Wednesday, January 18, 2012

சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

சிறுவர் சிறுகதைகளாக மலர்ந்திருக்கும் ரோஜாக்கூட்டம்

இலங்கையில் சிறுவர்களுக்கான இலக்கியம் முன்னேற்றமாக வளர்ந்து வருகின்றது. அந்த வகையில் திருமதி. ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்கள் ரோஜாக்கூட்டம் என்ற சிறுவர் கதைகளடங்கிய நூலை வெளியிட்டிருக்கின்றார். சிறுவர்கள் பலரின் முகத்தைத் தாங்கி புத்தகத்தின் அட்டை வெளிவந்திருக்கிறது. எக்மி பதிப்பகத்தின் வெளியீட்டில் 39 பக்கங்களை உள்ளடக்கி அமையப் பெற்றிருக்கும் இந்த நூல் வர்ண எழுத்துக்களில், கண்ணைக் கவரும் வர்ணச் சித்திரங்களுடன் அமைந்திருப்பதை சிறப்பம்சமாகக் கொள்ளலாம். ஓர் அபலையின் டயறி, இது ஒரு ராட்சசியின் கதை, 37ம் நம்பர் வீடு ஆகிய தொகுதிகளுடன் ரோஜாக்கூட்டம் நூலையும் தந்திருக்கிறார் நூலாசிரியர் திருமதி ஜரீனா முஸ்தபா அவர்கள். இந்நூலானது கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளர் நாயகத்தினால் பாடசாலை நூலகப் புத்தகமாக அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



சமூகத்தில் காணப்படும் சில தீய விடயங்களும், சூழலும் பிள்ளைகள் நல்லவற்றிலிருந்து விடுபட்டு தீய வழிகளில் செல்வதற்கு பெரும் துணை புரிகின்றன. பெற்றோர்களினதும், ஆசிரியர்களினதும் வழிகாட்டுதல்களில் பிள்ளைகள் இருந்தாலும் கூட தொலைக்காட்சி, கைத்தோலைபேசி, இன்டர்நெட் போன்றன வழிகேட்டிற்கு இழுத்துச் செல்கின்றமை கண்கூடான விடயங்களாகும். அத்தகையவற்றிலிருந்து பிள்ளைச் செல்வங்களை மீட்டிக்கொள்ள நல் அறிவுரைகளைப் பகிர்ந்து நிற்கும் நூல்களை மாணவர்கள் வாசிக்க வேண்டும். அந்த வகையில் ரோஜாக்கூட்டம் என்ற நூலில் உள்ள சிறுவர் கதைகள் அழகிய அறிவுரைகளை அழகாக இயம்புகின்றன. உண்மையான நட்பு, அன்னையின் ஆசிர்வாதம், அப்பா கஞ்சத்தனம் வேண்டாம், சிறைப் பறவை, தண்டனை, கல்விக்கு காதல் தடை வேண்டாமே, உறுதி வேண்டும் ஆகிய தலைப்புக்களில் இக்கதைகள் அமைந்திருக்கின்றன.

முதல் கதையான உண்மையான நட்பு என்ற கதை துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பைப் பற்றி பேசுகின்றது. குமார் என்ற பணக்காரச் செல்வனுக்கு கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார் குமாரின் தாத்தா. ஒரு விபத்தில் குமாரின் தந்தையும், தாயும் இறந்துவிட அவன் பாட்டனின் பராமரிப்பில் வளருகிறான். அத்துடன் பாடசாலையிலும் குமார் முரடனாக காணப்பட்டான். நண்பர்களிடம் செல்வாக்கு பெற வேண்டும் என்ற எண்ணத்தில் அடிதடிகளுக்கும் சென்றுவிடுவான். இத்தனைக்கும் இவன் நான்காம் தரம் படிக்கும் சின்ன மாணவன். அந்த வகுப்பில் சதீஸ் என்றொரு ஏழை மாணவனும் இருக்கிறான். அவனை எல்லோரும் ஆப்பக்காரா என்று கிண்டல் செய்வார்கள். ஒருநாள் குமாரின் தாத்தா இறந்துவிட அவனுக்கிருந்த பணச்செல்வாக்கும் குறைகிறது. அவனிடம் பணமில்லை என்றதும் மற்ற நண்பர்கள் அவனைவிட்டு ஒதுங்கிவிட, சதீஸ்தான் குமாரின் நண்பனாகிறான். அவன் குமாரை தனது வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரித்து பணத்தைவிட பண்புதான் முக்கியம் என்பதை உணர்த்துகிறான்.

