுமையை இயம்பி நிற்கிறது. இவ்வாறான சம்பிர‌தாயங்களை அனைத்து தரப்பினரும் பேணுவதனால் நாட்டில் சந்தோஷம் பொங்கி சமாதானம் நிகழும். இனிவரும் காலங்கள் இலங்கை தேசத்தில் நறுமணப் பூக்களை மலரச் செய்ய வேண்டும். இதுவே ஒட்டுமொத்த இலங்கையரின் கனவும், ஆசையுமாகும்.

தோதன்ன வெளியீட்டகத்தினால் பல சிங்கள நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கபட்டிருக்கின்றது. இது சகோதர இனத்துக்கு ஒரு பா(ப)லமாக அமைந்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். திக்வல்லை கமால் அவர்களின் அயராத உழைப்பின் வடிவமாக திகழும் இந்த நாவல் பாலித ஜனரஞ்சனவின் தத்ரூபமான அட்டைப் படத்துடனும், சித்திரங்களுடனும் சிறப்பு பெறுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் - முல்லைத்தீவு தாத்தா
மொழிபெயர்ப்பாளர் - திக்குவல்லை கமால்
வெளியீடு - தோதன்ன பதிப்பகம்
தொலைபேசி - 032 2263446
விலை - 200 ரூபாய்

Tuesday, October 18, 2011

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

ஊற்றை மறந்த நதிகள் நாவலுக்கான இரசனைக் குறிப்பு

மூத்த படைப்பாளிகள் எமக்கொரு வழிகாட்டி. அவர்களின் படைப்புக்களைப் படித்துத்தான் இளையவர்கள் முன்னேற்றமடைய முடியும். அத்தகைய மூத்த படைப்பாளியும், முஸ்லிம் பெண் எழுத்தாளருமாகிய திருமதி சுலைமா சமி இக்பால் அவர்களின் நாவல் இந்த இரசனைக் குறிப்புக்காக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

நாவல் துறையில் நன்கறியப்பட்ட முஸ்லிம் பெண்களில் இவரும் முக்கியமானவர். நாவல் எழுத விரும்புபவர்கள் இத்தகையவர்களின் படைப்புக்களைப் பார்த்து பயனடைய வேண்டும். இவர் ஏற்கனவே வைகறைப் பூக்கள், மனச் சுமைகள், திசை மாறிய தீர்மானங்கள் ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் வெளியிட்டிருக்கின்றார். ஊற்றை மறந்த நதிகள் என்ற நாவல் தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அனுசரணையுடன் எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 108 பக்கங்களில் வெளிவந்திருக்கின்றது.

இந்நூல் சர்வதேச ரீதியில் பரிசையும், அரச சாகத்திய விழாவின்போது 2009ல் வெளியான சிறந்த நூலுக்கான சான்றிதழையும் பெற்றிருப்பதுடன் புதிய சிறகுகள் அமைப்பின் விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இதுவரை காலமாக சிறுகதைகளையே எழுதி வந்த கதாசிரியை கலாஜோதி சுலைமா சமி இக்பால் அவர்களின் முதல் முயற்சியே இந்த நாவல். இந்த முதல் முயற்சிக்கே பெரும் வரவேற்பு கிட்டியிருப்பதில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

நாவலில் அபுல்ஹசன் - மைமூனா தம்பதியரின் மகள் ஆயிஷாவை சுற்றி படர்கிறது இந்தக் கதையம்சம். அவளைப் பெண்பார்க்க வரும் தொடக்கத்திலருந்து இறுதிவரை நாவல் தொடர்கிறது. நாவல் முழுவதிலும் தென்பகுதி முஸ்லிம்களின் பேச்சுமொழி விரவிக் கிடக்கிறது.மண்வாசனை மணக்கிறது. மலையகத்தை பிறப்பிடமாகக் கொண்ட நான் அந்த பேச்சு மொழிகளில் லயித்தேன் என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஆயிஷாவுக்கு அன்ஸார் என்ற ஆண்மகளை திருமணம் பேசுகின்றார்கள். மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் பார்க்க வந்திருக்கிறார்கள். சம்பிரதாயபூர்வமான பேச்சுகளுக்குப் பிறகு ஆயிஷாவும் அன்ஸாரும் தனியாக பேச தத்தமது விருப்பத்தை வீட்டாரிடம் ஒப்புவிக்கிறார்கள். வீட்டாருக்கும் திருமணமே முடிந்துவிட்ட மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருமணப் பதிவு மாப்பிள்ளை வீட்டில் நடக்க ஏற்பாடாகின்றது. ஆதலால் பெண் வீட்டிலிருந்து சீதனப் பணத்துடன் பழங்கள், தீன் பண்டங்கள் என்பனவும் மாப்பிள்ளை வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றது. மாப்பிள்ளை வீட்டில் அனைவருக்கும் பகல் சாப்பாடும் ஏற்பாடாகியிருக்கின்றது.பெண் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்கள் கையளிக்கப்படுகின்றது.

பெண் வீட்டில் திருமணத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்து திருமண அழைப்பிதழ்களைக் கொடுக்கவிருக்கும் பொழுது அந்த அசம்பாவிதம் நிகழ்கிறது. அன்ஸார் ஏற்கனவே திருமணமானவன் என்ற வதந்தியை அவனது ஊரிவிருந்து புடவை விற்க வரும் வியாபாரி மூலமாக கேள்விப்படுகின்றனர். ஆயிஷாவின் பெண் மனது தீயில் வேகிறது. யா அல்லாஹ் இந்த விஷயம் பொய்யா இருச்சோணும்... என்று அவள் இதயம் பிரார்த்திக்கிறது. அந்த பிரார்த்தனையை இறைவன் ஏற்றுக்கொள்வதுபோல் விசாரிக்கச் சென்ற ஆயிஷாவின் சகோதரன் சந்தோஷப்பூ தூவுகிறான். அதாவது அதே ஊரில் அன்ஸார் என்ற பெயரில் இன்னொருவன் இருக்கிறான். திருமணமான அவனைப் பற்றித்தான் வியாபாரி தவறுதலாக கூறியிருக்கிறார். மீண்டும் அந்த வீட்டில் கல்யாண களை கட்டுகிறது. ஆரவாரம் பெருகுகின்றது.

இனிதாக திருமணமும் முடிந்துவிட்டது. தாம் எதிர்பார்த்தபடியே துணை அமைந்ததில் ஆயிஷாவும் அன்ஸாரும் இல்லற வாழ்க்கையில் இனிமையையே அனுபவித்தார்கள். திருமணமுடித்து ஆறு மாதங்கள் கடந்தும் ஆயிஷா கருத்தரிக்கவில்லை. அது அன்ஸாரின் மனதிலும் ஆழ்ந்த வடுவை ஏற்படுத்திவிடுகிறது. இருந்தும் அன்புள்ளம் கொண்ட அவன் பொறுமை காக்க ஆண்டொன்று கழிய ஆயிஷா கருவுற்றதற்கான அறிகுறி தெரிகிறது. இறைவன் நியதியை தடுக்க யாருக்க முடியும்? அவளது கரு சிதைகிறது. இல்லற வாழ்விலும் ஊமையாக சில மனஸ்தாபங்கள் ஏற்பட அது வழிவகுக்கிறது.

வருடங்கள் நகர்கின்றன. ஆயிஷா மீண்டும் கருவுறுகிறாள். அல்லாஹவின் கருணையால்; அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது. அம்ஜத் என்ற அந்த பிள்ளைக்கு ஐந்து வயதாகும் போது அம்னா என்ற பெண் குழந்தையும் பிறக்கிறது. ஆனால் இனிமேல் குழந்தை கிடைத்தால் ஆயிஷாவின் உயிருக்கு ஆபத்து என்பதால் அவளது கருப்பை நீக்கப்படுகின்றது.

அன்ஸார் வெளிநாடு போகின்றான். காலம் தன்பாட்டில் கழிய அன்ஸாரின் சகோதரன் பாரிஸூக்கும் திருமணம் நிகழ்கிறது. இந்த கட்டத்திலிருந்துதான் கதையின் உச்ச கட்டத்தை சுலைமா சமி அவர்கள் நகர்த்தியிருக்கின்றார்கள். இதுவரை தென்றல் பரப்பிய ஆயிஷா - அன்ஸார் வாழ்வில் புயலை உருவாக்கிவிடுகின்றாள் பாரிஸின் மனைவி பஸ்லியா.

அன்ஸாரின் வளமான வாழ்வைப் பார்த்து பொறாமைப்படும் அவள் அன்ஸாரின் வாழ்வில் தீய வழியிலொரு திருப்பத்தை ஏற்படுத்தத் துணிகிறாள். அத்துடன் கணவன் பாரிஸூடனும் வசதியான வாழ்க்கை வாழ வேண்டுமென்று சண்டைப் பிடிக்கிறாள். தனது மாமியாரிடமும் ஆயிஷா சரியில்லாதவள் என்று கட்டுக்கதையைக் கூறி, அவர் மனதையும் மாற்றுகின்றாள். ஏதுமறியாத ஆயிஷா கணவனுடன் வெளிநாட்டில் சென்று வசிக்கின்றாள்.

அன்ஸார் குழந்தைகள் மேல் பிரியம் அதிகமுள்ளவன் என்பதால் அவன் மனதில் இரண்டாவது திருமணத்தை செய்துகொள்ளும் ஆசையை பஸ்லியா ஏற்படுத்திவிடுகிறாள். ஆயிஷாவின் சம்மதமில்லாமல் இது முடியாது என அன்ஸார் சொல்ல தான் கேட்டு சொல்வதாக சொல்கிறாள் பஸ்லியா. எனினும் ஆயிஷாவிடம் எதுவும் கேட்காமல் தனது நரிக்குணத்தை அரங்கேற்றும் பஸ்லியா "பிள்ளைகளுக்கும், ஆயிஷாவினது குடும்பத்தினருக்கும் தெரியாமல் அன்ஸார் மனமுடிக்கலாம்" என ஆயிஷா கூறியதாக பஸ்லியா பொய்யுரைக்க, அன்ஸாரின் இரண்டாவது திருமணம் ஆயிஷாவுக்கு தெரியாமலேயே நிகழ்கிறது.

