Monday, November 8, 2010

வெறிச்சோடும் மனங்கள் - கவிதைத் தொகுதி

வெறிச்சோடும் மனங்கள் கவிதைத் தொகுதி பற்றிய இரசனைக் குறிப்பு

நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருக்கும் சில யதார்த்தப் பின்னல்களோடும், கடந்த காலத்தில் காயங்களைத் தந்துவிட்டுப்போன சுவடுகளோடும் வெளிவந்திருக்கிறது வெ. துஷ்யந்தனின் வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிiதைத்தொகுதி. ஷஎதிர்கால இலக்கிய சிற்பிகளாக தம்மை இனங்காட்டிக்கொள்ளும் இளைய தலைமுறையினருக்கு சந்தர்ப்பமளிக்க வேண்டும்| என்ற உயர்ந்த இலட்சிய நோக்கைக்கொண்ட ஜீவநதியின் நான்காவது வெளியீடாக வந்திருக்கும் இத்தொகுப்பில் இருபத்தைந்து கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.

வலிகளோடு வாலாயப்பட்ட கவிதைகள் ஏராளம் பரந்து கிடக்கும் இத்தொகுதி சாமான்ய இளைஞனால் வெளிக்கொணரப்பட்டிருப்பது ஆச்சரியம் தான். கடந்த பல வருட காலமாக இந்த சின்னஞ்சிறிய இலங்கையில் தலைவிரித்தாடி தன் கூர் நகங்களால் மனிதர்களின் தொண்டைக்குழியை அடைத்து, யுத்த அரக்கன் படுத்திய பாடுகள், பலரின் படைப்புக்கள் வழியாக நம் எல்லோருக்கும் தெரிய வந்த விடயம் தான். அத்தகையதொரு சூழ்நிலையை எதிர்கொண்டு உடலாலும், உள்ளத்தாலும் காயப்பட்டு வாழும் நிலையில் இருக்கின்ற பல சகோதரர்களின் எண்ண அலைகளின் வெளிப்பாடுதான் துஷ்யந்தனின் இந்தக் கவிதைத்தொகுதி.



ஆர்ப்பாட்டமில்லாத, அலங்காரங்களின் அடுக்குகள் இல்லாத ஆனால் அர்த்தங்கள் நிரம்பிய பல கவிதைகளை இத்தொகுப்பில் தரிசிக்க முடிகிறது. வசனங்களில் இடர்பட்டு சிக்க வேண்டிய அவசியங்கள் இத்தொகுப்பில் இல்லை என்பது மகிழ்ச்சியான விடயம். சிலரது கவிதைகளைப் பார்த்தால் வார்த்தைகளை கண்டு அஞ்சி ஓடிவிடும் நிலைமை பலருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து மொத்தமாய் விலகி சாதாரண மக்களின் மனங்களிலும் நெகிழ்ச்சியை உணர்ச்சிபூர்வமாக விதைத்துச் செல்கிறது வெறிச்சோடும் மனங்கள்.

..... தாம் வாழுகின்ற சூழல், அவலம், காதல் என பல்வேறு உணர்வுகளைத் தன் கவிதைகளுக்கூடாக வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும் சமூகம், மொழி எடுத்துரைப்பு, படிமம் என பல்வேறு தனித்துவங்களையும் இவரது கவிதைகளை அடையாளப்படுத்தத் தவறவில்லை... என்கிறார் இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருக்கும் இரா. அகிலன் அவர்கள்.

