Wednesday, June 20, 2012

சின்னச் சிட்டுக் குருவி - சிறுவர் பாடல்

சின்னச் சிட்டுக் குருவி சிறுவர் பாடல் தொகுதி மீதான இரசனைக் குறிப்பு

சின்னச் சிட்டுக் குருவி என்ற சிறுவர் பாடல் தொகுதியினூடாக இலக்கிய உலகத்துக்கு அறிமுகமாகிறார் திருமதி. சுகிலா ஞானராசா அவர்கள். இவர் எழுத்தாளர் திருகோணமலை செ. ஞானராசா அவர்களின் துணைவியார் என்பது குறிப்பிடத்தக்ககது.

தி/செல்வநாயகபுரம் இந்து மகா வித்தியாலயத்தில் பிரதி அதிபராக கடமையாற்றும் இவரிடம் இயல்பாகவே சிறார்களுக்கு பாடல் புனையும் திறமை இருந்திருப்பதை இந்த நூல் கட்டியம் கூறுகிறது.

சர்வீனா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் 41 பக்கங்களில் அமைந்த இத்தொகுதி, கல்வி அமைச்சின் இலங்கை தேசிய நூல் அபிவிருத்தி சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன் 17 பாடல்களையும், அவற்றுக்கேற்ற வர்ணப் படங்களையும் அழகாக தன்னகததே கொண்டிருக்கிறது.




சிட்டுக் குருவியே என்ற பாடல் ஓசை நயம் மிக்கதாகவும், ரசிக்கத்தக்கதாகவும் எழுதப்பட்டிருக்கின்றது.

பஞ்சு மெத்தை மேனி
பார்த்தெடுப்பாய் தீனி
அஞ்சு விரல் தொட்டுக்கொள்ள
ஆசைப்படும் தேன் நீ!

மொட்டு விடும் மலரில்
மொய்த்து வரும்போது
கிட்ட நான் வரவும்
கிளம்பி ஏன் பறப்பாய்?

வாசித்தல் மனிதனை பூரணமாக்கும். நூலகம் வாசிப்பிற்கான பொதுத்தளம். இன்றைய சமுதாயத்தில் வாசிக்கும் ஆர்வம் வெகுவாக குறைந்துள்ளது. பாடசாலைகளிலும் நூலகங்கள் முறையாக பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்கள் தவிர ஆசிரியர்களும் வாசிப்பையும், அதனால் ஏற்படும் நன்மைகளையும் அறிய வேண்டும். அதற்காக நூலகம் என்று தலைப்பிட்ட கீழுள்ள பாடல் பேருதவியாய் அமைகிறது. அதன் அடிகள் இவ்வாறு

நூலகம் நாம் சென்று
நூல் பல கற்று
பாலகப் பருவம் இதை
பயனுளதாக்குவோம்

இரண்டடி எனும் குறள்
இதனுடன் நாலடியார்
தர மெனும் பெருங் காப்பியம்
தகும் எனக் கண்டவை

இயற்கை என்ற பாடல் ரம்மியமாக மனதை வருடுகிறது. அதற்காக இணைக்கப்பட்டுள்ள படமும் மனதில் பதிந்துவிடுகிறது. வானம், கடல், காடு, நிலம் எல்லாமே இயற்கை அழகுக்காக உவமிக்கப்படுபவை. நூலாசிரியரின் வரிகள் இவ்வாறு விரிகிறது..

இயற்கை தந்த செல்வம்
இறைவன் தந்த இன்பம்
வியக்கும்படி இருக்கும்
விதத்தை அறிய இனிக்கும்

மயக்கம் மாலைப் பொழுதில்
மஞ்சல் வெயில் போட்டு
தயக்கம் இல்லாதிருக்க
தக தக வென ஒளிரும்

காலை எழுந்தவுடன் படிப்பு.. பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு.. மாலை முழுதும் விளையாட்டு என்று வழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா.. என்று கூறியிருக்கிறார் பாரதி. படிப்பைப் போல விளையாட்டுக்கும் நேரம் ஒதுக்கும் அவசியத்தை இந்த வரிகள் சுட்டி நிற்கின்றன. திருமதி சுகிலாவும் விளையாடுவோம் என்ற மகுடத்தில் பாடலை பின்வருமாறு இயற்றியிருக்கிறார்.

குந்தி இருந்து நொந்து
குழம்பி போனோம் என்றால்
எந்தப் பயனும் இல்லை
எமக்கு ஏற்றது அல்ல

ஓடி ஆடி விளையாட
ஓடும் குருதி சீராகும்
கூடி மகிழக் குறையும்
குழப்பமான மன நிலையும்

கணிதப் பாடத்தைப் போல் இலேசான பாடமில்லை என்றும், அதைப்போல கஷ்டமான பாடம் இல்லை என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். எது எப்படியிருப்பினும் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டால் கணிதம் சுலபமாக அமையும். ஆனால் பலர் அப்படியின்றி ஷகாப்பியடித்து| விடுகின்றனர். நூலாசிரியரின் நயக்கத்தக்கதாக எழுதியிருக்கும் விதம் இவ்வாறு அமைகிறது.

சாட்டுக்காக பார்த்துச் செய்து
சரி வாங்கிக் கொண்டால்
வீட்டு வேலை தந்தபோது
விரைவில் மாட்டிக்கொள்வீர்

நாளும் பயிற்சி செய்து வர
நன்கு கணக்கு அறிவு
நீளும் இதனை உணர்ந்து
நீரும் பயிற்றி எடுப்பீர்

தனது முதல் தொகுதி என்றாலும் மிக அழகியதாகவும், பாடத்திட்டத்துக்கு பொருந்தியதாகவும் பாடல்களை எழுதியிருக்கிறார் திருமதி சுகிலா அவர்கள். சிறுவர்கள் மாத்திரமின்றி புத்தகத்தை படிப்பவர்களும் பாடல்களால் கவரப்படுவார்கள். இன்னும் பல நூல்களைத் தர வேண்டும் என நூலாசிரியரை வாழ்த்துகிறேன்!!!

பெயர் - சின்னச் சிட்டுக் குருவி (சிறுவர் கவிதைகள்)
நூலாசிரியர் - சுகிலா ஞானராசா
முகவரி - 993, அன்புவழிபுரம், திருகோணமலை.
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 200/=

No comments:

Post a Comment