காலவோட்டத்தில் அவள் உண்மையை அறிய "நீ சொன்னதால்தானே நான் முடிச்சேன்" என கூறுகிறான் அன்ஸார். பஸ்லியாவின் சதி என இருவருக்கும் விளங்கவில்லை. தன்னை ஏமாற்றி துரோகம் செய்ததாக புலம்பும் ஆயிஷா, அன்ஸாரை வெறுக்கிறாள்.

அன்ஸார் இரண்டாவதாக மணமுடித்த நிரோஷா அவனை விட மிகவும் வயது குறைந்தவள். தான் இத்தனை வருடம் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைத்த காசு, சொத்து அனைத்தையும் கண்மூடித்தனமான காதலால் நிரோஷாவின் பெயருக்கு எழுதி வைக்கிறான் அன்ஸார். இடையில் ஆயிஷாவுக்கு சீனி வியாதி கடுமையாகி கால் பாதம் வரை துண்டாடப்படுகின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அவன் தனது அன்பு மனைவியையும், பிள்ளைகளையும் அடியோடு மறந்துவிட்டு, நிரோஷாவின் இளமையில் மூழ்கியிருக்கும் கட்டத்தில் அன்ஸார் மீது வாசகர்கள் அதீத வெறுப்படைவார்கள். பஸ்லியா மீதும் கோபம் கொள்வார்கள். பஸ்லியா போன்ற பலர் எம்மத்தியில் இன்று இருக்கிறார்கள் என்ற உண்மையை சுலைமா சமி இக்பால் அவரகள் நன்கு உணர்த்துகின்றார். தம்பதியரை, நண்பர்களை, காதலர்களை இவ்வாறு கோள் சொல்லி பிரிக்கும் பஸ்லியா போன்றவர்களுக்கு தண்டனை என்ன?

தண்டனை இருக்கின்றது. இதையும் கதாசிரியர் சொல்லியிருக்கும் பாங்கில் வாசகர் மனம் அமைதியடைகிறது. நல்லதொரு குடும்பத்தை பிரித்துவிடும் பஸ்லியா தன்வினைத் தன்னைச்சுடும் என்று அறிய கொஞ்ச நாள் செல்கின்றது. அதாவது சதாவும் பாரிஸை குத்திக்காட்டும் அவள் தனது மச்சானான அன்ஸாரின் பணக்கார வாழ்வு பற்றி எடுத்துரைக்கிறாள். பாரிஸ் ஆயிஷாவைப் பற்றி நன்கறிந்தவன் என்பதால் ஆயிஷாவும், அன்ஸாரும் பிரியக் காரணம், தனது மனைவியே என உணர்ந்துவிடுகின்றான். பஸ்லியா எதிர்பாராத தருணமொன்றில் அவளுக்கு ஒரு கடிதம் வருகிறது. சாராம்சமாக பஸ்லியாவுடன் வாழ்ந்ததில் அவனுக்கு நிம்மதியில்லை என்றும் தான் தொழிலுக்கு வந்த இடத்தில் ஒரு பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியாக இருப்பதாகவும் குறிப்பிட்டிருககும் பாரிஸ், கணவனை வேறு பெண்ணுக்கு தாரை வார்க்கும் வேதனையை நீ ஆயிஷாவுக்கு கொடுத்தாய். நீயும் அதை அனுபவிக்க சந்தர்ப்பம் ஏற்படுத்தித் தந்திருக்கிறேன் என்றவாறு கடிதத்தை நிறைவு செய்கிறான். பேரிடி தலையில் விழ ஆயிஷாவிடம் தொலைபேசியில் மன்னிப்பு கோருகிறாள் பஸ்லியா. எல்லாம் முடிய நிரோஷா தன் வயதுக்கேற்ற ஒருவனுடன் ஓடிப்போகிறாள். விரக்தியடையும் அன்ஸார் அவளைத் தேடிப்புறப்பட்ட வேகததில் விபத்துக்கு உட்பட்டு முழுக்காலையும் இழக்கிறான். சொத்தும் இல்லை. சொந்தமும் இல்லை. மனைவி, பிள்ளை, குடும்பம், மானம், மரியாதை எதுவுமில்லாமல் தனிமரமாக இருக்கும் அவன் எப்படியோ ஊருக்கு வருகின்றான். அவன் கோலத்தைப் பார்த்து அனைவருக்கும் தொண்டை அடைக்கிறது. அம்ஜத்தும் அம்னாவும் தந்தையை வெறுக்க, ஆயிஷா தன் கணவனை மீண்டும் ஏற்றுக்கொள்வதுதான் இறுதிக் கட்டம்.

மிக அமைதியாக வாசித்து இந்தக் கதையில் கூறப்பட்ட விடயங்களை அவதானிக்க வேண்டும். சமூகத்தில் உலாவும் போலி முகங்களின் முகமூடியை கிழித்திருக்கிறார் ஆசிரியர். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூல் - ஊற்றை மறந்த நதிகள் (நாவல்)
ஆசிரியர் - சுலைமா சமி இக்பால்
முகவரி - 19, கமந்தெனிய வீதி, கிரிங்கதெனிய, மாவனல்லை.
தொலைபேசி - 035 2246494
விலை - 200 ரூபாய்

37ம் நம்பர் வீடு - நாவல்

37ம் நம்பர் வீடு (நாவல்) பற்றிய இரசனைக் குறிப்பு 

இன்றைய இஸ்லாமிய சமூகத்தில் எமது மக்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. ஈமான் (இறை நம்பிக்கை) கொண்டவர்கள் தமது ஈமானை இழந்து பலவீனப்பட்டுப் போய் கிடக்கிறார்கள். அல்லாஹ் மீது வைக்க வேண்டிய நம்பிக்கையை உலக வஸ்துக்களின் மீது வைத்து அல்லல் படுவதை அவதானிக்க முடிகிறது. சூனியம் என்ற வார்த்தையில் தமது சொத்து சுகங்களை இழந்து தவிக்கின்றவர்களின் நிலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமிருப்பது கவலைக்குரிய விடயமாகவே காணப்படுகிறது.

இத்தகையவற்றிலிருந்து முஸ்லிம் சமுதாயத்தை மீட்டெடுக்க இன்று பலர் தன்னாலான முயற்சிகளை செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். இஸ்லாமிய ஊடகங்களும் தமது பங்களிப்பை பல்வகைப்பட்ட தன்மைகளில் நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இலக்கியத் துறையினூடாகவும் ஓர் இஸ்லாமிய புரட்சியை நிகழ்த்தி வருகின்றார் எழுத்தாளர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள். ஒரு அபலையின் டயறி, இது ஒரு ராட்சஷியின் கதை, ரோஜாக்கூட்டம் ஆகிய நூல்களையும் இவர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார். சமூகம் சார்ந்த விடயங்களை, இஸ்லாமிய விழுமியங்களை தனது நாவல்களினூடாக வெளிப்டுத்தும் இவர், சிங்கள மொழியில் கல்வி பயின்று தமிழில் புத்தக வெளியீடுகளை மேற்கொள்பர் என்பது வியக்கத்தகது.

37ம் நம்பர் வீடு என்ற இவரது மூன்றாவது நாவல் சூனியத்திற்காக தனது பணத்தை, ஈமானை இழந்தவர்களின் நிலையை கருவாகக்கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. இது எக்மி பதிப்பகத்தின் வெளியீடாக 19 அத்தியாயங்களைக் கொண்டு 88 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. அஸ்வர் அலி - கதீஜா உம்மா இருவரினதும் பிள்ளைகளான ருஷைத், ருஷ்தா. ருஷைதின் மனைவி ஸஹ்ரா, ருஷ்தாவின் கணவன் ஹிமாஸ். அத்துடன் அந்த வீட்டில் வேலைகளைச் செய்யும் ஹம்ஸியா. இவர்களை வைத்துத்தான் கதையம்சம் பின்னப்பட்டிருக்கிறது. இந்நாவலில், குறிப்பிட்ட ஒரு பாத்திரத்துக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அனைத்து பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் வாசகர் மனதில் பதிந்து விடுகின்றன.



கதீஜாவுக்கு வயதாகிவிட்டதால் அவளுக்கு நுவரெலியாவின் குளிர்நிலை ஒத்துக்கொள்வதில்லை. அஸ்வர் அலியும் கொழும்பில் வீடு வாங்க வேண்டும் என்ற ருஷைதின் ஆசைக்கு இணங்கிவிட அனைவரும் தலைநகருக்கு அண்மித்த ஒர் இடத்தில் வீடு வாங்க முடிவு செய்கின்றனர். புரோக்கர் பல வீடுகளின் விபரங்களைச் சொன்னாலும் குறிப்பிட்டதொரு வீட்டை மாத்திரம் ருஷைதுக்கு பிடித்துவிடுகிறது. காரணம் அழகிய சூழலுடன் கூடிய வாகன தரிப்பிட வசதி கொண்டு அந்த வீடு அமைந்திருப்பதாகும். எனினும் அதை பலரும் பேய் வீடு என்று சொல்வதாக தன் நேர்மையை புரோக்கர் ஒப்பிக்கிறார். பேய், பிசாசு ஆகியவற்றில் நம்பிக்கை அற்ற ருஷைத் வீட்டாரிடம் இது பற்றி எதுவும் கூற வேண்டாம் என்ற கண்டிஷனுடன் அந்த வீட்டை வாங்கும் ஒழுங்குகளை கவனிக்குமாறு கூறுகிறான். தனது பிழைப்பில் மண்ணள்ளிப்போட விரும்பாத புரோக்கரும் எதைப்பற்றியும் வீட்டாரிடம் கூறாதிருக்க, வெகு சீக்கிரமாக வீடு வாங்கி அதில் அனைவரும் குடிபுகுந்து விடுகின்றார்கள். தனது தங்கையின் மகன் சுஹைல், தனது கைக்குழந்தை ஸீனத் ஆகியவர்களின் சுகாதாரத்தை எண்ணி வீட்டை நன்றாக சுத்தம் செய்து வைக்கிறான் ருஷைத்.