தொகுப்பின் முதல் கவிதையான புரியாத வேதாந்தங்களில்

வீறுகொண்டெழும்
ஆறாத ரணங்களின்
ஆற்றாமையின் வெளிப்பாடாய்
புழுங்கிப்போனது மனித மனங்கள்...
இருப்பினும்
மாறுதல்களின் விளைவாய்
இவ்வளவு காலமும் இல்லாமல்
இப்போது மட்டும் விளைந்திடும்
சில புரியாத வேதாந்தங்களின்
முற்றுகையின் பெயரால்
அலையத்தொடங்கிற்று
மானுட ஆன்மா.. (பக்கம் - 01)

என்ற கவிதை வரிகள் சிந்திக்கத்தக்கவை. யுத்தகால நெருக்கடிகளை முன்வைத்து இக்கவிதைகள் இடம்பெற்றிருக்கும் என்பது என் கணிப்பு. இருந்துமென்ன முடிந்து போயிற்று என்று கூறிக்கொண்டாலும் அதன் வடுக்கள் இன்றும் எம்மத்தியில் பொங்கி நிற்கின்றன என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

அத்துடன் வலிகளுடனான வாழ்க்கை என்ற கவிதையில் வேதனையை கிளப்பிவிட்ட பாடுபொருள்களாக காதலும், போரும் இடம்பெற்றிருக்கின்றது. அமானுஷ்ய வாழ்வு என்ற கவிதை வழியே கனவுகளின் மீதான அதீத நேசம் இறுதியில் அமானுஷ்யமாகும் படி சபிக்கப்பட்டிருப்பதும் வித்தியாசமான பாணியில் சொல்லப்பட்டிருக்கிறது.
மனித மனங்கள் மரத்துப்போன இந்த உலகத்தில் வலி இல்லாத இதயம் உண்டா என்ற ஏக்கத்தின் கேள்வி வாசகனை மனம் உருக வைக்கிறது. நம்தேசத்தின் தற்கால சூழ்நிலையில் இவரது கேள்விக்கான விடை இயலாமைகளுடன் வாழ்ந்து சோர்ந்த நெஞ்சங்களுக்கு இதமாய் இருக்கும். தன்னளவில் நின்று தம் பிரச்சனைகள் பற்றி தாமே கூறுவது போன்றதொரு நிலையை தோற்றுவிக்கின்றன துஷ்யந்தனின் கவிதைகள்.

போரினால் போராளிகளாகிய பலருக்கு மத்தியில் கவிஞராக உருவெடுத்திருக்கிறார் துஷ்யந்தன். இளமையின் ஏக்கங்கள் இவரது கவிதைகளில் இடம்பிடிக்கத்தவறவில்லை.

..... விடை தெரிந்த வினாவுக்கு
விடை தெரிந்தும்
எழுத முடியாமல் தவிப்பது போல்
என் இதயம் அங்கலாய்ப்பு கொள்கிறது...
வந்த வேகத்திலேயே
சற்று புன்முறுவலையும்
தருவித்து விடுகிறாய் !
சிரிப்பு சர்வதேச மொழி என்ற
இறுமாப்புடன்
நானும் சிரிக்கிறேன்... (கனவுகளில் வாழ்தல் பக்கம் - 07)

... அப்பொழுதெல்லாம்
கற்பனைகளின் விசித்திரத்தில்
நினைந்து கொள்வேன்
எனது கவிதையொன்றை
இன்னொரு கவிதையே
விமர்சித்து விடும் யோகம்
யாருக்கு கிடைத்து விடும் என்று... ( கவிதைக்குள் கருவானவள் பக்கம் - 28)
என்ற வரிகள் அதற்கான சான்றுகளாயிருப்பது கண்கூடு.

நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற இன்றைய வாழ்க்கை சூன்யத்தை உற்பவித்து எம் மனங்களில் தீராத சோகத்தின் நிர்க்கதியான நிலைமையை தோற்றுவித்திருப்பதை தகர்ந்து போகும் பிடிமானங்கள வழியாக சுட்டிக்காட்டுகிறார் கவிஞர். ஆனாலும் வாழ்க்கை குறித்த எமது நம்பிக்கைகள் இன்னும் தீர்;ந்துபோய்விடவில்லையென்று கூறும் வரிகள் வெறும் கவிதைகளாக மட்டும் நோக்க முடியாது. நிரந்தரமாகிவிட்ட மறுத்தல்களின் விம்பங்களும், ஒடிந்து போன இதயங்களின் வெளிப்பாடுகளும் விரவிக்கிடப்பதை உணர முடிகிறது.

