Wednesday, December 14, 2011

கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா

கறை படிந்த இலங்கை வரலாற்றை இயம்பி நிற்கும் முல்லைத் தீவு தாத்தா






சிங்கள இலக்கியத்தினூடாக நன்கறியப்பட்ட சிட்னி மாகஸ் டயஸ் என்பவரின் 'முல்லைத்தீவ் ஸீயா' என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பே முல்லைத்தீவு தாத்தா என்ற புத்திளைஞர் நாவலாகும். யுத்த காலத்தில் நிகழ்ந்த மனதுக்கு கஷ்டமான நிகழ்வுகளை உள்ளடக்கி இந்தப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. சிரேஷ்ட எழுத்தாளர் திக்குவல்லை கமால் அவர்கள் இந்நாவலை சிறப்பாக மொழிபெயர்த்திருக்கின்றார். தோதன்ன வெளியீடாக 119 பக்கங்களில் அண்மையில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த நூல் மூத்த எழுத்தாளர் மல்லிகை ஜீவா அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.



திக்வல்லை கமால் அவர்கள் தமிழ் இலக்கிய உலகில் நன்கு பரிச்சயப்பட்ட ஓர் எழுத்தாளர். அண்மையில் அவரது மணிவிழா நிகழ்வும் இடம்பெற்றது. சாஹித்திய விருதுகள் உட்பட பல பரிசுகளை பெற்றுள்ள இவர் தென்னிலங்கையின் எழுத்தாளர் பட்டியலில் மிகவும் முக்கியமானவர். சிறுகதைகள், இலக்கியக் கட்டுரைகள், நாவல்கள், கவிதைகள், வானொலி நாடகங்கள், சிறுவர் இலக்கியங்கள் ஆகியவற்றை தந்துள்ளதுடன் அவரது ஆளுமையின் வெளிப்பாடாக மொழிபெயர்ப்பு நூல்களையும் தமிழுலகுக்கு அளித்து வருகின்றார். அதனூடாக சகோதர இன மக்களின் உள்ளத்து உணர்வுகளை எமக்கு தெளிவாக விளங்கப்படுத்துகிறார்.

'இலக்கியத்திற்கூடாக சமாதானப் பாலம் அமைக்க எடுத்ததொரு விளைவே முல்லைத்தீவு தாத்தாவாகும். நாலைந்து தசாப்தங்களுக்குள் நமது நாட்டில் நடந்த விடயங்கள் தொடர்பாக எமது சிறுவர் பரம்பரைக்கு போதிய விளக்கமில்லை. விளைவை மட்டுமன்றி அதற்கான காரணத்தையும் சரியாக அறிந்துகொள்ளும் பட்சத்தில்தான் அவர்களால் சமாதானத்திற்காக முறையான பங்களிப்பைச் செய்ய முடியும். முல்லைத்தீவு தாத்தாவினூடாக அதற்கான சிறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது" என்கிறார் சிட்னி மாகஸ் டயஸ் அவர்கள்.

இஸிது, ஹிருனி என்ற சிறுவர்கள் பாடசாலைவிட்டு வந்து படித்துக்கொண்டிருக்கும்போது 'மிஸ்டர் சுமனசேகர' என்றவாறு மறைந்த அவர்களது தாத்தாவின் பெயரை அழைத்தபடி முதியவரொருவர் வருகிறார். இஸிது உடனே பாட்டியிடம் சென்று கூற, அவர் வந்து பார்த்தபோது அது பரராஜசிங்கம் என்று அறிந்து மகிழ்ச்சியின் உச்சத்தை அடைகிறார். காரணம் பரராஜசிங்கம் என்பவர் அவரது கணவருடன் ரெயில்வே திணைக்களத்தில் ஒன்றாக பணியாற்றியவர். மேலும் இனக் கலவரத்தின்போது பரராஜசிங்கம் குடும்பத்தினரை காப்பாற்றியவர் சுமனசேகர ஆவார். இஸிது, ஹிருனி விழித்தபடி பார்த்திருக்க பாட்டி அவரை அறிமுகம் செய்கிறார். அப்படி அறிமுகம் செய்யப்படுபவர் தான் நாவலின் கதாநாயகனான முல்லைத்தீவு தாத்தா.