அனைவருக்கும் வீடு மிகவும் பிடித்துப்போகிறது. எனினும் அந்த வீட்டில் அடிக்கடி சில அசம்பாவிதங்கள் நிகழ்ந்துவிடுகின்றன. இரவு பன்னிரண்டு மணிக்கு ஹம்ஸியா முற்றம் கூட்டுவதாகவும் அதை நிறுத்தும்படி சொல்லச் சொல்லியும் மேல்மாடியில் இருக்கும் மனைவி ருஷ்தாவிடமிருந்து ஹிமாஸூக்கு தொலைபேசி வருகிறது. அவன் வெளியில் சென்று பார்க்க ஹம்ஸியா சமையலைக்குள் புகுந்து விடுகிறாள். மீண்டும் உடனே தனது அறைக்குள் சென்று விடுகிறாள். அவளது அறையருகே நிற்பது பெருந்தப்பு என்பதை உணர்ந்து ஹிமாஸ் நகர எத்தனிக்கையில் மாமா அஸ்வர் கோபப் பார்வையால் சுட்டெரிக்கிறார். அவமானம் தாங்காமல் ருஷ்தாவின் விளையாட்டுத்தனத்துக்கு அளவில்லை என்று கர்ஜித்தவாறு மாடியை அடைந்தவனுக்கு மனைவி தூங்கிக்கொண்டிருப்பது மிகுந்த ஆச்சரியமளிக்கிறது. கடைசியாக தனக்கு வந்த அழைப்பு இலக்கங்களை பார்த்தவனுக்கு இரத்தம் உறைகிறது. பத்தரை மணிக்கு தனது நண்பன் பேசிய இலக்கம் தான் தொலைபேசியில் பதிவாகியிருக்கிறது. எனினும் மாமா தன்னை அடிக்கடி சந்தேகிப்பது அவனளவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

அடுத்தாக ருஷ்தா, வீட்டிலிருக்கும் ஜன்னலருகில் யாரோ இருப்பதைக் காணுகிறாள். வெளியே வந்து பார்த்தால் ஒரு பெண் மழைக்கு ஒதுங்கியிருக்கிறாள். அவளை வீட்டுக்குள் அழைத்து வந்த ருஷ்தாவை அந்தப்பெண் தீட்சண்யமான பார்வை பார்க்க ருஷ்தாவுக்கு சர்வ நாடியும் அடங்கி மயக்கம் ஏற்பட்டு விடுகிறது. கண்கள் சொருகி, பேச்சு மூச்சற்று உணர்விழக்கிறாள்.

வைத்தியத் தரப்பில் அவள் மனநோயாளி என்ற கட்டத்திலிருந்து பைத்தியக்காரி என்ற பட்டம் பெறுமளவுக்கு அவளது செயற்பாடுகள் அமைந்துவிடுகிறது. அடிக்கடி இரவில் ருஷ்தா பயங்கரமாகச் சிரிப்பதைக் கண்டு ஹிமாஸ் அலறுகிறான். வீட்டிலுள்ளவர்கள் வந்து பார்த்த போது ருஷ்தா அயர்ந்து தூங்கியிருக்கிறாள். எதிர்பாராத விதமாக மீண்டும் ருஷ்தா கட்டில் நகருமளவுக்கு சிரித்த விதம் வீட்டிலுள்ள அனைவரையும் பீதியடையச் செய்கிறது. ஹம்சியாவினதும் நிலை அதே கதியாக இருக்கிறது. தனியறையில் தூங்கும் போது அவளை யாரோ கழுத்தை நெரிப்பதாகவும், சமையலறையில் யாரோ தன்னை ஊடுறுவிப் பார்ப்பதாகவும் கூறி அவள் கதறுகிறாள். ஸஹ்ராவுக்கும் இடைக்கிடையே பயங்கரமானதொரு சிரிப்புச் சத்தம் கேட்கிறது. ஆனால் இது எதையுமே நம்பாதவனாக ருஷைத் இருப்பது அவனது ஈமானை வலியுறுத்துகிறது. எனினும் ஷைத்தான் தனது விளையாட்டை ருஷைதிடமும் காட்டிவிடுகின்றான்.

அதாவது ருஷைத் ஓர் நாள் கனவு காணுகிறான். அதில் ருஷ்தாவின் மகன் சுஹைல், ருஷைதிடம் வந்து 'மாமா ருசியா இருக்குது' என்கிறான். எது என ருஷைத் கேட்டதற்கு ஸீனத்துட ரத்தம் என்கிறான். சுஹைல் விரலை வாயில் வைத்து உறிஞ்சிக்கொண்டிருக்கிறான். அவன் வாயில் இரத்தம். ருஷைத் ஸீனத்தைப் பார்க்க அவளது குரல்வளை துண்டிக்கப்பட்டு இரத்தம் வருகிறது. அதிர்ச்சியடைந்தவன் 'ஏன்ட தங்கமே ஸீனத்' என கனவில் கத்த ஸஹ்ரா அவனைத் தட்டி எழுப்புகிறாள். இந்த கனவுதான் ருஷைதின் உள்ளத்தில் சலனத்தை ஏற்படுத்திவிடுகிறது. அனைவரும் பரிசாரிகளை அழைத்து வந்து பூஜைகளை செய்கின்றனர். ருஷைதுக்கு இது உறுத்தலாக இருந்தாலும் கனவின் தாக்கம் வாயடைக்கச் செய்கிறது. ஹஜ் கடமைக்காக அஸ்வர் அலி சேர்த்து வைத்திருந்த பணம் கொஞ்ச கொஞ்சமாக பரிசாரியிடம் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் எந்த வித நலவுகளும் ஏற்படவில்லை.

இறுதியில் ஒரு பிச்சைக்காரியின் கூற்றுக்கிணங்க கதீஜா, அஸ்வர் அலி, ருஷைத் மூவரும் 37ம் நம்பர் வீட்டிலுள்ள ஒரு பெண்மணியை சந்திக்கிறார்கள். அந்த மூதாட்டி மிகவும் பக்தி உடையவர். அதிகம் படிப்பறிவில்லாவிட்டாலும் படைத்தவன் மீது அபார நம்பிக்கை வைத்திருப்பவர். இவர்களின் வீட்டு நிலைமைகளை அறிந்து தனது கதையை அவர்களிடம் விபரிக்கிறார். அவருக்கும் இதை விட பலமடங்கு பிரச்சனைகள் ஏற்பட்ட போதிலும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறெதனையும் நாடிப் போகவில்லை. நோயைக் உருவாக்கியவன் மருந்தைப் படைத்திருக்கிறான். அது போலவே பிரச்சனைகளுக்கும் தீர்வை வல்ல அல்லாஹ்வே தர வேண்டுமென்று சதாவும் திக்ரிலும், ஓதலிலும் (இறை தியானம்) தனது காலத்தை கடத்தி வந்திருக்கிறார். அநாதைப் பிள்ளைகளை தத்தெடுத்து வளர்த்திருக்கிறார். தனது மகன்மாருக்கும் அநாதைக் குமர்களையே மணமுடித்துக் கொடுத்திருக்கிறார். பாடசாலை செல்லாத அந்த மூதாட்டி பலரிடம் கெஞ்சி தமிழ் எழுத்துக்களைப் படித்து அதன் பிறகு பல சன்மார்க்க புத்தகங்களை வாசித்தாகக் கூறி இராக்கைகளைக் காட்டுகிறார். காட்டிய இராக்கையில் ஒரு பக்க சுவர் மறையுமளவுக்கு புத்தகங்கள் இருக்கின்றன. அதைக் கண்ட ருஷைத் உட்பட ருஷைதின் பெற்றோரும் புதினப்படுகின்றனர்.

பல வீடுகளில் இன்று திக்ரு, ஸலவாத்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது. காரணம் தொலைக்காட்சி. அதில் வரும் உருவங்களும், இசையும் ஷைத்தானுக்கு மிகப் பிரியமானவை. அதனால் பல உள்ளங்கள் இன்று சீர்கெட்டு அலைகின்றன. எந்த கஷ்டம் என்றாலும் அல்லாஹ்விடம் இறைஞ்ச வேண்டும். நாம் நமது கோரிக்கையை விடுக்கும்போது அதை நிறைவேற்றித்தர அல்லாஹ் காத்திருக்கிறான். அவன் கருணையுள்ள ரஹ்மான். எந்தத் தீங்கும் அவனை மிஞ்சி நடந்துவிட முடியாது. எல்லாவற்றுக்கும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என்றவாறு அந்த மூதாட்டி அறிவுரை சொல்ல அனைவரும் மன நிம்மதி அடைந்தவர்களாக வீடு செல்கிறார்கள். இனிமேல் அவர்கள் எதற்காகவும் அல்லாஹ்வைத் தவிர பிற வஸ்துக்களிடம் பாதுகாப்பு தேடப் போவதில்லை. மறுமை வாழ்வுக்காக தமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள ஆயத்தமாகிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது நாவல்.

