Wednesday, January 18, 2012

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் - நாவல்

வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் நாவலுக்கான இரசனைக்குறிப்பு

சிந்தனை வட்டத்தின் 339 ஆவது வெளியீடான வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவல் 12 அத்தியாயங்களை உள்ளடக்கி 88 பக்கங்களில் அமைந்திருக்கிறது. 2003ம் ஆண்டு எண்ணச் சிதறல்கள் என்ற கவிதைத் தொகுதியையும், 2009ம் ஆண்டு புரவலர் புத்தகப் பூங்காவின் மூலம் விடியலில் ஓர் அஸ்தமனம் என்ற நாவலையும் வெளியிட்ட திருமதி சுமைரா அன்வர், தனது மூன்றாவது வெளியீடாக வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் என்ற நாவலைத் தந்து, இலக்கியத் துறையில் தனக்கான பாதையை விரிவுபடுத்தியுள்ளார்.



நாவலின் நாயகன் மோஹித், தங்கைகளைத் திருமணம் செய்து கொடுப்பதற்காகவும், தனது இலட்சியங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் திருமணத்தை தள்ளிப்போடுகிறான். அவனது மனதில் சீதனமில்லாமல் திருமணம் முடிக்க வேண்டும் என்ற வைராக்கியம் நிலைத்து நிற்கிறது. தங்கைகள் திருமண வயதை அடைந்து நிற்கையில் மோஹித்துக்கு பணக்கார இடத்திலிருந்து திருமணம் பேசி வருகிறார்கள். குடும்பப் பொறுப்புக்களாலும், பெற்றோரின் அநாதரவான நிலையினாலும் மோஹித் தனது உறுதியான நிலைப்பாட்டிலிருந்து அசைய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. அதற்காக சுமைரா அவர்கள் கையாண்ட கீழுள்ள உவமானம் சிறப்பாக இருக்கிறது.

'மலர்ந்து மணம் பரப்ப வேண்டிய மல்லிகை மொட்டுக்கள் வண்டுகளுக்கு சீர் கொடுக்க வழியில்லாததால் ஏக்கங்களைச் சுமந்து அண்ணன் நான் கரை சேர்ப்பேன் என்ற அசட்டு நம்பிக்கையில்...' ஆக மொத்தத்தில் புரட்சிகரமாக சீதனம் வேண்டாம் என்று முழங்கியவன் சகோதரிகளின் திருமணத்தை ஒப்பேற்ற வேண்டுமே என்ற இக்கட்டான நிலையில் விஜி என்ற பணக்காரப் பெண்ணை திருமணம் செய்கிறான்.

பல விடயங்களில் விஜிக்கும் மோஹித்துக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் தோன்றுகின்றன. மோஹித் அழகியலை ரசிப்பவன். விஜி அறிவியலை ரசிப்பவள். இவன் கூட்டுக் குடும்ப அபிமானி. அவள் தனிமை விரும்பி. அவன் தார்மீகமாக சிந்தனை செய்ய, விஜியோ தர்க்க ரீதியாக விளக்கமளிக்கிறாள். விஜி தன்னை ஆள்கிறாள் என்ற எண்ணமும், சீதனத்தை வாங்கி விட்டோமே என்ற தாழ்வுச் சிக்கலும் மோஹித்தை வருத்துகிறது. அத்துடன் விஜி தனிக்குடித்தனம் செல்ல வேண்டும் என்று சொன்னமை அவனுள் பெரிய இடியை இறக்குகிறது. தன் நிலையை மோஹித் இவ்வாறு உணர்கிறான்.

'நான் விற்கப்பட்ட பண்டம். அவள் வாங்கிய எஜமானி', 'வித்த மாடாயிற்றே... பெற்றோருக்கு என்னை உரிமை பாராட்டவா முடியும்?'

தொழிலிருந்து வேறு கிளைக்கு விஜி மாற்றம் பெற்றுப் போகிறாள். அவள் தன் கணவனை தன்னுடன் வந்து இருக்குமாறு கட்டாயப்படுத்தவில்லை. ஊரின் கேலிப் பேச்சுக்குப் பயந்தும் பெற்றோர்கள் வேதனைப்படுவார்கள் என்று உணர்ந்தும் மௌனமாக அவளுடன் செல்கிறான் மோஹித். சமைப்பதில் உதவிசெய்தல், மளிகைச் சாமான் வாங்கி வருதல், விஜியை ஆபிசுக்கு அழைத்துச் செல்லல், வீட்டிற்கு அழைத்து வருதல், கூட்டங்கள் கொண்டாட்டங்களுக்கு கூட்டிப் போதல் போன்ற சில்லறை வேலைகள் யாவும் மோஹித்தின் தலையில் சுமத்தப்படுகின்றது.