யுத்தத்தில் சுமனசேகரவின் மகன் இறந்துவிட பரராஜசிங்கத்தின் மகனும் காணாமல் போய்விடுகிறார். இவ்விருவரையும் நினைவு கூர்ந்து முதியவர்கள் படும் வேதனை வாசகர்களுக்கும் மனதில் நெருடலை ஏற்படுத்துகிறது. காரணம் உயிருக்குப் போராடிய காலத்தில் முல்லைத்தீவு தாத்தா அவரது மற்ற பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு தற்போது தனிமரமாக இலங்கையில் வசிக்கிறார். நோயினாலும், முதுமையினாலும் அவர் உடல் தள்ளாடுகிறது. சுமார் முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் தமது வீட்டுக்கு வந்துள்ள தாத்தாவை இஸிதுவின் அம்மா அலுவலகத்திலிருந்து வந்ததும் அடையாளம் கண்டு விசாரித்து அன்பாக உபசரிக்கிறார். பனங்கருப்பட்டி, பாணி, ஒடியல் போன்ற உணவு வகைகள் பற்றி இவ்விடத்தில் கூறப்பட்டிருப்பதினூடாக தமிழ் மக்களின் வாழ்வியலையும் விளக்கியிருக்கிறார் ஆசிரியர்.

மேலும் இனங்களுக்கிடையிலேயான யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களை முல்லைத்தீவு தாத்தா சிறுவர்களுக்கு விளக்குகிறார். அவ்வாறு விளக்குவதனால் இனி ஒரு காலமும் யுத்த பூமியொன்று உருவாகிவிடக்கூடாது என்று எதிர்பார்க்கிறார். பின்வரும் விடயங்களின் அடிப்படையில் சில கருத்துக்கள் இந்த நூலில் இடம்பெற்றிருக்கின்றன.

பெரும்பாலான இடங்களில் தமிழ் மக்கள் சமமாக நடாத்தப்ப‌டவில்லை. இதன் காரணமாக தமிழ் தலைவர்கள் வெவ்வேறு உரிமைகளைக் கேட்க முனைந்தனர். தமிழ் மக்களையும் அவர்கள் சமமான பிரஜைகளாக காண விரும்பினர். தனிநாடு பற்றிய கருத்து அவர்களுக்கு இருக்கவில்லை. இருந்தும் அவர்களுக்கு வன்முறையே பரிசாகக் கிடைத்தது. இதனால் எங்கள் இளைஞர்கள் விரக்திக்குள்ளாகி இருந்தனர். இருந்தும் இதற்கு மத்தியில் எங்களைப் போன்ற தமிழ் மக்கள் உங்களது தாத்தா, பாட்டி பேன்ற நல்ல சிங்கள மக்களுடன் ஒற்றுமையாகவே வாழ்ந்தோம்...

1978ல் யாழ்ப்பாண நகரத்தில் நடைபெற்ற சங்கீத கச்சேரியின் போதும், 1983ல் நடைபெற்ற அதே போன்றதொரு நிகழ்வின் போதும் சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் இடையில் தாக்குதல்கள் நடைபெற்றன. அது பரவி பெரும் இனக் கலவரம் ஏற்பட்டது. மேலும் இச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதிலும் வாழ்ந்த தமிழ் மக்கள் சித்திரவதை செய்யப்பட்டும், அவர்களது உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டும் வந்தன. இந்த மாதம் தான் கறுப்பு ஜூலை எனப்படுகிறது என்ற விடயமும் இவ்வாறான உரையாடல்களின் மூலமாக அறியக்கிடைக்கிறது.

மேலதிக தகல்களை அறியும் வகையில் கீழுள்ள வரிகள் அமைந்திருக்கின்றன.