ஈமான் வற்றிய இதயங்களுக்கு இந்நாவல் மழையாக இருக்கிறது. அல்லல் படும் மனங்களுக்கு ஒத்தடமாக இருக்கிறது. ஆகவே அனைவரும் இவ்விதமான புத்தகங்களை வாசித்து பயனடைய வேண்டும். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - 37ம் நம்பர் வீடு
நூலாசிரியர் - ஏ.சீ. ஜரீனா முஸ்தபா
வெளியீடு – எக்மி பதிப்பகம்
முகவரி – 120 H, Bogahawatta Road, Welivita.
தொலைNசி– 011 5020936
விலை - 250/=

'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

'கே. எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சில'

தமிழ், ஆங்கில இலக்கியவாதிகள் மத்தியில் நன்கறியப்பட்ட திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள், தனது திறனாய்வுகளிலும், விமர்சனங்களிலும் சிலதைத் தொகுப்பாக்கி வாசகர்களின் விருந்துக்காக தந்திருக்கிறார். தான் வாசித்த சிறுகதை, கவிதை, நாவல், ஏனைய படைப்புகள் பற்றியும், சினிமா பற்றியும் தனது ஆழ்ந்த கருத்தை முன்வைத்து வாசகரின் அபிமானத்தைப் பெற்ற இவர் ஓர் ஆங்கில ஆசிரியருமாவார். பத்திரிகையாளனாக மட்டுமல்லாமல் பல்துறை கலைஞராக விளங்கும் இவர் அண்மையில் தமது பவள விழாவினை யாழ் நகரில் கொண்டாடினார். கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் மாலைதீவு, அமெரிக்கா, ஓமான் போன்ற இடங்களில் ஆங்கில இலக்கிய பாடங்களுக்கு உயர்நிலைப் பாடசாலைகளின் விரிவுரையாளராக இருந்துள்ளார். இவரது நூல்கள் வடகிழக்கு மாகாண இலக்கிய விருது, கனடாவின் தமிழர் தகவல் ஏட்டின் விருது என்பவற்றைப் பெற்றுள்ளதுடன் இவர் வடகிழக்கு மாகாண ஆளுனர் விருதையும் பெற்றிருக்கிறார்.

சொல்லப்போனால் அரை நூற்றாண்டுக்கும் மேலாக தொடரும் இவரது இந்த இலக்கிய ஊழியம், கலை இலக்கியவாதிகளுக்கு காத்திரமான ஊக்கத்தை ஏற்படுத்துவதோடு அவர் தம் ஆக்கங்களுக்கும் விசாலமான பரம்பலை ஏற்படுத்தும். எழுத்தாளர்கள் தமது எழுத்துருக்களை முதற்கட்டமாக அச்சு, ஒளி, ஒலி ஊடகங்கள் மூலமாக வாசகரை சென்றடையச் செய்வது சகலரும் அறிந்ததே. சில சந்தர்ப்பங்களில் இரண்டாவது முறையாக அதே ஆக்கங்கள் நூல்களாக வாசகர் பார்வைக்கு வருவதுமுண்டு. கே.எஸ். சிவகுமாரன் வெளியீட்டாளர்கள் மூலம் அல்லது தன் சொந்த தேடலாகவோ இந்நூல்களைப் படித்து தன் கண்ணோட்டத்தைப் பிரசித்தப்படுத்துவதுண்டு. இம்மார்க்கமாக படைப்பாளிக்கும், படைப்புக்கும் மூன்றாவது வாசகர் பார்வை அமையும். அடுத்த கட்டமானது கே.எஸ். சிவகுமாரன் தன் கண்ணோட்டத்தை அடக்கிய தனது நூலுருக்களை தொகுப்பு நூலாக்கல்... என திரு. கே.எஸ். சிவகுமாரனைப் பற்றிய அவதானத்தை கிழக்கு மண் இணையத்தளம் தந்திருக்கின்றது.



சோமகாந்தனின் பத்தி எழுத்து என்ற மகுடத்தில் சோமகாந்தனைப் பற்றி இந்நூல் எமக்கு அறியத்தருகின்றது. தினகரன் வார மஞ்சரியில் காந்தனின் கண்ணோட்டம் என்ற தலைப்பில் வாராவாரம் சோமகாந்தனின் பத்தி எழுத்துக்கள் வெளி வந்திருக்கின்றன. சோமகாந்தனின் எழுத்துக்களை ரசித்ததாகக் கூறும் நூலாசிரியர் அதற்கான சில காரணங்களாக பின்வருவனவற்றை கூறியிருக்கின்றார்.

தமிழ் மொழியின் சொல் வளம் பத்தி எழுத்தாளரின் கை வண்ணத்தில் பல பரிமாணங்கள் எடுப்பதை அனுபவித்து புளங்காகிதம் அடைந்தமை, தெரியாத சில விபரங்களைக் கோர்த்து அவர் தரும் பாங்கு என் அறிவை விருத்தி செய்ய உதவியமை, சோமகாந்தனின் சிந்தனைகள் செயற்பாட்டுத்தன்மை கொண்டவையாதலால் அவருடைய பத்திகளைப் படிக்கும் நான் செயலூக்கம் பெற்றமை.

எழுத்து, சமயம், முகாமைத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற உயர்தர அரசாங்க உத்தியோகத்தரான சோமகாந்தனைப் பற்றி இளைய தலைமுறைப் படைப்பாளிகளில் பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பார்களோ என்ன வோ? திரு. கே. எஸ். சிவகுமாரன் அவர்களின் புத்தகங்களில் படித்து அறியக்கூடிய சந்தர்ப்பம் நமக்கு வாய்த்திருக்கிறது எனலாம்.

பத்தி எழுத்தும் சண் அங்கிளும் என்ற பார்வையில் பொ. சண்முகநாதனைப் பற்றி அறியத் தந்திருக்கிறார். உதயன் நாளிதழில் நினைக்க.. சிரிக்க.. சிந்திக்க என்ற தலைப்பில் எழுதி வந்த பொ. சண்முகநாதன் தனது சொந்தப் பெயரிலும் நீண்ட நாட்களாக ஜனரஞ்சகமாகவும், நகைச்சுவையாகவும் எழுதி வந்த ஒரு படைப்பாளி. தான் சொல்ல வந்த விடயத்தை எளிமையாகவும், தெளிவாகவும் சொல்லி முடிக்கும் பாங்கு பலரிடம் இல்லை. எனினும் பத்தி எழுத்துக்கள் மூலமாக பொ. சண்முகநாதன் அவர்கள் கூறும் பாங்கு தன்னைக் கவர்ந்ததாக குறிப்பிடுகிறார் நூலாசிரியர் கே.எஸ். சிவகுமாரன் அவர்கள்.

பல முக்கிய செய்திகளையும், அதனுடன் தொடர்புடைய கிளைச் செய்திகளையும் சுருக்கமாகத் தந்த பின்னர் சிந்திக்கத்தக்க கருத்துக்களையும் பலவந்தமாகத் திணிக்காமல் எடுத்துக்கொண்ட பொருளுடன் ஒட்டியதாக அவர் எழுதும் முறை ஆசிரியரின் முதிர்ச்சியையும், அறிவு வளர்ச்சியையும் காட்டி நிற்கிறது என தனது பாராட்டை தெளித்திருக்கிறார் திரு. சிவகுமாரன் அவர்கள்.

1958 – 1966 காலப் பகுதியில் சிற்பி சிவசரவணபவன் வெளியிட்ட ஷகலைச்செல்வி| நவீன தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தது என்பது பலரின் கணிப்பு. சிற்பி அவர்கள் தீபம் என்ற தமிழ்நாட்டுச் சஞ்சிகையில் இவர் எழுதிய இலங்கைக் கடிதத்தொடரால் எமது நாட்டு இலக்கிய முயற்சிகளை இந்தியர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பை அளித்தது. இவர் சத்திய தரிசனம், உனக்காக கண்ணே, ஆகிய நூல்களை வெளியிட்டிருக்கிறார்.

ஸ்ரீஸ்கந்தராஜா ஞானமேரி என்ற பெண்பாற்புலவரைப் பற்றியும் இத்தொகுப்பில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. திருகோணமலையைச் சேர்ந்த இவர் மரபு சார்ந்த கவிதைகளையும், பாடல்களையும் எழுதி வருகிறார். இவரது பாடல்களில் லயம், ஓசை என்பன காணப்படுவதையும், சொல்லாட்சியிருப்பதையும் குறிப்பிட்டிருக்கும் நூலாசிரியர் ஞானமேரி அவர்களின் இந்த நூல் இந்து சமயம் போதிக்கப்படும் பள்ளிக்கூடங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் விதைந்துரைக்கப்பட்ட பாடநூலாக இருப்பது அவசியம் கூறுகின்றார்.

திரு. கௌசிகன் நடாத்திய ஓவியப் பயிற்சி கண்காட்சியின் நிகழ்வொன்றையும் இந்த புத்தகம் தன்னகத்தே கொண்டிருக்கிறது. கொழும்பு வாழ் பல பெண்கள் இந்த பயிற்சிக் கல்லூரியின் மாணவிகளாவர். இளைஞர்களுக்கும், யுவதிகளுக்கும் திரு. திருமதி. கௌசிகன் இருவரும் நவீனத்தவமும், இயற் பண்பும் கொண்ட ஓவியங்களை கற்றுக் கொடுக்கின்றனர். இளைஞர், யுவதிகளின் இந்த திறமையை வெளியுலகுக்கும் தெரியப்படுத்தும் வகையில் ஓர் ஓவியக் கண்காட்சி பெப்ரவரி மாதம் கொழும்பு லயனல் வெண்ட்ற் மண்பத்தில் இடம் பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

இஸ்லாமியப் பெண்ணின் எழுத்தாற்றல் என்ற வகையில் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் தென்றலின் வேகம் என்ற கவிதைத் தொகுப்பையும் தனது ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட நூலாசிரியர் அது பற்றி தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்திருக்கிறார்.

கிழக்கிலங்கை இஸ்லாமியரும், யாழ்ப்பாண நகரின் இஸ்லாமியரும் தமிழைத் தம் வசமாக்கி தனித்துவமான படைப்பக்களை இப்பொழுது தந்துகொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆயினும் சிங்கள மக்கள் அதிகம் வாழும் வெலிகம என்ற ஊரைச் சேர்ந்த ரிம்ஸா முஹம்மத் தமிழை ஆள்வது எனக்கு வியப்பைத் தந்தது. புதுக்கவிதை என்ற பெயரில் வழமையாக பலர் எழுதும் செயற்கைத் தன்மையான கேள்விகளும், சூளுரைத்தல்களும் போன்று நமது கவிஞரும் எழுதி விடுவாரோ என்ற எனது எதிர்பார்ப்பை நிறைவேற்றாமல் அமைதி கண்டு யதார்த்த அனுபவத்தை அவர் பதிவு செய்வது எனக்கு திருப்தியளித்தது'. என்றவாறு கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தன் மனவோட்டத்தைக் கூறியிருக்கின்றார்.

