Sunday, November 28, 2010

சிகரம் தொட வா - சிறுவர் கவிதைகள் தொகுதி

சிகரம் தொட வா - சிறுவர் கவிதைகள் தொகுதி பற்றிய ரசனைக் குறிப்பு

சிறுவர்களுக்கான இலக்கியங்கள் படைப்பது பெரும் சிரமம். கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதை விட குழந்தை இலக்கியத்தை படைப்பது மிகவும் கஷ்டமான வித்தை என்று பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. மேற்சொன்ன கருத்தையெல்லாம் தகர்த்து ஆரம்பகால படைப்புகளையெல்லாம் கொடிய சுனாமி கொண்டு சென்ற போதிலும், சிறுவர்களுக்கு தன்னால் முடிந்த தொண்டுகளை செய்யும் நல்ல நோக்கத்துடன், துணிச்சலாக காத்திரமானதொரு சிறுவர் தொகுதியை கிண்ணியாவிலிருந்து திருமதி. பாயிஷா அலி அவர்கள் வெளியிட்டிருக்கிறார்.

`சிகரம் தொட வா' என்ற தலைப்பில் அமைந்திருக்கும் இந்த நூல் தி/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய இலக்கிய மன்றத்தால் வெளியீடு செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 35 பக்கங்களில் 22 கவிதைகளை உள்ளடக்கி இப்புத்தகம் வெளியிடப்பட்டிருக்கிறது.



கண்ணியமாக வாழந்திடுவோம், சிகரம் தொட வா, வண்ணக்கவிதைகள் படைப்போமா, துணைவருவாயா வெண்ணிலவே, அம்மாவின் முத்தம், வானவில்லை ரசித்திடுவோம், துளியே துளியே விழுந்திடு, நவீன ஆமையும் முயலும் கதை, கற்போம் கணனி, அப்பமும் பூனைக்குட்டிகளும், தண்ணீர்.. தண்ணீர், முயலின் தந்திரம், செல்ல நாய்க்குட்டி, உலகை வெல்வோம் நிச்சயமே, எறும்பும் வெட்டுக்கிளியும், நல்ல விருந்து, உணர்ந்திடுவாய், செல்லிடத்தொலைபேசி, வெற்றிக்கனியை சுவைப்போம், எங்களுர் கிண்ணியா, சின்னச்சிட்டுக்குருவிகளே, மீன்கள் வளர்ப்போமே என்ற தலைப்பிலான கவிதைகளை தாங்கியிருக்கிறது இப்புத்தகம்.

எளியமையான சொல் நடையுடன் சிறுவர்கள் சீக்கிரம் புரிந்துகொள்ளுமளவுக்கு விடயங்களை நுட்பமாகவும, கருத்துள்ளவையாகவும் யாத்துள்ளார் திருமதி பாயிஷா அலி அவர்கள். வசனங்களில் எதுகை மோனை அமைப்பு ரசிக்கத்தக்க விதமாகவும், சிறுவர்கள் இலகுவில் பாடல்களை நினைவில் நிறுத்திக்கொள்ளும் வகையாகவும் எழுதியிருக்கிறார்.

'கண்ணியமாகவே வாழ்ந்திடுவோம்' என்ற கவிதையில்

'சொல்லும் கலிமா பொருளுணர்வோம்
ஐந்து நேரம் தொழுதிடுவோம்
செல்வம் தனிலே ஸகாத் ஈந்து
சிறப்பாய் நோன்பு நோற்றிடுவோம்...'

என்ற பாடலடிகளினூடாக இஸ்லாத்தின் அடிப்படைகளை மாணவர்களைக் கவரும் வண்ணம் சொல்லியிருக்கிறார். புத்தகத்தின் தலைப்பாக சிகரம் தொட வா என்ற கவிதை, சின்னஞ்சிறார்களுக்கு துணிச்சலையும், தன்னம்பிக்கையையும் தரும் விதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

வண்ணக் கவிதைகள் படைப்போமா எனும் கவிதையில் சிறுவர்களும் இலக்கியத்தில் ஆர்வம் காட்ட வேண்டும் என்பதற்கான வழிவகைகளைக் கீழுள்ளவாறு கூறியிருக்கிறார்.

'... காற்றும் கடலும் மழையும் பார்
களிப்பாய் நீந்தும் மீன்கள் பார்
நாற்றும் வயலும் கதிரும் பார்
நல்ல கவிதை நீ படைப்பாய்

வீட்டில் கோழி பூனை பார்
வெள்ளைக் கொக்கும் முயலும் பார்
கூட்டில் பேசும் கிளிகள் பார்
கொட்டும் கவிதை மழை போலே..'

'துணை வருவாயா வெண்ணிலவே' என்ற கவிதை சிறுவர்களுக்கு மட்டுமானதன்று. அதில் பொதிந்துள்ள சேதிகள் ஏராளம். ஊர் உறங்கும் வேளையில் ஒளி வீசும் நிலாவிடம் உலகத்தாரின் உளக்கரைகளை நீக்குமாறு கோரிக்கை விடுகிறார் ஆசிரியர். அது போலவே மேகமெனும் துன்பங்கள் சந்திரனை மறைக்கையில் முட்டிமோதும் தைரியம் போல், சோகங்கள் மனிதனை ஆட்கொள்ளும் போது அதிலிருந்து மீள்வது எவ்வாறு என்று தன் மன ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்.