தென்னிலங்கையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்ற சிலர் எங்கள் இதயம் போன்ற பொது நூல் நிலைய‌த்தையும் முற்றுமுழுதாக எரித்து சாம்பலாக்கினார்கள். இயக்கங்களாக ஒன்று சேர்ந்திருந்த தமிழ் இளைஞர்கள் ஆயுதம் தூக்கியது இதன் பின்னர்தான். இவ்வளவு காலமாக அடி உதைபட்டது போதுமென்று சிந்திக்கத் தலைப்பட்டனர். சிறுபான்மையினர் என்று தமிழ் மக்களை இரண்டாம் பட்சமாக நடாத்தியதை அவர்கள விரும்பவில்லை. அத்தோடு யுத்தம் ஆரம்பமாகியது. தமிழ் மக்க‌ளுக்கு தனியான நாடொன்றை உருவாக்கிக்கொள்ளும் அவசியம் அவர்களுக்கு ஏற்பட்டது. வடக்கு கிழக்கு உட்பட்ட இலங்கையின் ஒரு பகுதியை தமிழ் ஈழம் என்ற நாடாக அமைக்க விரும்பினார்கள்.

என்றவாறு கடந்த காலத்தில் தாங்கள் அனுபவித்த கோரங்களை தாத்தா கூறுகிறார். மேலும் எதிர்காலத்தில் எவரும் பிரிவினைப்பட்டு விடாமல் அழகிய இலங்கை உருவாக வேண்டும் என்று எண்ணி வருந்துகிறார் முல்லைத்தீவு தாத்தா. ஓரிரு நாள் கழித்து சுமனசேகரவின் மூத்த மகனும் தாத்தாவைப் பார்க்க குடும்பம் சகிதம் வந்து நலம் விசாரிக்கையில் அவரது மகன், மகளைப் பற்றியும் விசாரிக்கிறார்.

பரராஜசிங்கத்திடமிருந்து தொலைபேசி இலக்கத்தை வாங்கி எஸ்.எம்.எஸ் பண்ணி ஸ்கைப் முகவரியைப் பெறும் சுமனசேகரவின் மகன் தமது பால்ய கால வாழ்க்கையில் மனம் லயிக்கிறார்.

கொழும்பிலிருந்து வந்த சுமனசேகரவின் மூத்த மகன், பரராஜசிங்கம் அங்கிளுக்காக தயிர் கொண்டு வந்திருந்தார். அனைவரும் ஒன்றாக மேசையில் இருந்து சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளும் தாத்தாவைப்போல சோற்றில் தயிறு, வாழைப்பழம் ஆகியவற்றை பிசைந்து சாப்பிடுகிறார்கள். தாத்தாவுக்காக அந்த சிங்கள இனச் சகோதரர்கள் சைவ உணவை சமைத்தாக கூறப்பட்டிருப்பதானது ஒற்றுமையை இயம்பி நிற்கிறது. இவ்வாறான சம்பிர‌தாயங்களை அனைத்து தரப்பினரும் பேணுவதனால் நாட்டில் சந்தோஷம் பொங்கி சமாதானம் நிகழும். இனிவரும் காலங்கள் இலங்கை தேசத்தில் நறுமணப் பூக்களை மலரச் செய்ய வேண்டும். இதுவே ஒட்டுமொத்த இலங்கையரின் கனவும், ஆசையுமாகும்.

தோதன்ன வெளியீட்டகத்தினால் பல சிங்கள நூல்கள் தமிழுக்கு மொழிபெயர்க்கபட்டிருக்கின்றது. இது சகோதர இனத்துக்கு ஒரு பா(ப)லமாக அமைந்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதொரு விடயமாகும். திக்வல்லை கமால் அவர்களின் அயராத உழைப்பின் வடிவமாக திகழும் இந்த நாவல் பாலித ஜனரஞ்சனவின் தத்ரூபமான அட்டைப் படத்துடனும், சித்திரங்களுடனும் சிறப்பு பெறுகிறது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் - முல்லைத்தீவு தாத்தா
மொழிபெயர்ப்பாளர் - திக்குவல்லை கமால்
வெளியீடு - தோதன்ன பதிப்பகம்
தொலைபேசி - 032 2263446
விலை - 200 ரூபாய்

No comments:

Post a Comment