எல்லாக் கலைகளுமே களிப்பூட்டுவன என்றாலும் பெரும்பாலானவை பெருவாரியான பொது மக்களின் ரசனை மட்டத்தை திருப்திப்படுத்துவன. அந்த வகையில் சினிமாவும் பெரும்பாலும் வணிக நோக்கத்திற்காகவே உருவாக்கப்படுகின்றமை வேதனையளிக்கின்றது. இத்தகைய திரைப்படங்கள் ஜனரஞ்சகமானவை என்கிறார்கள். சில நேரங்களில் ஜனரஞ்சகமானவை கலைத் தரமுடையiவாக அமையும் சந்தர்ப்பங்களும் இல்லாமல் இல்லை.

வியாபார நோக்கத்திற்காக திரைப்படம் தயாரிப்பவர்கள் ரசிகர்களின் ரசனையை மதிப்பவர்களாக பெரும்பாலும் இல்லை. முதலீட்டை கைப்பற்றவே அவர்களது மூளை சிந்தித்துக் கொண்டிருக்கும். அதாவது தமிழ்நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாக இருப்பதனால் அவர்களைத் திருப்திப்படுத்தவும், சம்பவங்களைக் கூட வசனத்தில் மீண்டும் எடுத்துரைக்கும் விதத்திலும் பெரும்பாலான படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆகவே வணிகப்படங்கள் கைத்தொழில் முயற்சிகளின் விளைவுகள் எனலாம். கலைநயமான படங்கள் உயர் மட்ட ரசனை உடையவர்களின் ஆய்வறிவுக்கு விருந்தளிப்பன. மக்கள் ரசனை உயரும்போது ஆக்கபூர்வமான கலைப்படங்கள் தாராளமாக நமது பார்வைக்கு வரும் என்று கே.எஸ். சிவகுமாரன் அவர்கள் தெரிவித்திருக்கின்றார்.

தான் எழுதிய விடிவு கால நட்சத்திரம், மன நதியின் சிறு அலைகள், அன்னையின் நிழல் ஆகிய நூல்களுடன் அண்மையில் பலே பலே வைத்தியர் என்ற சிறுவர் நூலையும் எழுதி பலரது பாராட்டுக்களையும் பெற்ற கே.விஜயன் அவர்களைப் பற்றியும் இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாவல், கவிதை, சிறுகதை, விமர்சனம், நாடகம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி வரும் இவர், இதழியலாளராக இருந்தவராவார். மார்க்சிய சிந்தனை உடைய இவர் மலையாளக் கதைகள் சிலவற்றையும் தமிழில் தந்திருக்கின்றார். சிறுவர்களைக் கவரக் கூடியதும், பெரியவர்களை திருப்திபடுத்தக்கூடியதுமான கே. விஜயன் அவர்களின் பலே பலே வைத்தியர் என்ற நூல் 98 பக்கங்களில் 20 கதைகளுடன் வெளிவந்திருக்கிறது.

தனது எழுத்துக்களாலும், தன் நிகரற்ற பண்பினாலும் பல இலக்கிய நெஞ்சங்களின் அன்பை வென்றெடுத்த மாமேதை திரு. கே.எஸ். சிவகுமாரன் அவர்களின் நூலுக்கு எனது இரசனைக்குறிப்பை எழுதியதையிட்டு பெரு மகிழ்ச்சியடைவதுடன் அவரைப் பல்லாண்டு காலம் வாழ்ந்து, இன்னுமின்னும் சாதனைப் படைக்கவும் வாழ்த்துகிறேன்!!!

நூல் - கே.எஸ். சிவகுமாரன் ஏடுகளில் திறனாய்வு / மதிப்பீடுகள் சிலள
ஆசிரியர் - கே.எஸ். சிவகுமாரன்
முகவரி - 21, முருகன் பிளேஸ், கொழும்பு - 06
விலை - 200 ரூபாய்

Wednesday, October 12, 2011

முகங்கள் தொகுப்பு

முகங்கள் தொகுப்புக்கான (சிறுகதைகள்) இரசனைக் குறிப்பு

புலம்பெயர்ந்த பல எழுத்தாளர்களின் படைப்புக்களை நாம் பத்திரிகைகள், சஞ்சிகைகள் வழியே படித்து வருகிறோம். அந்நிய நாட்டில் இருந்துகொண்டு தமிழ் மீது கொண்ட பற்றை இன்னும் உணர்ந்து அவர்கள் படைப்புக்களை படைப்பதைப் பார்த்தால் பாராட்டாமல் இருக்க முடியாது. அந்த வகையில் சர்வதேச தமிழ் எழுத்தாளர்களில் புலம்பெயர் வாழ்வு பற்றிய சிறுகதைத் தொகுப்பை முகங்கள் என்ற பெயரில் தொகுத்துத் தந்திருக்கிறார் வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

விஸ்வசேது இலக்கிய பாலத்தினால் வெளியீடு செய்யப்பட்டிருக்கும் இத்தொகுப்பு நூல் 551 பக்கங்களில் ஐம்பது எழுத்தாளர்களின் சிறந்த கதைகளை உள்ளடக்கி வெளிவந்திருக்கிறது. முகங்கள் என்ற பெயருக்கேற்றாற்போல புத்தகத்தின் அட்டையிலும் பல முகங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.



தொகுப்பாசிரியரான திரு. வீ. ஜீவகுமாரன் தனது உரையில் கீழுள்ளவாறு தன் உள்ளத்தை திறந்திருக்கிறார்.

ஓராண்டுகால பதிப்பகத்துறை அனுபவம்,
மூன்றாண்டுகால எழுத்துத்துறை அனுபவம்,
இருபத்து மூன்றாண்டுகால புலம்பெயர்வாழ்வு அனுபவம்.

இந்த மூன்றும் எனக்குத் தந்த தைரியமும், என் முகம் தெரியாமலேயே என்னை ஆதரித்த என் எழுத்தாள நண்பர்கள் தந்த ஆதரவும் தான் இந்த தொகுப்பு உங்கள் கையில் தவழ காரணமாய் அமைகிறது.

இந்த புலம்பெயர்ந்த தமிழர்கள் என்ற சொல்லினால் நான் உட்பட அநேக எழுத்தாளர்கள் இலங்கை மக்களிடமிருந்தும், இலங்கை இந்திய எழுத்தாளர்களிடமிருந்தும் அந்நியப்படுவது பற்றி என்றுமே எனக்கு மனவருத்தம் உண்டு. ... இலங்கையைப் பொறுத்தவரை கட்டுநாயக்காவில் இருந்து விமானம் ஏறியவுடன் அல்லது ராமேஸ்வரத்தை நோக்கி ஏதாவது ஒரு கடலில் இருந்து வள்ளம் புறப்பட்டதும் அனைவரும் புலம்பெயர்ந்தவர்கள் தான். தத்துக்கொடுக்கப்பட்ட ஒரு பிள்ளை எவ்வாறு பெற்றோருக்கு பிறத்தியாகுமோ அவ்வாறே நாமும் எம் இனத்திற்கு பிறத்தியராய்ப் போவது கசப்புடன் விழுங்க வேண்டிய ஒரு மாத்திரைதான் என்கிறார் திரு. வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த சிறுகதைகளை தொகுத்து கனதியான புத்தகமாக ஆக்கியிருக்கும் அவரது முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது. குறிப்பிட்ட நாட்டில் வதியும் படைப்பாளிகளின் படைப்புக்கள் சேர்த்து அச்சிடப்பட்ட பல புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. அதிலிருந்து மாறுபட்டு பல நாடுகளிலும் வதியும் புலம்பெயர் எழுத்தாளர்களின் படைப்புக்களை ஒன்றுதிரட்டி இந்தப் புத்தகத்தை வெளிக்கொணர்ந்திருக்கிறார் திரு வீ. ஜீவகுமாரன் அவர்கள்.

முதல் சிறுகதையான முதிர்பனைகளை நியூசிலாந்தைச் சேர்ந்த அகில் எழுதியிருக்கிறார். மூன்று புதல்வர்களின் திருமணத்தைப் பார்க்காமலேயே இறந்துபோகிறார் அம்மா பார்வதி. அதற்கான காரணங்களை மூன்று மகன்மாரும் சொல்வதாக இக்கதை அமைந்திருக்கிறது.

முதல் மகன் சேர்ஜன் சிவரூபன். தான் காதலித்த நிர்மலா என்ற பெண்ணை பெற்றோர்கள் விரும்பாத காரணத்தால் சிவரூபனால் திருமணம் முடிக்க இயலாமல் போகிறது. தற்போது அவருக்கு நாற்பத்தைந்து வயதாகியும் பிரம்மச்சாரியாகவே இருக்கிறார். இரண்டாவது மகன் சிவநேசன். 39 வயது. கப்பலின் தலையாய எஞ்சினியர். கப்பல் எந்த நாட்டின் கரையில் நங்கூரமிடுகிறதோ அங்கே சிவநேசன் புது மாப்பிள்ளை ஆகிவிடுவார். மரணத்தின் கதவுகளைத் தட்டும் பாலியல் நோயைக் கொண்டவர். ஆதலால் மனசாட்சி விழித்ததன் நிமித்தம் திருமணத்தை இரத்து செய்து விடுகின்றார். மூன்றாவது மகன் சிவச்செல்வன். போர் விமானத்தின் விமானியோட்டி. யுத்தங்களைப் பாரத்த அதிர்ச்சியில் மனநல மருத்துவரைத் தேடிப்போக அவர் சில மருந்துகள் கொடுக்கின்றார். அவை ஒருவரின் ஆண்மையை இழக்கப்பண்ணி விடுகிறது. சிவச்செல்வனும் இந்த பாதிப்புக்கு உள்ளானதால் இவரும் மணமுடிக்காமலேயே இருந்துவிடுகிறார். ஆக மொத்தத்தில் பிள்ளைகளில் ஒருவருடைய திருமணத்தையாவது தாய் பார்க்கவில்லை. அருமையான கதையாடலைக்கொண்டது இந்த சிறுகதை.