..... காகங்கள் தயாராகின்றன சுவைப்பதற்கு
நாலைந்து நாய்கள்
கூட்டம் போடுகிறது
பங்கீடு தொடர்பாக... (மரணங்களும் மனிதங்களும் பக்கம் - 17)

என்ற வரிகள் போராளிகளின் வலையில் சிக்கி உயிர் துறந்த பல பெண்களின் வாழ்வை நெஞ்சில் நிறுத்தியது. கண்டும் காணாதது போல இருந்ததொரு சூழ்நிலையில் கண்முன்னேயே கற்பழிக்கப்பட்ட பல சகோதரிகளின் அந்தரங்கம், இக்கவிதையூடாக வெளிப்பட்டிருப்பது போன்ற உணர்வு எழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

காதலில் சிக்காத மனிதரில்லை. காதலில் சிக்காதோர் மனிதரில்லை என்று எங்கேயோ வாசித்த கூற்று ஆதலால் காதல் செய்வீர் என்ற கவிதையை வாசித்தபோது நினைவுக்கு வந்தது. காதலின் போது பல பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு. அத்தருணங்களில் துணையின் அருகாமையும் வலியாய் இருக்கிறது. விலகலும் வலியாய் இருக்கிறது. இந்த கருத்தைத்தான்

காதலில் வலிகள் உருவங்களாக மாறும்
உருவங்கள் வலிகளாக மாறும்
அவஸ்தைகள் உருப்பெறும்
இருப்பினும்
அவை மகிழ்தலுக்கான ஆரம்பங்கள்... (ஆதலால் காதல் செய்வீர் பக்கம் - 18)
என்று துல்லியமாக சொல்லி விடுகிறார் நூலாசிரியர்.

அடுத்து கவிதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்த வெறிச்சோடும் மனங்கள் என்ற கவிதை எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்ற ஸ்திரத்தன்மையை விளக்கிக்கூறுகிறது. எண்ணங்களைக்கூட வண்ணங்களாக நோக்க விடாமல் வேட்டுச்சத்தங்களால் உள்ளத்தில் பயம் என்ற அரக்கனை விதைத்துச்சென்ற காலம் இக்கவிதை மூலம் கண்முன்னே விரிகிறது.

..... நாளை என்ற பேச்சே
நாதியற்றுப்போக
நகர்கின்ற நாழிகைகளின்
ஆயுட்காலம் கண்டு
நீர்க்குமிழிகளே பரிதாபம் கொள்ளும்... | (வெறிச்சோடும் மனங்கள் பக்கம் - 32)
என்று எம்மையெல்லாம் ஆக்கிரமித்த துயரத்தை எம்முள்ளும் கலவை செய்வதால் எம் மனங்களும் சோகங்களால் வெறிச்சோடிப்போகிறது.

மொத்தத்தில் கவிதைத்தொகுப்பை வாசிக்கும் இறுதித்தருவாயில் கவிதைகள் முடியப்போகிறதே என்ற மனத்தவிப்பைத் தரவல்ல துஷ்யந்தனின் கவிதைகளை வாசிக்க நீங்களும் தயாராக இருந்தால் கீழுள்ள முகவரிகளினூடாக தொடர்பு கொண்டு இலக்கியத்துக்கு வளம் சேருங்கள். இந்த இளைஞனின் ரசனைக்கு களம் தாருங்கள். இன்னும் பல படைப்புக்களைத்தந்து இலக்கிய உலகில் நின்று நிலைக்க எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!
!

பெயர் - வெறிச்சோடும் மனங்கள் (கவிதை)
நூலாசிரியர் - வெ. துஷ்யந்தன்
முகவரி - ரதிமஹால், அல்வாய்.
தொலைபேசி - 0777 111 855
மின்னஞ்சல் முகவரி - bvthushy@yahoo.com
வெளியீடு - ஜீவநதி
விலை - 200/=

No comments:

Post a Comment