காதல் உணர்வினால் மனைவிக்கு பணிவிடை செய்யாவிட்டாலும், அடிபணிதல் என்ற உணர்வில் அவளுக்கான வேலைகளை செய்து வருகிறான் மோஹித். காலங்கள் கழிய அவன் அப்பாவாகப் போவதை அறிந்து மகிழ்ச்சியடைகிறான். எனினும் விஜி சொல்லும் பதில் அவனை மட்டுமன்றி வாசிப்போரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அவளுக்கு குழந்தை தேவையில்லை என்றும், அதை கலைக்கப் போவதாகவும் கூறுவதுமே அதற்கான காரணம். எனினும் மனசாட்சியின் உறுத்தலுக்கு விஜி மசிந்ததால் ஆண் குழந்தையொன்று ஆரோக்கியமாக பிறக்கிறது.

இந்தக் காலகட்டத்தில் விஜியின் பணத்தைக் கொண்டு மோஹித்தின் சகோதரிகளின் திருமணமும் செவ்வனே நடைபெறுகிறது. விஜியின் குழந்தையான வினோத் விஜியின் பராமரிப்பிலின்றி மோஹித்தின் பராமரிப்பில் விடப்படுகிறான். அடிக்கடி வேலைக்கு லீவு போடுவது பெரும் தொல்லையாகிவிட ஒரு ஆயாவை நியமிக்கிறான் மோஹித்.

விஜியின் சந்தேகக் குணம் ஆயாவையும், மோஹித்தையும் இணைத்து தப்பான கண்ணோட்டத்தில் சிந்திக்கிறது. பெண்களுக்குரிய மரியாதையை அறிந்ததாலும், சகோதரிகளுடன் பிறந்ததாலும் மோஹித்தால் இதைத் தாங்க முடியாமல் போகிறது. அதை அறிந்து, மோஹித்தை விடவும் வயதில் மூத்த ஆயா வீட்டிற்கு வராமல் இருந்து விடுகிறாள். மீண்டும் வேதாளம் முருங்கையில் ஏற மோஹித் பொறுமை இழக்கிறான். அவனது கத்தலை கணக்கிலும் எடுக்காத விஜி சீதனம் எடுத்தது பற்றியும், குழந்தை வேண்டும் என்று மோஹித் அங்கலாய்த்தது பற்றியும், தற்போது பராமரிக்கும் வேலை மட்டும் விஜிக்குரியதல்ல. அது மோஹித்துக்கும் உரியதுதான் என்றும் முழங்க, அவள் கூறியவற்றிலுள்ள உண்மையறிந்து மோஹித் மீண்டும் அவளிடமே சரணடைகிறான்.

விஜிக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்ட தினமொன்றில் மீண்டும் கணவன் மனைவிக்கடையில் நெருக்கம் அதிகமாகிறது. அந்தத் தருணத்தில் டேகெயாரில் விடப்பட்ட வினோத் அங்கு நிகழும் சில அசௌகரியங்களால் மீண்டும் வீட்டிலேயே இருக்கத் தொடங்குகிறான். இந்த முறையும் மோஹித்தின் பாடு பெரும் திண்டாட்டமாகிறது. ஆகவே பழைய ஆயாவை அழைத்துப் பார்த்தபோது அவள் தனக்குத் தெரிந்த பூவிழி என்ற இளம் பெண்ணை அனுப்பி வைக்கிறாள்.

விதி யாரை விட்டது. மீண்டும் தாய்மையடைந்த விஜி இந்தத் தடவை கருவை அழிக்க முயற்சிக்கிறாள். எனினும் காலம் பிந்தியதல் அது சாத்தியமாகவில்லை. கருவை அழிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டதால் பாதிப்படைந்த சிசு (பெண் குழந்தை) மூளை வளர்ச்சி குன்றி பிறக்கிறது. கெட்ட குடியே கெடும் என்பதற்கிணங்க இந்தச் சோதனையிலிருந்து விடுபடுவதற்கு முன் வேறொரு கோணத்தில் பிரச்சினை எழுகிறது. வீட்டுக்கு புதிதாக வேலைக்கு வந்த பூவிழி திருமணமாகாமலேயே கர்ப்பமாகிறாள். விஜி, அவளது பெற்றோர் அனைவரும் மோஹித்தின் மீது அபாண்டமாக பழி சுமத்தும்போது அதை மறுப்பதற்கான வழிகளற்று அநாதரவான நிலையில் இருக்கிறான் மோஹித். வாசகர்களும் அதிர்ச்சிக்குள்ளாகும் இந்த கதையோட்டத்தை நூலாசிரியர் தன் கற்பனைத் திறனால் மேலும் நகர்த்திச் செல்கிறார்.