அம்மா அம்மா தான் என்ற கதையை யோகேஸ்வரி சிவப்பிரகாசம் எழுதியிருக்கிறார். நீண்ட நாட்களுக்குப்பிறகு வெளிநாட்டிலிருந்து தாயைப் பார்க்க வருகிறாள் மகள் மதுரா. மதுரா உட்பட அவளின் மகளும் நாகரீகத்திற்கேற்ப ஆடை அணிபவர்கள். ஒருமுறை மதுராவின் பெரியம்மாவின் பிள்ளைகள் வெளிநாட்டுப் பாணியில் ஆடைகளை அணிவதைக் கண்டு அம்மம்மா திட்டிவிடுகிறாள். அதே போன்று தனது மகளை தனது அம்மா திட்டி விடுவாரோ என்று பயப்படுகின்றாள் மதுரா.

ஆனால் என்ன ஆச்சரியம். அக்கம்பக்க வீட்டு பிள்ளைகளுக்கு அம்மா இப்படிச் சொல்வதைக் கண்டு ஆனந்தமடைகிறாள் மதுரா.

"என்ர பேரப்பிள்ளையளைப் பாத்தியளே! என்ன ஸ்ரையிலாய் ஸ்மாட்டாய் இருக்கினம். நீங்களும் அந்த மாதிரி இருக்க பழகுங்கோ. அவையளைப் போல உடுத்து, அவையளைப் போல பேசி..''

பிரான்சிலிருந்து ஜோதிலிங்கம் எழுதிய "லா சப்பல்" என்ற கதை அளவுக்கு மீறி நாகரீகத்தில் திளைத்து இறுதியில் உயிரை இழந்த யுவதியைப் பற்றியது. பல்கலைக்கழக இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி மாணவ மாணவிகள், விரிவுரையாhளர்கள் இணைந்து ஒரு கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

கழுத்தடி பட்டினை பூட்டாமல் வெளிக்கிட்ட மகளை தடுத்து நிறுத்தும் பரிமளம் அதை பூட்டச்சொல்லி அதட்டுகிறாள். அதற்கு சிவரஞ்சனியோ "அது ரை கட்டினால்தான் பூட்டிறது அம்மா. ஆக்கள் பாத்தால் சிரிப்பினம்" எனகிறாள்.

"அது சிரித்தால் சிரிக்கட்டும். நீ வடிவாய் பூட்டு. குமருகளுக்கு ஏதும் நடந்து முடிஞ்சாப் பிறகு ஊர் உலகம் சிரிக்கிறதுக்கு முதல் இது பரவாயில்லை" என்கிறாள் அம்மா பரிமளம்.

அம்மாவின் வழமையான சுப்பிரபாதத்தை காதில் வாங்காமல் புறப்படும் சிவரஞ்சனி புகையிரத நிலையத்தில் பெண்களின் கழிவறைக்குள் நுழைந்து அநாகரீகமான ஆடை, உதட்டில் கறுப்பு மை பூசி வித்தியாசமான போக்கில் தனது நண்பிகளுடன் இணைந்து பயணிக்கிறாள்.

மாலையில் ஆபிஸ் முடிந்தவுடன் லா சப்பலுக்குப் போய் மரக்கறி வேண்டி அப்படியே கோயிலுக்கும் போய் மகளையும் காரில் அழைத்து வரலாம் என்று கணவர் பாக்கியநாதன் மனைவியை ஆறுதல் படுத்துகிறார். ஏனெனில் பரிமளம் சதாவும் சிவரஞ்சனியின் போக்கு பற்றி அங்கலாய்ப்பதே இதற்கான காரணம். மாலையில் சிவரஞ்சனியின் மொபைலுக்கு கோல் பண்ண ரிங் போய்க்கொண்டு இருக்கிறதே ஒழிய சிவரஞ்சனியின் பேச்சு வரவில்லை. பாக்கியநாதனுக்கும் அடிவயிற்றில் பற்றுகிறது.

லா சப்பல் வீதிக்கு இருவரும் வருகிறார்கள். வீதி பரபரப்பாக இருக்கிறது. "யாரோ ஒரு பெண்பிள்ளை ரொயிலட்டில் கொலை செய்யப்பட்டிருக்கிறாளாம். ரேப் கேஸாம்" என்று சனம் கதைக்கிறது என்ற செய்தியோடு பாக்கியநாதனுக்கு பொலிஸாரிமிருந்து கோல் வருகிறது. பாக்கியநாதனின் முகம் மாறுவதைக்கண்டு பரிமளமும் கலவரமடைகிறாள். சிவரஞ்சனி பிணமாக குப்புறக்கிடக்கிறாள். அவளது மார்பிலும் தோளிலும் பச்சை குத்தப்பட்டிருக்கிறது. தொப்புளில் வளையம் தொங்குகிறது. கலாச்சாரம் து(ம)றந்து அநாச்சாரங்களில் மூழ்கிப் போனால் யாவருக்கும் இதே நிலைமை தான் என இக்கதை அருமையாக சுட்டி நிற்கிறது.

இந்தத் தொகுப்பில் நியூசிலாந்து, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க், நோர்வே, இத்தாலி, லண்டன், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, சுவீடன், பெர்லின், சுவிற்ஸ்லாந்து, பிரான்சு, ஹொலன்ட், இந்தியா, இலங்கை போன்ற பல்வேறு நாடுகளில் வதியும் எழுத்தாளர்கள் எழுதியிருக்கின்றமை கூடுதல் சிறப்பு எனலாம்.

இவ்வாறானதொரு மகத்தான பணியைச் செய்திருக்கும் தொகுப்பாசிரியர் வீ. ஜீவகுமாரனின் இலக்கிய பணி மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - முகங்கள் (சிறுகதைகள்)
தொகுப்பாசிரியர் - வீ. ஜீவகுமாரன்
வெளியீடு - விஸ்வசேது இலக்கிய பாலம்
தொடர்புகளுக்கு - visvasethu@gmail.com

Friday, September 16, 2011

மல்லிகை ஜூலை 2011 இதழுக்கான இரசனைக் குறிப்பு

மல்லிகை ஜூலை 2011 இதழுக்கான இரசனைக் குறிப்பு

ஜீவா என்ற தனிமனிதனின் அர்ப்பணிப்பாலும் தியாகத்தாலும் இன்று சஞ்சிகை வரிசையில் மல்லிகை சஞ்சிகையே அதிக காலம் வெளிவருவது நாமெல்லோரும் அறிந்த விடயம். எழுத்துத் துறையில் கால்பதித்த அனைவரும் மல்லிகையைப் பற்றி அறிந்திருக்காமல் இருக்க முடியாது. மல்லிகைப் பந்தல் வெளியீடு மூலமாக பல காத்திரமான புத்தகங்களையும் இலக்கிய உலகம் பெற்றிருக்கிறது.

அந்த வகையில் ஜூலை மாத இதழ் என் கரம் கிட்டியது. அதில் காணப்படுகின்ற அனைத்து அம்சங்களும் சிந்தையைக் கவர்வனவாக இருக்கின்றது. அட்டைப் படத்தை அலங்கரித்திருக்கின்றார் தனக்கென்றொரு தனி வழி அமைத்திருக்கும் திரு. தம்பு சிவா அவர்கள்.




ஆசிரியர் தலையங்கமும் சமீபத்தில் தனது 85 வயதை அடைந்திருக்கும் ஆசிரியர் டொமினிக் ஜீவா அவர்களின் வெளிப்பாடுகளாய்ப் பிறந்துள்ளது. ஷமுதன்முதலில் தமிழ் இலக்கிய வரலாற்றில் நமது மண்ணில் படைப்பிலக்கியத்திற்கு சாஹித்திய மண்டல பரிசைப் பெற்றுக்கொண்டவன் என்ற பெறுமதிமிக்க இலக்கிய மரியாதை ஏற்கனவே எனக்கு உண்டு. அத்துடன் இந்த மண்ணில் இந்தப் பாரிய யுத்த நெருக்கடிக்குள்ளும் அரை நூற்றாண்டு காலமாக ஓர் இலக்கிய சஞ்சிகையை தொடர்ந்து வெளிக்கொணர்ந்தவன் என்ற வரலாற்றுப் பொறுப்பும் எனக்கு உண்டு எனத்தொடர்ந்து 46 ஆண்டுகளாக இச் சஞ்சிகை நடாத்திவரும் டொமினிக் ஜீவா அவர்கள், மல்லிகை எனும் இலக்கியச்செடி வளர்வதற்கு என்னென்ன பாடுபட்டார் என்ற அம்சங்களை மேற்கூறியவாறு தொட்டுக்காட்டியிருக்கிறார்.

அட்டைப்பட நாயகரைப்பற்றி கே.ஆர். டேவிட் எழுதியிருக்கின்றார். கடந்த 40 வருட காலமாக இலக்கியப் பணியாற்றிவரும் திரு. தம்புசிவா அவர்கள் யாழ்ப்பாணம் இணுவிலை பிறப்பிடமாகக்கொண்டவர். தம்பு சிவசுப்பிரமணியம், இணுவிலி மாறன், இணுவை வசந்தன், சிவசிவா தம்பு சிவா ஆகிய புனைப்பெயர்களில் தொடர்ச்சியாக இன்றுவரை சகல முன்னோடிப் பத்திரிகைகளிலும் எழுதி வருபவர். 1967ம் ஆண்டு இறைவரித் திணைக்கள்தில் எழுதுவினைஞராக நியமனம் பெற்று 1985 இல் ஓய்வு பெற்றவர். பின்பு 1987 இல் மாலைதீவில் அரச மீன்பிடி செயற்பாட்டுத் திணைக்களத்தில் உதவிக் கணக்காளராக கடமையாற்றியுள்ளார். பின்பு வடக்கு-கிழக்கு மாகாண சபையின் பதிப்பகத் திணைக்களத்தில் உதவிப்பணிப்பாளராகவும் இருந்திருக்கின்றார்.

