Tuesday, November 28, 2017

''நான் மூச்சயர்ந்தபோது'' கவிதை நூல் பற்றிய ஒரு பார்வை

''நான் மூச்சயர்ந்தபோது'' கவிதை நூல் பற்றிய ஒரு பார்வை

 படைப்புலகில் நீண்டகாலமாகச் செயற்பட்டு வந்தாலும் சில வருடங்கள் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் இருந்துவிட்டு மீண்டு(ம்) வந்திருக்கிறார் திருமதி எஸ்.யூ. கமர்ஜான் பீபீ. ஹுனுப்பட்டி வத்தளையிலிருந்து இலக்கியம் படைக்கும் இவர் 'நான் மூச்சயர்ந்தபோது' என்ற கவிதை நூலை வெளியிட்டிருக்கின்றார்.

விழித்துக் கொண்டிருக்கும்போதே எங்கள் சொத்துக்களை, உடமைகளை கொள்ளையடித்துக் கொண்டு போகும் இக்காலத்தில், மூச்சயர்ந்துவிட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவ்வாறு மூச்சயர்ந்த ஒரு சமூகமாகத்தான் நாம் இன்று மாறிப் போயிருக்கின்றோம். நாம் பார்த்துக் கொண்டிருக்க நமது இருப்புக்களை எல்லாம் கண்முன்னே தொலைத்துக் கொண்டிருக்கின்றோம். அதிலிருந்து நாம் மீள வேண்டும். நமக்கான உரிமைகளைப் பெற வேண்டும் என்ற எண்ணம் நூலின் தலைப்பை வாசித்தபோது எனக்குள் ஏற்பட்டது.

எஸ்.யூ. கமர்ஜான் பீபி அவர்களது நீண்ட கால தவத்தின் பயனாக வெளிவந்திருக்கும் இந்நூலிலுள்ள கவிதைகள் பரந்துபட்ட தலைப்புக்களில் எழுதப்பட்டிருக்கின்றன. 76 பக்கங்களில் அமைந்திருக்கும் இந்நூலில் 52 கவிதைகள் காணப்படுகின்றன.

நூலிலுள்ள ஆரம்பக் கவிதைகள் ஆன்மீகம் சார்ந்தவை. முஹம்மத் நபியவர்கள், நோன்பு, ஹாஜிகள், முஹர்ரம் போன்ற இன்னோரன்ன தலைப்புக்களில் அவை எழுதப்பட்டிருக்கின்றன. அதுபோல நூலாசிரியர் தனது தாய், மகன், மகள், கணவர் போன்ற உறவுகளுக்கு கவிதை வழியாகவும் தன் அன்பினை வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிந்திக்காதபோது என்ற கவிதையானது சந்த ஒலியமைப்புடன் எழுதப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு சொல்லக்கூடிய புத்திமதியாகக் காணப்படும் இக்கவிதையின் சில வரிகள் இதோ

சிந்தனை ஓட்டம் - அது
சமுதாய மாற்றம்
சீர்குலைந்தால் வாட்டம்
தென்படும் அதன் தேட்டம்

இளைஞர் கூட்டம் - இந்த
நாட்டின் உயிரோட்டம்
கல்வி கற்றால் - நீ
கண்டிடுவாய் உயர் பட்டம்

நேசிக்கும் உயிர்களை சுவாசிக்காத தேசம் என்ற தலைப்பே கவிதையின் உள்ளர்த்தத்தை நன்கு உணர்த்தி விடுகின்றது. நேசித்துக் கொண்டிருந்த தேசத்தில் இனவாத அரக்கன் கால் பதித்ததும்; பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டன. எப்பாவமும் அறியாத பல அப்பாவிகள், குழந்தைகள் தம் உயிரைத் துறந்திருக்கின்றார்கள். உயிர் சேதங்கள், பொருட் சேதங்கள் போன்றவற்றால் ஏற்பட்ட காயங்கள் காலப்போக்கில் ஆறினாலும் வடுக்கள் நெஞ்சில் பதிந்திருக்கும். அந்த வலி எத்தனை வருடங்கள் சென்றாலும் அழிந்துவிடாது. அத்தகைய ஒரு வலியைச் சுமந்து எழுதப்பட்டிருக்கும் சில வரிகள் கீழே..

தேசம் நிசப்தம் என்று
யார் சொன்னது

தேசத்தின் ஓர் அங்கத்தில்
மனித உயிர்கள்
நேசிக்கப்படாமலே
நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்

தேசம் நிசப்தம் என்று
யார் சொன்னது

துப்பாக்கி ரவைகள்
அப்பாவி நெஞ்சங்களை
தப்பாது இச்சிக்கொள்ளும்

சோம்பலின்போது என்ற கவிதையிலுள்ள ஒவ்வொரு வரியும் ரசிக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றது. குறியீட்டுக் கவிதையாக எழுதப்பட்டிருக்கும் இது சமூகத்தில் மலிந்து போயிருக்கும் ஒட்டுமொத்த சோம்பேறிகளுக்கும் சாட்டையடியாகவும் அமைந்திருக்கின்றது.

காலத்தின் சுழற்சியால்
கரை காணாதவர்கள்
கண்ணீரில் முகம் கழுவுவர்

முன்னேற்றப் படிகளை
உடைத்தெறிந்து
முழுசாய் சோம்பலில்
புகுந்துகொள்வர்

அதனால்
நித்தமும் படுக்கையில்
சுகங் காண்பர்

தேர்ந்த வாசிப்பும் ஆழமான தேடலும் ஒரு எழுத்தாளின் படைப்புக்கு உரம் சேர்க்கும். அத்தகைய தொடர் தேடல்கள் நூலாசிரியர் எஸ்.யூ. கமர்ஜான் பீபி அவர்களின் எழுத்துக்கு மேலும் வலு சேர்க்கும். அவரது இலக்கியப் பணிகள் மென்மேலும் சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்!!!

நூல் - நான் மூச்சயர்ந்தபோது
நூல் வகை - கவிதை
நூலாசிரியர் - எஸ்.யூ. கமர்ஜான் பீபீ
வெளியீடு - மருதம் கலை இலக்கிய வட்டம்
விலை - 300 ரூபாய்

No comments:

Post a Comment