தாயின் முத்தத்தில் ஒளிந்திருக்கும் சுகானுபவத்தை 'அம்மாவின் முத்தம்' கவிதை உணர்த்திச்செல்கிறது. பொம்மையாலும், பூக்களாலும், வேறு விளையாட்டுப்பொருட்களாலும் அமைதிப்படுத்த முடியாத குழந்தையை தாயின் அணைத்துத் தரும் முத்தம் சுகமாய் துயில்கொள்ளச்செய்கிறது.

மேலும் இன்றைய நூற்றாண்டில் சிறுவர் முதல் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் சாதனம் கணனியாகும். கணனி கற்காதிருந்தால் எதிர்காலத்தில் தொழிலே இல்லை என்ற நிலை இன்று நிலவி வருகிறது. அதனடிப்படையில் கணணியை பயனுள்ள விதத்தில் கற்க வேண்டும் என்ற கருத்தை 'கற்போம் கணனி' எனும் கவிதை எடுத்தியம்புகிறது.

குரங்கிடம் அப்பம் கொடுத்து ஏமாந்த பூனைக்குட்டிகள் பற்றி சிறுவயதில் படித்திருப்போம். ஆனால் இந்த தொகுதியில் எழுதப்பட்டிருக்கும் 'அப்பமும் பூனைக்குட்டியும்' என்ற கவிதை நயக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலடிகள் பின்வருமாறு..

'.. சண்டையிட்டது குட்டிகளும்
சமனாய் அப்பம் பிரித்திடவே
கண்டே வந்தார் குரங்காரும்
'கணக்காய் பகிர்வேன்' என்றாரே

'வேண்டாம் நீங்கள் வஞ்சகராம்'
வீட்டில் பாட்டி சொன்னார்கள்
துண்டு துண்டாய் விழுங்கிடுவீர்
தூர விலகிடுவீர் குரங்காரே..'

அதே போன்று ஆரம்ப வகுப்புகளில் பக்கம் பக்கமாக வாசித்த முயல் சிங்கத்தின் கதையை வெகு சுவாரஷ்யமாக 20 வரிகளில் 'சின்ன முயலின் தந்திரம்' என்ற கவிதையூடாக சொல்லப்பட்டிருப்பது சிறுவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

எதிரிகளையும் மன்னித்தல் தான் நற்பண்பு என்பதை 'கொக்கும் நரியும்' என்ற கவிதை காட்டி நிற்கிறது. தட்டில் உள்ள பாலை நெடிய சொண்டால் பருகிட முடியாமல் கொக்கு தவிக்கும் போது நரி குறுநகை செய்கிறது. ஆனால் அடுத்த நாள் கொக்கின் வீட்டில் நரிக்கு அறுசுவை உணவு விருந்தாய் கிடைக்கிறது. பலி வாங்கப்படுவேனோ என்று எண்ணிய நரி இறுதியில் கொக்கிடம் மன்னிப்பு கேட்கிறது. மிகவும் அழகாகவும் கருத்தாழமும் மிக்க கவிதை இது. சிறுவர்கள் மனதில் இனிமேல் இவ்வாறான கவிதைகள் தான் பதிக்கப்பட வேண்டும். அதனால் பகைமை எல்லோராலும் மிதிக்கப்பட வேண்டும் என்பதை நன்றாக விளக்கியிருக்கிறார் பாயிஷா அலி அவர்கள்.

தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இக்காலத்தில் அதே வேகத்தில் செல்லிடத்தொலைபேசிகளும் முக்கியத்துவம் பெற்று விட்டன. அதிலும் ஏழை பணக்காரன் வித்தியாசமின்றி ஏன் பாடசாலை மாணவர்களும் இன்று கைத்தொலைப்பேசி பாவிப்பது கண்கூடு. ஆகவே தொலைபேசியானது தொல்லைபேசி ஆகிவிடக்கூடாது என்ற அறிவுரையை 'செல்லிடத்தொலைபேசி' என்ற கவிதையில் இழையோடச்செய்திருக்கிறார் நூலாசிரியர்.

இவ்வாறு பல விடயங்களை ஏந்தி புதுப்பொலிவுடன் சிறார்கள் மகிழும்வண்ணம் வெளிவந்திருக்கிறது இப்புத்தகம்.

பெற்றோர், ஆசிரியர்கள் இதை குழந்தைகளுக்கு பெற்றுக்கொடுத்து, அவற்றைக் கற்றுக்கொடுத்து இலகுவாக குழந்தைகளின் அறிவை வளர்க்க உதவிடும் வகையில் மொழி நடை தடுமாற்றமின்றி வெளிவந்திருக்கும் இப்புத்தகத்தை போன்று இன்னும் பல படைப்புக்களைத் தரவேண்டும் என்று நூலாசிரியரை வாழ்த்துகிறோம்!!!

பெயர் - சிகரம் தொட வா (சிறுவர் கவிதைகள்)
நூலாசிரியர் - கிண்ணியா எஸ். பாயிஷா அலி
முகவரி – 'அலி அரிசி ஆலை', மட்டக்களப்பு வீதி, கிண்ணியா – 03.
மின்னஞ்சல் முகவரி - sfmali@kinniyans.net , sfmali08@gmail.com
வெளியீடு – தி/ குறிஞ்சாக்கேணி மகளிர் மகா வித்தியாலய இலக்கிய மன்றம்
விலை - 100/=

1 comment:

  1. For more articles and poems from Kinniya Faiza Ali please visit
    www.faiza.kinniya.net

    ReplyDelete