கற்பகம் சஞ்சிகையில் பிரசுரமான சிறுகதைகளைத் தொகுத்து காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள் என்ற சிறுகதைத் தொகுதியை வெளியீடு செய்ததன் மூலம் தொகுப்பாளனாகவும், இவரால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பான சொந்தங்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு மூலம் சிறுகதை எழுத்தாளனாகவும், இவரால் எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்து முற்போக்கு இலக்கியச் செம்மல்கள் என்ற கட்டுரைத் தொகுதி மூலம் சிறந்த கட்டுரையாளனாகவும், தூரத்து கோடை இடிகள், அப்பா ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளைத் தொகுத்து வெளியீடு செய்ததன் மூலம் சிறந்த வெளியீட்டாளனாகவும், அரும்பு, கற்பகம், தமிழ்த் தென்றல், ஓலை போன்ற சஞ்சிகைகளின் ஆசிரியராகக் கடமையாற்றியதன் மூலம் சிறந்த சஞ்சிகையாளனாகவும் தம்பு சிவா அவர்கள் இனங்காணப்படுகின்றார்.

இலங்கையின் அனைத்து முன்னோடிப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தனது படைப்புக்களைத் தவழவிடும் திரு. தம்பு சிவா அவர்கள் பாண்டிச்சேரி புதுவை பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் ஏ. அறிவுநம்பி அவர்களால் சொல்லின்செல்வர் என்ற பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர். தம்பு சிவா அவர்கள் மாக்ஸிம் கோக்கியின் நூல்களையே அதிகம் விரும்புபவராக இருக்கின்றார். அநேகமான நாவல்களில் வருகின்ற பாத்திரங்களின் சித்தரிப்பில் கற்பனை வாதம் மேலோங்கியிருப்பாகவும், மாக்ஸிம் கோக்கியின் நாவலில் சாதாரண மக்களின் வாழ்க்கை முறைகளும், இயல்பான முயற்சிகளும் உள்ளடங்கியுள்ளன என்றும் குறிப்பிடுகின்றார். தம்பு சிவா அவர்கள் அடிக்கடி கூறும் ஒரு தாரக மந்திரம் 'ஒரு மனிதருடைய பெயருக்குப் பின்னால் குறிப்பிடப்படுகின்ற பட்டங்களைவிட, அந்த மனிதனின் பெயருக்கு முன்னால் மனிதம் என்ற பட்டம் அமைந்திருக்க வேண்டும். அவர்களையே நான் நேசிக்கிறேன்' என்பதாகும். இளைய படைப்பாளிகளை உற்சாகப்படுத்தியும், சொல்லாலும் செயலாலும் ஒன்றித்தும் வாழும் இலக்கியவாதி திரு. தம்புசிவா அவர்களை நாமும் வாழ்த்துகிறோம்.

எலி என்ற மொழிபெயர்ப்புக் கதையை திக்குவல்லை கமாலும், மழை என்ற சிறுகதையை சமரபாகு சி. உதயகுமாரும் எழுதியிருக்கின்றார். சண்முகம் சிவலிங்கத்தின் சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் என்ற கவிதை நூலுக்கான அவதானக்குறிப்பை அன்புடீன் எழுதியிருக்கிறார்.

பார்வதி என்ற சிறுகதையை எழுதியிருக்கும் ஆனந்தி, ஒரு கூலிவேலை செய்யும் பெண் பற்றி மனப்பதிவை சிறுகதையூடாக சிதத்ரித்திருக்கும் விதம் அருமையாக இருக்கிறது. பாறி என்று அழைக்கப்படும் இந்த கூலி வேலை செய்கிற பெண்ணின் உண்மையான பெயர் என்ன? பார்வதியா என்று மலர் என்ற பெண் கேட்டுநிற்கும் கேள்வி மனதில் கனக்கிறது. பக்கெட் மாவிலும், மிக்ஸி இயந்திரத்தால் அரைக்கப்படும் மாவால், மாவிடித்து உழைக்கும் பாறி போன்ற பலரின் ஜீவனோபாயம் இல்லாமலாகி இருக்கிறது. மலருக்கு பாறியயைப் பற்றி அதிக கவலை. கதையினிடையே மலரின் மச்சாளான சீதா வந்து யோசித்தவாறு உட்கார்ந்திருக்கிறாள். என்ன காரணம் என மலர் கேட்டதற்கு ஊரில் தற்போது மாவிடிக்கவும் யாருமில்லை என்று விளக்கமளிக்கிறாள். பாறி எங்கே என்ற மலரின் அடுத்த கேள்விக்கு சீதா சொல்லும் பதில் சரிதான். அவள் இப்ப புதுப் பணக்காரி. அவளுக்கென்ன? பிள்ளை சுவிஸிலை. இனி நாங்கள்தான் அவளுக்கு மா இடிக்கப் போவணும் என்ற பதிலைக் கேட்டு ஆனந்தியும் மலரின் நல்ல பண்பும் கதையின் இறுதியில் சுட்டிக் காட்டப்படுகின்றது.

உண்மையைச் சொல்லிவிடு என்ற கா. தாரணியின் கவிதை சுவாரஷ்யமாக இருக்கின்றது. பெண் என்ற சொல்லின் மறுவடிவம் சீதனப்பிரச்சனை என்று சொல்லுமளவுக்கு வரதட்சனை கொடுமையாகிவிட்டது. காதலிக்கும்போது தோன்றாத ஜாதியும், மதமும் சீதனம் தர வக்கில்லை எனும்போது மாடி வீட்டுக்கிளிகளிடம் மாட்டுப்பட்டு சிக்கியழிகிறது. தாரணியின் கவிதையிலும் நாசூக்காக சொல்லபட்டிருக்கும் சில வரிகள்..

மூங்கில் ஓரம்
பற்றைகளின் மறைவில்
நாங்கள் சல்லாயித்திருந்த
பொழுதுகளில்
உனக்கு சீதனமாய்த்தர
எங்களிடம் வெள்ளவத்தையில்
சொந்தவீடோ
அதுவாங்க வசதியோ
இல்லையென்பது
உனக்குத் தெரியாதா?

****

உன் சாதகம் இப்போது
வேல் அமுதன்
திருமண சேவையில்
பத்து மில்லியன்
பிரிவுக் கோப்பிலும்
என் பெயர்
ஊராரின்
நடத்தைக்கெட்டவள்
பட்டியலிலும் இருப்பது
உனக்குத் தெரியாதா?

வி. ஜீவகுமாரன், சி. விமலன், செல்லக்கண்ணு, பிரகலாத ஆனந்த், ஆகியோரின் கட்டுரைகளும், புலோலியூர் வேல் நந்தனின் கவிதையும், வேல் அமுதனின் குறுங்கதையும் மற்றும் மேமன்கவி, யோகேஸ்வரி, முருகபூபதி, வி.ரி. இளங்கோவன், லெனின் மதிவானம் ஆகியோரின் ஆக்கங்களும் மேலும் வழமையான தூண்டில் வாசகர் கடிதங்கள் ஆகியனவும் மல்லிகை இதழை அலங்கரித்துள்ளன.

நூல் - மல்லிகை (சஞ்சிகை)
ஆசிரியர் - டொமினிக் ஜீவா
முகவரி - 201/4 ஸ்ரீ கதிரேசன் வீதி, கொழும்பு - 13.
தொலைபேசி - 011 2320721
விலை - 40/=

Thursday, July 28, 2011

முதிசம் - பொன் மொழித் தொகுப்பு

முதிசம் பொன் மொழித் தொகுப்புக்கான இரசனைக் குறிப்பு

மனிதர்கள் யாவரும் நல்லவர்களாக வாழத்தான் ஆசைப்படுகின்றார்கள். தம்மை யாரும் குறை கூறுவதை விரும்பாத மனிதன், பிறரை குறை சொல்வது, தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்று காட்டுவதற்காகவே. அப்படிப்பட்ட மனிதனை நல்வழிப்படுத்த அடிக்கடி அவர்களுக்கு அதை நினைவுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதை இலகுவாக செயல்படுத்தக் கூடியதொரு வழியாக பொன்மொழிகள் காணப்படுகின்றன.

வாசிப்பு அரிதாகிவிட்ட இந்த காலத்தில் கணினிகளே அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. இது பாடசாலைகளில் மாத்திரமன்றி அனைத்து இடங்களிலும் சொல்லப்படும் பெரியதொரு பிரச்சனையாக இருக்கிறது. வாசிப்பு மனிதனை பூரணப்படுத்தும் என்ற வாசகம் மாறி கணனியறிவே மனிதனை பூரணமாக்கும் என்ற நிலை வந்துவிட்டது. அதை இனிமேல் யாராலும் மாற்ற முடியும் என்பதற்கான சாத்தியப்பாடுகள் குறைவு. இன்று இலக்கிய கூட்டங்களிலும் அடிக்கடி சொல்லப்படும் விடயம் இதுதான். இப்படியிருக்க பெரியபெரிய கட்டுரைகளை மனிதர்கள் வாசிப்பார்களா, அப்படிப் பட்டவர்களுக்காய் முத்தான கருத்துக்களை தொகுத்து புத்தமாக்கித் தந்திருக்கின்றார் கலைப்பட்டதாரி ஆசிரியையான திருமதி ஸக்கியா ஸித்தீக் பரீத் அவர்கள்.