அன்னையின் ஆசிர்வாதம் என்ற கதை பெண் பிள்ளைகளுக்கான அறிவுரையைக்கூறி நிற்கின்றது. பஸரியா, இமாஸா என்ற ஒத்த வயதுடைய இரு நண்பிகளை வைத்து இக்கதை நகர்த்தப்பட்டிருக்கின்றது. பாடசாலைவிட்டு வரும்போது இமாஸாவின் தாயாருக்கு சுகமில்லாததால் பஸரியாவின் தாயும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளதாக அறிகின்றனர். பிறகு பஸரியா தன் வீட்டுக்குச்சென்று சமைத்து, துணிகளைத் துவைத்து, வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் செய்து முடிக்கிறாள். ஆனால் இமாஸாவின் வீடு இருந்தபடி குப்பையாகவே இருக்க, அவள் பசியுடன் வாடிக்கொண்டிருக்கிறாள். பஸரியா சாப்பிடடுவிட்டு இமாஸாவின் வீட்டுக்குச் சென்றதும் இமாஸாவும், அவளது தம்பியும் பசியில் இருப்பதைக் கண்டு, தான் சமைத்த சாப்பாட்டைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். அதைப் பார்த்து இமாஸாவுக்கு சரியான ஆச்சரியம். தானும், பஸரியாவும் ஒரே வயதுடையவர்கள். எனினும் அவளால் அனைத்து வீட்டு வேலைகளையும் சுயமாகச் செய்ய முடிகிறதே என்று எண்ணி அதைப்பற்றி வினவுகிறாள். பஸரியா பாடசாலை செல்வதற்கு முதல் தன்னால் ஆன அனைத்து வேலைகளையும் தன் தாயாருக்கு செய்து கொடுத்துவிட்டுத்தான் போவாள். அதனால் மகிழ்வடையும் தாய் அவளை அணைத்து முத்தமிட்டு வழியனுப்புகிறாள். அந்த ஆசிர்வாதத்தால் பாடசாலைக்கும் சந்தோஷமாகச் சென்று படிப்பிலும் கவனம் செலுத்த பஸரியாவால் முடியுமாக இருக்கின்றது என்பதை அறிந்த இமாஸா இனி தானும் தனது தாயாருக்கு எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும் என்று எண்ணிக்கொள்கின்றாள்.

இவ்வாறு சின்னஞ்சிறார்கள் வாசித்து மகிழக்கூடியதாக இந்தக் கதைகள் அமைந்திருக்கின்றன. சிறுவர்களுக்கு சொல்லப்படக்கூடிய ஆலோசனைகள் கதைப் பாங்கில் அமைந்திருப்பதால் அது வாசிப்புக்கு வழிகாட்டுவதுடன் பிஞ்சு இதயங்களில் ஆணித்தரமாக பதிய வைக்கக் கூடியதாகவும் இருக்கின்றது. வெறுமனே கார்ட்டூன்களைப் பார்த்து பொழுதைப் போக்கும் சிறுவர்கள் இவ்வாறான தரமுள்ள புத்தகங்களை இணங்கண்டு வாசிப்பதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும். நூலாசிரியர் ஏ.சி. ஜரீனா முஸ்தபா அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - ரோஜாக்கூட்டம்; (சிறுவர் கதைகள்)
நூலாசரியர் - ஏ.சி. ஜரீனா முஸ்தபா
வெளியீடு - எக்மி பதிப்பகம்
தொலைபேசி - 011 5020936
விலை - 150 ரூபாய்

No comments:

Post a Comment