அதாவது பூவிழி தான் காதலித்த பையனுடன் எல்லை மீறிப் பழகுகிறாள். அதனால் வந்த வினைதான் இதுவென்று விஜி அறிந்து கொண்டாலும் அவளது செயற்பாடுகளில் கனிவு இருக்கவில்லை. அவள் தாய் வீட்டுக்குச் செல்கிறாள். எதிர்பாராத ஒரு நாளில் மோஹித்தின் நண்பன் வந்து மோஹித்தைச் சந்திக்கிறான். அவனது பிரச்சினைகளை விளங்கிய நண்பன் மோஹித்தின் மாமி, மாமனாரை வரவழைக்கிறான். அதன் பின்பு விஜி பற்றி அவர்கள் சொல்லும் தகவல் தான் நாவலின் சிறப்பம்சமாக இருக்கிறது.

ஆம்! விஜி அவர்களது மகளே இல்லை. சிறு வயதில் அவளது பெற்றோர் விபத்தொன்றில் சிக்கி இறந்தபோது அதைப் பார்த்திருந்த விஜி முதன் முதலாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறாள். அதன் பிறகு அவள் உயிராய் நேசித்த தோழியுடன் ஏற்பட்ட நட்பு, சடுதியாக அஸ்தமித்ததால் ஏற்பட்ட மன விரக்தி ஆகியவற்றால் பாதிப்படைந்து யாரோடும் பழகாமல் படிப்பொன்றே தனது மூச்சு என்று செயற்பட்டு வந்திருக்கிறாள். இதன்போது பல்கலைக்கழக சீனியரைக் காதலித்து அவர் பணக்கார சம்பந்தம் வந்ததால் விஜியை நிராகரித்த போது உள ரீதியாக மேலும் தாக்கப்படுகிறாள்.

பயம், வெறுப்பு, இயலாமை, ஏமாற்றம் என்பவை விஜியை மன நோயாளியாக்கிவிட்டது. அவளுடைய மென்மைகள் ஒழிந்து ஆண்மைக் குணம் ஒட்டிக்கொண்டது. இப்படியிருக்கும் போதுதான் விஜியின் அம்மாவுக்கு (வளர்த்த அம்மா) நெஞ்சு வலி ஏற்படுகிறது. அதைப் பார்த்து துடித்த விஜியிடம் இந்தச் சாட்டை வைத்து திருமணம் முடிக்க கெஞ்சுகின்றனர் அவளது பெற்றோர். ஏதோ நோக்கத்தில் அவள் ஒத்துக்கொள்ள, ஊரில் மதிப்பாகவும், கண்ணியமாகவும் வாழ்ந்த மோஹித்தை மருமகனாக்க முனைகின்றனர். காரணம் குடும்பப் பொறுப்பும், பொறுமையும், நற்குணமும் பொருந்திய மோஹித் விஜியை நன்றாக பார்ப்பான் என்ற நம்பிக்கை.

விஜியின் கடுமையான போக்குக்கு காரணம் அறிந்த மோஹித் வேதனையால் துடிக்கிறான். அவனுக்கு விஜி மீது கழிவிரக்கம் பிறக்கிறது. நண்பன் கூறியது போல டாக்டரிடம் காட்டி விஜியை முழுமையாக சுகப்படுத்திவிட வேண்டும் என்று அவன் மனம் திடசங்கற்பம் கொள்கிறது என்பதாக நாவல் நிறைவடைகிறது. கடைசி வரைக்கும் விஜி மீது வாசகர்கள் வெறுப்பு கொண்டாலும், இறுதியில் அவள் மீது அநுதாபம் கொள்வார்கள் என்பது ஐயமில்லை.

சீதனத்தை எதிர்த்தும், கணவன் மனைவிக்கிடையில் இருக்க வேண்டிய புரிந்துணர்வு பற்றியும் துல்லியமாக சித்தரிக்கிறது இந்த நாவல். திருமதி. சுமைரா அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்!!!

நூலின் பெயர் - வசந்தங்கள் வாழ்த்துச் சொல்லும் (நாவல்)
நூலாசரியை - சுமைரா அன்வர்
விலாசம் - கே.கே.எம். கார்டன்ஸ், தக்கியா ரோட், மல்லவப்பிட்டிய, குருணாகலை.
வெளியீடு - சிந்தனை வட்டம்
தொலைNசி – 0723 670515
விலை - 200 ரூபாய்

No comments:

Post a Comment