இவர் விடியலின் விழுதுகள் என்ற சிறுகதைத்தொகுதியையும்இ இதயத்தின் ஓசைகள் என்ற கவிதை நூலையும் வெளியிட்டிருக்கின்றமை நாமறிந்த விடயமே. முதிசம் என்ற இந்த புத்தகம் 230 பக்கங்களில் இலங்கை இஸ்லாமிய முற்போக்கு இலக்கிய மன்றத்தால் வெளியிட்டு வைக்கப்பட்டிருக்கிறது. 2527 பொன்மொழிகள் இதில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

பலநாட்டவர்கள் கூறிய பல்வேறு பொன்மொழிகளைத் தொகுத்து மக்களின் அறிவு மேம்பாட்டுக்காகவும், அவர்களது வாழ்வில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த பொன்மொழிகள் அமைந்திருக்கின்றன. பழமொழிகளும், பொன்மொழிகளும் பல விடயங்களை மக்கள் மனதில் பதித்துவிடும். சிறுகதைகளோ, நாவல்களோ பழமொழிகளையும் உள்ளடக்கியதாக எழுதப்படுவதுண்டு. அதேபோல சில சிந்தனைத்துளிகளும் சேர்க்கப்படுகின்றது. காரணம் பந்தி பந்தியாக வாசித்தும் விளங்க முடியாத சில விடயங்களை ஓரிருவரி மூலம் விளங்கிவிடலாம் என்பதால்தான்.

பொன்மொழிகள் வண்ணத்துப் பூச்சுகள் போன்றவை. சிலவற்றை பிடித்துக்கொள்கிறோம் பல பறந்து விடுகின்றன என்கிறார் நூலாசிரியர். மேலும் சாதாரண மக்களும், அறிஞரும் தமது அனுபவத்தில் கண்டவற்றை சாதாரண சொற்களில் கூறிய உண்மைகளே பொன்மொழிகள் என்றுகூறும் இவர் பொன்மொழிகள் சுகம் தரும் எச்சரிக்கைகள் என்கிறார்.

தொடர்ந்து நேரத்தின் பெறுமதியை சில பொன்மொழிகளினூடு விளக்கியிருக்கிறார். நேரம் தங்கம் என்பார்கள். அதை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பார்கள். அதை என்னென்ன விதங்களில் பயன்படுத்தலாம் என்பதை இவ்வாறு கூறுகிறார் ஸக்கியா ஸித்தீக் அவர்கள்

உழைக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது வெற்றியின் ஊற்று. சிந்திக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் கண். விளையாட நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இளமையின் ரகசியம். படிக்க நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது அறிவின் வாயில். அன்புகாட்ட நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இறைவனின் நன்கொடை. சேவை செய்ய நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள் அது வாழ்வின் குறிக்கோள். சிரித்து மகிழ நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது இதயத்தின் பிரகாசம். இறை வணக்கத்திற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது ஈருலக பாக்கியத்துக்கு வழி என்கிறார்.

நட்பைப் பற்றி பல பொன்மொழிகளும் இதில் அடங்கியிருக்கின்றன. நட்பு என்பது நட்சத்திரம் போல வாழ்வுக்கு பிரகாசம் தரவல்லது என்றாலும் தற்காலத்தில் அவ்வாறான உண்மை நட்பை nறுவோர் மிகவும் அரிது. சுயநலத்தக்காக மாத்திரமே தொடுக்கப்படுகின்ற நட்பின் கைகள் சில காலங்களிலேயே வலுவிழந்துபோவது பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. பணம் பார்த்து பழகும் நட்பு குணம் பார்த்து பழகாது. குணம் பார்த்து பழகும் நட்பு பணமின்றேல் நிலைக்காது. இதுதான் பெரும்பாலும் உண்மை. சிறு தவறுகள் கூட நட்புக்கு களங்கத்தை ஏற்படுத்தலாம். களங்கம் ஏற்பட்ட நட்பு காலம் முழுவதும் கவலையைத் தரும் என்கிறார் ஆசிரியர். நல்ல நண்பர்கள் துயரத்தை பாதியாக்குவார்கள்.

இன்று தற்கொலை என்பது சர்வசாதாரணமாக போய்விட்டது. முன்பெல்லாம் கொலை தற்கொலை என்ற வசனங்களைக் கேட்டாலே அடிவயிறு கலங்கும். இன்று அவையெல்லாம் அடிக்கடி கேட்டும், வாசித்தும் பழகிவிட்ட சமாச்சாரங்கள் ஆகிவிட்டன. ஆனால் தற்கொலைகளுக்கான காரணத்தை விசாரித்துப் பார்த்தால் அதை ஜீரணிக்க கஷ்டமாக இருக்கும். ஏனெனில் காதலில் தோல்வி, பரீட்சையில் தோல்வி, அம்மா அடித்தார்கள், அப்பா ஏசினார் என்ற அற்ப காரணங்களுக்காக இவை அன்றாடம் நிகழ்கின்றன. அண்மையில் மலையகத்தில் அடுத்தடுத்து நிகழ்ந்த மாணவிகளின் தற்கொலை எத்தனைப் பேரின் மனசை உலுக்கியது. இவ்வாறானவர்களுக்கு கட்டாயம் முதிசம் என்ற புத்தகத்தை வாசிக்கக் கொடுக்க வேண்டும். அதிலுள்ள சில பொன்மொழிகள்..

'தோல்வி என்றால் எதையும் சாதிக்கவில்லை என்பது பொருளல்ல. எதையோ
கற்றுக்கொண்டோம் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.'

'தோல்வி என்றால் தோற்றவர் என்று பொருளல்ல. இன்னும் வெற்றி பெறவில்லை
என்றே பொருளாகும்.'

தவறுகளை செய்தவர்கள், தான் சூழ்நிலைக் கைதியாகிவிட்டேன் என்று கூறி தப்பித்துவிடுவார்கள். அதை நல்லதொரு வாய்ப்பாக பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் மனிதன் சூழ்நிலைகளுக்காக படைக்கப்படவில்லை. சூழ்நிலைகள் மனிதனுக்காக படைக்கப்பட்டுள்ளன என்கிறார் நூலாசிரியர் ஸக்கியா.

வாழ்க்கையில் வெற்றிபெற இலட்சியமும், விடா முயற்சியும் முக்கியம். சிலர் இன்னும் எனது இலட்சியம் கைகூடவில்லை என்று வாழ்க்கையை குறைகூறிக்கொண்டிருப்பார்கள். இன்னும் சிலரோ முயற்சியே செய்யாமல் வெற்றி பெறவில்லை என்று மூலையில் உட்கார்ந்து யோசித்துக்கொண்டிருப்பார்கள். ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற என்னென்ன வேண்டும்? கீழுள்ளவைதான் என்கிறார் ஆசிரியர்.

'உறுதியான குறிக்கோள், விடாமுயற்சி, தளர்வற்ற நெஞ்சுறுதி, சலியா உழைப்பு,
நேர்மையான பாதை. இவை ஒருங்கிணைந்தால் வெற்றி கிட்டாமல் போகாது'

காதலித்து திருமணம் புரிந்தவர்களுக்கு மத்தியில் அன்பு பெருக்கெடுப்பது உண்மை. எனினும் காதலிக்கும் போதிருந்த மனநிலை, சுதந்திரம் போன்றவை கல்யாணத்துக்கு பின்பு சற்று விலகிக்கொள்வதும் கண்கூடு. அதிலும் பிள்ளைகள் என்று பிறந்துவிட்டால் இன்னும் திண்டாட்டம்தான். மனைவி தன்னைக் கவனிப்பதில்லை என்று கணவன் எண்ணுகிறான். அது தவறு. காரணம் அங்கே குழந்தைக்காகவும் அன்பு பரிமாறப்படுகிறது. குழந்தை அவர்களுக்கு
உறுதுணையாகிறது. சொல்லவந்த விடயம் என்னவென்றால் குடும்ப வாழ்வில் சந்தோஷமும் துக்கமும் மாறிமாறி வரும் என்பதுதான். அதற்கான பழமொழி இதோ

'இல்லறத்தில் இன்பத்தை மாத்திரம் எதிர்பாராதே. உயர்ந்த மலையில் அடர்ந்த
முட்புதர்களும் குளிர்ந்த நீர்ச்சுனைகளும் இருக்கத்தான் செய்யும்.'

உலகத்தில் ஈடு இணை இல்லாத செல்வம் குழந்தை செல்வமே. ஒரு பெண்ணின் பூரணத் தன்மை தாய்மையடைவதிலேயே தங்கியிருக்கிறது என்பார்கள். திருமணமுடித்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் படும்பாட்டை எப்படி கூறுவது? யாருக்கும் அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது. ஆனால் குழந்தைகளை பெற்றெடுப்பது மாத்திரம் பெற்றோரின் வேலையில்லை. அவர்களை பார்போற்றும் மனிதர்களாக்குவதும் அவர்கள் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளின் முன்னிலையின் பெற்றோர் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும். பெரியவர்களைவிட குழந்தைகள் எல்லாவற்றையும் நுணுக்கமாக கிரகித்துவிடுவார்கள். வேறு பிள்ளைகளோடு ஒப்பிட்டு குழந்தைகளை நாம் மட்டந்தட்டிப் பேசக்கூடாது. அது அவர்களை தாழ்வுச்சிக்கலுக்குள் அமிழ்த்திவிடும். மாறாக அவர்களை தைரியப்படுத்தி வளர்க்க வேண்டும். அவர்கள் செய்கின்ற சின்ன சின்ன நல்ல விடயங்களுக்கும் தட்டிக்கொடுத்து பாராட்ட வேண்டும். பரிசில்கள் கொடுத்து ஊக்கப்படுத்த வேண்டும்.

குழந்தையை தூக்கி வைத்திருக்கும்போது கை வலித்தாலும், அதை இறக்கிவிடும்போது மனசு ப்பதுண்டு. 'பெத்தவர்கள்' என்பதற்காய் பெற்றோர் என்று சொல்லப்படுவதில்லை. இறைவனிடமிருந்து செல்வமாக குழந்தையை 'பெற்றவர்கள்' என்பதால்தான் அவர்கள் பெற்றோர் ஆகிறார்கள். ஆசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்!

நூலின் பெயர் - முதிசம் (உண்மைக் கதை)
நூலாசிரியர் - ஸக்கியா ஸித்தீக் பரீத்
முகவரி - 4/4 நிகபே வீதி, நெதிமால, தெஹிவளை.
தொலைபேசி - 011 2726585, 0718 432006
விலை - 275/=